Tuesday, August 07, 2007

"Gandhi My Father" - விமர்சனம்


'Spoiler Warning'போடுவதற்கு அவசியம் ஏற்படாதபடி போஸ்டரிலேயெ கதை சொல்லிவிடுகிறார்கள்.ஒரு தேசத்திற்கே தந்தை என கொண்டாடப்படும் மனிதர் தன் மகனுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருந்திருக்கவில்லை என்பது தான் கதை.

(1948)முதல்காட்சியில், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனை மருத்துவமனைக்குக் கொண்டுவருகிறார்கள்.சுயநினைவு தப்பிக்கொண்டிருக்கும் அவனிடம், நீ யார்? உன் அப்பா பெயர் என்ன ? என்று கேட்கிறார்கள்."பாபு" என்று ஈனசுவரத்தில் முனகுகிறான்.மெதுவாக பின்னோக்கி விரிகின்றன காட்சிகள்.(1906) இளமையான காந்தி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.மூத்தமகனான ஹரிலால் குஜராத்தில் படித்துக்கொன்டிருக்கிறான்.கால்பந்தாடுகிறான்.பாரீஸ்டர் பட்டம் பெற ஆசைப் படுகிறான்.ஹரிலால் தன் தந்தையின் பேச்சை மீறி திருமணம் செய்துகொள்வதில் தொடங்குகிறது இருவருக்குமிடையேயான முதல் இடைவெளி.


சிறிது காலம் கழித்துத் தென்னாப்பிரிக்காவரும் ஹரிலாலை , காந்தி தன் ஐடியாலஜியை பரிசோதிக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்.தந்தைக்காக சிறை செல்கிறான்.இதனால் கல்வியில் தொடர்ச்சியற்று பாரீஸர் பட்டம் வாங்கும் அவனது கனவு தகர்கிறது.இந்தியா வந்து துணி வியாபாரம் செய்து நஷ்டமடைகிறான்.மனைவி இறக்கிறாள்.மது அருந்துகிறான்.மீண்டும் காந்தியுடன் சேர்ந்து சிறிது காலம் சுதந்திரத்திற்காகப் போராடுகிறான்.இஸ்லாமிற்கு மதம் மாற்றப் படுகிறான்.விபசாரியிடம் செல்கிறான்.யாகம் வளர்த்து இந்து மதத்திற்கு மீண்டும் வந்து சேருகிறான்.கஸ்தூர்பாவின் இறப்பிற்குக்கூட வரமுடியாமல் தொலைந்துபோகிறான்.இறுதியாக காந்திஜி இறந்ததற்கு ஐந்து மாதங்கள் கழித்து பம்பாயில் ஒரு மருத்துவமனையில் அனாதையாக இறந்து போகிறான்.
யாரும் தொடத்தயங்கும்,யாரும் அறியாத காந்தியின் மறுபக்கத்தை படமாக்கத் துணிந்ததற்காக இயக்குனரையும்(Feroz Abbas Khan),தயாரிப்பாளரையும்(Anil Kapoor) பாராட்டியே ஆகவேண்டும்.அதுவும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் அனில் கபூருக்கு இது முதல் படம்!

இளவயது காந்தியாக மனதில் ஒட்டமறுக்கும் 'தர்ஷன் தாரிவாலா' வயதாக ஆக உருவம்,நடை ...என அனைத்திலும் காந்தியாகவே மாறியிருக்கிறார்.

அக்க்ஷை கன்னாவிற்கு இந்த படம் நடிப்பில் ஒரு மைல்கல்.காந்தியை எதிர்த்துப் பேசமுடியாமலும்,தன் விருப்பங்களை விட்டுக்கொடுக்க முடியாமலும் ஆற்றாமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.குறிப்பாக ரயில் நிலையத்தில் "காந்தி மகாத்மாவாக போற்றப்படுவதற்கு கஸ்தோர்பா தான் காரணம்" என்று சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் அவரது நடிப்பு அருமை.
நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் கஸ்தூர்பா வாக வரும் ஷிவாலி சாயா.பெங்காலி நடிகைகளுக்கு நடிப்பு ரத்தத்தில் ஊறியிருக்கும் விஷயம் போல.இவர் இந்த படத்திற்காக சில விருதுகளை எதிர்பார்க்கலாம்.பூமிகாவின் நடிப்பும் நிறைவாக இருக்கிறது.
தேங்கிய நீரில் மழைத்துளி விழும் காட்சி,தென்னாப்பிரிக்காவில் ஹரிலால் காந்தியை சந்திக்கும் முதல் காட்சி என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கவிதை எழுதியிருக்கிறது மெக்டொனால்டின் கேமரா.

