Saturday, June 27, 2009

32 கேள்விகள் - மீம்



1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பெற்றோர் வைத்த பெயர் தான். எனக்கு என் பெயர் பிடிக்கும்.மேலும் வேறு எழுத்தாளர்கள் யாரும் இந்தப் பெயரில் இல்லாததால் எனது எழுத்துலக வாழ்க்கைக்கும் இதே பெயரையே....(சரி சரி..இதுக்கே அசந்துட்டா எப்படி!! இன்னும் நுப்பத்திரெண்டு கேள்விகள் இருக்கே!)


2. கடைசியாக அழுதது எப்போ?

சில நாட்களுக்கு முன்பு, வெங்காயம் நறுக்கும் போது.


3. உங்களுக்கு உங்க கையெழுத்துப் பிடிக்குமா?
சில சமயங்களில். என் கையெழுத்து என் மனம் போல அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். செக்கில் கையெழுத்து போடக் கூட இரண்டு நிமிடம் வெயிடீஸ் விட்டு பழகி, பின்தான் போடுவேன்.


4. பிடித்த மதிய உணவு?
பருப்பு சாதம் , வெண்டைக்காய் கறி. புனேவில் சென்று தென்னிந்திய உணவு கிடைக்காமல் திண்டாடிய போதும் இதுதான் வேறு ரூபத்தில் வந்து கை கொடுத்தது. தால் ச்சாவல், பிண்டி பாஜி.



5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

உங்களையே உங்களுக்குப் பிடிக்குமான்னு பின் நவீனத்துவ முறையில் கேட்கிறீர்கள். பிடிக்கும்..அதாவது நட்பு வைத்துக்கொள்வேன்.



6. கடலில் குளிக்கப் பிடிக்குமா, அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
அருவியில்


7. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முதலில் பேச்சை, பின்னர் பேச்சுக்கும் செயலுக்குமுள்ள தொடர்பை


8.உங்க கிட்ட உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம் - இரக்ககுணம்,adaptability,உழைப்பு
பிடிக்காதவிஷயம் - அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கருதி சுயவிருப்பத்தினை தெரிவிக்காமல் விட்டுவிடுவது.


9. உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்? 31. கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
மணம் ஆகவில்லை.

10. இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
பெற்றோர் பக்கத்துல இல்லாததற்கு.


11. இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
(காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு போல வாசிக்கவும்) பதிவை எழுதிய அன்று இவர் வெள்ளை நிறத்தில் மேலாடையும், பழுப்பு நிறத்தில் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார். இவரைப் பற்றிய தகவல் அறிந்தால் தொடர்புகொள்ள வேண்டிய........


12. என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
P.B.ஸ்ரீநிவாஸ் பாடல்கள்



13.வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
நீலம்.(அய்யா ராசா...யாருய்யா இப்படியெல்லாம் ரூம் போட்டு கெள்விகளை யோசிச்சது??)

14. பிடித்த மணம்?
புது புத்தகத்திலிருந்த்து வரும் மணம், புது காப்பிப்பொடியின் மணம், மல்லிகைப்பூ மணம்.


15. நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
நானே ரொம்ப காலதாமதமாகத்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.எனினும் அழைக்கவிரும்பும் நபர் ப்ரகாஷ். இவரது சுவாரஸியமான எழுத்துநடையும் அதில் தெறிக்கும் நகைச்சுவையும் பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் இவர் பதிவெழுதுவதில்லை. என்ன கேட்டாலும் 140 எழுத்துகளுக்குள்ளாகவே பதில்
சொல்கிறார்
. இவர் எழுதினால் மகிழ்வேன்.


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
இவர் அவ்வப்போது பார்த்த சினிமா பற்றி எழுதுகிற குறிப்புகள் பிடிக்கும். கதைகள்ள உடனே நியாபகத்துக்கு வருவது கமிஷன் மண்டி சுப்பையா. வெட்டியா மொக்கைபதிவுகள் போடாம சிறுகதை எழுதுவதில் தீவிரமா இருக்கறது பிடிக்கும்.

18.பிடித்த விளையாட்டு?
பிடித்த அல்ல பீடித்த விளையாட்டு கிரிக்கெட்.


19. கண்ணாடி அணிபவரா?
இன்னமும் இல்லை.


20. எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
எல்லாவகைப் படங்களும் என்றாலும் எதார்த்தமான படங்கள் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும்.


21. கடைசியாகப் பார்த்த படம்?
Hangover. நகைச்சுவைப் படம், பிடித்திருந்தது.


22. என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
"பூமியின் பாதி வயது" - அ.முத்துலிங்கம் அவர்களின் அனுபவக் கட்டுரைகள்.


23. உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
கணக்கு வைத்துக்கொள்வதில்லை.


24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடிக்காத சத்தம் - வெடி சத்தம்.
பிடித்த சத்தம் - வெடி சத்தம்..நான் பற்றவைக்கும் போது மட்டும்(சும்மா அதிருதில்ல!!)


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இதோ இங்கே..ஆக்ஸ்ஃபோர்ட்,இங்கிலாந்து.

26.உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
ஓ இருக்கிறதே! அபார ஞாபக சக்தி உண்டு. உதாரணாமா , இருபத்தாறு வருடங்களுக்கு முன்னால் எனக்கு வைத்த பெயரை இன்னமும் யார் கேட்டாலும் சரியாக சொல்லிவிடுகிறேன்.(அய்யோ, அடிக்க வராதிங்க..இது சொந்த மொக்கை இல்ல. கல்கி ஒருமுறை சொன்னது)


27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அடக்குமுறை மற்றும் அடங்குமுறை

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சாத்தான்களுக்கா பஞ்சம்? சாத்தானுக்குள் இருக்கும் என்னை அல்லவா தேடிக்கொண்டு இருக்கிறேன்.(நோட்பண்ணுங்கப்பா..நோட்பண்ணுங்கப்பா)

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
மூணாரு

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே..அப்படின்னு சொன்னா அது உடான்ஸ். இன்னும் கொஞ்சம் சந்தோஷமா, சுத்தி இருக்கறவங்களையும் சந்தோஷமா வச்சிருக்கணும்.


32. வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
(கொஞ்சம் நீளமான வரி)
Reverence for Life affords me my fundamental principle of morality, namely, that good consists in maintaining, assisting, and enhancing life and that to destroy, harm, or to hinder life is evil and the affirmation of the world ,that is affirmation of the will to live, which appears in phenomenal forms all around me -- is only possible for me in that I give myself out for other life -(Albert Schweitzer)

Life Quotes அப்படின்னு கூளில் தேடி, பொறுக்கினதாக்கும். லேசில் புரியாது....வாழ்க்கையைப் போலவே.....


விளையாட்டிற்கு அழைத்தமைக்கு நன்றிகள் ஸ்ரீதர்


Tuesday, June 23, 2009

உலகத் திரைப்படங்கள் - மீம்

சில மாமாங்களுக்கு முன் சந்தோஷ் குரு என்னை உலகத் திரைப்படங்கள் குறித்த மீம் ஒன்றினைத் தொடர அழைத்திருந்தார். வேலைபளு, இந்திய பயணம்,சோம்பல் என பல காரணங்களால் கொஞ்சகாலம் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. பதிவு எதுவும் எழுதாத இந்த இரண்டு மாதங்களில் ,கூகிள் ரீடரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சிந்திக்க வைக்கிறது ;) .தற்போது அடுத்த மீமிற்கு அழைப்பு வந்துவிட்ட நிலையில், பாக்கியை முதலில் தீர்த்துவிடலாம் என்றிருக்கிறேன்.

உலகத் திரைப்படங்கள் பற்றிப் பேசுவது எனக்கு மிக விருப்பமானது தான். ஆனால் மிக சொற்ப எண்ணிக்கையிலேயே வெளிநாட்டுப்படங்களைப் பார்த்திருக்கிறேன். மேலும் ஒரு உலகத் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்னரே அது குறித்த விமர்சனக்கள், செய்திகளைப் படித்து , அது ஒரு மிகச் சிறப்பான படம் என்று நம்பத் துவங்கிவிடுவேன். அதனால் பெரும்பாலும் அவை ஏமாற்றம் அளிப்பதிலை. இவை தாண்டி என்னை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டிய பத்து படங்களைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறேன். வரும் ஆண்டுகளில் இந்தப் பட்டியல் மாறலாம், மாற வேண்டும்.

1.Amelie


















அமேலியின் உலகம் சின்னச் சின்ன சந்தோஷங்களால் ஆனது. வாழ்க்கை நிகழ்வுகளை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் இவள், நுட்பமான உதவிகள் செய்து அடுத்தவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை நிகழ்த்துகிறாள்." Life is Beautiful" படத்தைத் தொடர்ந்து, அமேலியும் நம் ஊர் இயக்குனர்களுக்கு அவ்வப்போது ஐடியாக்களை வாரி வழங்கும் அமுதசுரபியாகவே இருக்கிறாள்.

2.12 Angry Men















ஒரு பாடல் காட்சிக்கு ஸ்விட்சர்லாந்து, சண்டைக்கு ஹாங்காங், கருப்பு ஹீரோவுக்கு வெள்ளையடி, கதாநாயகியாக உலக அழகி, பாடல் வெளியீட்டுக்கு ஜாக்கிசனை கூப்பிடு என்று எதிலெதிலோ கவனத்தை செலுத்தி கதையைக் கோட்டைவிடும் இயக்குனர்கள் பார்க்க வேண்டிய (பா)படம். ஒரு அறை, 12 கதாபாத்திரங்கள் , ஒரு கொலை வழக்கு இதனை வைத்துக்கொண்டு நம்மை ஒன்றரை மணிநேரத்துக்கு இருக்கையின் நுனியில் கட்டிப் போடுகிறார்கள்.

3.City of God

















ரியோ டி ஜெனிரோ நகர சேரிகளில் அறுபது எழுபதுகளில் நடந்த குழு சண்டை, போதை மருந்துக் கடத்தல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். பெரும்பாலும் அப்பகுதிகளில் வாழும் மக்களையே நடிக்கவைத்து படமாக்கியிருக்கிறார்கள். அற்புதமான ஒளிப்பதிவு.

4.Shindler's List

















ஸ்டீவன் ஸ்பீல்பர்க் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிக விருப்பமான படமாக இதனைக் குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில் ஆஸ்கர் ஷிண்ட்லர் என்ற ஜெர்மன்காரர், தான் துவங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு ஜ்யூக்களை குறைந்தவிலைக்கு வேலைக்கு எடுக்க வருகிறார். அங்கு ஜ்யூக்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு மனம் மனம் மாறுகிறார். நாஸிக்களை ஏமாற்றி சுமார் 1100பேர்களின் உயிரைக் காப்பாற்றுகிறார்.உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

5.Se7en


















அந்நியன், காக்க காக்க போன்ற படங்களில் இருந்தெல்லாம் ஐடியாக்களை சுட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் என்ன, இந்த படங்கள் வெளி வருவதற்கு ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னரே Seven வெளியாகிவிட்டது ;) மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட த்ரில்லர். படத்தின் முடிவு யூகிக்க முடியாதது.

6.Seven Samurai


















ஒரு ஏழை விவசாய கிராமம் தங்களை கொள்ளையர் களிடமிருந்து காத்துக் கொள்ள சாமுராய்களின் உதவியை நாடுகிறது. ஏழு சாமுராய்கள் ஒன்று சேர்ந்து அந்த கிராமத்தைக் காப்பாற்று வது தான் கதை. ஷோலே, The Magnificent seven போன்றவை இந்தப் படத்தின் பாதிப்பில் உருவாக்கப் பட்டவை. தொழில் நுட்பங்கள் சுத்தமாக வளர்ச்சியடையாத 1954ல் எடுக்கப்பட்ட இப்படத்தின் காட்சியமைப்புகள் பிரமிப்பூட்டுபவை.

7.The Shawshank Redemption



















எனது All time favorite இது. ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஒரு புதிய கோணமும், புதிய வசனமும் நம்மைக் கவரும். பத்து படங்கள் இல்லாமல் ஒரே ஒரு படத்தை மட்டும் குறிப்பிடச் சொல்லியிருந்தால் இந்தப் படத்தைத்தான் சொல்லியிருப்பேன். A Must Watch movie!!




8.Pather Panchali
















இந்தியாவின் வறுமையை கூறு போட்டு விற்கிறார் 'ரே' போன்ற புலம்பல்களை எல்லாம் தாண்டி என்னை இந்தப் படம் கவர்ந்தது. கருப்பு வெள்ளையில் கிராமத்தின் அழகைப் படம்பிடித்த கேமரா, ரவி ஷங்கரின் இசை,துர்காவின் அழகிய முக பாவங்கள் என குறிப்பிட பல விஷயங்கள் இருக்கின்றன. தனித்துவிடப்படும் அந்தக் கிழவியின் பாடல் மனதில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

9.Let the right one in














இது வாம்பைர் (vampire) படம் என்று சொல்லுங்கள். மாய எதார்த்தவாதம் (Magical Realism) என்று சொல்லுங்கள், குழந்தைகள் படமென்று சொல்லுங்கள். இல்லை உளவியல் சார்ந்த படம் என்று சொல்லுங்கள். ஆனால் படத்தின் ஏதோவொன்று நம்மை அதனுடன் ஒன்றச் செய்கிறது. அந்த சிறு பெண்ணுக்கும், சிறுவனுக்குமான நட்பு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அதிக எதிர்பார்ப்பின்றி பார்த்த இப்படம் மிகுந்த ஆச்சரியமளித்தது.

10.Requiem For a Dream























இந்தப் படத்தை ஏன் குறிப்பிடுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இதுவரை இந்த அளவுக்கு மன அழுத்தம் தந்த வேறொரு படத்தை நான் பார்த்ததில்லை.போதை மருந்துக்கு அடிமையாவது, அதன் பின்விளைவுகள் பற்றி பேசும் படம். எடுக்கப்பட்டிருக்கும் முறையும் முற்றிலும் வித்தியாசமானது. என்னை பாதித்தது என்றவகையில் இந்தப் படத்துக்கும் பட்டியலில் இடமுண்டு.

சந்தோஷ் , அழைப்பிற்கு நன்றி, தாமதத்திற்கு மாப்பு