Sunday, February 09, 2014

Big Bad Wolves (2013)


இப்படம் ஏற்கனவே உலகத்திரைப்பட விழாக்களில் விருதுகளை வாரிக் குவித்திருந்தாலும் ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததென்னவோ டாரண்டினோவின் பாராட்டைப் பெற்ற பிறகுதான். 2013 ஆம் ஆண்டின் சிறந்த படம் இதுதான் என்று குவிண்டின் டாரண்டினோ இந்த இஸ்ரேலியத் திரைப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். பொதுவாக டாரண்டினோ படங்களில் காணக்கிடைக்கும் இருண்மை நகைச்சுவை, குரூரம், நெடிய காட்சிஅமைப்புகள், மெல்லிய அங்கதம் என எல்லா அம்சங்களும் இப்படத்திலும் உண்டு. 2010ல் வெளியாகி பரவலான பாராட்டைப் பெற்ற ’ரேபிஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய Aharon Keshales  மற்றும் Navot Papushado சகோதரர்கள் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

பதின்ம வயது பிள்ளைகள் கண்ணாமூச்சி விளையாடும் காட்சி ஸ்லோமோஷனில் திரையில்  விரிய அருமையான பின்னணி இசையுடன் துவங்குகிறது படம். அவர்களில் ஒரு சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் (தலை கொய்யப்பட்டு ) கொல்லப்படுகிறாள். இந்த தொடர்கொலைகளை விசாரிக்கும் மிக்கி (Miki) சட்டத்துக்கு அப்பாற்பட்ட வழிகளில் விசாரணை செய்யும் வழக்கத்தையுடையவன். எப்படிப்பட்ட நிரபராதியும் ஒரு கட்டதுக்குமேல் அடிதாங்கமல் குற்றத்தை ஒப்புக்கொள்வான் என்னும் சித்தாந்தமுடையவன். இந்த வழக்கில் அவர்களுக்கு கிடைக்கும் ஒரே ஒரு சந்தேகத்திற்கிடமான ஆள் ஒரு பள்ளி ஆசிரியர்(Dror). அவனை மிக்கி தனது பாணியில் விசாரிக்கும்போது அதனை செல்போனில் படம்பிடித்து சிலர் இணையத்தில் பரப்பிவிடுகிறார்கள் . இதனால் மிக்கி சஸ்பெண்ட் செய்யப்படுகிறான். ஆசிரியர் விடுவிக்கப்படுகிறார் என்றாலும் வேலை போகிறது. மிக்கி ஆசிரியரைக் கடத்தமுயல்கிறான். இதற்கிடையில் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை(Gidi)  இவர்கள் இருவரையும் கடத்துகிறார். இப்புள்ளியிலிருந்து கதை முழுவதுமாக கிடியின் ரகசிய வீட்டுக்கு இடம்பெயர்கிறது. அங்கு நடக்கும் துன்புறுத்தல்களும் கடைசி நேர திருப்பங்களும் தான் மீதிக்கதை. வழக்கமான  ஹாலிவுட் வகை த்ரில்லர் போல தோன்றினாலும் கதை சொல்லும் பாணியிலும் வசனங்களிலும் இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள்.

ரத்தத்தைப் பார்த்தால் மயங்கிவிழும் ஆட்கள் இந்தப் படத்தை தவிர்த்துவிடுவது நலம். படத்தில் ஏகத்துக்கு வன்முறைக்காட்சிகள் உள்ளன. உதாரணத்திற்கு கிடியின் தந்தை ப்ளோ டார்ச் வைத்து எதிராளியின் மார்பில் அடித்து மயிர் பொசுக்கி சதையை துளையாக்குவது வரை காட்டுகிறார்கள் . இத்தோடு விடுவதில்லை கிடியின் தந்தை காற்றை முகர்ந்து என்ன வாசனை வருகிறது என்று கேட்கிறார், அதற்கு கிடி “பார்பேக்யூ”(Barbecue) என்கிறான். இதற்கா சிரித்தோம் என்று யோசிக்கவைக்கும் இதுபோன்ற குரூர நகைச்சுவை காட்சிகள் நிறைய இருக்கின்றன.

டாரண்டினோ பாணியைவிடவும் இந்தப்படம் கோயென் சகோதர்களின் படமாக்கும் பாணியை அதிகம் சார்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. வெளியில் சாமானியர்கள் போல தோன்றுபவர்கள் எவ்வளவு கொடூர செயல் செய்துவிடுகிறார்கள் அல்லது கொடூரமான செயலைபுரிபவர்கள் எப்படி சாமானியர்களின் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதற்கு கிடி தன் தாயிடம் திட்டு வாங்கும் காட்சி ஒரு உதாரணம். எதேச்சையாக கிடியின் தந்தை துன்புருத்தல் நடக்கும் இடத்துக்கு வந்து சேருகிறார். நடக்கும் அபத்தத்தை அவர் தடுத்து நிறுத்துவார் என பார்வையாளன் எதிர்பார்க்கும் போது அவரும் அந்த விளையாட்டில் இணைந்து கொள்வது சுவாரஸியம். படத்தின் கடைசி ஃப்ரேம் வரையிலும் சஸ்பென்ஸ் தக்க வைக்கப்பட்டிருப்பது அருமை.

கிட்டத்தட்ட இதே கதையமைப்பைக் கொண்ட ப்ரிசனர்(Prisoner) என்ற ஆங்கிலபடமும் சென்ற ஆண்டு வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்த அப்படம் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இவ்வளவுக்கும் அப்படத்தில் போதுமான திருப்பங்களும் முடிச்சுகளும் நிறைந்திருந்தன. தொய்வான கதைசொல்லல் தான் அப்படத்தின் தோல்விக்குக் காரணம் என்று தோன்றுகிறது. அதே சமயம் வழக்கமான கதையமைப்பைக் கொண்டிருந்தும் தேர்ந்த திரைக்கதையாலும் மெல்லிய நகைச்சுவையாலும் வெற்றிபெறுகிறது "Big Bad Wolves".

Monday, January 13, 2014

புத்தகக் கண்காட்சி 2014

புதுபுத்தகவாசம், பக்கம் புரட்டும் சத்தம் தரும் சுகம் போன்ற‌ ஜல்லிகளையெல்லாம் நிறுத்திவிட்டு மின்னூல்களை ஆர‌த்தழுவிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதென்றே தோன்றுகிறது. இந்த ஆண்டு புத்தகக்கண்காட்சியில் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆனைவிலை குதிரைவிலை விற்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் சுமார் அறுபதிலிருந்து தொண்ணூறுவரை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது என் கணிப்பு. அட்டை வடிவமைப்பிலும், அச்சு நேர்த்தியிலும் ஆண்டுக்காண்டு முன்னேற்றம் இருப்பதென்னவோ உண்மைதான், ஆனால் இவ்வளவு விலைகொடுத்துதான் அதனை அடையமுடியுமெனில் அதற்கு பழையபடியே இருந்துவிட்டுப் போகலாம். content is king என்பதுதான் எல்லாருக்குமே தாரகமந்திரம்.

புலம் பதிபக ஸ்டாலிலிருந்து வெளியே வரும்போது எஸ்.ராமகிருஷ்ணன் தனியாக நடந்து வந்துகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. கடந்த வருடம் ரசிகர் குழாம் சூழ ஊர்வலம் போல பார்த்ததாக நினைவு. இவரின் எந்த‌ எழுத்துநடை முன்பு வசீகரித்ததோ அதுவே இப்போது பெரும் அயற்சி தருவதாக இருக்கிறது.

உயிர்மையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தபோது திடீரென திரவியநெடி, நிமிர்ந்தால் தமிழச்சிதங்கபாண்டியன் வந்து மனுஷ்யபுத்திரனுடன் உரையாடிக்கொண்டிருந்தார். ஏனோ வெற்றிக்கொடிகட்டு வடிவேலு ஞாபகத்துக்கு வந்தார்

"சுஜாதாவின் புதிய கட்டுரைகள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைப் பார்த்தபோது சற்று திகிலாக இருந்தது. புரட்டிப் பார்த்ததில் அம்பலம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு என்று தெரிந்தது.சுஜாதா எழுதிய புத்தகங்கள் மட்டுமன்றி இந்தமுறை சுஜாதா பற்றிய புத்தகங்களும் நிறைய தென்பட்டன‌. என்றென்றும் சுஜாதா என்ற தலைப்பில் இருவேறு ஆசிரியர்களின் புத்தகங்கள், ரஞ்சன் எழுதிய சுஜாதா கதை என்றொரு புத்தகம்..etc....

