Friday, September 21, 2007

உதிரிக் குறிப்புகள்

இந்தக் கலைநயமிக்க புகைப்படத்தை எடுத்த தமிழ் நடிகர் யார் என்று கண்டுபிடியுங்கள்.விடை இறுதியில்


*போலி,போலியல்லாத,கருப்பு,சிவப்பு மற்றும் ஜாதீயப் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவிட்டு,கடந்த இரண்டுநாட்களாக அத்தகைய பதிவுகள் எதுவும் சூடான இடுகைகளில் காணக்கிடைக்காத போது கைநடுக்கம் ஏற்பட்டது.


*வாராவாரம் (மெனக்கெட்டு) "ராஸ்தா பேட்" வரை சென்று விகடன் வாங்கிவர எனக்கு மீதமிருந்த ஒரு காரணமும் தீர்ந்து போனது(க.பெ).


*சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்கள் ரொம்பவும் வெறுமையை உணரச்செய்தன.


(1)Metamorphosis(Kafka)

ஒரு நாவலுக்கு இவ்வளவு அருமையான துவக்க வரிகள் அமைவது அபூர்வம்.

"As Gregor Samsa awoke one morning from uneasy dreams he found himself transformed in his bed into a gigantic insect."


(2)நாளை மற்றுமொரு நாளே(ஜி.நாகராஜன்)


"உங்களுக்கு வாழ்க்கையில லட்சியம் என்னண்ணே?" என்றான் முத்துசாமி.

"அப்படீன்னா?" என்றான் கந்தன்.

"நீங்க வாழ்க்கையில எதை சாதிக்கணூம்னு திட்டம் போட்டிருக்கீங்க?"

கந்தன் சிரித்தான்."எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துல வந்து பொறந்தேன்?"என்றுவிட்டு மீண்டும் சிரித்தான்.


பின்நவீனத்துவமாக சொல்கிறேன் பேர்விழி என்று சாதாரண விஷயங்களைக் கூட குழப்பியடித்து படிப்பவனை மண்டைகாயவைக்கும் நூல்கள் ஒருபுறமிருக்க, நா.ம.நா போன்ற நாவல்கள் "இருத்தலியல்" போன்ற பெரிய தத்துவங்களைக்கூட அதன் பளு தெரியாமல் வாசகனுக்குள் இறக்கி வைத்துவிடுகின்றன.
தஞ்சை பிரகாஷின் "கள்ளம்" இந்த நாவலுடன் நிறைய ஒப்புமைகளைக் கொண்டிருக்கிறது.கள்ளம் இந்த நாவலுக்குப் பின்னால் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.


* "சக்தே இண்டியா" இரண்டாவதுமுறை பார்த்தபோது,திரைக்கதை நேர்த்தியும்,படம் ரியலிஸ்டிக்காக இருக்கவேண்டும் என்பதில் இயக்குனருக்கிருந்த சிரத்தையும் வியக்கவைத்தன.ஆண்கள் அணியுடன் பெண்கள் அணி மோதும் காட்சி இதற்கு உதாரணம்.பெண்கள் அணி வலுவானது என்று காட்ட வேண்டும் அதேசமயம் ஆண்கள் அணியைத் தோற்கடிப்பது போன்றும் காட்டமுடியாது,அபத்தமாக இருக்கும்.ஒரே ஒரு கோல்(Goal) குறைவாக இருப்பதுபோல ஆட்டத்தை முடிப்பது புத்திசாலித்தனம். 'அப் தக் சப்பன்' பட டிவிடியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.


* ஷாருக் கான் "ஓம் ஷாந்தி ஓம்" படத்திற்காக உடம்பை கல்லாக இறுக்கியிருப்பது பிரமிக்க வைக்கிறது.இப்படத்தில் வரும் "Aanhko mein teri " பாடலைக் கேட்டீர்களா?அதில் கேகே வின் குரல் மயிலிறகால் வருடுவது போலுள்ளது.

ஆரம்பக் கேள்விக்கான பதில்: கமல் ஹாசன்

Sunday, September 09, 2007

நோ கமெண்ட்ஸ்

1)எழுத்தாளர்கள் கையாலாகாதவர்கள்

2)தமிழில் நல்ல மரபுக்கவிதைகள் எல்லாம் எழுதப்பட்டுவிட்டன.

3)லா.சா.ரா-வைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப்பேச லாயக்கற்றவன்.

மேலுள்ள இந்த ஸ்டேட்மெண்ட்களை உதிர்த்த தமிழ் எழுத்தாளப் பிரபலங்கள் யார் யார் என்று கண்டுபிடியுங்கள்.விடை இறுதியில்..

********************

ஆதவனின் "கார்த்திக்" என்ற சிறுகதையிலிருந்து (தொடர்ச்சியற்று)உருவப்பட்ட இரண்டு பத்திகள்

அவன்,தன் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒருத்தியைத் தேடிக்கொண்டிருந்தான்.மனிதகுலம் இழந்துவிட்டிருந்த நிரபராதம் குறித்துச்சோகம்.இயற்கையை நசுக்கித் தேய்த்தவாறு எங்கும் செயற்கை படர்ந்து வருவது குறித்துச் சோகம்.

ஆம்,கார்த்திக் ஓர் உலர்ந்த,ஒற்றைப் பரிமாணப் பகுத்தறிவு வாதியல்ல.அவன் எதிர்த்தது பழமைவாதிகளின் மூட நம்பிக்கைகளை மட்டுமல்ல. புதுமைவாதிகளின் மூடநம்பிக்கைகளும்தான் அவனுக்குப் பிடிக்கவில்லை.அதிலும் இந்தப் பெண்கள்...

நவநாகரீக உடைகள் உடுத்து,ஆங்கிலத்தில் பேசவும் சிகரெட் குடிக்கவும் தெரிந்து விட்டதால் மட்டுமே,தாங்கள் முன்னேற்றமடைந்துவிட்டதாக எண்ணுகிற இவர்களுடைய மேலோட்டமான போக்கு...

இவர்களைப்போல உடுக்காத ஆங்கிலம் பேசாத பெண்களைவிட - தம் தாயாரையும் பாட்டியையும் விட - தங்களை உயர்ந்தாவர்களாக நிரூபித்துக்கொள்ள ஒவொவொரு கட்டத்திலும் முயற்சி செய்கிற பரிதாபம்...
புதுப் பணக்காரர்களின் ஆர்பாட்டத்தையும்,திடீரென உரிமையும்,சக்திகளும் பெற்ற மாஜி அடிமைகளின் பழிவாங்கும் குரோதத்தையும் வஞ்ஜகத்தையுமே இவர்களிடம் அவன் கண்டான்.பழைய பெண்களின் அசட்டு நம்பிக்கைகள்,பிடிவாதங்கள் இவையே மீண்டும் மாறு வேஷமணிந்து வந்தது போலிருந்தது.

ஒருவேளை தனக்கு எத்தகைய பெண்மைக்குத் தகுதி உள்ளதோ,அத்தகைய பெண்மையையே ஒரு சமூகம் பெறுகிறது, என்பதாக இருக்கலாம்.

சிந்தனைகளிலும் செயல்களிலும் இந்தச் சமூகத்திடமிருந்து வேறுபடுகிறவர்களும்கூட, அதில் வாழ்கின்ற காரணத்தாலேயே,இச்செயல்கள் விளைவிக்கும் தண்டனைகளிலிருந்து தப்ப முடிவதில்லை.
****
அவனைப் போலவே அவளும் மலர்களையும் இலைகளையும் மரங்களையும் செடிகளையும் விரும்புகிறவள்.அமைதியை விரும்புகிறவள்.அதிகம் பேசாதவள்.மூட மரபுகள்,பழக்கங்கள் ஆகியவற்றைத் தொடர விரும்பாதவள்.அதே சமயத்தில் இந்த நம்பிக்கையை அல்லது நம்பிக்கையின்மையை உரக்க பறைசாற்றிக்கொண்டு அதன் மூலமாகத் தனக்கு ஒரு ஹோதாவை உருவாக்கிக் கொள்ள முயலாதவள்.மனதில் மூளியில்லாதவள்.தன்னைத் தானாகவே உணருவதில் சங்கடமில்லாதவள்.ஒன்றைச் சார்ந்தவளாகவோ மற்றொன்றைச் சாராதவளாகவோ,சிலரைவிட உயர்ந்தவளாகவோ,சிலருக்குத் தாழ்ந்தவளல்லாதவளாகவோ தன்னைக்காட்டிக்கொள்ளாமலேயே ஸ்திரமாக உணருகிறவள்.

அவளுடைய உறுதியும் திண்மையும் கார்திக்கிற்கு மீண்டும் மீண்டும் வியப்பளித்தன,தெம்பூட்டின.

'இவள் எனக்கேற்ற விசேஷமானவள்.நான் தவறு செய்யவில்லை' என்று அவன் நினைத்தான்.இன்பம் நிறைந்த எதிர்காலம் அவன் கண்முன் விரிந்தது.

ஆனால் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிரம்பியது.நம்மைப் பற்றியும் பிறரைப்பற்றியும் புதிய கண்டுபிடிப்புகளை நம் முகத்தில் எறிந்து, சரியை தவறாகவும், தவறைச் சரியாகவும் மாற்றுவது.

********************************

திடுக்கிடும் திருப்பங்களையோ,அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலையோ ஏற்படுத்தாத நின்று நிதானமாகப் பயணிக்கும் மேற்கூரியவகை கதைசொல்லல் உங்களைக் கவர்கிறது என்றால் கை கொடுங்கள் நீங்கள் தான் ஆதவனின் எழுத்துக்கள் தேடும் வாசகர்! ரெடி...ஸ்டெடி..ஸ்டார்ட்........

