Sunday, February 09, 2014

Big Bad Wolves (2013)


இப்படம் ஏற்கனவே உலகத்திரைப்பட விழாக்களில் விருதுகளை வாரிக் குவித்திருந்தாலும் ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததென்னவோ டாரண்டினோவின் பாராட்டைப் பெற்ற பிறகுதான். 2013 ஆம் ஆண்டின் சிறந்த படம் இதுதான் என்று குவிண்டின் டாரண்டினோ இந்த இஸ்ரேலியத் திரைப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். பொதுவாக டாரண்டினோ படங்களில் காணக்கிடைக்கும் இருண்மை நகைச்சுவை, குரூரம், நெடிய காட்சிஅமைப்புகள், மெல்லிய அங்கதம் என எல்லா அம்சங்களும் இப்படத்திலும் உண்டு. 2010ல் வெளியாகி பரவலான பாராட்டைப் பெற்ற ’ரேபிஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய Aharon Keshales  மற்றும் Navot Papushado சகோதரர்கள் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

பதின்ம வயது பிள்ளைகள் கண்ணாமூச்சி விளையாடும் காட்சி ஸ்லோமோஷனில் திரையில்  விரிய அருமையான பின்னணி இசையுடன் துவங்குகிறது படம். அவர்களில் ஒரு சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் (தலை கொய்யப்பட்டு ) கொல்லப்படுகிறாள். இந்த தொடர்கொலைகளை விசாரிக்கும் மிக்கி (Miki) சட்டத்துக்கு அப்பாற்பட்ட வழிகளில் விசாரணை செய்யும் வழக்கத்தையுடையவன். எப்படிப்பட்ட நிரபராதியும் ஒரு கட்டதுக்குமேல் அடிதாங்கமல் குற்றத்தை ஒப்புக்கொள்வான் என்னும் சித்தாந்தமுடையவன். இந்த வழக்கில் அவர்களுக்கு கிடைக்கும் ஒரே ஒரு சந்தேகத்திற்கிடமான ஆள் ஒரு பள்ளி ஆசிரியர்(Dror). அவனை மிக்கி தனது பாணியில் விசாரிக்கும்போது அதனை செல்போனில் படம்பிடித்து சிலர் இணையத்தில் பரப்பிவிடுகிறார்கள் . இதனால் மிக்கி சஸ்பெண்ட் செய்யப்படுகிறான். ஆசிரியர் விடுவிக்கப்படுகிறார் என்றாலும் வேலை போகிறது. மிக்கி ஆசிரியரைக் கடத்தமுயல்கிறான். இதற்கிடையில் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை(Gidi)  இவர்கள் இருவரையும் கடத்துகிறார். இப்புள்ளியிலிருந்து கதை முழுவதுமாக கிடியின் ரகசிய வீட்டுக்கு இடம்பெயர்கிறது. அங்கு நடக்கும் துன்புறுத்தல்களும் கடைசி நேர திருப்பங்களும் தான் மீதிக்கதை. வழக்கமான  ஹாலிவுட் வகை த்ரில்லர் போல தோன்றினாலும் கதை சொல்லும் பாணியிலும் வசனங்களிலும் இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள்.

ரத்தத்தைப் பார்த்தால் மயங்கிவிழும் ஆட்கள் இந்தப் படத்தை தவிர்த்துவிடுவது நலம். படத்தில் ஏகத்துக்கு வன்முறைக்காட்சிகள் உள்ளன. உதாரணத்திற்கு கிடியின் தந்தை ப்ளோ டார்ச் வைத்து எதிராளியின் மார்பில் அடித்து மயிர் பொசுக்கி சதையை துளையாக்குவது வரை காட்டுகிறார்கள் . இத்தோடு விடுவதில்லை கிடியின் தந்தை காற்றை முகர்ந்து என்ன வாசனை வருகிறது என்று கேட்கிறார், அதற்கு கிடி “பார்பேக்யூ”(Barbecue) என்கிறான். இதற்கா சிரித்தோம் என்று யோசிக்கவைக்கும் இதுபோன்ற குரூர நகைச்சுவை காட்சிகள் நிறைய இருக்கின்றன.

டாரண்டினோ பாணியைவிடவும் இந்தப்படம் கோயென் சகோதர்களின் படமாக்கும் பாணியை அதிகம் சார்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. வெளியில் சாமானியர்கள் போல தோன்றுபவர்கள் எவ்வளவு கொடூர செயல் செய்துவிடுகிறார்கள் அல்லது கொடூரமான செயலைபுரிபவர்கள் எப்படி சாமானியர்களின் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதற்கு கிடி தன் தாயிடம் திட்டு வாங்கும் காட்சி ஒரு உதாரணம். எதேச்சையாக கிடியின் தந்தை துன்புருத்தல் நடக்கும் இடத்துக்கு வந்து சேருகிறார். நடக்கும் அபத்தத்தை அவர் தடுத்து நிறுத்துவார் என பார்வையாளன் எதிர்பார்க்கும் போது அவரும் அந்த விளையாட்டில் இணைந்து கொள்வது சுவாரஸியம். படத்தின் கடைசி ஃப்ரேம் வரையிலும் சஸ்பென்ஸ் தக்க வைக்கப்பட்டிருப்பது அருமை.

