Tuesday, June 26, 2007

சு.ரா வின் கடைசிக் கவிதைஅந்தக் குழந்தையின் காலோசை
நம்மை அழைக்கிறது


குழந்தையின் வடிவம் நம்
பார்வைக்குப் புலப்படவில்லை.


நம் கலவரம் நம் பதற்றம்
நம் பார்வையை மறக்கிறது.


தன் காலோசையால்
நம்மை அணைத்துக் கொள்ள

அந்தக் குழந்தை நம்மைத்
தேடி வருகிறது.


நாம் நம் தத்தளிப்பை மறைக்க
மேலும் உரக்கப் பேசுகிறோம்.


சுந்தர ராமசாமி மரணமடைவதற்கு 19 நாட்களுக்கு முன்பு எழுதிய கவிதை இது.இதுவே அவரது கடைசிப் படைப்பு.துவக்கத்தில் பசுவய்யா என்ற புனைப்பெயரிலும்,பின்னர் தன் இயற்பெயரிலும் அவர் எழுதிய மொத்த கவிதைகளின் தொகுப்பு இந்த "சுந்தர ராமசாமி கவிதைகள்" .மேற்குறிப்பிட்ட இந்த கவிதையையும் சேர்த்து மொத்தம் 108 கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.பத்து பதினைந்து கவிதைகள் தேறினாலே புத்தகங்கள் வெளிவரும் நிலையில்,இது மிகப்பெரிய தொகுப்பாகும்.அடித்துத்,திருத்தி அவர் கவிதைகளுக்கு உருக்கொடுத்த விதம் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப் பட்டுள்ளது.
இத்தொகுப்பிலிருந்து சில கவிதைகள்


நடுவழியில் மறித்த வயோதிகம்


வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது
'விடு என்னை
இப்போதுதான் உணர்ந்துகொண்டேன் காதலின் அருமையை'
என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.
'சற்று முந்தான் நான் வயோதிகம்
இப்போதோ மரணம்' என்று
என்னை இறுகத் தழுவிக்கொண்டது
அது


-கொல்லிப்பாவை 1987

*****
கன்னியாகுமரியில்


இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்
மிகப்பெரிய சூரியன்
ஒரே ரத்தக் கலங்கல்.

எங்கிருந்தோ வந்து
சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது
இந்த ஆட்டுக்குட்டி
அசடு
அப்போதும்
தன்னிலை அறியாதது.

இடம் பெயர்வதா
நின்ற நிலையில் நிற்பதா?

மூளையில் தர்க்கம்
அறுபட்டு விழித்ததும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி.

சூரியனைக் காணோம்.


-சதங்கை 1975

*****
நம்பிக்கை


தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்

அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.

வேறு யாரோ.

அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.


-வைகை 1977


மேலும் சில கவிதைகளை வாசிக்க நதியலை

Sunday, June 10, 2007

உருக்குலைந்து வரும் உன்னதக் கலைகள்


சமீபத்தில் 'வாஷிங்டன் போஸ்டில்' வெளியாகியிருந்த,நசிந்து வரும் இந்திய பட்டு நெசவு பற்றிய கட்டுரை(Emily Wax) கவனத்தைக் கவர்ந்தது.இந்தியா வளர்ந்துவிட்டதோ? என சந்தேகிக்கும்,கிலிகொள்ளும் தருணங்களில் அதன் ரணங்களைத் தேடிப்பிடித்து ஆசுவாசம் கொள்ளும் அமெரிக்கர்களின் நோக்கம் இக்கட்டுரையிலும் தெரிகிறது.என்றாலும் ஆய்வு செய்தோ,செய்யாமலோ எழுதப்பட்ட இந்த கட்டுரையின் உண்மை நம்மை சுடாமலில்லை.அதில்,

"The new India is home to smooth highways and shiny high-rises, all the accouterments of the developed world. But millions of craftsmen, manual laborers and rural workers are being left out of the economic boom. Nearly 70 percent of India's population lives on less than $2 a day, and with more than 40 percent of its young malnourished, India is worse off than Africa in terms of children's health, according to the United Nations"

என்கிறார்கள்.மேலும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் சேரும் அவசரகதியில் ஆதார தொழில் செய்யும் உழவர்களையும்,நெசவாளர்களையும் நிர்கதியாக விட்டுச்செல்வதாக மன்மோகன் சிங்கை சாடுகிறார்கள்.
இந்தியா வளர்கிறது,மிளிர்கிறது என்பதெல்லாம் சுத்த ஹம்பக்.நாட்டின் வளர்ச்சியென்பது அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியேயன்றி ஓரிரு துறைகளை மட்டும் சார்ந்ததன்று.இதுநாள்வரையில் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிலாக கருதப்பட்டு வந்த நெசவுத்தொழில் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.மலிவு விலை துணிநெய்யும் இயந்திரங்களும்,தளர்த்தப்பட்ட அந்நிய முதலீட்டுக் கொள்கைகளுமே இதற்குக் காரணம்.நாமும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விடுத்து,'நெசவாளர்கள் தற்கொலை' பற்றிய செய்திகளை குற்ற உணர்வின்றி தாண்டிச்செல்ல பழகிக்கொண்டுள்ளோம்.உண்மையில்,ஓரிரு துறைகளில் ஏற்பட்டுள்ள இந்த அபரிமிதமான வளர்ச்சியும் பாராட்டுக்குரியதல்ல.காரணம் சமூகத்தில் மேல்தட்டு ,கீழ்தட்டுக் கிடையேயான வர்க்க இடைவெளியை இது அதிகப்படுத்தியுள்ளது.