புத்தகக்கண்காட்சி ஏற்பாடுகளில் கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் எந்த வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஃபுட் கோர்ட் மட்டும் சற்று சிறப்பாக இருப்பதாய்ப்பட்டது

வாங்க நினைத்து வாங்காமல் வந்த புத்தகங்கள் இன்றையகாந்தி, அறம் சிறுகதைகள், வெள்ளை யானை, ஆழிசூழுலகு,அசோகமித்ரன் கட்டுரைகள்

இனி இந்த ஆண்டு வாங்கிவந்த புத்தகங்களின் விபரம்

 • ப.சிங்காரம் நாவல்கள்(கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி)
 • வாஸவேச்வரம் - கிருத்திகா
 • சூரியனுக்கு அருகில் ஒரு வீடு -  மனுஷ்ய புத்திரன்
 • கடைசி டினோசார் - தேவதச்சன்
 • K அலைவரிசை - முகுந்த் நாகராஜன்
 • அரசு பதில்கள் 1980
 • ஞாபகம் வருதே - சித்ராலயா கோபுSunday, January 06, 2013

அ-புனைவு ‍ வாசிப்பு சவால்


புத்தக வாசிப்பைப் பொறுத்தவரை 2012 மிகவும் சுமாரான ஆண்டு எனக்கு. 2013‍ன் புத்தகக் கண்காட்சி நெருங்கிவிட்ட நிலையில் ஏற்கனவே வாங்கிவைத்து பிரிக்கப்படாமல் இருக்கும் புத்தகங்களே ஏராளம். ஒவ்வொரு புத்தகமும் அது எப்போது படிக்கப்படவேண்டும் என்பதை அப்புத்தகமே தீர்மானிக்கின்றது என்றெல்லாம் எத்தனை காலத்துக்கு ஜல்லி அடிப்பது?? ஆக இவ்வருடத்தில் சற்று திட்டமிட்டு வாசிக்கவும், வாசித்தவை குறித்த எண்ணங்களை சேமித்துக்கொள்ளவும் இந்த வாசிப்பு சவாலை எடுத்துக்கொள்கிறேன்.

புனைவு வாசிக்க ஆர்வம் குறைந்து வருகிறது (பொறுமை குறைந்து வருகிறது என்றும் சொல்லலாம்). வாசிக்கத்துவங்கி பாதியில் நிறுத்தியிருக்கும் புனைவுகளை வாசித்து முடித்தாலே இவ்வருடத்திற்குப் போதுமானதாக இருக்கும். இவ்வருடம் நிறைய அ‍-புனைவுகளும், கவிதைக்ளும் வாசிக்கத் திட்டம்.  இனி ஆட்ட விதிகள்
Levels:

Geek: 4-6 books in at least 2-3 different categories
Dork: 7-10 books in at least 4-5 different categories
Dweeb: 11- 14 books in at least 6-7 different categories
Nerd: 15+ books in at least 8+ different categories

Categories:

* Health, Medicine, Fitness, Wellness
* History- US, World, European, etc
* Religion, Spirituality, Philosophy
* Technology, Engineering, Computers, etc
* Business, Finance, Management
* Sports, Adventure
* Food- Cookbooks, Cooks, Vegan Vegetarianism, etc
* Autobiography, Biography, Memoir
* Art, Photography, Architecture
* Music, Film, TV
* Self Improvement, Self Help, How To
* Home, Garden
* Science-Nature, Weather, Biology, Geology
* Anthropology, Archaeology
* Animals-Insects, Mammals, Dinosaurs, etc
* Family, Relationships, Parenting, Dating, Love
* Crime, Law
* Poetry, Theatre
* Politics, Government, Current Affairs
* Literary Criticism/Theory
* Cultural Studies
* Travel
* Crafts


வகைமைகளை முன்னமே முடிவு செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. ஆனால், வகைக்கு இரண்டு புத்தகங்களை மட்டுமே படிப்பது விரிவான வாசிப்புத்தளம் அமைய உதவும்.

* மேற்குறிப்பிட்ட வகைகளைத்தவிர்த்து வேறு ஏதேனும் தோன்றினாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: நான் எந்தவிதிகளையும் வைத்துக்கொள்ளப் போவதில்லை. இஷ்டம் போல வாசித்துவிட்டு, வருட இறுதியில் மேற்சொன்னபடி வகைப்படித்திப் பார்க்கப் போகிறேன்.

Thanks to http://bookmarktoblog.blogspot.in/


Update(03/01/2014):


 • பாரதி விஜயா கட்டுரைகள்
 • இசையாலானது(Krishna Davinci)
 • பாம்புதைலம்(Payon)
 • கற்றதும் பெற்றதும் தொகுதி IV
 • இடாகினி பேய்களும்(Gopikrishnan)
 • மூங்கில் மூச்சு(Su.Ka)
 • A man without a Country (kurt vonnegut)
 • Where there is a will (John Mortimer)Sunday, December 16, 2012

There is no spoon..
Spoon boy: Do not try and bend the spoon. That's impossible. Instead only try to realize the truth.