கிட்டத்தட்ட இதே கதையமைப்பைக் கொண்ட ப்ரிசனர்(Prisoner) என்ற ஆங்கிலபடமும் சென்ற ஆண்டு வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்த அப்படம் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இவ்வளவுக்கும் அப்படத்தில் போதுமான திருப்பங்களும் முடிச்சுகளும் நிறைந்திருந்தன. தொய்வான கதைசொல்லல் தான் அப்படத்தின் தோல்விக்குக் காரணம் என்று தோன்றுகிறது. அதே சமயம் வழக்கமான கதையமைப்பைக் கொண்டிருந்தும் தேர்ந்த திரைக்கதையாலும் மெல்லிய நகைச்சுவையாலும் வெற்றிபெறுகிறது "Big Bad Wolves".

Monday, January 13, 2014

புத்தகக் கண்காட்சி 2014

புதுபுத்தகவாசம், பக்கம் புரட்டும் சத்தம் தரும் சுகம் போன்ற‌ ஜல்லிகளையெல்லாம் நிறுத்திவிட்டு மின்னூல்களை ஆர‌த்தழுவிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதென்றே தோன்றுகிறது. இந்த ஆண்டு புத்தகக்கண்காட்சியில் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆனைவிலை குதிரைவிலை விற்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் சுமார் அறுபதிலிருந்து தொண்ணூறுவரை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது என் கணிப்பு. அட்டை வடிவமைப்பிலும், அச்சு நேர்த்தியிலும் ஆண்டுக்காண்டு முன்னேற்றம் இருப்பதென்னவோ உண்மைதான், ஆனால் இவ்வளவு விலைகொடுத்துதான் அதனை அடையமுடியுமெனில் அதற்கு பழையபடியே இருந்துவிட்டுப் போகலாம். content is king என்பதுதான் எல்லாருக்குமே தாரகமந்திரம்.

புலம் பதிபக ஸ்டாலிலிருந்து வெளியே வரும்போது எஸ்.ராமகிருஷ்ணன் தனியாக நடந்து வந்துகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. கடந்த வருடம் ரசிகர் குழாம் சூழ ஊர்வலம் போல பார்த்ததாக நினைவு. இவரின் எந்த‌ எழுத்துநடை முன்பு வசீகரித்ததோ அதுவே இப்போது பெரும் அயற்சி தருவதாக இருக்கிறது.

உயிர்மையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தபோது திடீரென திரவியநெடி, நிமிர்ந்தால் தமிழச்சிதங்கபாண்டியன் வந்து மனுஷ்யபுத்திரனுடன் உரையாடிக்கொண்டிருந்தார். ஏனோ வெற்றிக்கொடிகட்டு வடிவேலு ஞாபகத்துக்கு வந்தார்

"சுஜாதாவின் புதிய கட்டுரைகள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைப் பார்த்தபோது சற்று திகிலாக இருந்தது. புரட்டிப் பார்த்ததில் அம்பலம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு என்று தெரிந்தது.சுஜாதா எழுதிய புத்தகங்கள் மட்டுமன்றி இந்தமுறை சுஜாதா பற்றிய புத்தகங்களும் நிறைய தென்பட்டன‌. என்றென்றும் சுஜாதா என்ற தலைப்பில் இருவேறு ஆசிரியர்களின் புத்தகங்கள், ரஞ்சன் எழுதிய சுஜாதா கதை என்றொரு புத்தகம்..etc....

புத்தகக்கண்காட்சி ஏற்பாடுகளில் கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் எந்த வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஃபுட் கோர்ட் மட்டும் சற்று சிறப்பாக இருப்பதாய்ப்பட்டது

வாங்க நினைத்து வாங்காமல் வந்த புத்தகங்கள் இன்றையகாந்தி, அறம் சிறுகதைகள், வெள்ளை யானை, ஆழிசூழுலகு,அசோகமித்ரன் கட்டுரைகள்

இனி இந்த ஆண்டு வாங்கிவந்த புத்தகங்களின் விபரம்

  • ப.சிங்காரம் நாவல்கள்(கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி)
  • வாஸவேச்வரம் - கிருத்திகா
  • சூரியனுக்கு அருகில் ஒரு வீடு -  மனுஷ்ய புத்திரன்
  • கடைசி டினோசார் - தேவதச்சன்
  • K அலைவரிசை - முகுந்த் நாகராஜன்
  • அரசு பதில்கள் 1980
  • ஞாபகம் வருதே - சித்ராலயா கோபு