கட்டுரையிலிருந்து சில பகுதிகள்,

"This is the ugly, painful side of globalization. It's a real crisis. If India is booming, you don't see it among weavers or farmers or other rural laborers, which is to say most of the country," said Lenin Raghuvanshi, head of the People's Vigilance Committee for Human Rights, an aid group here. "Helping those left behind is India's greatest challenge."

Despite the boom in many information technology hubs in southern Indian cities, Varanasi's weaver quarters look like a ghetto, with men sleeping under broken-down looms strung with cobwebs, rutted streets with trash fuming at every turn and donkeys hauling in water for cooking and bathing, tugged along by barefoot urchins.

"I hardly care about booming India when I have no food or money," said Poochland Dash, 60, a white-haired grandfather and a once-wealthy weaver who said through tears that he is considering suicide. He is trying to sell the house he built during the golden years of the sari-weaving industry, with his saris featuring embroidery of men atop animals in rich indigos and reds.
"If a buyer insults me with a too-low price, I swear I will kill myself," Dash said.
Listening nearby, his wife started crying. "If he takes his life, I will take my life, too," she said, staring at the ground.

KFC-யில் பர்கர் சாப்பிட்டு விட்டு,பரிஸ்தாவில் காப்பி குடித்துவிட்டு அப்படியே மல்டிப்ளக்ஸில் கொஞ்சமே புரிகிற ஹிந்திபடம் பார்க்க போக நேரமாகிவிட்டதால் நலிந்தோர் குறித்து கவலைப்படும் இந்தக் கட்டுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

Monday, June 04, 2007

கமல்ஹாசன் பற்றி சுஜாதா(பழைய பேப்பர்!)கமலஹாசனுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவருடைய off-screen personality சுவாரஸியமாக வெளிப்பட்டது.இருபத்து மூன்று வயது. ஒரு மலையாளப் படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார்.பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் ஜிப்பா,ஜரிகை வேஷ்டி.

அவர் அறையில் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை.ஏர்கண்டிஷனிரின் செளகரியத்தைத் தவிர.ஒரே ஒரு படம் இருந்தது.உக்கிரமாக முறைக்கும் ப்ரூஸ்லி. அமெரிக்க சினிமா சரித்திரத்தைப்பற்றியும் Sound in cinema பற்றியும் புத்தகங்கள் தென்பட்டன.படிக்கிறார்.இங்கிலிஷ் பண்பட்டு இருக்கிறது.கணையாளி போன்ற புத்தகங்களையும் புதுக்கவிதைகளையும் ரசிக்கிறார்.தன் தொழிலில் உள்ள சிரிப்பான விஷயங்களை இயல்பாக எடுத்துச்சொல்கிறார்.போலன்ஸ்கி,கோடார்ட் போன்ற ஐரோப்பிய டைரக்டர்களைப் பற்றிஅவருக்கு தெரிந்திருக்கிறது.ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் Frenzy என்ற படத்தில் ஒரு ஷார்ட்டைப் பற்றி உற்சாகமாக அவருடன் பத்து நிமிடங்கள் அலச முடிகிறது."மலையாளப் படங்கள் இப்போது பரவாயில்லை போலிருக்கிறதே" என்றேன்.அவர் "அதெல்லாம் அந்தக்காலம்,இப்போது மலையாளப் படங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன"தன் சட்டையைக் காட்டி "மலையாளப் படம்" என்றார்.

"எனக்கு அழவரவில்லை அழு அழு என்கிறார்கள்.ஒரு சமீபத்திய தமிழ் படத்துக்கு மூன்று பாட்டில் கிளிசரின் ஆயிற்று."

"பாடலைப் படமெடுக்கும் போது கதாநாயகிக்கு கூந்தல் விரிந்திருப்பது ஒரு செள்கரியம்.உதட்டசைவு மறந்துவிட்டால்! சட்டென்று கூந்தலைப் பிரித்து அதில் மறைந்து கொள்ளலாம்."

"டேய் முத்து,மாடசாமி,பிடிடா"என்று கிராமத்தில் குடிசையில் வின்சென்டர் ரைபிள்களை வினியோகிக்கும் கர்ணன் படங்களையும் படுத்துக்கொண்டே படமெடுக்கும் காமிராக்கோணங்களையும்(imagine ஜோதிலட்சுமி)அம்மாக்களையும்,தியாகங்களையும் மிகவும் ரசித்து அவருடன் விமர்சித்துக் கொண்டிருந்ததில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை.படப்பிடிப்பு காத்திருந்தது.ஆப்பிள் ஜூஸ் கொடுத்து அனுப்பிவிட்டார்.

உரக்கப் பேசும் உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக,கற்பனையுடன்,நம்பும்படி நடக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன்.

அக்டோபர் 1976