Tuesday, July 25, 2006

நடிகை ஜலஜாவின் நாய்க்குட்டி......

நடிகை பிரமீளாவுக்கு நகத்தைக் கடிக்கும் பழக்கம் உண்டு என்று ஒரு பத்திரிக்கை கட்டத்துக்குள் பதிப்பிக்கிறது.பிரமீளாவுக்கு நகம்கடிக்கும் பழக்கம் இருந்தால் என்ன?வேறு எவளுக்கோ தொடையில் மச்சம் இருந்தால் நமக்கு என்ன என்று ஒருவரும் கேட்பதில்லை.கேள்வி கேட்காமல் இந்த Trivia அனைத்தையும் உட்கார்ந்து கொண்டு படித்துக்கொண்டிருக்கிறோம்.இதைவிட அதிகமாக ஒரு ஜனக்கூட்டத்தை எவனும் அவமானப்படுத்த முடியாது என எண்ணுகிறேன்.

- சுஜாதா,கணையாளி,1973 ஆகஸ்ட்




* ரீமசென் ஐந்து கிலோ எடையை குறைத்திருக்கிறார்

* அஸினுக்கு பிடித்தமான உணவு பொறித்த ஆற்று மீன் தான்

* படப்பிடிப்பின் போது கிடைக்கும் இடைவேளையில் நடிகை சதா அவரது தந்தையின் மடியில் தலை வைத்துத் தூங்குகிறார்

-குமுதம்,2006,ஜுலை



இந்த 33 வருடங்களில், பதிரிக்கை தொழில்நுட்பத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்.ஆனால் அதன் உள்ளடக்கத்தில் எவ்வித முன்னேற்றமும்
இல்லை.பின்னோக்கிப்போய்க்கொண்டிருக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.குமுதம் போன்று விற்பனையில் முன்னணியில் இருக்கும் வார இதழ்களின் 90% பக்கங்களை ஆக்கிரமிப்பது நடிகைகளின் தொப்புள்களும் அவர்களைப்பற்றிய செய்தியும் தான்.சினிமா செய்திகளே வெளியிடக்கூடாது என்று சொல்லவில்லை.ஏனெனில் தமிழகம் போன்று சினிமாவுடன் மக்கள்பிணைப்பு அதிகமாக உள்ள மாநிலத்தில் இது சாத்தியமற்ற ஒன்று.மேலும் உ.வெ.சாமிநாதைய்யரின் படத்தையோ,அருந்ததிராயின் படத்தையோ அட்டைப்படமாகப் போட்டால் நானே வாங்க மாட்டேன்.ஆனால் எதற்கும் அளவு, வரைமுறை வேண்டாமா?
இந்தவார குமுதம் பத்திரிக்கையின் உள்ளடக்கம் என்ன தெரியுமா?


*நடிகை நமீதா ஒரு படப்பிடிபில் நடனக்காட்சியில் எவ்வாறு குத்தாட்டம் போட்டார் என்பதை விவரிக்கும் கட்டுரை.

*ரீமாசென் நடிகர் விஷாலைக் காதலிக்கிறாரா? என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்கு விடையைக் கண்டறிய அவருடன் ஒரு பேட்டி.

*நடிகர் விஜயின் அடுத்தபடத்தின் கதை என்னவாயிருக்கும் என்ற நாட்டின் தலையாய பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஒரு கட்டுரை.அப்படத்தில் வரும் பன்ச் டயலாக் தான் கட்டுரையின் தலைப்பு."நான் முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்".(உன் பேச்சை நீயே கேக்க மாட்டேன்னா...நீ என்ன லூஸா??)

*டி.வி நடிகர் ஒருவர் சண்டை போட்டுப்பிரிந்த தன் மனைவியுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான கதை.

*நான்கு இளம் பெண்கள் நடிகர் சூர்யாவை 108வது தடவையாகப் பேட்டிகண்டு,109தடவையாக "நீங்க எப்டி இவ்ளவு handsome-ஆ இர்க்கீங்க?" என்ற அற்புதமான கேள்வியைக்கேட்கும் பேட்டி.

*நடிகை மீனவின் பேட்டி. இது தவிர லைட்ஸ் ஆன்,சினிமா விமர்சனம்,சினிமாத்துணுக்குகள்.

கடைசீ பக்கத்துக்கு முந்தின பக்கத்தில் மும்பை குண்டு வெடிப்பு பற்றிய சிறியகட்டுரை.இதில் காமெடியே தலையங்கம் தான்.புத்தகம் முழுவதும் இப்படிப்பட்ட செய்திகளை நிறைத்துக்கொண்டு, நாட்டில் அரசியல் வாதிகள் எப்படி நாட்டுப்பற்றுடன் செயல் படவேண்டும் என்று எழுதுகிறார்கள்.இதை எழுத இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை.

2039ஆம் வருடம் ஜூலை இதழில் கீழ் கண்டது போன்ற செய்தி வெளியானால்,முகத்தில் எவ்வித ஆச்சரிய ரேகையும் தோன்றாமல் படித்து முடிப்போமாக!

