Monday, January 13, 2014

புத்தகக் கண்காட்சி 2014

புதுபுத்தகவாசம், பக்கம் புரட்டும் சத்தம் தரும் சுகம் போன்ற‌ ஜல்லிகளையெல்லாம் நிறுத்திவிட்டு மின்னூல்களை ஆர‌த்தழுவிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதென்றே தோன்றுகிறது. இந்த ஆண்டு புத்தகக்கண்காட்சியில் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆனைவிலை குதிரைவிலை விற்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் சுமார் அறுபதிலிருந்து தொண்ணூறுவரை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது என் கணிப்பு. அட்டை வடிவமைப்பிலும், அச்சு நேர்த்தியிலும் ஆண்டுக்காண்டு முன்னேற்றம் இருப்பதென்னவோ உண்மைதான், ஆனால் இவ்வளவு விலைகொடுத்துதான் அதனை அடையமுடியுமெனில் அதற்கு பழையபடியே இருந்துவிட்டுப் போகலாம். content is king என்பதுதான் எல்லாருக்குமே தாரகமந்திரம்.

புலம் பதிபக ஸ்டாலிலிருந்து வெளியே வரும்போது எஸ்.ராமகிருஷ்ணன் தனியாக நடந்து வந்துகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. கடந்த வருடம் ரசிகர் குழாம் சூழ ஊர்வலம் போல பார்த்ததாக நினைவு. இவரின் எந்த‌ எழுத்துநடை முன்பு வசீகரித்ததோ அதுவே இப்போது பெரும் அயற்சி தருவதாக இருக்கிறது.

உயிர்மையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தபோது திடீரென திரவியநெடி, நிமிர்ந்தால் தமிழச்சிதங்கபாண்டியன் வந்து மனுஷ்யபுத்திரனுடன் உரையாடிக்கொண்டிருந்தார். ஏனோ வெற்றிக்கொடிகட்டு வடிவேலு ஞாபகத்துக்கு வந்தார்

"சுஜாதாவின் புதிய கட்டுரைகள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைப் பார்த்தபோது சற்று திகிலாக இருந்தது. புரட்டிப் பார்த்ததில் அம்பலம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு என்று தெரிந்தது.சுஜாதா எழுதிய புத்தகங்கள் மட்டுமன்றி இந்தமுறை சுஜாதா பற்றிய புத்தகங்களும் நிறைய தென்பட்டன‌. என்றென்றும் சுஜாதா என்ற தலைப்பில் இருவேறு ஆசிரியர்களின் புத்தகங்கள், ரஞ்சன் எழுதிய சுஜாதா கதை என்றொரு புத்தகம்..etc....

புத்தகக்கண்காட்சி ஏற்பாடுகளில் கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் எந்த வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஃபுட் கோர்ட் மட்டும் சற்று சிறப்பாக இருப்பதாய்ப்பட்டது

வாங்க நினைத்து வாங்காமல் வந்த புத்தகங்கள் இன்றையகாந்தி, அறம் சிறுகதைகள், வெள்ளை யானை, ஆழிசூழுலகு,அசோகமித்ரன் கட்டுரைகள்

இனி இந்த ஆண்டு வாங்கிவந்த புத்தகங்களின் விபரம்

  • ப.சிங்காரம் நாவல்கள்(கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி)
  • வாஸவேச்வரம் - கிருத்திகா
  • சூரியனுக்கு அருகில் ஒரு வீடு -  மனுஷ்ய புத்திரன்
  • கடைசி டினோசார் - தேவதச்சன்
  • K அலைவரிசை - முகுந்த் நாகராஜன்
  • அரசு பதில்கள் 1980
  • ஞாபகம் வருதே - சித்ராலயா கோபு



No comments: