Sunday, September 17, 2006

லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு?



இந்த ஓவியத்தை நன்றாகப் பாருங்கள்.ரவிவர்மாவின் ஓவியத்தைவிட சிறந்தது இது.பிகாஸோவின் ஓவியத்தைவிட விலைஉயர்ந்தது இது.இந்த ஓவியத்தை வரைந்த,இரண்டாம் வகுப்பு படிக்கும் மீனாட்சியை பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?ஒருவேளை இவளது அன்னையைப் பார்த்திருக்கலாம்.இரவு நேரங்களில் புனாவின்(Poona) ஏதாவதொரு தெருமுனையில் நின்றுகொண்டிருப்பாள்.பொருந்தாத உதட்டுசாயதுடனும்,அதீத ஒப்பனையுடனும் நின்றிருக்கும் இவள்,நீங்கள் கடந்துபோகையில் உங்களைப் பார்த்து கண்சிமிட்டக் கூடும்.ஆம்,இந்தக் குழந்தையின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி.

அண்மையில்,'ஏகலைவ்ய நியாசா' என்ற தொண்டுஅமைப்பு (Pune)பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டியொன்றை நடத்தியது.அதில் அக்குழந்தைகள் வரைந்த ஓவியங்களை நான் பணிபுரியும் நிறுவனத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்கள்.அக்கண்காட்சியில் நான் வாங்கிய ஓவியம் இது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய சிவப்பு விளக்குப்பகுதி புனாவில் உள்ளது."புத்வார் பேட்" என்றழைக்கப்படும் இப்பகுதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள்.மீனாட்சி போன்று இங்கு ஏராளமான குழந்தைகள் இருக்கின்றார்கள்.உலகி மிகக்கொடியது 'இளமையில் வறுமை' என்றாள் அவ்வை.அதனினும் கொடிது இங்குள்ள குழந்தைகளின் நிலைமை.மனித வாழ்க்கைக்கு சற்றும் அருகதையற்ற இப்பகுதிகளில் வசித்துவரும் இந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு சமூகம் கொடுத்திருக்கும் அடையாளம் கொடுமையானது.
தங்கள் பெற்றோரைப் பற்றிய இக்குழந்தைகளின் புரிதல் என்னவாக இருக்கும் என்பது வருத்ததிற்குரிய கேள்வி.பொதுவாக இங்கு கணவன் - மனைவி உறவுசம்பிரதாயங்கள் அவ்வளவாகப் பின்பற்றப் படுவதில்லையாம்.எனவே,இவர்களில் எத்தனைபேரின் குழந்தைகளுக்கு தந்தை என்ற உறவு கிடைத்திருக்கிறது என்பது தெரியவில்லை.

இக்குழந்தைகளின் நல்வாழ்வுக்காக பல சேவை நிறுவனக்கள் போராடி வருகின்றன.இப்பகுதியில் இவர்களுக்காக நடத்தப்ப்டும் பிரத்தியேகப் பள்ளி,மற்றும் அரசு பள்ளிகளைத்தவிர மற்ற பள்ளிகளில் இக்குழந்தைகளுக்கு இடம் கிடைப்பது கடினமான காரியமாக உள்ளது என்று சேவைஅமைப்பைச்சேர்ந்த ஒரு நண்பர் குறிப்பிட்டார்.இந்த குழந்தைகளுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி,நல்ல கல்வியை இவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதாகத்தான் இருக்கும்.மாறாக இவர்களது கல்வி பாதியில் தடைபடுமானால்,இவர்களும் இதே படுகுழியில் விழாதிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

மீனட்சியின் ஓவியத்தில், நம் பாரதக் கொடி எப்படி பட்டொளி வீசிப்பறக்கிறது பாருங்கள் !