Neo: What truth?

Spoon boy: There is no spoon.

Neo: There is no spoon?

Spoon boy: Then you'll see that it is not the spoon that bends, it is only yourself.


எனக்கு மிகவும் பிடித்தமான காட்சிகளில் ஒன்று இது. ஒரு ஸென் தத்துவத்தை இதைவிட எளிமையாக விளக்கிவிட முடியாது. 

இதற்குப் பலவிளக்கங்கள் உண்டு, என்னுடைய புரிதல்
"உண்மையான உண்மை என்று ஏதுமில்லை. நமக்கான உண்மையை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். ஸ்பூனைப் பற்றிய நம் பௌதீக‌ ஆறிவு அதனை வளைப்பதிலிருந்த்து நம்மைத் தடுக்கிறது. மாயையிலிருந்து விடுபட்டு, மனதின் நம்பிக்கையைப் பொருத்தே உண்மைகள் நிர்மாணிக்கப்படுகின்றன என்பதை உணரும்போது யாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறோம். அதாவது மனம் எதனை முழுமையாக நம்புகிறதோ அதுதான் உண்மை!!"

Saturday, December 01, 2012

"தலாஷ்" - ‍ஒரு பார்வை (Spoiler இன்றி ரத்தமின்றி)
கமல் மற்றும் அமிர் கான் படங்களை வெளியான முதல் சில தினங்களுக்குள் பார்ப்பதை வழக்கமாக்கி சில காலம் ஆகிறது. படம் நன்றாக இல்லையென்றாலும் அதை நாமே பார்த்துதான் முடிவு செய்யவேண்டும். இல்லையெனில் இணைய உலாவரும்போது விமர்சங்கள் கண்ணில்பட்டு, முன்தீர்மானங்களுடன் படம் பார்க்க நேரிடும். ஆக, நாம் முதலில் படத்தை  பார்த்துவிட்டு மற்றவர்களுக்குத் தீர்மானங்களை வழங்கலாம் :‍‍‍‍‍‍‍‍)

* தலாஷை எந்தஅளவுக்கு இருண்மை(Noir)வகைத்திரைப்படமாக வகைப்படுத்தலாமோ அதே அளவுக்கு எமோஷன‌ல் ட்ராமாவாகவும் வகைப்படுத்தலாம்.

* தலாஷ் அதன் சஸ்பென்சால் அல்ல, நடிகர்களின் தேர்ந்த்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறது.

* மனோரமா‍‍‍  சிக்ஸ் ஃபீட் அன்டர்,ஷாங்காய் போன்ற மெதுவாகச் செல்லும் த்ரில்லர் பட்ங்கள் பிடித்தவர்களுக்கு தலாஷும் பிடிக்கும்.

* க்ளைமாக்ஸ் திருப்பம் குறித்து புகாரில்லை என்றாலும் அதை இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பாக சொல்லியிருக்கலாம். முடிந்தால் Lays வாங்கிச்செல்லவும்.

* அமிர்கான், நவாஸுதின் சித்திக், கரீனா கபூர், ராணிமுகர்ஜி ஆகியோர் இதே வரிசையில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

* நடந்து முடிந்த அசம்பாவிதம் ஒன்றை எப்படியெல்லாம் தடுத்திருக்கலாம் என மனதில் ஓட்டிப்பார்க்கும் காட்சி ஃபரானோ, ஸோயாவோ, ஆமிரோ இல்லை ரீமாவோ யாருடைய உருவாக்கமாக இருந்தாலும்  அவருக்கு பாராட்டுக்கள்.

*  'பார்த்த ஞாபகம் இல்லையோ'வை நினைவுபடுத்தும் 'முஸ்கானே ஜூட்டீ ஹை' பாடலும், 'ஜீலே ஸரா'வும் இன்னும் கொஞ்ச‌ நாட்களுக்குக் ஒலித்துக்கொண்டிருக்கும்.(இசை:சம்பத்)

* என்னளவில், தலாஷ் ஆகா ஓகோவெல்லாம் இல்லையென்றாலும் கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம், அமிர்கானுக்காகவாவது...

Saturday, July 02, 2011

டெல்லி பெல்லி சில்லி!!


டெல்லி பெல்லி ஒரு திராபை. ஆமிர்கான் பேனராயிற்றே என்று நம்ம்பி போனால் கெட்ட கெட்ட வார்த்தைகளில் வைகிறார், அதுவும் 90 நிமிடங்களும் வைகிறார்.அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக திரையில் காட்டப்படும் அசிங்கங்களால் நகைச்சுவையுணர்வைத் தூண்டமுடியாது என்ற அடிப்படை, கானுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான். படத்தில் கெட்டவார்த்தைகள் போக மீதமுள்ள வசனங்களை ஒரு பஸ்டிக்கெட்டின் பின்புறம் எழுதிவிடலாம்(க்ளிஷெ..க்ளிஷே).கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை, அது இல்லாமலேயே துரத்தல்‍‍‍‍‍‍‍‍‍‍ ‍-ஆள்மாறாட்ட வகை படங்களை சிறப்பாக எடுக்கமுடியும்.ஆனால்,ஆயத்தகாட்சிகள் முடிந்து சுவாரசியம் தொடங்கும்போது படம் முடிந்துவிடுகிறது. படத்தில் வரும் "ஆய்" காட்சிகள் சிரிப்புக்குபதில் அருவெறுப்பைத்தான் தருகின்றன(இந்த சமயத்தில், பேசும் படத்தில் கமல் "ஆய்" காமெடியை 'கையாண்ட' விதத்தை வியக்காமல் இருக்கமுடியவில்லை ;) )

எல்லா வாக்கியங்களையும் கெட்ட வார்த்தைகளுடன் துவங்கி முடிக்கும் நிறைய வட இந்திய இளைஞர்களை சந்த்திருக்கிறேன், ‍அவர்கள் இந்தப்படத்தைக் கொண்டாடப்போவது உறுதி.
Shit happens,,,,,Oh yeah!!

Tuesday, May 04, 2010

Tuesday Teasers 3

# Grab your current read.
# Let the book fall open to a random page.
# Share with us few “teaser” sentences from that page.
# You also need to share the title of the book that you’re getting your “teaser” from … that way people can have some great book recommendations if they like the teaser you’ve given!
# Please avoid spoilers!

சென்னையில் ஆகாய யாத்திரை

இந்தியாவெங்கும் பிரஸித்தி பெற்ற ஸ்பென்ஸர் நமது சென்னைபுரிக்கு வந்து,
மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில் ஏறும்போது புகைக்கூட்டின் துணையினாலேறி வரும்போது அதைவிட்டு அதனோடு சேந்தாற்போல் மாட்டியிருந்த பாராசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து அதன் கீழே தொங்கிக்கொண்டு தமக்கு சிறிதாயினும் அபாயமில்லாதபடி ஷேமமாக வந்திறங்கினார். சற்றேறக்குறைய 3200-அடி உயரம் மட்டும் தான் ஏறினார். அவர் இறங்கி வருகையில் இந்திர லோகத்தினின்று தேவ விமானத்தின் வழியாக யாரோ தேவதை பூமியில் வந்திரங்குவது போலிருந்ததைக் கண்டு
அங்கு வந்திருந்த பல்லாயிரம் பிரஜைகளும் அவருக்குப் பல்லாண்டு பாடி ஆனந்தமடைந்தார்கள்.
- ’ஜநாநந்தினி’ சென்னை 1891 மார்ச்
(ஆசிரியர் அன்பில் எஸ்.வெங்கடாசாரியார்)
புஸ்த. 1. இல 3. பக்கம் 53


சடுதியாக ஒரு அறிமுகம்:
ட்ராவலாக்(travelogue) என்று சொல்லப்படும் பயண இலக்கியங்கள் தமிழில் மிகக்குறைவு. அந்தக்குறையைப் போக்குவதற்காக ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று அறியப்படும் திரு ஏ.கே.செட்டியார் தமிழக ஊர்கள், அரிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கி.பி.1800 முதல் 1950 வரை தமிழில் வெளியான அனைத்து செய்திகளையும் கவனமுடன் தொகுத்து ‘தமிழ் நாடு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். அந்நாளில் ஒவ்வொரு ஊரும் எப்படியிருந்தது என்பது குறித்த விவரணைகளும், ரயில், ஆகாய விமானம் குறித்த செய்திகளும் மிக சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளன.
---------------------------------------------------------------------------------------------
நூலின் பெயர்: தமிழ்நாடு
திரட்டி தொகுத்தவர்: ஏ.கே.செட்டியார்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

---------------------------------------------------------------------------------------------