Tuesday, June 26, 2007

சு.ரா வின் கடைசிக் கவிதை



அந்தக் குழந்தையின் காலோசை
நம்மை அழைக்கிறது


குழந்தையின் வடிவம் நம்
பார்வைக்குப் புலப்படவில்லை.


நம் கலவரம் நம் பதற்றம்
நம் பார்வையை மறக்கிறது.


தன் காலோசையால்
நம்மை அணைத்துக் கொள்ள

அந்தக் குழந்தை நம்மைத்
தேடி வருகிறது.


நாம் நம் தத்தளிப்பை மறைக்க
மேலும் உரக்கப் பேசுகிறோம்.


சுந்தர ராமசாமி மரணமடைவதற்கு 19 நாட்களுக்கு முன்பு எழுதிய கவிதை இது.இதுவே அவரது கடைசிப் படைப்பு.துவக்கத்தில் பசுவய்யா என்ற புனைப்பெயரிலும்,பின்னர் தன் இயற்பெயரிலும் அவர் எழுதிய மொத்த கவிதைகளின் தொகுப்பு இந்த "சுந்தர ராமசாமி கவிதைகள்" .மேற்குறிப்பிட்ட இந்த கவிதையையும் சேர்த்து மொத்தம் 108 கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.பத்து பதினைந்து கவிதைகள் தேறினாலே புத்தகங்கள் வெளிவரும் நிலையில்,இது மிகப்பெரிய தொகுப்பாகும்.அடித்துத்,திருத்தி அவர் கவிதைகளுக்கு உருக்கொடுத்த விதம் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப் பட்டுள்ளது.
இத்தொகுப்பிலிருந்து சில கவிதைகள்


நடுவழியில் மறித்த வயோதிகம்


வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது
'விடு என்னை
இப்போதுதான் உணர்ந்துகொண்டேன் காதலின் அருமையை'
என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.
'சற்று முந்தான் நான் வயோதிகம்
இப்போதோ மரணம்' என்று
என்னை இறுகத் தழுவிக்கொண்டது
அது


-கொல்லிப்பாவை 1987

*****
கன்னியாகுமரியில்


இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்
மிகப்பெரிய சூரியன்
ஒரே ரத்தக் கலங்கல்.

எங்கிருந்தோ வந்து
சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது
இந்த ஆட்டுக்குட்டி
அசடு
அப்போதும்
தன்னிலை அறியாதது.

இடம் பெயர்வதா
நின்ற நிலையில் நிற்பதா?

மூளையில் தர்க்கம்
அறுபட்டு விழித்ததும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி.

சூரியனைக் காணோம்.


-சதங்கை 1975

*****
நம்பிக்கை


தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்

அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.

வேறு யாரோ.

அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.


-வைகை 1977


மேலும் சில கவிதைகளை வாசிக்க நதியலை

No comments: