Saturday, October 11, 2008

சினிமாக் கேள்வி பதில் - தொடர் விளையாட்டு

இரண்டு தமிழர்கள் எங்காவது சந்தித்துக்கொண்டால் பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு பேச்சு உறுதியாய் சினிமாவில்தான் வந்து நிற்கும்.அந்த அளவிற்கு நம் வாழ்வை சினிமா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.இப்போ எதுக்கு இந்த பில்ட்-அப் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாகார்ஜுனனைத் தொடர்ந்து நம்ம பிரகாஷ் சினிமா தொடர்பான கேள்வி பதில் தொடர் விளையாட்டு ஒன்றினைத் துவக்கி இருக்கிறார்.அதற்கு என்னை வேறு அழைத்திருக்கிறார். தேங்காய் மூடி பாகவதருக்கு மைக்கும் மேடையும் கிடைத்தால் விடுவாரோ? இதோ எனது பதில்கள்..

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

தமிழக தாய்மார்களுக்கே உரியே பொதுப்பழக்கமான கைக் குழந்தையை சினிமாவுக்கு எடுத்துப் போகும் பழக்கம் என் தாயாருக்கும் இருந்ததால் எந்த வயதில் சினிமா பார்க்கத்துவங்கினேன் என்பது நினைவிலில்லை.ஆனால் மற்ற குழந்தைகள் போல் திரையரங்கில் அழுது ஆர்பாட்டம் செய்யாமல் சமர்த்தனாக இருந்தேன் என்று சொல்லிக் கேட்டதுண்டு. இதிலிருந்து அந்நாளிலேயே எனக்கும் சினிமாவுக்கும் ஒரு இசைவு இருந்தது என்று சொன்னால் அது புருடா.


அனாதை ஆனந்தன் என்ற படம் பார்த்தது மங்கலாக நினைவிருக்கிறது. நாங்கள் இருந்த அரசு குடியிருப்பில் ஒருவர் புதிதாக தொலைக்காட்சி பெட்டி வாங்கியபோது " உத்தரவின்றி உள்ளேவா" படத்திற்கு உத்தரவின்றி உள்ளே சென்று பார்த்ததும், சிறு சிறு நகைச்சுவைக்கும் விழுந்து விழுந்து சிரித்ததும் நியாபகத்தில் உள்ளது.


(தொடர்ந்து உத்தரவின்றி அவர் வீட்டுக்கு டிவி பார்ர்க்கப் பிரவேசித்ததால் ஒரு நாள் கதவை தாளிட்டு விட்டார்.இதை வீட்டில் வருத்தப்பட்டு சொல்ல, அப்பா கோபப்பட்டு "இனி டிவி பார்க்க யார் வீட்டுக்கும் போகக் கூடாது" என்று சொல்லி தவணைமுறைத் திட்டத்தில் டிவி வாங்கி வைத்துவிட்டார். பிறகென்ன இந்தி படம், மாநில மொழிப்படம் என்று பாரபட்சமின்றி எல்லாப் படங்களையும் பார்த்து மகிழ்ந்தோம்.)

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம். புனே-யில் இருந்தபோது முதல் நாள் முதல் காட்சி பார்க்கபோனேன்.திரையரங்கில் என்னையும் சேர்த்து மொத்தமாக 25 பேர் இருந்தோம்.அமெரிக்காவில் கூட இவ்வளவு காலிசீட்டுகளுடன் முதல் காட்சி பார்த்திருக்க முடியாது.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
இருவர். இன்று காலை டிவிடி-யில் பார்த்தேன்.இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் ரொம்பவும் Fresh-ஆக இருக்கிறது. தமிழின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று "இருவர்" என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.ஆனால் இறுதிக்காட்சிகள் சடுதியில் முடிந்துவிடுவதாய்த் தோன்றுகிறது. சென்ஸார் போர்டின் கைங்கரியமோ? மணிரத்னத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தின் வெட்டப்பட்ட துண்டுகளைத்தான் முதலில் கேட்பேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
இந்தப் படம், அந்தப் படம் என்றில்லை. இறுதியில் கதாநாயகன் இறந்து போகும் எல்லாப் படங்களும் என்னைத் தாக்கின(சிறுவயதில்).அதுவும் சிவாஜிகணேசன் படம் என்றால், அப்பாவிடம் கேட்டு ,"சுபம்" என்ற சர்டிஃபிகேட் வாங்கியபின் தான் படமே பார்ப்பேன்.

அதன் பின் பார்த்த படங்களில் துலாபாரம்,தேவர்மகன், நந்தா, காதல் ஆகியவை ஓரளவிற்கு பாதித்தன.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நடிகர்களின் அரசியல் பிரவேசம்.அண்மையில் வடிவேலு தேர்தலில் போட்டியிடப்போவதாக பயமுறுத்தியது.அடுத்து வடிவேலுவுக்கும் போண்டாமணிக்கும் சண்டை வந்தால் போண்டாமணியும் அரசியலில் குதிப்பார்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

இந்த கேள்வி ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால choice-ல வுட்றேன்.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சினிமா செய்தி என்றால் மிச்சர்,பூந்தி மடித்த காகிதமாக இருந்தால் கூட விடுவதில்லை. குமுதம்,ஆ.விகடன் என்று தான் சினிமா பற்றிய வாசிப்பு துவங்கியது என்றாலும் தற்போது தியோடர் பாஸ்கரன், எஸ்.ராமகிருஷ்ணன் வரை வந்திருக்கிறது.நல்ல சினிமா பற்றி அறிந்துகொள்ள விரும்புவோர்களுக்கு என் அட்வைஸ்: பதிவுலகம் பக்கம் வாங்க,கொஞ்சம் தேடினால் சிறப்பான கட்டுரைகள் கிடைக்கும்.உதாரண பதிவர்கள்: சன்னாசி,மதி,சித்தார்த்.


7.தமிழ்ச்சினிமா இசை?

சீனா,இத்தாலி,பிரான்ஸ்,ஜப்பான் என பல நாட்டவரும் வேலை பார்க்கும் என் அலுவலகத்தில் இந்தியாவிலிருந்து நான் மட்டுமே.சமீபத்தில் ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பேச்சு இசையை நோக்கி சென்றது.ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்த இசைபற்றி சொல்ல, என் முறை வந்தபோது நான் சொன்னது இதுதான் "நான் சினிமா இசை கேட்பேன். அதிலேயே எல்லா இசையும் வந்துவிடும்".எல்லாரும் என்னை வினோதமாகப் பார்த்தார்கள்.

"இல்ல சார் எனக்கு சினிமா பாக்கற பழக்கம் இல்ல" என்று பிகு பண்ணிக்கொள்பவர்கள் கூட தமிழ் சினிமா இசையிலிருந்து தப்பிக்க முடியாது என்று நினைக்கிறேன்.எனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் இளையராஜா,ரஃஹ்மான்,வித்தியாசாகர்(அதே வரிசையில்).

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
பார்ப்பதுண்டு.இந்திய மொழிகளில் இந்தி,மராத்தி படங்கள் பார்ப்பதுண்டு.உலகமொழிபடங்களை அண்மையில் தான் பார்க்கத்துவங்கியுள்ளேன்.என்னைத் தாக்கிய வேற்றுமொழிப் படங்கள்

dil chata hai,hazaron khwaish aise,Sathya

The lives of others,Ameli,Cinema paradiso,shindler's List

Life is beautiful,beautiful mind,shawshank redemption

மற்றும் பல...

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ததில்லை.பி.வாசு,பேரரசு பொன்றோர்களின் படங்களைப் பார்க்கும் போது சில சமயம், அட நாமே இதைவிட நல்ல படம் எடுக்கலாமே என்று தோன்றியதுண்டு.இது ஒரு கோபத்தின் வெளிப்பாடே தவிர, தீவிரமாக யோசித்ததில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தற்போது தமிழ் சினிமா நிலை கேவலமாக இருக்கிறது.நேற்று சினிமாவிற்குள் நுழைந்தவர்களெல்லாம் விரலை சொடுக்கி பன்ச் டயலாக் பேசுவதைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது."ஹீரோயிஸ" நோய் கடுமையாக தாக்கியுள்ளது தமிழ் சினிமாவை.நல்ல கதையம்சமுள்ள படங்கள் மிக அரிதாகக் காணக்கிடைக்கின்றன.
ஹிந்தி சினிமாவின் தரம் தமிழைவிட எவ்வளவோ பரவாயில்லை.தமிழ் படங்களைக்காட்டிலும் அதிகமாக குப்பைகள் வெளிவருகின்றன என்றாலும், அங்கு சோதனைப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
மாணவர்கள் அனைவரும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள், மக்கள் தங்கள் அலுவல்களில் அதிக சிரத்தையுடன் உழைத்து நாட்டின் பொருளாதாரம் உயரும்.இப்படியெல்லாம் சொன்னால் ஒத்துக்கொள்ளவா போகிறீர்கள்?சினிமாவிற்கு ஈடாக வேறு பொழுதுபோக்கினை கண்டுபிடிக்க முயல்வார்கள். இதில் சினிமாவைக்காட்டிலும் மோசமான பின்விளைவினைத் தரும் வேறெதையும் கண்டுபிடித்துத் தொலைக்கலாம்.
சின்னத்திரைக்கு மவுசு கூடும்.அடுத்த அரசியல் தலைவர் சின்னத்திரையிலிருந்தும் வரக்கூடும்.

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

சந்தோஷ் குரு
மதி
ஸ்ரீதர் நாராயணன்
அய்யனார்
உமா கதிர்


பதிவிட அழைத்த ப்ரகாஷ் அவர்களுக்கு நன்றிகள்!

Sunday, August 10, 2008

உதிரிக் குறிப்புகள் 2

படத்தில் இருக்கும் இந்த நபரை யாரென்று அடையாளம் தெரிகிறதா? பார்க்க யாரோ பாத்திரக் கடை முதலாளி போல சாதுவாகத் தோன்றும் இவர் உண்மையில் படுவில்லங்கமான ஆள். இவரை ஒருவிதத்தில் நம் எல்லருக்கும் தெரிந்திருக்கும், உண்மைப்பெயரில் அல்ல, வேறு ஒரு நிழல் பெயரில். இவர் யாரென்பதை பதிவின் இறுதில் காண்க.


இவரைப் பற்றி ஒரு கார்(மகிழ்வுந்து!!) ஓட்டுனர் கூறியது:

'இவருக்கு நான் சுமார் 50 தடவைகளுக்கு மேல் கார் ஓட்டியிருக்கிறேன். கண்கள் சிவந்து தீப்பிழம்பு போல் இருக்கும். ஒவ்வொரு வார்த்தையும் இடி போல இறங்கும். இது போல ஒளிபொருந்திய உக்கிரமான முகத்தை நான் வாழ்நாளில் பார்த்தது கிடையாது'