"நடிகை ஜலஜாவின் நாய்க்குட்டி இரண்டு வாரமாக மஞ்சள் நிறத்தில் மூச்சா போவதால், நடிகை மிகவும் கவலையாக உள்ளார்"


Sunday, July 02, 2006

6பதிவு

என்னை ஆறு விளையாட்டுக்கு டேகிய(taggia) அனுசுயா வுக்கு dankx(அப்பாடா எப்டியோ ஒரு பதிவு ஒப்பேத்தியாச்சு).எனக்கு பிடித்த ஆறு பிரபலங்களைப்பற்றி இந்தப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

(1)சுப்பிரமணிய பாரதி



தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
என இறுமாப்புடன் கேட்டதோடன்றி காலத்தின் பக்கங்களில் தன் பெயரை அழியாஎழுத்துக்களால் எழுதியும் சென்றவன்."எமக்குத்தொழில் கவிதை" எனசொன்னாலும் தன் வாழ்க்கையையே கவிதை போல வாழ்ந்தவன்.அல்பாயுசுக்கும் மேதைமைக்குமான தொடர்பு இவன் விஷயத்தில் மீண்டும் ஒருமுரை நிரூபணமானது.வாழ்ந்தகாலதில் சரியான முறையில் அங்கீகரிக்காமல் இறந்தபின் விழா எடுத்துக்கொண்டாடும் தமிழர்களை (மேலுலகத்திலிருந்து) இவன் பார்க்க நேர்ந்தால் ஒரு ஏளனப் புன்னகையை வீசக்கூடும்.


(2)எம்.எஸ்.சுப்புலட்சுமி



"குறை ஒன்றும் இல்லை" என்ற இவரது பாடலுக்கு உருகாதவர் எவரும் இருக்க முடியாது.கர்நாடக சங்கீதத்தை பற்றிய அடிப்படை ஞானம் எதுவும் இல்லதவர்களைக்கூட அந்த இசையை கேட்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.கருணையும் சாந்தமும் ததும்பி வழியும் இவரது உருவம் பெண்மையின் அடையாளம்.

(3)சுஜாதா

"இவர் வீட்டு Laundry பில்லை ப்ரசுரித்தால் கூட படிக்க ஒரு கூட்டம் இருக்கிறது" ஒரு வலைதளத்தில் விளையாட்டாக இப்படி குறிப்பிட்டிருந்தார்கள்.என்னைக்கேட்டால் இது ஒரு மிகைப் படுத்தப்பட்ட உண்மை அவ்வளவே.நவீன கதை சொல்லலின் தந்தை என இவரை சொல்லலாம்.எழுத்துக்கான உயர்ந்த விருதுகளை பெருமைப்படுத்த நினைத்தால்,அவற்றை இவருக்குக் கொடுக்கலாம்.இவர் தமிழ் எழுத்துலக சூப்பர் ஸ்டார்.

(4)எஸ்.பி.பி

"தேன் வந்து பாயுது காதினிலே"இப்டீன்னா என்னன்னு யாராவது கேட்டால் இவர் குரலைக் கேட்க சொல்லலாம்.பாடல்களை உதட்டிலிருந்து அல்லாமல் இதயத்திலிருந்து பாடுபவர்.ஒண்ணுமே இல்லாத சில சப்பையான பாடல்கள் இவர் பாடியதால் சூப்பர் ஹிட்டாகி இருக்கின்றன.பாடல் களுக்கு நடுவில் இரும,சிரிக்க,பேசக்கூட முடியும் என செய்து காடியவர்(அதை இவர் செய்தால் மட்டுமே நன்றாக இருக்கும்).பாடகர் மட்டுமல்ல இசையமைப்பாளர்,சிறந்த நடிகர்.


(5)கமல் ஹாசன்

இவர் செய்த ஒரே தவறு நம்ம நாட்டில் பிறந்தது தான்.

கேள்வி:அன்பே சிவம்,குருதிப்புனல்,மகாநதி இந்த படமெல்லாம் ஏன் நன்றாக ஓடவில்லை?பதில்:திருப்பாச்சி-200நாள்,சிவகாசி-100நாள்,ஆஅ-75 நாள் .....

பொக்ரான் அணுகுண்டு சோதனையினால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியன்.இவரது நற்பணி மன்றங்கள் மூலமாக இதுவரை 5000லிட்டருக்கும் மேல் ரத்ததானம் செய்யப்பட்டுள்ளது.தன் உடல் உறுப்புக்கள் அனைத்தயும் தானமாக தர ஒப்புக்கொண்ட நடிகர்.ஆயிரக்கணக்கில் இதுவரை புத்தகங்களை நூலகங்களுக்கு தானமாக வழங்கியுள்ளார்.உயிருள்ள கண்கள் என்று சொல்லுவார்களே அது இவருக்குப் பொருந்தும்.

(6)இளையராஜா

இவரது சோகப்பாடல்களைக் கேட்டால் அழுகை வரும்.உற்சாக பாடலைக்கேட்டால் குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்,குத்துப்பாடலைக்கேட்டால் ஆடத் தோன்றும்,தாலாட்டுப்பாடலைக்கேட்டால் தூக்கம் வரும்...ஆம் இவர் ஒரு மந்திரவாதிதான்.இளையராஜாவால் கூட அவரது இசையின் தாக்கத்தை,வீச்சை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.அந்த அளவுக்கு இரண்டு தலைமுறையினரை பாதித்துவிட்ட இசை இவருடையது.

இவர்களை 6 பதிவுக்கு அழைக்கிறேன்

(1)Gopalan Ramasubbu

(6)mscongeniality