இவ்வளவு இருந்தும் படம் பல இடங்களில் சறுக்குகிறது.குறிப்பாக வசனம் இது ஒரு பாலிவுட் படம் என்பதை அடிக்கடி நியாபகப் படுத்துகிறது.இரண்டாவது பாதி ரொம்பவே நீளம்.நிறைய வெட்டியிருக்கலாம்.காந்தியின் மற்ற குழந்தைகள் என்ன செய்தார்கள்,அவர்களுடன் காந்தியின் உறவு எப்படியிருந்தது என்பதை சொல்ல விட்டுவிட்டார்கள்.காந்தி- ஹரிலாலின் உறவினை சொல்லத்துவங்கி , ஒரு தோல்வியுற்ற மனிதனின் வாழ்க்கையை சொல்லிமுடிகிறது படம்.

"அட காந்தி தன் மகன்கிட்ட இவ்வளவு ஓரவஞ்சனையால்லாம் நடந்துகல்ல.இயக்குனர் மிகையா காட்டிட்டார்" என்று ஒரு பேசுக்குக் கூட வாதிக்கமுடியாத அளவுக்கு காந்தி பற்றிய என்(நம்?) அறியாமை பிடுங்கித் தின்கிறது .

காந்தி என்கிற மாமனிதனின் மற்றொறு பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது என்கிற வகையிலும்,நடிகர்களின் தேர்ந்த நடிப்பினாலும் பார்க்கவெண்டிய படங்களின் வரிசையில் இடம் பிடிக்கிறது "Gandhi My Father".

6 comments:

ஜீவி said...

இறந்து விட்ட பிரபலமானவர்களின் அரையும் குறையுமாகத் தெரிந்த
சொந்த வாழ்க்கையை--குறிப்பாக
அவர்களுக்கு மட்டுமே தெரிந்த
அவலங்களை-- படமாக எடுக்க
இப்பொழுது என்ன அவசியம்
வந்தது என்று தெரியவில்லை.
"அந்த நேரத்தில் நான் ஏன் அவனிடம்
அப்படி நடந்து கொண்டேன், தெரியுமா?" என்று நியாயம் சொல்ல
அவர்களும் இருக்கப் போவதில்லை.. பாவம், அனுபவித்திருப்பவர்களுக்கே
அவர்களின் கஷ்டம் புரிந்திருக்கும்.

பரத் said...

ஜீவி ,
காந்தியைப் பற்றி அவதூறாக எதுவும் சொல்லப் படவில்லை.
காந்தி என்ற மாமனிதனுக்குள் இருக்கும் ஒரு சராசரி தந்தையைக் காட்ட முயற்சிதிருக்கிறார்கள்.
நம் மனதில உருவாக்கிவைத்திருக்கும் காந்தியென்ற பிம்பத்தை அசைக்கக் கூட இல்லை
இந்தப் படம்.மாறாக பொதுவாழ்வில தன்னை அற்பணித்துக்கொண்டதற்காக அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பாக எஞ்சி நிற்கிறது.

"Harilaal:ALife" (Biography)என்ற புத்தகத்தின் அடிப்படையிலும்,காந்தியின் பேரன் களில் ஒருவரான கோபால் காந்தி தந்த தகவல்களின் அடிப்படையிலும் படம் எடுக்கப் பட்டிருக்கிறதாம்.

முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

ashok said...

Barath...by chance i saw ur profile and found our tastes matching to an unbelievable extent! ! !

பரத் said...

Ashok,
:) Glad to hear this.I could also sense the same from your profile.
I read your blog regularly.

சீனு said...

கண்டிப்பா படத்த பாக்கனும்க. ஆனா, என்ன பிரச்சினைன்னா, ஆங்கில சப்-டைட்டில் போட்டாத்தான் பிரியும். அதான் உதைக்கிது.

பரத் said...

உண்மை தாங்க ....கொஞ்சம் ஹிந்தி புரிஞ்சாதான் படத்த பாக்கமுடியும்.
கூடிய சீக்கிரம் தமிழிலோ ஆங்கிலத்திலோ 'டப்' செய்வார்கள் என்று நம்புவோம் :)

வருகைக்கு நன்றி சீனு