-
********



மால்புவா - ரப்ரி
-

எனக்கு இனிப்புப் பண்டங்கள் என்றால் பிடிக்காது(ஒரு சிலவற்றைத் தவிர).அலுவலகத்தில் எங்கள் டீமில் பெங்காலி, மராட்டி, குஜராத்தி என பலமாநிலத்தவரும் உண்டு. ஒவ்வொருமுறை ஊருக்கு போய்விட்டு வரும்போது அவரவர் அந்தந்த மாநிலத்தின் புகழ் பெற்ற இனிப்புவகையினை வாங்கிவரவேண்டும். அந்தமதிரி இனிப்புகள் வரும் நாட்களில் "conference room"ல் அடிதடியே நடக்கும்.நான் இவற்றை பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். அதாவது மேசை, மார்க்கர் பேனா போல இனிப்பும் ஒரு வஸ்த்து அவ்வளவே. இனிப்பு பிரியரான என் பெங்காலி மேனேஜருக்கு என்னைப்பார்ர்து ஒரே ஆச்சரியம், என்னைத் தனியே அழைத்து 'இளம் வயதில் சர்ர்க்கரை நோய்வருவது இப்போதெல்லாம் சகஜம் தான். நன் உனக்கு "Sugar free "இனிப்புகள் வாங்கிவருகிறேன் என்றார்."யோவ் எனக்கு சர்க்கரை நோயெல்லாம் இல்லை" என்று சொன்னால் நம்ப மறுத்தார்கள். இப்படி இருக்கையில் ஒருநாள் "டீம் லஞ்சிற்கு" இங்கிருக்கும் ஒரு பிரபல உணவகத்திற்கு சென்றிருந்தோம். அங்கு மால்புவா என்ற ஒரு இனிப்புவகையை ஆர்டர் செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட நம்மவூர் அப்பம் போன்ற நிறத்தில் அதேசமயம் அவ்வளவு தடிமனாக இல்லாமல் மெல்லிய இழைபோல இருந்தது. ஜீராவில்ருந்து எடுத்து வைத்திருந்தார்கள். அருகே ஒருகின்ணத்தில் ரப்ரி என்று சொல்லப்படும் வெள்ளைநிற திரவமும் இருந்தது.பாசந்தியை மிதக்கவிடும் பால்கலந்த ஜீரா(?) போல இருந்தது. சாப்பிட ஆவலைத் தூண்டியதால் ஒரு விள்ளலை எடுத்து அந்த ரப்ரியில் முக்கி மெதுவாக வாயில் போட்டேன். ஆஹா!! மால்புவா ரப்ரியுடன் சேர்ந்து தொண்டையில் வழுக்கிக் கொண்டு போனபோது ஒரு பரவச நிலையை அடைந்தேன். சொர்க்கம் அருகில் தட்டுப்படுவது போன்ற ஒரு உணர்வு. இப்படி ஒரு சுவையான ஒரு பண்டத்தினை என் வாழ்நாளில் நான் சாப்பிட்டதே இல்லை விசாரித்ததில் இதன் பூர்வீகம் மேற்கு வங்கம் என அறிந்தேன். ரசகுல்லாவும் குலப் ஜாமுனும் இதன் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது. அதன் பிறகு அந்த உணவகத்திற்கு அடிக்கடி செல்லத் துவங்கியுள்ளேன். இங்கு மொத்த சாப்பாட்டையும் சாப்பிட்டால் எனது உள்ளாடை வரை கழற்றிக் கொடுக்க வேண்டும்(Costly) என்பதால் டீஜென்டாக மால்புவா மட்டும் சாப்பிட்டுவிட்டு அகன்றுவிடுவேன். இந்த உணவகத்தில் நடிகர் ஓம் புரி மற்றும் பாடகி ஆஷா போஸ்லே பொன்ற பிரபலங்களைச் சந்திது ஆட்டொகிராஃப் பெற்றது உபரி சந்தொஷம்.




********



புத்தகக் குப்பை

-நான் குடியிருக்கும் வீட்ட்டிற்கு எதிர் வீட்டில் நாங்கு வட இந்தியர்கள் குடியிருந்தார்கள். நான் பணிபுரியும் அதே அலுவலகம் என்பதால் ஒரளவுக்குப் பழக்கமுண்டு.அந்தவீட்டில் இரண்டுபேர் ரொம்ப காலமாகக் குடியிருக்கிறார்கள், மற்ற இருவர் மாறிக்கொண்டே இருந்தார்கள்.சில மாதங்களுக்கு முன் அந்த நாங்குபேருமே பணி மாற்றம் காரணமாக வெவ்வேறு ஊர்களுக்கு/நாடுகளுக்கு செல்லவேண்டிய நிலைமை.அப்போது ஒரு சிறு மூட்டையுடன் எங்கள் வீட்டுக்கு வந்தான் ஒருவன்."பலகாலமாக இந்த வீட்டில் இருந்தவர்கள் வாங்கிய புத்தகங்கள் இவை. நீ முடிந்தால் எடைக்கு போட்டுவிடு, இல்லையென்றால் தூக்கி எறிந்துவிடு.என்னதான் செய்வது இந்தகுப்பையை வைத்துக்கொண்டு" என்று சொல்லிவிட்டு சென்றது அந்த கற்பூர வாசம் தெரியாத கழுதை.எதாவது CAT, GRE தேர்வுகளுக்கான புத்தகங்களாக இருக்கும் என நினைத்து பிரித்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்தது. அந்த மூட்டையிலிருந்த புத்தகங்களின் பட்டியலை இங்கு தருகிறேன், எடைக்கு போட்டால் எவ்வளவு தேறும் என்று சொல்லுங்கள்.



1. Great Expectations - Charles Dickens (Qty2)

2. Animal Farm - George Orwell

3.The Prophet - Khalil Gibran

4.The fountain head - Ayn Rand

5.The catcher in the rye - J.D.Salinger

6. Selected essays of swami vivekananda

7.Zen and the Art of Motorcycle Maintenance - Robert M. Pirsig

8.The Alchemist - Paulo Coelho

9.To Kill a Mockingbird - Harper Lee

10.India Unbound - Gurcharan Das

11. Jack: Straight from the Gut - Jack Welch

12.Oxford dictionary(Qty2)

13. In Search of Excellence - Tom Peters

(இன்னும் நான்கைந்து புத்தகங்களின் பெயர்கள் நினைவிலில்லை)


டபரா, கிண்ணம் வரை packers & movers வைத்து பேக் செய்யத் தெரிந்தவனுக்கு இந்த குப்பைகளை எடுத்துப் போக மனமில்லை பாவம்.இந்தக் குப்பையில் " Letters to Penthouse" போன்ற சில மாணிக்கங்கள் கிடைத்ததை நான் இங்கு குறிப்பிடவில்லை :-)
-

********


பதிவின் துவக்கத்தில் நீங்கள் பார்த்தது "வரதராஜன் முன்னுசாமி முதலியார்" என்பவரின் படத்தைத்தான். மாடூங்கா, தாராவி மக்களுக்குச் செல்லமாக வர்தா பாய்(வரதா அல்ல). மும்பையின் முதல் நிழலுலக தாவாக அறியப்படும் இந்த மதுரைக்காரர், மும்பை விக்டோரியா டெர்மினஸில் ஒரு கூலியாக தனது வாழ்க்கையைத் துவங்கியவர். பின் மெதுமெதுவாக "பூட் லெக்கிங்" என்று சொல்லப்படும் போதைமருந்து கடத்தல், பணத்திற்கு ஆட்களைக் கொல்லுதல்(contract killing) என பெரும் தாதாவாகி ஒரு குறிப்பிட்டகாலகட்டத்தில்(1968 - 1980) மும்பையையே தனது பிடியில் வைத்திருந்தார். ஹாஜி மஸ்தான், லால கரீம் போன்றவர்கள் சமகாலங்களில் தோன்றியவர்கள். நீதிமன்றங்கள் ஒருபுறம் செயல் பட்டுக்கொண்டிருக்க, வர்தாபாயின் சொந்த (அ)நீதிமன்றம் ஒருபுறம் செயல் பட்டுக்கொண்டிருக்குமாம். உண்மையில் தண்டனை பெறப் போகிறவர்களைத் தீர்மானிப்பவர் அவர்தான்.

1980 வாக்கில் மும்பையின் கமிஷ்னராகப் பதவியேற்றுக்கொண்ட Y.C.பவார் வரதராஜனின் ஆட்கள் அனைவரையும் கைது செய்து அவரது நடவடிக்கைகள அனைத்தயும் முடக்கினார். வேறுவழியின்றி சென்னைக்கு தப்பி வந்த வரதராஜன் சிறிது காலம் வாழ்ந்தபின் தன் 62 அவது வயதில் காலமானார்."கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவு" என்ற பழமொழியெல்லாம் வரதா பாயிடம் எடுபடவில்லை. வாழ்க்கையின் சுவாரஸியமும், சூட்சமும் அதன் பொதுப்படுத்த முடியாத தன்மையில்தானே அடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் மாடூங்காவில் விநாயக சதுர்தியை பெரியவிழாவாகக் அமர்க்களப்படுத்துவது வரதராஜனுக்குப் பிடிக்கும்(பணத்தை அள்ளி வீசும் வைபோகமெல்லாம் உண்டு). இன்றும் வரதராஜனின் குடும்பத்தினர் மாடூங்காவில் உள்ள அந்த குறிப்பிட்ட கணபதி மண்டலத்திற்கு வருடந்தோறும் விழா நடத்த பணம் அனுப்பி வருகிறார்கள்.

********
இன்றுடன் எனது நட்சத்திர வாரம் நிறைவடைகிறது. எனகு நட்சத்திர அந்தஸ்தை அளித்து என்னை எழுதத் தூண்டிய தமிழ்மணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் பதிவுகளைப்ப் படித்து ,பின்னுட்டம் இட்டு என்னை உற்சாகப் படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்

_/\_ .

Thursday, August 07, 2008

ஃப்ராய்டும், ஃபிரான்சிஸ் சேவியரும் பின்னே ஞானும்

”நனவிலியால் ஏற்றுக்கொள்ளத் தகாதவற்றை அகற்றுவதற்கான வழிவகைதான் அடக்குதல் என்ற காரணத்தால், நனவிலியச்சார்ந்த ஒவ்வொன்றும் ஒரு எதிமறைக் குறிப்பைக் கொண்டுள்ளது என்ற அனுமானத்தின்மீது ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடு எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. நனவிலி பற்றி 1915 இல் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் ஃப்ராய்ட் அடக்கப்பட்டது என்பது நனவிலியான அனைத்தையும் உள்ளடக்குவதில்லை என்று உறுதிபடக் கூறுகிறார்.ஆனால் இது பற்றிய சிறு அறிகுறியும் அவருடைய மூலமுதல் கனவுக்கோட்பாட்டில் இல்லை. நனவிலியாக இருப்பது, சிறப்பியல்பாகவோ முக்கியமாகவோகூட, அடக்குதலின் பின்விளைவு அல்ல என்று நினைக்கப் பல காரணங்கள் உள்ளன; சில கனவுகள் வெளிப்படையாகவே ஆக்கப்பூர்வமானவை அல்லது பிரச்சனைகளுக்குறிய தீர்வுகளைத் தருபவை என்ற உண்மையும் இதில் அடங்கும்”

புரியவில்லை என்பதற்காக இரண்டாம் முறை படித்தபோது லேசாகத் தலை சுற்றியது. “ஃப்ராய்ட் ஒரு சுருக்கமான அறிமுகம்” என்ற மொழிபெயர்ப்பு நூலிலிருந்து எடுக்கப்பட்டது தான் மேலே நீங்கள் காணும் இந்த பத்தி. ரொம்பவே சுருக்கமாகப் போய்விட்டதால் தானோ என்னவோ ஒன்றுமே புரியவில்லை. இந்த நூலுக்கு நான் டார்கெட் வாசகன் அல்ல என்பதை ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும் யாருக்குமே இத்தகைய வரிக்குவரி மொழிபெயர்ப்பினால் குழப்பமே மிஞ்சும். பேசாமல் வலையுலகில் எதாவது போட்டி நடத்தி, இந்த புத்தகத்தைப் பரிசாக அனுப்பிவிடலாமா என்று கூடத் தோன்றியது. நினைக்க நினைக்க ஃபிரான்சிஸ் சேவியர் மீது கோபமாக வந்தது. ஆம், அவர்தான் இந்த புத்தகத்தை நான் வாங்கக் காரணம்.

பத்தாவது வரை அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நான் 11ஆம் வகுப்பிற்குக் கண்டிப்புக்குப் பெயர்போன ஒரு கிறித்துவப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அரசுப்பள்ளியின் சகல சௌகரியங்களையும் அனுபவித்துவந்த எனக்கு இப்பள்ளி திஹார் சிறை போல இருந்தது.அப்போது தான் ஃபிரான்சிஸ் சேவியர்(சுருக்கமாக FS) என்ற தமிழ் ஆசிரியர் எங்கள் பள்ளிக்குவந்து சேர்ந்தார். நல்ல கருப்பாக உயரமாக ஒருவித ஹிட்லர் மீசையுடன் இருப்பார். அடிப்படையில் பாதிரியாரான அவரை நாங்கள் ஒரு நாள் கூட பாதிரியாருக்கு உரிய அங்கியில் பார்த்தது கிடையாது.“இதைத்தான் ஃப்ராய்டு எப்படிச் சொல்றான்னா” என்று தான் ஆரம்பிப்பார். எதைத்தான் என்பதை பின்னால் தான் சொல்வார். “நாலு வயசுக் கொழந்தைக்கு பால் உணர்வு இருக்குங்கறான். ஆண்குழந்தை தாயை நோக்கி ஈர்க்கப்படுவதற்கும், பெண்குழந்தை தந்தையை நோக்கி ஈர்க்கப்படுவதற்கும் எதிர் எதிர் பாலின கவர்ச்சிதான் காரணம்ஙறான்”என்று அடுக்கிக்கொண்டே போவார். நாங்கள் 'பே' என்று பார்த்துக்கொண்டிருப்போம். “அதிர்ச்சியா இருக்குல்ல? நைண்டீன் ஹண்ட்ரட்ல அவன் இத சொன்னப்போ அவன பைத்தாரன்னு சொல்லி கல்லால அடிசாங்க.அவன் புத்தகத்த தீயில போட்டு எரிச்சாங்க. ஆனா இப்போ அவன் எழுதுன புத்தகம் இல்லாத யுனிவர்சிட்டியே கெடையாது”. மெல்ல மெல்ல எங்களுக்கு ஃப்ராய்டு சொன்ன கருத்துக்களையும் அவரது புத்தகங்கள் பற்றியும் அறிமுகப் படுத்தினார்.”மனசோட அடி ஆழத்துல இருக்கற நிறைவேறாத ஆசைகள்தான் கனவா வருதுங்கறான்”.எனக்கு ஃப்ராய்டு சிந்தனைகள் மீது காதலே வந்துவிட்டது.

