1)எழுத்தாளர்கள் கையாலாகாதவர்கள்
2)தமிழில் நல்ல மரபுக்கவிதைகள் எல்லாம் எழுதப்பட்டுவிட்டன.
3)லா.சா.ரா-வைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப்பேச லாயக்கற்றவன்.
மேலுள்ள இந்த ஸ்டேட்மெண்ட்களை உதிர்த்த தமிழ் எழுத்தாளப் பிரபலங்கள் யார் யார் என்று கண்டுபிடியுங்கள்.விடை இறுதியில்..
********************
ஆதவனின் "கார்த்திக்" என்ற சிறுகதையிலிருந்து (தொடர்ச்சியற்று)உருவப்பட்ட இரண்டு பத்திகள்
அவன்,தன் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒருத்தியைத் தேடிக்கொண்டிருந்தான்.மனிதகுலம் இழந்துவிட்டிருந்த நிரபராதம் குறித்துச்சோகம்.இயற்கையை நசுக்கித் தேய்த்தவாறு எங்கும் செயற்கை படர்ந்து வருவது குறித்துச் சோகம்.
ஆம்,கார்த்திக் ஓர் உலர்ந்த,ஒற்றைப் பரிமாணப் பகுத்தறிவு வாதியல்ல.அவன் எதிர்த்தது பழமைவாதிகளின் மூட நம்பிக்கைகளை மட்டுமல்ல. புதுமைவாதிகளின் மூடநம்பிக்கைகளும்தான் அவனுக்குப் பிடிக்கவில்லை.அதிலும் இந்தப் பெண்கள்...
நவநாகரீக உடைகள் உடுத்து,ஆங்கிலத்தில் பேசவும் சிகரெட் குடிக்கவும் தெரிந்து விட்டதால் மட்டுமே,தாங்கள் முன்னேற்றமடைந்துவிட்டதாக எண்ணுகிற இவர்களுடைய மேலோட்டமான போக்கு...
இவர்களைப்போல உடுக்காத ஆங்கிலம் பேசாத பெண்களைவிட - தம் தாயாரையும் பாட்டியையும் விட - தங்களை உயர்ந்தாவர்களாக நிரூபித்துக்கொள்ள ஒவொவொரு கட்டத்திலும் முயற்சி செய்கிற பரிதாபம்...
புதுப் பணக்காரர்களின் ஆர்பாட்டத்தையும்,திடீரென உரிமையும்,சக்திகளும் பெற்ற மாஜி அடிமைகளின் பழிவாங்கும் குரோதத்தையும் வஞ்ஜகத்தையுமே இவர்களிடம் அவன் கண்டான்.பழைய பெண்களின் அசட்டு நம்பிக்கைகள்,பிடிவாதங்கள் இவையே மீண்டும் மாறு வேஷமணிந்து வந்தது போலிருந்தது.
ஒருவேளை தனக்கு எத்தகைய பெண்மைக்குத் தகுதி உள்ளதோ,அத்தகைய பெண்மையையே ஒரு சமூகம் பெறுகிறது, என்பதாக இருக்கலாம்.
சிந்தனைகளிலும் செயல்களிலும் இந்தச் சமூகத்திடமிருந்து வேறுபடுகிறவர்களும்கூட, அதில் வாழ்கின்ற காரணத்தாலேயே,இச்செயல்கள் விளைவிக்கும் தண்டனைகளிலிருந்து தப்ப முடிவதில்லை.
****
அவனைப் போலவே அவளும் மலர்களையும் இலைகளையும் மரங்களையும் செடிகளையும் விரும்புகிறவள்.அமைதியை விரும்புகிறவள்.அதிகம் பேசாதவள்.மூட மரபுகள்,பழக்கங்கள் ஆகியவற்றைத் தொடர விரும்பாதவள்.அதே சமயத்தில் இந்த நம்பிக்கையை அல்லது நம்பிக்கையின்மையை உரக்க பறைசாற்றிக்கொண்டு அதன் மூலமாகத் தனக்கு ஒரு ஹோதாவை உருவாக்கிக் கொள்ள முயலாதவள்.மனதில் மூளியில்லாதவள்.தன்னைத் தானாகவே உணருவதில் சங்கடமில்லாதவள்.ஒன்றைச் சார்ந்தவளாகவோ மற்றொன்றைச் சாராதவளாகவோ,சிலரைவிட உயர்ந்தவளாகவோ,சிலருக்குத் தாழ்ந்தவளல்லாதவளாகவோ தன்னைக்காட்டிக்கொள்ளாமலேயே ஸ்திரமாக உணருகிறவள்.
அவளுடைய உறுதியும் திண்மையும் கார்திக்கிற்கு மீண்டும் மீண்டும் வியப்பளித்தன,தெம்பூட்டின.
'இவள் எனக்கேற்ற விசேஷமானவள்.நான் தவறு செய்யவில்லை' என்று அவன் நினைத்தான்.இன்பம் நிறைந்த எதிர்காலம் அவன் கண்முன் விரிந்தது.
ஆனால் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிரம்பியது.நம்மைப் பற்றியும் பிறரைப்பற்றியும் புதிய கண்டுபிடிப்புகளை நம் முகத்தில் எறிந்து, சரியை தவறாகவும், தவறைச் சரியாகவும் மாற்றுவது.
********************************
திடுக்கிடும் திருப்பங்களையோ,அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலையோ ஏற்படுத்தாத நின்று நிதானமாகப் பயணிக்கும் மேற்கூரியவகை கதைசொல்லல் உங்களைக் கவர்கிறது என்றால் கை கொடுங்கள் நீங்கள் தான் ஆதவனின் எழுத்துக்கள் தேடும் வாசகர்! ரெடி...ஸ்டெடி..ஸ்டார்ட்........
ஆதவனின் எழுத்துக்கள் குறித்த எனது முந்தைய
பதிவு
*******************
கேள்விகள் ஒன்றிலிருந்து மூன்றுவரைக்கான பதில்கள் முறையே சுஜாதா, சுஜாதா மற்றும் சுஜாதா !!!!