Saturday, January 06, 2007

படித்ததில் பிடித்தது(3)

பொதுவாக, எதுவும் எழுதத் தோன்றாதபோது(வராதபோது) மற்றவர்களின் கவிதையையோ,கதையையோ போட்டு ஒப்பேற்றுவது வழக்கம்.என் 75% பதிவுகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.அந்த வரிசையில் சுஜாதா சொன்ன 'நபகோவின்' சிறுகதை ஒன்றையும் கல்யாண்ஜியின் கவிதை ஒன்றையும் இப்பதிவில் தருகிறேன்.

இனி...

நாபகோவ்(Nabakov) 'லோலிடா' எழுதிப் பெயர் அடைந்தவர்.கொஞ்சம் ஆபாசமான விஷயத்தை மிக அருமையான வசன நடையில் எழுதித் தப்பித்தவர்.இவரது சிறுகதை ஒன்று என் ஞாபகத்திலிருந்து சொல்கிறேன்:-

ஒரு அப்பா,ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான்.ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது!

பெற்றோர்களுக்கு ஒருதினம் ஆஸ்பத்திரியிலிருந்து போன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும் உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்.அதற்குள் என்ன நேர்ந்து விடுமோ என்று கவலைகடலில் இரவெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்போது:-

டெலிபோன் மணி அடிக்கிறது.பதற்றத்துடன் பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

"ஹென்றி இருக்கிறானா?" என்கிறது ஒரு பெண்குரல்.

"ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை,தப்பு நம்பர்" என்று வைத்து விடுகிறார்.

மறுபடி சில நிமிஷம் கழித்து டெலிபோன் மணி அடிக்கிறது.

"ஹென்றி இருக்கிறானா" அதே பெண்.

"மிஸ்,உனக்கு என்ன நம்பர் வேண்டும்?

"5365849"

"என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச்சுழற்றுகிறாய் போலிருக்கிறது"

"ரொம்ப தாங்க்ஸ்" என்று அந்தப் பெண் வைத்துவிடுகிறாள்.

கதையில் இன்னும் ஒருவரிதான் இருக்கிறது.

சிலநிமிஷ்ம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

நபகோவின் புத்திசாலித்தனம்! புரிகிறதா?

- சுஜாதா,1966


************

நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்குபோல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக்கொண்டது முற்றிலும்
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

-கல்யாண்ஜி,அந்நியமற்ற நதி


அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!