மாணவர்கள் தங்கள் ஆசிரியர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையையோ வாக்கியத்தையோ சொல்லி தங்களுக்குள் கேலி செய்துகொள்வது வழக்கம். அந்நாளில் எங்களுக்குள் “இதைத்தான் ஃப்ராய்டு எப்படிச் சொல்றான்னா” என்பது ரொம்பப் பிரபலமாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் ஃப்ராய்டு தான். அவர் ஃப்ராய்டை மட்டுமே எங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை. ஆஸ்கர் வைல்ட், கார்ல் மார்க்ஸ் என பல அறிஞர்களைப் பற்றிச் சொன்னாலும் ஃப்ராய்டு எங்கள் மனதோடு தங்கிவிட்டது.அவருக்கு வைரமுத்துக் கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். வைரமுத்துவின் கவிதைகளை வரிமாறாமல் சொல்லி அவற்றின் கவிநயத்தைப் புகழுவார். தபூ சங்கரை மீறி கவிதை எழுதக் கூடியவர் இன்னும் பிறக்கவில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த காலமது. வைரமுத்துவின் கவிதைகள் பின்னாளில் சலிப்பேற்படுத்தத் துவங்கினாலும் கவிதைகளை ரசிப்பது பற்றிய அவர் அளித்த பாலபாடம் இன்றும் உதவியாயிருக்கிறது.

அப்போது ஃபயர்(Fire) என்றொரு படம் வெளியாகிப் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்த சமயம். ஒரு நாள் வகுப்புக்கு வந்த FS ”என்னய்யா ஃப்யர்னு ஒரு படம் போட்ருக்காய்ங்க, போய் பாத்தேன். இவங்க கூச்சல் போட்ற அளவுக்கு ஒண்ணுமில்லையே. இதெல்லாம் மேலை நாட்ல சகஜம் தான் “ என்றார்.ஒரு பாதிரியார் இந்தப் படங்களைப் பார்ப்பது குறித்து எங்களுக்கு வியப்பாக இருந்தது. அவ்வப்போது தனது பிரதாபங்களையும் எடுத்துவிடுவார். "மதுரைலஒரு நாடகம் போட்டோம் "கல்லறையிலிருந்து காந்தி" அப்டின்னு. காந்திகல்லறைலெருந்து எழுந்து வந்து அரசியல் வாதிகளோட பேசற மாதிரிஒரு கான்செப்ட்.நாடகம் 50 நாளைக்கு தீயா போச்சு. இன்னிக்கும் பாளையங்கோட்டைல இருந்து அந்த ஸ்க்ரிப்ட கேட்டு ஆட்கள் வருது.என் எல்லாப்படைப்புகளையும் பைன்ட் பண்ணி பத்திரமா வச்சிருக்கென்" என்று பெருமையாகச்சொல்வார்.

எங்கள் பள்ளி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் ஒரு மூலையில்இருக்கிறது. மழை பெய்தால் , இந்தப் பகுதியின் மற்றொரு முனையை மேலேதோக்கிப் பிடித்து சரித்து விட்டதைப் போல மழைநீர் முழுவதும் எங்கள்பள்ளிக்குள் நுழைந்துவிடும்.அந்த ஆண்டு மழை சற்று அதிகமாகவேபெய்தது. நான்கு நாட்கள் விடாது பெய்தமழையில் ஒரு வாரம் விடுமுறைகிடைத்தது.அதன் பிறகு சில நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்த FS சோர்வாகக் காணப்பட்டார்.தான் அறையை பூட்டிவிட்டு வெளியூருக்குபோயிருததாகவும், மழை நீர் அறைக்குள் புகுந்து , 15 வருட உழைப்பான கதைகள், கவிதைகள், கட்டுரைகள் யாவும் அழிந்துவிட்டதாக வருத்தப்பட்டார்.அதன் பிறகு அவரிடம் பழைய உற்சாகம் காணப்படவில்லை. ரொம்பஅலட்டிக் கொள்கிறாரோ என்று தோன்றியது. சில வாரங்களில் பள்ளிமேனேஜ்மெண்டுடன் எதோ பிணக்கு ஏற்பட்டு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.சில நாட்களுக்கு முன் ப்ளாக்கர் கணக்கைநோண்டிக்கொண்டிருந்தபோது பதிவுகள் எண்ணிக்கை பூஜ்ஜியம் எனக்காட்டிய போது மனம் பதைபதைக்துவிட்டது. சிறிது நேரக் கண்ணாம்பூச்சிக்குப் பிறகுஅனைத்தும் திரும்பக் கிடைத்தன.அப்போது தான் உணர்ந்தேன் ' 50 மொக்கைபதிவுகள் தொலைந்ததற்கே மனம் பதை பதைக்கிறதே தனது 15 வருடகால உழைப்பு நீரோடு போனபோது எப்படி உணர்ந்திருப்பார்' என்று. இப்போது எங்கே இருப்பார் அவர் ? என்ன செய்து கொண்டு இருப்பார்? தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பள்ளியில் " இதத்தான் ஃப்ராய்டு...." என்று அதகளப் படுத்திக்கொண்டுதான் இருப்பார்.

நூல் அறிமுகம் : 18வது அட்சக்கோடு


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வடநாட்டில் நிகழ்ந்த கலவரங்களைக் குறிப்பாக இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட வலிகளையும், துயரங்களையும் பலர் வரலாற்றில் பதிவு செய்துள்ளனர். அதேசமயம் தென்னிந்தியாவிலும் பல இடங்களில் கலவரங்கள் மூண்டன. பலர் கொல்லப்பட்டனர், பலர் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர், பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். இந்தியாவுடன் இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம்களின் சமஸ்தானத்தில் இத்தகைய கலவரங்கள் அதிகம் நடந்தேறின. 1946 லிருந்து 1948 வரை ஐதராபாத்தில் நிலவிய அரசியல் சூழலையும், கலவரங்களையும் ஒரு தமிழ் இளைஞனின் பார்வையினூடாக பதிவு செய்யும் நூல் 18வது அட்சக்கோடு. மத நல்லிணக்க விருது பேற்ற இந்நூல் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயற்கப்பட்டு, இதன் கன்னட மொழிபெயற்பாளருக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

இதற்கு முன்பு அசோகமித்ரனின் கட்டுரைகளை வாசித்திருந்தாலும், இதுவே நான் படித்த அவருடைய முதல் நாவல்.வெகு நிதானமான எழுத்து. அனாவசியமான பரபரப்பினை எழுத்தின் மீது ஏற்றாமல் அந்தந்த நிகழ்விற்கேற்ப தீவிரம் கொள்ளச் செய்கிறார். இதில் ”செய்தி” படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அபாயம் இருந்தாலும், நாவல் முழுவதும் இழையோடும் மெல்லிய நகச்சுவையும், சுய எள்ளலும் அதிலிருந்து காப்பாற்றுகின்றன. ஒவ்வொரு நிகழ்வினையும் மிக நுணுக்கமாக விவரிக்கிறார். விவரிப்பில் ஒரு கிண்டல். உதாரணமாக அவர்கள் குடியிருந்த லான்ஸ் பாராக்ஸ் வீட்டினை இவ்வாறாக வர்ணிக்கிறார்.

// எப்போது கட்டியிருப்பார்களோ தேரியாது. பத்தடி உயரமுள்ள அரக்க உருவமுள்ளவர்களுக்காக அவற்றைக் கட்டியிருக்க வேண்டும்...ஒரு கதவுக்கும் ஸ்டூல் அல்லது நாற்காலி உதவி இல்லாமல் மேல் தாழ்ப்பாள் போடமுடியாது. வீட்டு நடுவில் கூரை இருபது இருபத்தைந்து அடிக்கு மேலே உயர்ந்து முன்பக்கம் பின்பக்கமாக சரிந்து வரும்.ஒவ்வொரு சுவரும் இரண்டடி பருமனுக்குக் குறையாது. வீட்டில் ஒட்டடையே அடிக்க முடியாது. அரைகுறை வெளிச்சத்தில் கூரையை அண்ணாந்து பார்த்தால் பயமாகக்கூட இருக்கும். வெள்ளைக்கார பட்டாளக்காரர்களுக்காக, அதுவும் ஈட்டி தாங்குபவர்களுக்காக என்று அகராதியில் பார்த்துத் தெரிந்தது. பட்டாளக்காரர்கள் ஒருவேளை எப்போதும் ஈட்டியைத் தாங்கியவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் ஈட்டி ஏகப்பட்ட நீளம் உடையதாக
இருக்கவேண்டும். ஈட்டி கூரையில் இடிக்கக்கூடாது என்றுதான் அவ்வளவு உயரமாகக் கட்டினார்களோ என்னவோ.//

இந்நாவலின் இந்தி மொழிபெயர்ப்பு வெளிவரும் முன்னர், மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டார் என அறிந்தபோது ஆச்சரியமாக இருந்த்தது. நாலாவது
அத்தியாயத்தில் அதற்குக் காரணம் தெரிந்தது “ஊரிலே எந்த ராஜாக்கார் தேவடியா மகன் சைக்கிளுக்கு லைட் ஏத்திண்டு போகிறான்? போலீஸ்காரன்
அவங்களைப் பிடிக்கறானா?”.

நாவல் கலவரத்தைப் பற்றியது தான் என்றாலும் கடைசி 4 அத்தியாயங்கள் தான் அதனைப்பற்றித் தீவிரமாகப் பேசுகின்றன. மற்றவற்றில் தெலுங்குதேசம் சென்று குடியேறிய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் சந்த்திரசேகரனின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகிறது. சந்திரசேகரனின் கிருஷ்ணசாமி சகோதர்களுடனான விரோதம், தற்கொலை செய்துகொண்டபின்
தன்னை பத்திரப்படுத்திக்கொள்ள இடம் தேடி அலைவது, சட்டைகாரர்களுடனான நட்பு, குடும்பத்துடன் படம் பார்க்கசெல்லும் வைபோகம், ஆழ்வார் தன் தமக்கைகளுக்கு பாட்டு சொல்லித்தருவது என ஒவ்வொன்றையும் சுவாரஸியமாக விவரிக்கிறார். குறிப்பாக சந்திரசேகரனை பிரின்ஸ்பால் மேடையில் பாட அழைக்கும் போது நிகழும் சம்பவங்களை படு நகைச்சுவையாக எழுதியுள்ளார். நாவலைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் இந்தப்பகுதியை முதலில் படித்தால் இது ஏதோ ஹாஸிய நாவல் என்றுதான் எண்ணவேண்டியிருக்கும். இந்த சம்பவஙள் அடங்கிய ஐந்து பக்கங்களை ஒரு நகச்சுவை சிறுகதையாகத் தர முடியும்.