ஆதவனின் எழுத்துக்கள் குறித்த எனது முந்தைய பதிவு

*******************
கேள்விகள் ஒன்றிலிருந்து மூன்றுவரைக்கான பதில்கள் முறையே சுஜாதா, சுஜாதா மற்றும் சுஜாதா !!!!

Monday, September 03, 2007

ஜானகி அம்மாள்
கணித மேதை ராமானுஜன் இங்கிலாந்தில கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது ஒரு முறை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார்.அவரைப் பார்க்க அவரின் நண்பரும் , கணித மேதையுமான ஹார்டி வாடகைக்காரில் வந்திறங்கினார்.அவர் பயணித்த கார் எண் 1729.அவர் கணித மேதையில்லையா..அதனால் வரும் வழியெல்லாம் அந்த எண்ணின் சிறப்பைப்பற்றி ஆராய்ந்து கொண்டேவந்தார்.ராமானுஜத்தை சந்தித்தபோது இந்த எண்ணைக் குறிப்பிட்டு "இந்த எண்ணிற்கு எந்த சிறப்புமே இல்லை.போரிங் நம்பர்" என்று சொல்லியிருக்கிறார்.ஒரு விநாடி யோசித்த ராமானுஜன்"நீங்கள் சொல்வது தவறு.இது மிகவும் சுவாரஸியமான எண்" என்றாராம்.இந்த எண்ணின் சிறப்பாக ராமானுஜன் என்ன சொல்லியிருப்பார் என்று இப்பதிவின் இறுதிவரை யோசித்துப் பாருங்கள்.


*******************************************

ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டுகையில்,அவரது துணைவியார் ஜானகி அம்மாள் பற்றிய செய்திகள் ஆச்சரியம் அளிக்கின்றன.10வயதில் திருமணம்,திருமணம் என்றால் என்ன என்று புரியத்துவங்கும் முன்னரே(21) விதவைக்கோலம்.சொற்பகாலமே வாழ்ந்த ராமானுஜனுக்கு எதிப்பதமாக கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகாலம்(94 வயதுவரை)வாழ்ந்து மறைந்திருக்கிறார்,தனிமையில்.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில்,ஆச்சாரமான ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒரு இளம் விதவையின் விதி எவ்வாறு அமையும் என்பது நன்றாகவே தெரியும்.அப்பெண் தன் பெற்றோரையோ,சகோதரனையோ அண்டி,ராமா ராமா என்று ஜெபித்தபடி தன் மிதமுள்ள வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான்.ஆனால் ஜானகி தன் வாழ்க்கை அவ்வாறு அமைய அனுமதிக்கவில்லை.கணவன் இறந்தபின் பம்பாய்யில் தன் சகோதரனின் வீட்டில் தங்கி முறையாக தையலும்,ஆங்கிலமும் பயின்றிருக்கிறார்.பின் சென்னை வந்து அனுமந்தராவ் தெருவில் குடியேறிய ஜானகி அடுத்து வந்த 50 ஆண்டுகளை தனியாக இல்லை தனித்து வாழ்ந்திருக்கிறார்.அவர் பயின்ற தையல் தொழில் அவருக்கு நல்ல பொருள் ஈட்டித்தந்திருக்கிறது.இதற்கிடையில் அவரது தோழி ஒருவர் திடீரென்று இறந்து போக,அவரின் குழந்தையை தத்தெடுத்து படிப்பு செலவு முழுமையையும் ஏற்றிருக்கிறார்.ஏழ்மைகாரணமாக படிப்பைத்தொடரமுடியாத பலருக்கு பொருள் கொடுத்து உதவியிருக்கிறார்.
ராமனுஜருக்கு சிலை ஒன்று வைக்கக் கோரிக்கை விடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

Dear Sir,
I understand from Mr. Richard Askey,
Wisconsin, U.S.A., that you have contributed
for the sculpture in memory of
my late husband Mr. Srinivasa Ramanujan.
I am happy over this event.
I thank you very much for your good
gesture and wish you success in all your
endeavours.
Yours faithfully,
Signed S. Janaki Ammal
மறுமணம் செய்துகொள்வதைவிட ஒரு பெண் தனியாக வாழ்ந்துகாட்டுவது இன்னும் புரட்சிகரமானதாகத் தோன்றுகிறது.மறுமணம் செய்துகொள்ளும் போது மறுபடியும் ஒரு ஆணைசார்ந்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.ஆனால் எவருடைய துணையுமின்றி தனியாக வாழ அதிக மன உறுதியும்,தன்னம்பிக்கையும் தேவைப்படுகிறது.பெண்விடுதலை,பெண்ணுரிமை என்று எந்தவித முழக்கங்களுமின்றி அதேசமயம் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்திருக்கும் ஜானகி, சந்தேகத்திற்கிடமின்றி பாரதியின் புதுமைப் பெண்களுள் ஒருவர்.

********************************************
1729 சிறப்பு:

இரண்டு கன சதுரங்களின் கூட்டுத்தொகையாக இருவேறு முறைகளில் சொல்லக் கூடிய மிகச்சிறிய எண்.புரியும்படி சொன்னால்

"It is the smallest number expressible as the sum of two cubes in two different ways."

two different ways

1) 10X10X10 + 9X9X9 = 1729

2) 12X12X12 + 1X1X1 = 1729

1729 ராமானுஜன் எண் என்று அழைக்கப் படுகிறது.