Wednesday, April 04, 2007

ஆதவனின் எழுத்துக்கள் -எனது பார்வையில்



"நாம் எதை நம்ப வேண்டுமோ அதனை நம்புவதில்லை.நாம் நம்ப விரும்புகிறதைத்தான் நம்புகிறோம்"
- ஆதவன்
எனக்குப் பிடித்தமான ஆதவனின் வரிகள் இவை.எனக்குமட்டுமில்லை ஆதவனுக்கே பிடித்தமானதாயிருந்திருக்கவேண்டும்.இல்லையென்றால் 'என் பெயர் ராமசேஷன்','இரவுக்கு முன் வருவது மாலை','இந்த மரம் சாட்சியாக..' என பல இடங்களில்
இந்த வரிகளைப் பயன்படுத்தியிருப்பாரா?

சுஜாதா எழுத்துக்களுக்காக அலைபாய்கிறது மனது,சு.ராவின் எழுத்தாழம் கண்டு பிரமிக்கிறது.என்றாலும் மனது அன்யோன்யமாக உணர்வது ஆதவனின் எழுத்துக்களில்தான்.இதன் காரண்ங்கள் பற்றி யோசிப்பது சுவாரஸியமாக இருக்கிறது.

முதலாவதாக, ஆதவனின் ஹீரோக்கள் யாவரும் சாமானியர்கள்.கனேஷ்-வசந்த் போன்று சாமார்த்திய சாலிகளோ,சு.ராவின் JJ போன்று கொள்கைப்பிடிப்பாளிகளோ அல்லர்.மாறாக நிர்தர்சனர்கள்.யாரையும் நிதாட்சண்யமாகப் புறக்கணிக்கக்கூட தயங்குபவர்கள்.உடல் ஆகிருதியும்,அதிகார அகிருதியும் கொண்டவர்களால் Dominate செய்யப்படுபவர்கள்.அந்த பிரக்ஞை காரணமாக சதா புலம்பித் தீர்ப்பவர்கள்.கனவுலகில் மிதப்பவர்கள்.தங்களை மற்றவர்களிடமிருந்து தனித்தவர்களாக இன்டலெக்சுவல்களாக உணருபவர்கள்.ராம சேஷனும்,செல்லப்பாவும்(காகித மலர்கள்),சேஷாத்ரியும்(கனவுக்குமிழிகள்)இப்படிப்பட்டவர்கள்தான்.இந்த ஹீரோக்கள்தான் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.

அடுத்து உணர்வுகள் கொண்டு கதை சொல்லும் முறை.ஆதவனின் கதைகள் யாவும் மனித உணர்வுகளை அடுக்கி உருவானவை.இவ்வளவு நெருக்கமாக உணர்வுகளைப் பின் தொடர்ந்து அதற்கு வார்த்தை வடிவம் கொடுத்தவர்(எனக்குத் தெரிந்து)யாரும் இல்லை.இவர் ஒரு மனோதத்துவ நிபுணர் என்ற எண்ணம்,இவரது கதைகளைப் படிக்கும் போது தோன்றுவதுண்டு.
கதைகளில் வரும் சம்பாஷணைகள் இயல்பாக அதேசமயம் சுவாரஸியமாகவும் இருக்கும்.ஆதவனைப் படிப்பதில் இன்னொரு வசதி,புத்தகத்தை எப்போதுவேண்டுமானலும் மூடிவைக்கலாம்.எப்போதுவெண்டுமானாலும் எடுத்துப்படிக்கலாம்.படித்ததை சிறிது நேரம் மனதில் அசைபோடலாம்.மறுவாசிப்பின் போது புரியாத ஒன்று புரிபடும் அல்லது புரிந்த ஒன்று குழப்பத்துவங்கும்.

சில அபாயங்கள்:ஆதவனின் எழுத்துக்களில் ஒரு மெல்லிய சோகம் இழையோடும்.இந்த மென்சோகம் மனதுக்கு இதம் தரும் என்றாலும் சில வேளைகளில் நம்மை உற்சாகம் இழக்கச்செய்யும்.மேலும் வாழ்வின் ஆதார சுருதியாக நாம் நம்பும் காதல்,பாசம்,நட்பு இவற்றின் மீது தர்க்கம் செய்து அதன் வேரை அசைத்து விடுவதும் நிகழும்.உதாரணதிற்கு ஒரு சிறுகதையில்....

சிநேகிதன் என்ற வார்த்தையே பலவீனமான ஒரு கணத்தின் உருவமாக, தன்னைத் தானே ஏமற்றிக் கொள்வதாகத் தோன்றியது.நான் தேடிச்சென்றது,மீண்டும் மீண்டும்,என் சுய முக்கியத்துவத்தைதான் என்று தோன்றியது


- என் புத்திசாலித்தனத்தின் பெரிதிலும் பெரிதான ரீங்காரத்தைத் தேடி


- என் நகைச்சுவைக்கேற்ற உரத்த சிரிப்பையும் கண்ணீருக்கேற்ற வழவழப்பான கைக்குட்டையையும் தேடி


- பெண்களிடம் ஆசைத் தீயை மூட்டி விரகத்தினால் அவர்களைத் துடிதுடிக்கச்செய்யும் ஒரு மகத்தான ஒரு காதலனை என்னில் தேடி


- கயவாளித்தனமொ,குரோதமோ கொச்சையான கெட்டிகாரத்தனமோ துளியும் ஒட்டிக்கொள்ளாத என் 'தாமரை இலை' மனப்பாங்கின்(!)தூய்மையின்,அங்கீகாரத்தைத் தேடி.


எனக்கென்றே அளவெடுத்துத் தைத்த,நேர்த்தியான மிடுக்கான வண்ணக்குல்லாய்கள்.திடீரென்று ஒரு நாள் இவையெல்லாம் வெறும் கோமாளிக்குல்லாய்களாக தோன்றின. ..........


ஆதவன் எழுத்துக்கள் பற்றிய எனது இந்த கருத்துக்கள் பக்குவமற்றதாய் தோன்றலாம்.எனினும் அவரின் கடைமட்ட வாசகன் என்ற முறையில் எனது கருத்துக்கள் இவை.சில காலம் கழித்து மறுவாசிப்புக்குப்பின் என் புரிதல் மாறுபடலாம் அல்லது மாறாமலும் போகலாம்.