//அன்று நான் அணிந்திருந்த ஷர்ட் மிகவும் சிறியது. இடுப்புவரைதான் இருந்தது. அதன் பக்கவாட்டிலுள்ள இரு பிளவுகள் வழியாக என் இடுப்பும் அதில் ஒரு தொளதொள நிக்கரை நான் சுற்றிசுற்றி இறுக வைத்திருப்பதையும் எல்லாரும் பார்க்கலாம். பார்த்தார்களோ தெரியாது. நான் என் ஷர்ட்டை இழுத்துப் பிடித்த வண்ணம் மேடை நோக்கி ஊர்ந்தேன். நிக்கர் ரொம்பப் பெரியது. அதன் கால்கள் இரண்டும் கோபியர்கள் பாவாடை மாதிரி படபடவென்று அடித்துக்கொண்டன. அந்த பிரமாண்ட நிக்கர் கால்கள் வழியாகக் குளிர்ந்த காற்று வீசியடித்து என் அடிவயற்றுப் பாகத்தை அப்படியே மரத்துப் போக வைத்த மாதிரி இருந்த்தது//

இறுதியில் லம்பாடிகள் நிஜாமியர்களால் கொல்லப்படுவது, காந்தியின் மறைவு, போர் தீவிரமடைந்து எங்கும் வெளியில் செல்லமுடியாமல்
தனிமைப்படுத்தப்படுவது பொன்றவையும் சொல்லப்படுகின்றன.இவை நிகழ்ந்து சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு அசோகமித்ரன் இந்நாவலை
எழுதியிருக்கின்றார். கண்முன் காட்சிகளை விரியச்செய்யும் நுண்ணிய விவரிப்பும், நிகழ்வுகளை நேர்மையுடன் பதிவு செய்திருக்கும் விதமும் இந்நாவலை தமிழின் தலை சிறந்த நாவல்களின் பட்டியலில் இடம்பெறச் செய்கின்றன.

Wednesday, August 06, 2008

இரண்டு திரைப்படங்கள்

கடந்தவாரம் அருமையான இரண்டு மராத்திப் படங்களைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போதுதான் நாம் பிற(இந்திய)மொழிப்படங்களை எந்த அளவிற்கு தவறவிடுகின்றோம் என்பதை உணர முடிந்தது. இரானியப் படங்களையும், ஜெர்மன் படங்களையும் சிலாகிக்கத் தெரிந்த நாம் பெங்காலிப் படங்களையும், மராத்திப் படங்களையும் கொண்டாடுவதில்லை. அகிரா க்ரொசொவாவையும், ராபர்ட் பென்கினியையும் அடையாளம் காண்டு கொள்ளத் தெரிந்த நமக்கு அடூர் கோபாலகிருஷ்ணனையும், ஷாந்தாரமையும் யாரென்றே தெரியவில்லை.உலகத் தரத்திற்கு இணையாக நம் நாட்டிலும் படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதற்கு இந்த இரு படங்களுமே சாட்சி.

Shwaas(ஸ்வாசம்)


2004 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த திரைப்படத்திற்கான தேசியவிருதினைப் பெற்ற இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தினை அடிப்படைகயாகக் கொண்டது. கிராமத்திலிருந்து தனது ஏழுவயது பேரன் பரசுராமை அழைத்துக் கொண்டு நகரத்திலிருக்கும் மருத்துவமனைக்கு வருகிறார் முதியவர் ஒருவர். தூரப்பார்வையில் சிரமப்படும் அந்த சிறுவனுக்கு பரிசோதனைகள் எடுக்கப் படுகின்றன.பின் அவனுக்கு மிக அரிய வகை "ரெட்டினொப்ளாஸ்டோமா" என்ற ரெட்டினல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அவன் உயிர்வாழ இரண்டு கண்களையும் அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவதுதான் ஒரேவழி என்று மருத்துவர் கூறிவிடுகிறார். இந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாமல் தவிக்கும் முதியவருக்கு மேலும் சங்கடங்கள் காத்திருக்கின்றன. அதாவது ஒருவரது உடலிலிருந்து அவயங்கள்
நீக்ககுவதற்கு முன் அவருக்கு அதுபற்றி தெரியப்படுத்த படவேண்டும் என்பது சட்டம். இந்தக் கொடிய செய்தியை அந்த சிறுவனுக்கு சொல்லமுடியாமல்
தவிக்கிறார்கள். ஒரு சமூகசேவகி,மருத்துவர் இவர்களின் உதவியால் ஒருவாறு அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடுசெய்யப்படுகிறது.அறுவைசிகிச்சைக்கு முதல்நாள் அந்த சிறுவனும்,அந்த முதியவரும் மருத்துவமனையிலிருந்து காணாமல் போகிறார்கள்.அடுத்த நாளிலிருந்து இருளுக்குள் செல்லப்போகும் தன் பேரனுக்கு அன்றைய நாள்முழுவதும் வண்ணங்களைக் காட்டுகிறார்.இறுதியாக விழியிழந்த்தோர் விடுதிக்கு அழைத்துச் சென்று நிதர்சனத்தை அறியப்படுத்துகிறார். அடுத்தநாள் அறுவைசிகிச்சை நடக்கிறது. இறுதிக்காட்சியில் சிறுவனும்,முதியவரும் படகில் தங்கள் ஊருக்கு போகிறார்கள். படகு மெதுவாக கரையை நோக்கி வருகிறது.அந்த சிறுவன் கறுப்புக்கண்ணாடி அணிந்து அமர்ந்திருக்கிறான்.படகு கரையை
அடைந்துவிட்டதை உணர்ந்துகொண்ட சிறுவன் உற்சாகத்தில் குதூகலிக்கிறான். அத்துடன் படம் முடிவடைகிறது.

கொஞ்சம் தப்பினாலும் அழுகாச்சி நாடகமாகிவிடும் அபாயம் இருக்கும் கதை. அழகான திரைக்கதையாலும், இயல்பான காட்சி அமைப்புகளாலும் தேர்ந்த
நடிப்பினாலும் குறிப்பிடத்தக்க படமாகிறது. தனக்கு ஏற்படப்போகும் பயங்கரத்தை உள்வாங்கிக் கொள்ளமுடியாமலும், பார்வை மங்குவதன் கஷ்டங்களை தாங்கிக்கொள்ள முடியாமலும் உணர்ச்சிகளை அச்சிறுவன் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளான்.மருத்துவரும்,முதியவரும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள். பார்வை பறிபோகும் விஷயத்தை அந்த சிறுவனுக்கு புரியவைக்கும் காட்சி, முதியவர் சிறுவனுக்கு ஊர்சுற்றிக்காட்டும் காட்சி போன்றவை சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன.குறிப்பாக கருப்புக்கண்ணாடியுடன் சிறுவன் படகில் அமர்ந்திருக்கும் இறுதிக்காட்சி கண்களைப் பனிக்கசெய்கிறது.அந்த வருடத்தின் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியாவிலிருந்து இப்படம் அனுப்பிவைக்கப்பட்டது. இயக்குனர் சந்தீப் சாவந்திற்கு இது முதல் படம் என்பதை நம்பமுடியவில்லை.

Tingya(டிங்யா)


விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில் அதனை ஒட்டி வெளிவந்திருக்கும் திரைப்படம். இதுவும் ஒரு குழந்தை கதாபாத்திரத்தை (டிங்யா) மய்யமாகக் கொண்ட கதைதான். டிங்யா என்ற சிறுவன் அவர்கள் வீட்டு மாட்டுடன் மிகுந்த்த பாசத்துடன் இருக்கிறான். மாடு திடீரென நோய்வாய்படுகிறது. உழவுமாடு நோய்வாய்ப்பட்டதால் டிங்கியாவின் தந்தைக்கு விவசாயம் பாதிக்கப் படுகிறது.மிகுந்த யோசனைக்குப் பின் மாட்டினை விற்க(இறைச்சி) முடிவு செய்கிறார். அதனைத் தடுக்க டிங்க்யா எடுக்கும் ப்ரயத்தனங்களும், அதன் விளைவுகளும் தான் கதை. ஒரு படம் ஒன்பது மாநில விருதுகளைப் பெறுவதென்பது இதுவே முதல் முறை.

படம் துவங்கிய 10 நிமிடங்களில் அந்த கிராமத்துடன் ஒன்றிப் போகிறோம். படம் எந்த பிரச்சனையையும் நேரிடையாகச் அணுகாமல் மறைமுகமாக சொல்லியிருபது இப்படத்தின் சிறப்பு.தற்கொலை செய்துகொண்ட விவசாயின் மனைவி கதறும் அந்த இரண்டுவினாடிக்காட்சி ஏற்படுத்தும் பதைபதைப்பு இதற்கு ஒரு உதாரணம். கள்ளம் கபடமற்ற அந்த சிறுவனின் அப்பாவித்தனமான கேள்விகளும் அதன் பின்னணியில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள பெரிய சங்கதிகளும்தான் படத்தின் கரு. உதாரணமாக டிங்யா வாசற்படியில் அமர்ந்திருக்க, அவனது தாய் 'வாசற்படியில் உட்காராதே லட்சுமி வீடுக்குள் வரும் நேரம்' என்கிறார். உண்மையிலேயே
லட்சுமி வருகிறாளா என்று ஆச்சரியமாகக் கேட்கிறான் டிங்யா. வறுமையில் வாடும் அந்த விவசாயின் மனைவி பதில் சொல்ல முடியாமல் மலைக்கிறாள். கிராம மக்கள் கால் நடைகளுடன் கொண்டிருக்கும் அன்பு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. மொழி புரியாவிட்டாலும் பின்னணியில் வரும் அந்த நாடோடிப் பாடல் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது. காமிரா மலையின் இளம் வெயிலையும், இரவையும், குளிரையும் கூட படம் பிடிக்கிறது. இப்படி ஒரு மிகையில்லாத அசலான கிராமத்துப்படம் பார்த்து எத்தனை காலமாகிறது.

*********
இந்த இரண்டு படங்களையும் பார்த்தபோது போது தொன்றியவை
பாலுமகேந்திரா, மகேந்த்திரனுக்குப் பிறகு இயல்பான படங்கள் எடுப்பதற்கு தமிழில் இன்னும் ஆள்வரவில்லை.

அதிகப் பிரசங்கித்தனமாக பேசுவதுதான் நல்ல நடிப்பு என குழந்தை நட்சத்திரங்களுக்கு சொல்லிக்கொடுத்து வைத்திருக்கும் நம்ம ஊர் இயக்குநர்கள்(மணிரத்னம் முதற்கொண்டு) அனைவரும் பார்க்கவேண்டிய படங்கள் இவை.

Monday, August 04, 2008

தேசியகீதச் சிந்தனைகள்

சமீபத்தில் தூக்கம் தொலைந்த ஒரு இரவில் படம் பார்க்கத் திரையரங்கிற்கு சென்றிருந்த்தேன். அந்த பதினோரு மணிக்காட்சிக்கும் திரையரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.எனக்கருகில் இருந்த இரு காலி இருக்கைகளில் நல்ல பிகர்கள் வந்தமர ஆண்டவனை வேண்டிக்கொண்டிருந்தவேளையில் அழகான இரானிய பெண் வந்து ஒரு இருக்கை தள்ளி அமர்ந்தாள்.பிரார்த்தனை வேலைசெய்வதாய் சந்தோஷப்பட்ட தருணத்தில் என் எண்ணத்தில் மண்.எங்களுக்கு இடையிலிருந்த இருக்கையில்தாடி வைத்த ஒரு இரானிய இளைஞன் வந்தமர்ந்தான்.அந்த பெண்ணின் காதலன் என்று நினைத்துக்கொண்டேன்.படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதத்திற்கு அனைவரும் எழுந்து நிற்குமாறு அறிவிப்பு வந்தது.அனைவரும் எழுந்துநிற்க அந்த இளைஞன் மட்டும் உட்கார்ந்து கொண்டே இருந்தான்.சுற்றி இருப்பவர்கள் அவனை ஒருமாதிரியாகப் பார்க்க,உடன் வந்த பெண்ணும் வற்புறுத்த வேறு வழியின்றி முனகிக்கொண்டே எழுந்து நின்றான்.போதாக்குறைக்கு அன்று வழக்கமான 52 வினாடி தேசியகீதம் பாடப்படவில்லை.லதாமங்கேஷ்கர் பாட்டி மெதுவாக முதல் அடி பாட,அவரதுசகோதரி ஆஷா போஸ்லே இரண்டாவது அடியை எடுத்துக்கொடுக்க,இதற்கிடையில் புல்லாங்குழல் வித்வான் அவரது திறமையைகாண்பிக்க, தேசியகீதத்திற்கு நடுவிலும் இடைவேளை விட்டால் பரவாயில்லை என்று தோன்றியது.இப்போது அந்த இரானிய இளைஞனின் மனோநிலையில் தான் நானும் இருந்தேன்.இந்த அர்த்தராத்திரி வேளையில் திரையரங்கங்களில்தேசியகீதம் பாடப்படுவதன் தாத்பரியம் என்னவென்று விளங்கவில்லை. தேசப்பற்றினை இதன் வாயிலாக இஞ்ஜெக்ட் செய்வதுதான் நோக்கமெனில் அது நிகழவில்லை.



தேசியகீதம் பற்றி நான் இப்படி சிந்திப்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.ஏனெனில் பள்ளி நாட்களில் தேசியகீதம், தேசியகொடி, சுதந்திரதினம் போன்ற வஸ்த்துக்களின் மீது அதிக பற்றுடன் இருந்தது நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு வகுப்பிலும் தேசம் பற்றிபேசும்,தேசப்பற்று பற்றி பேசும் ஒரு ஆசிரியர் அமைந்தார். என்னுடன் எட்டாம் வகுப்பு படித்த தோழன், “ஜெயஹே ஜெயஹே சொல்ரப்பொ எனக்குசிலிர்க்கும் டா” என்பான். உண்மையாகவே அவனது கைமயிர்கள் குத்திட்டு நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.நானும் பல முறை முயற்சித்துப்பார்த்தேன். தேசியகீதத்தின்போது திருப்பூர்குமரனையெல்லாம் நினைவில் நிறுத்தியும் ஒன்றும் சிலிர்க்காததால் முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.என்றாலும் அவனைவிட எனக்கு தேசப்பற்று இரண்டு டீஸ்பூன் குறைவு என்பதில் ரொம்ப நாளைக்கு வருத்தமிருந்தது. கிராமங்களில் சுதந்த்திரதினம் திருவிழாவுக்கு இணையாகக் கொண்டாடப்படும்பண்டிகை. தியாகிகளின் சொற்பொழிவுகள்,பேச்சுப்போட்டி,கொடியேற்றம் என சுதந்திரம் தொடர்பான சிந்தனைகளாலேயே அன்றைய நாள் முழுவதும் கழியும். நகரத்திற்கு குடிபெயர்ந்தபிறகு சுதந்திரதினம் ஒரு விடுமுறைதினமாக மட்டுமே பாவிக்கப்படுவது கண்டு வியப்பாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன ஏதோ ஒருகளிசடையைப் பார்க்கும் கூட்டத்தோடு நானும் இணைந்துகொண்டேன்.


தொலைக்காட்சியில் அப்போது பார்த்த 'அபூர்வராகங்கள்' படத்தின் ஒரு காட்சி மிகப் பிடித்த காட்சியாக மனதில் தங்கிப்போனது.தேசியகீதம் பாடப்படும்போது ஒருநபர் மட்டும் சாவகாசமாக வேர்க்கடலையை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அதைப் பார்த்துகமல் கோபம்கொப்பளித்தது, பாடல் முடிந்தவுடன் அந்த நபரைப் புரட்டி எடுத்துவிடுவார்.அந்தக் காட்சியைப் பார்த்ததிலிருந்த்தது நானும்தேசியகீதத்தை அவமதிக்கும் ஒரு நபரையாவது குத்துவிடவேண்டும் என்று முஷ்ட்டியை மடக்கிக் கவனமாகக் காத்திருந்தேன்.ரொம்ப நாட்களாகியும் அப்படி யாரும் அகப்படாதது எனது நல்லநேரம் என்றுதான் சொல்லவேண்டும். இப்போது அப்படி ஒருநபரைப் பார்த்தால் கோபப்படமாட்டேன் என்பயதைவிட நானேகூட தேசியகீதத்தின்போது கடலைசாப்பிட தயங்கமாட்டேன் என்பதுதான் உண்மை. காரணம் தேசப்பற்று அற்றுப்போய்விட்டது என்பதல்ல,தேசபக்தி பற்றிய எனது கண்ணோட்டம் மாறியிருக்கிறது என்பதே.”உன் அயலானுக்கு நீ செய்யும் நன்மைகள் யாவும் எனக்கே செய்யப்படுகின்றன”என்று பைபிளில் இறைவன் சொல்வதுபோல ஒரு வாசகம் வரும். அதுபோலத்தான் தேசப்பற்றும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும்,நலிந்தவர்களுக்கும் உதவும் ஒவ்வொரு தருணங்களிலும் தேசப்பற்று உடையவர்களாகின்றோம். அதனைவிடுத்து மனம்போல் சுயநலவாழ்வு வாழ்ந்துகொண்டு தேசியகீதத்திற்கும்,தேசியக்கொடிக்கும் மாத்திரம் விறைப்பாக சல்யூட் அடிப்பது என்பது,நட்சத்திர ஹோட்டலில் ஆயிரங்களை செலவழித்து உணவருந்திவிட்டு வாசலில் பிச்சைக்காரனுக்கு 1 ரூபாய் போடுவதன்மூலம் தன்னை கொடைவள்ளலாக கற்பனை செய்துகொள்வதற்கு சமம்.


இதனால் தேசியகீதத்திற்கு மரியாதை செய்யாதீர்கள் என்று நான் சொல்லவரவில்லை. உன்மையான தேசப்பற்று இல்லாதபட்சத்தில்இந்த போலி மரியாதைகளால் எந்த புண்ணியமும் இல்லை என்றுதான் சொல்கிறேன். எனக்குமே இந்த குற்றஉணர்ச்சி இருப்பதால்தான் இதனை உறுதியாகச்சொல்ல முடிகிறது. படிக்கும் காலங்களில் சமூகத்திற்கு இதை செய்ய வேண்டும், அதைச் செய்யவேண்டும் என மனக்கோட்டைகட்டி வேலைக்குவந்து சம்பாதிக்கத் துவங்கியபின் அங்கொன்று இங்கொன்றுமாக செய்து நாளடைவில் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் நானும் மாறிப்போனேன்.வரி ஏய்ப்புசெய்யும்,கருப்புப் பணத்தைப் பதுக்கும் பணமுதலைகளுக்கு நடுவில் ஒழுங்காக வரியைச் செலுத்தும் நாம் எவ்வளவோ மேல் என்றாலும், அது மட்டுமே போதாது என்பதும் தெரிந்தே இருக்கிறது.



மனம் திரைப்படத்தில் லயிக்கவில்லை. அலைபோல எண்ணங்கள் வந்துகொண்டே இருந்தன.அடுத்தமுறை தேசியகீதத்திற்கு எழுந்து நிற்கையில் “தவ சுப நாமே ஜாகே” யில் கவனம் செலுத்தாமல் உருப்படியாக ஏதாவது செய்வதைப் பற்றி யோசிக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். படம் விட்டு வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மனதில் சுகிர்தாரிணியின் இந்தக் கவிதை நிழலாடிச் சென்றது.இந்த கவிதைக்கும் எனது இந்தக் கருத்துக்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்ன?



இடமற்று நிற்கும்

கர்பிணியின்

பார்வை தவிர்க்க

பேருந்துக்துக்கு

வெளியே பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம் எதை

எதிர்பார்க்கிறாய்

காதலயா?

************


தெளிவான சிந்தனைகளால் தான் ஒரு கருத்தை சரியாகச்சொல்லமுடியும் என்று படித்திருக்கிறேன்.ஆனால் எனதுஇந்தப் பதிவு தெளிவற்ற சிந்த்தனைகளினால் விளைந்தது.எனவே தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.கருத்துக்களுக்காகவும் திருத்தங்களுக்காகவும் காத்திருக்கிறேன்.என்னை இந்த வாரத்தின் நட்சத்திரமாக தேர்ந்தெடுத்திருக்கும் தமிழ்மணத்திற்கும்,ஒருவாரகாலத்திற்கு என்னைப் பொருத்துக்கொள்ளப் போகும் வாசகர்களுக்கும் வணக்கங்கள்.

Saturday, June 28, 2008

அமிர் மற்றும் பின் கதைச் சுருக்கம் பற்றிய குறிப்புகள்

அமிர்(Amir)


"Only Sex and Sharuk sell in Bollywood"

-Neha dhupia,Actress

இது ஏறக்குறைய உண்மைதான்.பாலிவுட்டில் வணிகரீதியாக பெரும் வெற்றி பெரும் படங்களையும் அதன் தரத்தினையும் பார்த்தாலே இது விளங்கும்.என்றாலும் மணிரத்னம்,கமல் என பலரும் பாலிவுட் நோக்கியே படையெடுப்பதற்குக் காரணம் உச்சபட்ச விசிபிலிட்டியும் அதன் வாயிலாகக் கிடைக்கும் அங்கீகாரமும் தான்.வித்தியாசமான முயற்சிகள் கல்லாப் பெட்டியை நிரப்பாவிட்டாலும் மக்களின் கவனத்தைக் கவரத் தவறுவதில்லை.அம்மாதிரியான ஒரு முயற்சி தான் அண்மையில் நான் பார்த்த "அமிர்" என்ற திரைப்படம்.90 நிமிடங்களே ஓடும் இந்த ஆங்கில பாணிப்படம் 'த்ரில்லர்' என்று வகைப்படுத்தப் பட்டாலும் அதற்கு சமூகப் பிரச்சனை ஒன்றை அலசும் வேறு ஒரு முகமும் உண்டு.லண்டனிலிருந்து திரும்பும் அமிர் அலி என்ற இளைஞனின் ஒருநாளைய வாழ்க்கைதான் படம்.விமான நிலையத்தில் "அமிர்" என்ற பெயர் காரணமாக பலமுறை பரிசோதிக்கப் படுகிறான்(என் பெயர் அமர் என்று இருந்தால் இவ்வளவு நேரம் பரிசோதிப்பீர்களா?).தன்னை வரவேற்க தனது குடும்பத்தார் யாரும் வராதது கண்டு குழம்பும் அமிருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.மோட்டார் சைக்கிளில் வரும் இருவர் அமிர் கையில் செல் போனை திணித்து விட்டு மறைந்து போகிறார்கள்.செல் போன் மணியடிக்கிறது.அமிர் அதனை எடுத்துப் பேச ,அடுத்து அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் அந்த மர்மக் குரல் தீர்மானிக்கிறது.இறுதியில் அது அவனை எப்படி விபரீதத்திற்கு இட்டுச் செல்கிறது என்பது மீதிக்கதை."ஃபோன் பூத்" படத்தை கொஞ்சம் நினைவு படுத்தினாலும் இஸ்லாம் பயங்கரவாதம் பற்றிய பிரச்சனையும் கையாள்வதால் வேறுபடுகிறது.நான் அண்மையில் திரைப்படவிழாவில் பார்த்த "குதா கேலியெ" இப்பிரச்சனையை நேரடியாக அணுகுகிறது(3.30Hrs).அமிர் அதைவிட புத்திசாலித்தனமாக பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்துகிறது.மும்பையின் சேரிகள் மிகைப்படுக்தப் படாமல் காமிராவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பெரும்பாலும் CLose up காட்சிகள் நிறைந்த இப்படத்தில்,அறிமுக நாயகன் ராஜீவ் கண்டேவால் தனது இயல்பான முக பாவங்களால் கவர்கிறார்.தாராவியின் பொதுகழிப்பறையைக் காட்டும் போது பார்க்கும் நமக்கு இங்கு குமட்டிக்கொண்டு வருகிறது(காமிரா முதல் தரம்).இவ்வ்ளவு இருந்தும் படத்தின் நடுப்பகுதியில் திரும்பத் திரும்ப வரும் ஒரே மாதிரியான காட்சிகளினால் சலிப்பு ஏற்படுகிறது.இந்தத் தொய்வைப் போக்கி வேகத்தைக் கூட்டியிருந்தால் அறிமுக இயக்குநர் ராஜ்குமார் குப்தாவின் இந்தப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றிபெற்றிருக்கும்.



பின் கதைச் சுருக்கம்


நல்ல எழுத்தாளர் அடிப்படையில் நல்ல வாசகராக இருத்தல் அவசியம்.அப்படி ஒரு எழுத்தாளரின் வாசக அனுபவங்களைப் படிப்பது சுகானுபவம்.குறிப்பாக படிக்கவேண்டும் என்ற எண்ணமும், என்ன படிக்க வேண்டும் என்ற தெளிவின்மையும் உள்ள ஆரம்ப கட்ட வாசகருக்கு இத்தகைய வாசக அனுபவங்கள் நல்ல வழிகாட்டிகள் எனலாம்.அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் மனதிற்கு நெருக்கமான ஒரு புக்தகம்.இதேபோல வாசக அனுபவங்களைச் சொல்லும் "பின் கதைச் சுருக்கம்"என்ற நூலை அண்மையில் படிக்க நேர்ந்தது.பா.ராகவன் இந்த ஒல்லியான புத்தகத்தில், இளம் வயது தொட்டு தான் படித்து வந்த நாவல்களில் தன்னைக் கவர்ந்தவற்றை பற்றி சுவாரசியமாக விவரித்திருக்கிறார்.ஆனால் கதாவிலாசம் போல ஒரு வரிசைப்படி அல்ல.க.விலாசத்தில் எஸ்.ரா தனது அனுபவம் ஒன்றைச் சொல்லி அதன் முடிவில் அதனையொத்த ஒரு கதையினை விவரித்து பின் அதன் வாயிலாக அந்த ஆசிரியரை அறிமுகப்படுத்துவார்.எல்லா அத்தியாயங்களும் இதே வரிசையில் தான் அமைந்திருக்கும். பி.க.சுருக்கத்தில் ஒரு அத்தியாயத்தில் ஒரு ஆசிரியரை பற்றி விரிவாக எழுதுகிறார்,அடுத்ததில் ஒரு புத்தகம் எழுதப்பட்டதன் பின்னணி,பிறகு ஒரு எழுத்தாளருடனான தனது அனுபவங்கள்,தான் கதை எழுதிய கதை என சுய விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசையற்ற குறிப்புகளாக விரிகின்றது.


புத்தகத்திலிருந்து...


*அலை உறங்கும் கடலான ராமேஸ்வரம் பற்றியும்,அளவிலா அதன் அதிசயங்கள் பற்றியும்,அதிசயங்களை விற்றுப்பிழைக்கும் அம்மக்களின் வாழ்நிலை பற்றியும் சொல்கிறார்.தனது"அலை உறங்கும் கடல்" நாவலுக்கான சரடு இக்கட்டான ஒரு தருணத்தில் கிட்டியதை விவரித்து 'வாழ்வின் ஏதோ ஒரு கணம் சட்டென்று சமநிலைதவறி வெடித்துச் சிதறும்போதுதான் சிறிய கலைப்படைப்புகளிலிருந்து பேரிலக்கியங்கள் வரை சுருக்கொள்கின்றன' என்கிறார்.

*அசோகமித்ரனின் 18வது அட்சக் கோடு,தண்ணீர் பொன்ற நாவல்களைக் கேள்விப்பட்ட அளவிற்கு 'ஒற்றன்' அவ்வளவு பரிச்சயமில்லை.ஆனால் பா.ரா தமிழ் எழுத்துத் துறையில் இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று இந்நாவல் என்கிறார்.1973-ல் அயோவா நகர பல்கலைக்கழகம் பல்வேறு நாடுகளிலிருந்தும் அழைக்கப்பட்ட எழுத்தாளர்களைக்கொண்டு எழுத்துப்பட்டறை ஒன்றை 7 மாதகாலத்திற்கு நடத்தியது.அதில் பங்கேற்ற அசோகமித்ரன்,தனக்கேற்பட்ட அனுபவங்களை சுவையாக விளக்கும் நாவல் தான் ஒற்றன்.

*நோபல் இலக்கியவாதி எர்னஸ்ட் ஹெமிங்வே பற்றிய ஒரு கட்டுரை.மணவாழ்வில் அவருக்கு ஏற்பட்ட படுதோல்வியும்,சக எழுத்தாளரான பக்னரின் வெற்றியின் மீது ஏற்பட்ட பொறாமையும் இலக்கியவெற்றிக்கு அவரை உந்தித்தள்ளிய மறைமுக காரணிகள் என்கிறார்.ஹெமிங் வேயின் "Old man and the sea" இப்போது வாசிக்கத் துவங்கியிருப்பதால்,இக்கட்டுரை படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

*இந்திரா பார்த்தசாரதியின் "ஏசுவின் தோழர்கள்"(Comrades of Jesus) தமிழில் எழுத்தப்பட்ட ஆங்கில நாவல் என்கிறார்.அரசியல் நெருக்கடி மிகுந்த காலத்தில் இ.பா போலந்தில் ஐந்தாண்டுகள் தங்கியிருக்க நேர்ந்தது.அப்போது அதன் அரசியல் நிலவரங்களைக் கூர்ந்து நோக்கி எழுதப்பட்ட நாவல் ஏசுவின் தோழரகள்.சமகால அரசியல் நிலவரங்களை இ.பா அளவுக்கு தமிழ் படைப்பிலக்கியத்தில் வெற்றிகரமாகக் கையாண்டவர்கள் குறைவு என்கிறார்.இ.பவின் எளிமை பற்றியும்,அதீத நகைச்சுவையுணர்வு பற்றியும் சிலாகிக்கிறார்.நான் இ.பா படித்ததில்லை.படிக்க வேண்டும்.
*நாகூர் ரூமியின் பெயரை முதலில் கேள்விப்பட்டபோது எதோ ஆண்மைகுறைவு லேகியம் விற்கும் லாட்ஜ் வைத்தியர் போன்ற பிம்பம்தான் தோன்றியதாகவும் பார்க்க அவர் ஜீன்ஸ் போட்ட அகத்தியர் போலிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.ரூமியின் "குட்டியப்பா" நாவலில் தமிழில் இதுகாரும் எழுதப்படாத உயர்தர நகைச்சுவை இருப்பதாகக் கூறுகிறார்.குட்டியப்பா கதாப்பாத்திரம் உண்மையில் ரூமியின் மாமனார்தான் என்பதையும், நிஜத்துக்கும் கதாபாத்திரத்திற்குமான இடைவெளி மிகக்குறைவு என்பதையும் அறிய வியப்பாக இருக்கிறது.கட்டுரை படித்தவுடன் வாங்கிப் படிக்கவேண்டு என்று தோன்றிய புத்தகங்களில் குட்டியப்பா முக்கியமானது.

*இவை தவிர பிறமொழி நாவல்களில், மார்க்குவேஸின் லத்தீன் அமெரிக்க நாவலான நூற்றாண்டுகால தனிமை(One Hundred years of Solitude), டால்ஸ்டாயின் தோல்வியுற்ற நாவல் புத்துயிர்(Resurrection), வைக்கம் முகமது பஷீரின் சரஸ்வதிதேவியுடனான காதல் மற்றும் அவரது டைரிக்குறிப்புகள் "அனுராகத்தின் நாட்கள்" என நாவலாக்கப்பட்ட விதம், ஸ்டாலின் காலத்து சித்திரவதைக் கூடங்களை விவரிக்கும் "இவானோ டெனிஸோவிச்சின் வாழ்விலே ஒருநாள்"(One day in the life of Ivan denisovich), பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

*மேலும் எம்.வி.வி தனக்கு காதில் வினோதமான ஒலிகள் கேட்பது பற்றி எழுதிய "காதுகள்" நாவல்( தமிழின் முதல் மாய-யதார்த்தவாத முயற்சி என்கிறார்.), தனது நண்பர் ஆர்.வெங்கடேஷின் "இருவர்" நாவல், உற்சாக மனிதர் வேணுகோபாலின் நுண்வெளிக்கிரணங்கள் பற்றிய கட்டுரைகள் நன்றாக எழுதப்பட்டுள்ளன. பிரபஞ்சன், சமுத்திரம், விஷ்ணுபுரம், சல்மான்ருஷ்டி பற்றிய கட்டுரைகள் அழுத்தமாக இல்லை.


வலை(பதிவு) மேய்வதின் ஆகப்பெரிய பயனாக நான் கருதுவது புத்தகங்கள்/திரைப்படங்கள்/கலைப்படைப்பு இவற்றைப்பற்றி அறிமுகம் கிடைப்பதுதான்.நல்ல அறிமுகங்கள் அவற்றைத் தேடி படிக்க/பார்க்க தேவையான உந்துதலைத் தரும். எல்லா எழுத்தாளர்களும் இதுபோல தங்களைக் கவர்ந்த புத்தகங்களைப் பற்றிய பட்டியலையும் அறிமுகத்தையும் தந்தால் நன்றாகயிருக்கும்.ஏனென்றால் எழுத்தாளர்கள் யாவரும் நல்ல வாசகர்கள் என்பதில் எனக்கு நிரம்பவும் உடன்பாடு உண்டு.

Friday, June 13, 2008

தசாவதாரம் விமர்சனம்(without spoilers)




டிஸ்கி:நான் without spoilers போட்டதுக்கு காரணம் என் பெருந்தன்மை அல்ல.கதையை சொல்வது அவ்வளவு கடினம்.ஒரு பயணம் போல நீளமாக செல்லும் இந்த திரைக்கதையை இரண்டு வரிகளில் சொல்லலாம் அல்லது கமல் போல மூன்று மணிநேரத்தில்(3.10) சொல்லலாம்.ஆனால் சஸ்பென்சை உடைக்கிறேன் என்று யாரும் உங்களை ஏமாற்ற முடியாது.அதனால் தைரியமாக படியுங்கள்.


படம் மிக நன்றாக இருக்கிறது.சற்றே நீளமாக இருந்தாலும் Worth watching.கமல் தனது இரண்டு வருட உழைப்பிற்கு நியாயம் செய்திருப்பதாகவே உணர்கிறேன்.வெவ்வேறு அவதாரங்களில் படம் முழுவதும் கமல் வியாபித்திருக்கிறார்.நான் வெவ்வேறு அவதாரங்கள் எனக்குறிப்பிட்டதில் கமலின் எழுத்தாள,நாத்திக அவதாரங்களும் அடங்கும்.

"கிறித்துவமும்,இஸ்லாமும் இந்தியாவிற்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத 12ஆம் நூற்றாண்டில்,விஷ்ணுவும் சிவனும் தங்கள் பக்தர்கள் வாயிலாக மோதிக்கொண்ட தமிழகத்தில்...." என கமலின் கனமான narrationனுடன் படம் துவங்குகிறது.படம் முழுவதும் கமலின் வசனங்கள் அசத்தல்(எனது வோட்டு கமலின் இந்த எழுத்தாள அவதாரத்துக்குத்தான்).


படத்தின் கிராபிக்ஸ் இந்திய திரைப்படங்களின் தரத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது.அதற்காக MATRIX ரேஞ்சுக்கு இருக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் சாரி...அதற்கும் இன்னும் தொலைவு(சற்று) இருக்கிறது.பட்த்தின் மிகமுக்கிய அம்சமான மேக்-அப் அருமையாக இருக்கிறது.பூவராகன்,பல்ராம் நாயுடு,ஜப்பானிய கமல்(சுத்தமக அடையாளம் தெரியாது) இவற்றின் மேக்-அப் உறுத்தாமல் சிறப்பாக வந்திருக்கின்றன.மோசமாக வந்திருப்பது வில்லன் கமல்.தொலைவுக் காட்சிகளில் அவ்வளவு நன்றாக இல்லாத புஷ் கமல், close up காட்சிகளில் மிரட்டலாக இருக்கிறார்.அமெரிக்க கமல் பேசும் வசனங்கள் யாவும் ஹாலிவுட் பாணியில் எழுதியிருப்பது புத்திசாலித்தனம்.அமெரிக்க கமலும்,ஜப்பானிய கமலும் மோதிக்கொள்ளும் ஒரு காட்சியில்

அமெரிக்கன்: You remember Hiroshima?

ஜப்பானியன்: you remember pearl harbour?

தசா அவதரத்தில் கலக்கலான அவதாரம் தெலுங்கு-தமிழ் பேசும் பல்ராம் நாயுடுதான்.தெலுங்கு காரர்களை ஒட்டு ஓட்டு என்று ஓட்டித் தள்ளியிருக்கிறார்(He speaks many languages,He speaks 5 languages in Telugu).அதேசமயம் "ஏன்யா,நான் தெலுங்கு,நான் தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் கத்துகிட்டு தமிழ் பேசரேன்,தஞ்சாவூர்காரன் நீ என்கிட்ட இங்லீஷ்ல பேசற" என்று பீட்டர் தமிழர்களை ஒரு பிடி பிடிக்கிறார்.தலித்தின மக்களின் பிரதிநிதியாக வரும் பூவராகன் கேரக்க்டரும் அருமை.தெற்கத்திய ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசும் விதமும்,விஷயமும் பராட்டப் படவேண்டியவை.


இரண்டு மூன்று கமல்களாவது அந்தரத்தில் தொங்குகிறார்கள்.குறிப்பாக அந்த நெட்டைக் கமலும் அவதார் சிங்கும் படத்திற்கு வேகத்தடை.படம் நீளம் என்று யாரும் சொன்னால் இவர்கள் தலையில் கைவைக்கலாம்.முகுந்தா தவிர பாடல்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை(ரஹ்மான் இசையமைத்திருக்கலாமென்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவிலை)அதேபோல மல்லிகா ஷெராவத்தின் பாடலும் அநாவசியம்.மடிசார் கட்டிவரும் 12ஆம் நூற்றாண்டு அசினைவிட தாவணியில் வரும் அசின் சற்று மனதில் பதிகிறார்.அவ்வபோது சிரிக்க வைக்கிறார் கொஞ்சம் வெறுப்பேற்றுகிறார்(அசினை விட ஜெயப்பிரதா அழகாகத்தெரிகிறார் என்று சொன்னால் அசின் ரசிகர்களிடமிருந்து எதிர்ப்பு வருமோ?).Branded கமல்-கிரெஸி மோகன் வகை காமெடியும் படம்முழுவதும் அங்கங்கே தூவப்பட்டிருக்கிறது. நாகேஷ் , K.R.விஜயா, ரேக்கா,பாஸ்கர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.


கமல் தன் அப்பா பெயர் ராமசாமி நாயக்கன் என்கிறார்.படம் முழுவதும் நாத்திக கருத்துக்களை ஒளித்து வைத்திருக்கிறார்("மடம் ன்னா உள்ள கிரிமினல்கள் இருக்கக்கூடாதா?"- பல்ராம் நாயுடு).படத்தில் ஜெயலலிதாவும் வருகிறார்,கருணாநிதியும்(போலி) வருகிறார்.யாருடைய ஆட்சி காலத்தில் படம் வெளிவரும் என்ற நிச்சயமின்மை காரணமாக இருந்திருக்கலாம்.


இவ்வளவு கடினமான விஷயத்தை(10 roles concept) திட்டமிட்டு அதனை வரலாற்று நிகழ்வுடன் தொடர்பு படுத்தி எடுத்திருப்பது அபாரம்.கமலை திட்டவும் குற்றம் கண்டுபிடிக்கவும் படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.ஆனால் படம் நன்றாக இல்லை என்று கமலைப் பிடிக்காதவர்களால் கூட சொல்லமுடியாது.


இவ்வளவு பெரிய விமர்சனத்தை படிக்க பொறுமை இல்லாமல் கடைசி வரிக்கு தாவியவர்களுக்கு: படம் அருமையாக இருக்கிறது .தியேட்டருக்குப் போய் பாருங்கள்.கமல் மற்றும் குழுவினருக்கு "சல்யூட்".

Saturday, June 07, 2008

சுப்ரமண்ய ராஜு கதைகள் - வாசக அனுபவம்

எளிமையாக எழுதுவதுதான் உலகிலேயே கடினமான விஷயம்,எழுதிப்பாருங்கள் தெரியும் -Ruskin Bond

நேற்று இச்சிறுகதைத் தொகுப்பினைப் படித்துமுடித்தபோது, இது பற்றிய எனது எண்ணங்களைப்பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.சரியாகச் சொன்னால் ஆறு மாதங்களுக்கு முன்னரே எழுதியிருக்க வேண்டியது.புத்தகம் வாங்கி ஆறுமாதங்களாகிறது.ஏதேனும் ஒரு புது விஷயம் நம்மை ஈர்க்கத் துவங்கும்போது அதனைப் பற்றிய தகவல்கள் பல்வேறு திசைகளிலிருந்த்தும் நம்மை நோக்கி வந்தபடியே இருக்கும். இது எனக்கு பலமுறை நிகழ்ந்திருக்கிறது.சுப்ரமண்ய ராஜுபற்றி கேள்விப் பட்டதிலிருந்து அவரைப் பற்றிய செய்திகள் வலைபதிவுகள் வாயிலாகவும், நண்பர்கள்வாயிலாகவும் வந்து கொண்டே இருந்தன.ஆர்வம் மேலிட இந்தபுத்தகத்தை வாங்கிவந்துவிட்டேன். வரிசையாக கதைகளை வாசிக்கத் துவங்கி சிறிது நேரத்தில் ஆர்வம் குன்றி அங்கொன்று இங்கொன்றுமாக வாசித்து பத்து கதைகளுக்குள்ளாகவே மூடிவைத்துவிட்டேன்.அப்போது பரணுக்குபோன புத்தகத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வெளியிலெடுத்தேன். இந்தமுறை அவ்வளவு ஏமாற்றமில்லை.பெரிய எதிர்பார்ப்பு இன்மையும் காரணமாக இருக்கலாம். உண்மையில் பல கதைகள் என்னை ஆச்சரியபடுத்தின.
x
முப்பத்தியிரண்டு கதைகள் கொண்ட இத்தொகுப்பில் முப்பது சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் அடங்கும்.ஒரு எழுத்தாளனின் முழு ஆக்கங்கள் என நோக்கும் போது அளவில் இது மிகவும் குறைவு.இதற்கு காரணம் அவர் 39 வயது வரைதான் வாழ்ந்தார் என தெரியவரும்போது மனது கனக்கிறது. ஆதவனின் கதைக்களம் டெல்லியை அடிப்படையாகக் கொண்டிருப்பது போல ராஜுவின் கதைக்களம் சென்னையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நடுத்தர மக்களின் அன்றாடபிரச்சனைகளும் தனிமனித ஒழுக்கச் சிக்கல்களும் தான் பெரும்பாலான கதைகளின் கரு.இவரது கதை சொல்லும் பாணியில் இருக்கும் அதீத எளிமைதான் இவரது பலம்.அருகில் ஒருவர் அமர்ந்த்து கதை சொல்லிக்கொண்டிருப்பதைப் போல மனதில் காட்சிகளை விரியச் செய்கிறார். ராஜுவின் வார்த்தை உலகமும் சிறியது என்றே தோன்றுகிறது. படிக்கும் பொழுது எந்த எதிர்பாராத வார்த்தையும் உங்களைஆச்சரியப் படுத்துவதில்லை. சுஜாதா போல வார்த்தைக் கலப்போ,ஆதவன் போல வடமொழிச்சொல் பிரயோகமோ இருக்காது(ஆனால் ஆங்கிலக் கலப்பு உண்டு)தெளிந்த நீரோடை போன்று ஓடிக்கொண்டே இருக்கிறது இவரது வர்ணனைகள். பார்க்கின்ற எதையும் இயல்பாக வர்ணிக்கத் துவங்கிவிடுகிறார். இது பல நேரங்களில் சுவாரசியமாகவும் சில நேரங்களில் சோர்வாகவும் இருக்கிறது.
x
கதையின் நாயகர்கள் பெரும்பாலும் சுவாமி நாதன், ராஜாராமன்என்ற பெயர்களையும் நாயகிகள் லதா, ராஜி என்ற பெயர்களையும்
கொண்டிருக்கிறார்கள். நாயகர்கள் எல்லாரும் ஸ்த்ரீ லோலர்கள்.பார்க்கிற பெண்ணையெல்லாம் புணருகிறார்கள் குறைந்த்தபட்சம் மனைவியையாவது சந்தேகிக்கிறார்கள். சொல்லி வைத்ததுபோல,கதை துவங்கி மூன்றாவது பாராவில்”ஹவ் அபெளட் விஸ்கி?” என்று கேட்கிறார்கள்.பெண்கள் அந்நியாயதுக்கு சோரம் போகிறார்கள்.
x
ராஜுவின் கதைகளில் பெரிய குறையாக நான் கருதுவது கதை முடிவுகளைத்தான்.மிக மிக சம்பிரதாயமான கதை முடிவுகள்.எந்த்த கதை முடிவும் அழுத்தமாகவோ வித்தியாசமாகவோ இல்லை(விதிவிலக்குகள்
உண்டு). சுஜாதாவிடம் சிறுகதை நுணுக்கங்களைப் பயின்றவர் ராஜு என்று படித்திருக்கிறேன்.ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது இவர் பாணி. சுஜாதாவின் சுமாரான சில சிறுகதைகள் கூட அதன் எதிர்பாராத முடிவு காரணமாக மனதில் பதிந்து போகும். ஆனால் ராஜுவின் நல்ல சில சிறுகதைகள் கூட அதன் சோகையான முடிவு காரணமாக மனதில்பதிய
மறுக்கிறது.
x
இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த சிறுகதைகளாக கேள்விகள்,இன்னொரு கனவு,சாமி அலுத்துப் போச்சு,தூண்டில்,கொடி,நாலு பேர், வழியில்
சில முட்டாள்கள் மற்றும் காதலிக்கணும் சார் இவற்றைக் குறிப்பிடலாம். இரண்டு குறுநாவல்களில் 'இன்று நிஜம்' நாவலைக்காட்டிலும் 'இரவுகள் தவறுகள்' பிடித்திருந்த்தது. கொஞசம் இடறினாலும் ராஜேஷ் குமார் நாவல் போலாகிவிடும் அபாயம் இருந்தாலும் ராஜுவின் எழுத்துநடையால் தப்பிக்கிறது.'இன்று நிஜம்' ஒரு அருமையான நாவலுக்கான கதைக்களமும் துவக்கமும் இருந்த்தும் கூட சுவையற்ற இரண்டாவது பாதியால் கவனம் இழக்கிறது.
x
சுப்ரமண்ய ராஜுவின் நண்பரும் எழுத்தாளருமான தேவக்கோட்டை மூர்த்தி, ராஜு பற்றிய நினைவுகளை முன்னுரையில் சுவையாகப் பகிர்கிறார்.ஒரு எழுத்தாளரின் முழு ஆக்கங்களையும் தொகுப்பாகக் கொண்டுவரும் போது இத்தகைய விரிவான கட்டுரை அவசியமாகிறது. அந்த எழுத்தாளரை முதன்முறையாக படிப்பபவருக்கு அவரைப் பற்றிய பிம்பம் கட்டமைய இது உதவுகிறது.அவ்வகையில் மூர்த்தியின் கட்டுரை நன்றாகவே இருக்கிறது(அதற்காக ரயில்வே க்ராஸிங்கை கடக்க உதவியதையெல்லாம் குறிப்பிட்டு புளகாங்கிதம் அடைவது கொஞ்சம் ஓவர்).எழுத்தாளர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதராகவும் ராஜு நம்மைக் கவர்கிறார்.மூர்த்தியின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
x
”கற்பனை கலைக்கு முரண்” என்ற நகுலனின் கொள்கைதான் ராஜுவின் எழுத்தில் மீண்டும் மீண்டும் பரிமளித்தது.நெர்மாறாக அனுபவத்தை எழுதுவது அநேகமாக ரிபோர்ட்டேஜில்தான் முடிகிறது; எனவே கலைக்கு கரு கற்பனைதான் என்பதை விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருக்கிற ஆள் நான்.இந்த விவாதம் எங்களுக்குள் பலவருடங்கள் நடந்துகொண்டிருந்தது.ஒரு சமயம் பொறுமை மீறி,அவன் பாராட்டிய,என் ”புளிக்கும் திராட்சைகள்” நாவலின் கதாநாயகி கற்பனையில்தானே சாத்தியம் என்று கேட்டேன். ”யார் சொன்னது? உனக்கு புடவை கட்டினா அப்படித்தான் இருக்கும்” என்று சிரிக்காமல் சொன்னான் ராஜு.ஆனால் உன்னோட ஆர்க்யூமெண்ட் எனக்குதான் சாதகமா இருக்கு.எனக்கு புடவை கட்டினா என் நாயகி மாதிரி இருக்கும்ங்கறதே கற்பனைதானே ராஜு? என்று நான் பதில் சொல்ல,ராஜு சிரித்தான். ஆனால் என் கதாநாயகி போன்ற புத்திசாலியான பொறுமைசாலியான பரோபகாரியான, அதே சமயம் லேசான குறும்புக்காரியான பார்ப்பதற்கும் ரம்மியமான ஒரு பெண்,ராஜுவுக்கு,புடவை கட்டியிருந்தால் சுலபசாத்தியம் என்பது புரிந்தபோது,கலைக்கு அடிப்படை கற்பனையா அனுபவமா என்ற எங்கள் விவாதம் அன்றோடு முடிந்தது. 'How things ought to be' என்ற அயன் ராண்ட் விதியை கற்பனை என்ற சொல்லால் நான் வரையறுக்க, அனுபவம் எனற சொல்லால் ராஜு விவரித்தான். அதனால்தான் எழுத்தும் வாழ்வும் ஒன்றுதான் என்று இறுதிவரை ராஜுவால் இயங்க முடிந்தது.

காலத்தைக் கடந்து நிற்கும் 25 சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன், அதில் சுப்ரமண்ய ராஜுவின் கதையும் ஒன்று, என்று சுஜாதா சொன்னதில் வியப்பேதும் இல்லை.தொகுப்பில் சிறப்பானவையாக பத்து கதைகளாவது தேறுகின்றன. ராஜுவின் எழுத்து யாரையும் பின்பற்றாத தனித்த ஒன்று. சிறுகதை சூத்திரங்களில் முக்கியமானதான எளிமை இவரது கதைகளில் இருந்தும் அதே எளிமை காரணமாக இலக்கிய சர்ச்சைகளிலிருந்தும் புறக்கணிக்கப்படவும் கூடும்.பெரிய எழுத்தாளர்கள் சிலரின் ஆரம்பகால கதைகளை படிக்கும் போது அவரா எழுதினார் என்றிருக்கும்.எல்லாருடைய எழுத்துக்களும் கால மாற்றத்திற்குட்பட்டவைதான், பண்படுதலுக்கு உட்பட்டவைதான்.ஆனால் ராஜுவிற்கு அந்த கால அவகாசம் கூட கிடைக்காமல் இளம்வயதிலேயே மாண்டது தமிழ் சிறுகதை உலகிற்கு மிகப்பெரிய இழப்புதான்.

Sunday, April 13, 2008

கருத்து கந்த்ஸாமி

நேற்று காலையில், முக்கிய செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக செய்திச்சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தபோது,ஒன்றில் Breaking News ஓடிக்கொண்டிருந்தது.ஆஜ் தக் என்று நினைவு.என்ன செய்தி? சாயஃப் அலிகானை காண்பிக்கிறார்கள்.அவரது கழுத்துக்கு ஒரு close-up.அங்கு ஒரு நகக் கீறல் ஏற்பட்டிருக்கிறதாம்.பிறகு கரீனா கபூர்,அவரது கைக்கு ஒரு close-up.அவருக்கும் நகக்கீறல் ஏற்பட்டிருக்கிறதாம்.இருவரும் டேட்டிங் செய்கிறார்களாம்.இதனால் சகலமானவர்களுக்கும் இந்த சேனல் சொல்ல விழைவது.....த்தூ...தொலைக்காட்சியை அணைத்துவிட்டேன்.இதைவிட கீழ்தரமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தால் செய்தி வழங்கமுடியாது.அதுவும் அனைவரும் செய்திகளைப்பார்க்கும் காலைவேளையில்.ஆஜ்தக் என்றில்லை ஸ்டார் நியூஸ்,இண்டியா டிவி,டைம்ஸ்,ஸீ என வரிசையாக பெரும்பாலான செய்தி சேனல்கள் இதையே தான் செய்கின்றன.இவற்றோடு ஒப்பிட்டால் NDTV.IBN Live பரவாயில்லை.சினிமா செய்திகளைக்கொடுக்க M,V என ஆயிரம் சேனல்கள் இருக்க இவர்களும் ஏன் இதையே செய்கிறார்கள் என்பது புரியவில்லை.விதர்பாவில் இந்தவாரம் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இன்றோடு 9 ஆக உயர்ந்துள்ளது.2008ல் மட்டும் 256 பேர்.2005லிருந்து இன்றுவரை மொத்தம் 1500 பேர்.சத்தமின்றி ஒரு இனப் படுகொலையே நடந்து கொண்டிருக்கிறது,ஆனால் மக்களுக்கு இத்தகைய செய்திகளைக் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய செய்தி ஊடகங்கள் சாயஃப் அலிகானின் கழுத்துக் காயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.


உண்ணாவிரதக் கூட்டத்தில் சத்ய ராஜ் முஷ்டியை மடக்கி உணர்ச்சிமயமாகப் பேசியதைப்பார்க்க காமெடியாக இருந்தது.திரைத்துறையின்றரின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வெட்டி வேலை.அவரது 'தீப்பொறி ஆறுமுகம்' வகைப்பேச்சில் கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்ததில் ஆச்சரியமேதுமில்லை.ஆனால் அவர் ரஜினியைப்பற்றி சொன்னவை அனாவசியம் என்று தோன்றுகிறது.கன்னடரான(அல்லது மராட்டியரான) ரஜினி இவ்விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து தன் கடமையைச் சரியாகவே செய்திருக்கிறார்.சத்யராஜுக்கு அவர்மேல் பல நாள் வெறுப்பு இருந்திருக்க வேண்டும் .இதுதான் சமயம் என்று சீண்டிப்பார்த்திருக்கிறார். எனக்கு 'விஜயகாந்த் படம் பார்த்து விட்டு,அகப்பட்ட நோஞ்சானை குத்துவிடும்' என்ற வலையுலக க்ளிஷேதான் நினைவுக்கு வருகிறது.


கமலின் தமிழ் பேட்டிகளைப் புரிந்துகொள்வதில் தான் சிறிது சிரமம் உள்ளது.ஆங்கிலப் பேட்டிகள் தெளிவாகப் புரிகின்றன.ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு கமல் அளித்த சிறுபேட்டி அண்மையில் நான் படித்த பேட்டிகளில் சிறந்தது எனலாம்.மாதிரிக்கு..

ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில்

My politics is private like sex. I don'twant to spoil the fun by talking about it.

Q:Both the times when you separated from your wives, there was another woman involved. Sarika led to your split with Vani and Simran caused a rift between Sarika and you.

கமல்: Unless it's a gay marriage, there's always another woman involved.


தூம்- 2 பார்த்தபோது வந்த அதே தலைவலி 'ரேஸ்' பார்த்தபோதும் வந்தது.படத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒருவர் இறந்து போகிறார்.10நிமிடங்களில் திரும்பி வந்துவிடுகிறார்.பர்முடெஷன் காம்பினேஷனில் நாயகர்கள்,நாயகிகள் ஜோடி மாறுகிறார்கள்.சோகப்பாட்டோ,சந்தோஷமான பாட்டோ அதிஃப் மூக்கால் அழுகிறார்.ஆனால் எப்படியோ இந்த படங்களும் பாடல்களும் ஹிட் ஆகிவிடுகின்றன.சொத்தைக் கடலையை சாப்பிட்டால்,வேறு ஒரு நல்ல கடலையைச் சாப்பிடும் வரை வாய் உவ்வே..என்றிருக்கும் அதுபோலதான் திரைப்படங்களும்.நல்ல வேளையாக ரேஸ் படத்திறு பிறகு ஷெளரியா(தீரம்) பார்க்கக்கிடைத்தது.ராகுல் போஸ்,K.K.மேனன்,ஜாவித் ஜாவ்ரி நடித்திருக்கும் இந்தப் படம் ராணுவ வழக்கு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டது. இது "A few Good Men"படத்தின் அப்பட்டமான காப்பி என்று கேள்விப்பட்டேன்.நல்ல வேளையாக அந்த ஆங்கிலப் படம் பார்க்காததால்,ஷெளரியாவை ரசிக்க முடிந்தது.ரீமேக் என்ற சொல்லமுடியாத படிக்கு நம் நாட்டுக்கு நெருக்கமானதொரு பிரச்சனையை கையாள்கிறது படம்.வேறெதற்காக இல்லாவிட்டாலும் K.K.மேனனின் அனாயாசமான நடிப்புக்காகவாவது படத்தப் பார்க்கலாம்.

Sunday, March 09, 2008

நானும் ஓர் கனவோ !!

சில புத்தகங்களைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிடும் இது நம் ஜாதிப் புத்தகம் இல்லை என்று.இருந்தாலும் ஒரு ஆவலில் அள்ளிக்கொண்டு வந்துவிடுவோம்.பிறகென்ன அதன் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவும் முடியாமல்,மூடிவைத்துவிடவும் முடியாமல் 'நாய் பெற்ற தெங்கம்பழம்' நிலைதான்."The Eleven Pictures of Time" புத்தகத்தைப் படிக்கும் போது நானும் இவ்வாறுதான் உணர்கிறேன்.C.K.ராஜு என்பவர் எழுதியிருக்கும் இந்தப்புத்தகம் காலத்தைப்(Time) பற்றிய முழுமையான களஞ்சியம் எனலாம்.
துவக்கம் தொட்டு நிலவி வந்த காலம் பற்றிய நம்பிக்கைகள்,தத்துவங்கள்,தர்க்கங்கள்,மறுபிறப்பு மற்றும் கால எந்திரம் தொடர்பான சாத்தியங்கள்,சாத்தியமின்மை,காலம் பற்றிய இயற்பியல் கோட்பாடுகள்,நிரூபணங்கள் அனைத்தும் முழுமையாக விளக்கப்பட்டுள்ளன.
புத்தகத்தை முடிக்கமுடியும் என்று தோன்றவில்லை.படித்தவரையில் கிடைத்த சில சுவாரசியமான விஷயங்கள் :

1.வண்ணத்துப்பூச்சி(யின்) கனவு


சுவாங் சூ கிமு295ல் சீனாவில் வாழ்ந்த தத்துவ ஞானி.இருத்தலைப் பற்றியும்,நிலையாமை குறித்தும் தொடர்ந்து வினாக்களை எழுப்பியவர்.அவர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிடுகிறார்."ஒரு நாள் கனவில் நான் வண்ணத்துபூச்சியாக மாறியிருந்தேன்.வானில் உயரப் பறந்தேன்.மிகப் பரவசமாக இருந்தது.என்னை முழுமையாக வண்ணத்துப்பூச்சியாக உணர்ந்தேன்.அப்போது திடீரென விழித்துக்கொண்டேன்.நான் சுவாங் சூவாக இருப்பதை உணர்ந்தேன்.இப்போது எனக்குக் குழப்பமாக இருக்கிறது.நான், சுவாங் சூ, கனவில் வண்ணத்துப் பூச்சியாக மாறினேனா? இல்லை வண்ணத்துப்பூச்சியின் கனவில் சுவாங் சூவாக மாறியிருக்கிறேனா.வண்ணத்துப்பூச்சியின் கனவுதான் இந்த சுவாங் சூ என்றால் என்னைச் சுற்றி நிகழும் இவையெல்லாம் கனவா? காட்சிப்பிழையா?"

நிற்க,இப்போது பாரதியின் இந்த வரிகளைக் கவனியுங்கள்

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெலாம்
சொற்பனந்தானோ - பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ !

பல ஆயிரம் ஆண்டு கால இடைவெளியில்,பல ஆயிரம் மைல்கள் தூர இடைவெளியில் வாழ்ந்த இரு ஞானிகள் ஒத்த சிந்தனை கொண்டிருந்தது வியப்பைத் தருகிறது.

2.காஸ்மிக் மீள்நிகழ்வு(Cosmic Recurrence)
எந்த ஒரு நிகழ்வும் காஸ்மிக் சுழற்சியில் பல பில்லியன் ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழும்.அதாவது இப்போது கட்டம் போட்ட சட்டை போட்டுக்கொண்டு இந்த பதிவை படிக்கும் நீங்கள் Mr.X, பல பில்லியன் ஆண்டுகள் கழித்து ,இதே கட்டம் போட்ட சட்டையுடன் இதே வயதில் Mr.Xஆகவே, எனது காஸ்மிக் மீள்நிகழ்வு பற்றிய இந்தப் பதிவைப் படிப்பீர்கள் என்கிறது இந்தக் கொள்கை.அப்பொது உங்கள் நியாபகங்கள் புதுப்பிக்கப் பட்டிருக்கும்.ஆனால் பிற்பாடு இந்தக்கொள்கை நிறுவப்படாமல் போயிற்று.ஜெயமோகனின் 'ஜகன்மித்யை' என்ற சிறுகதை இதே போன்றதொரு தியரியை அடிப்படையாகக் கொண்டதுதான்.

3.GrandFather Paradox
கால இயந்திரத்தில் பின்னோக்கிச் செல்வது இயலாத காரியம் என்பதை நிறுவ இது பயன்பட்டது.
ஜானியின் தாத்தா(தந்தை வழி) பெரும் பணக்காரர்.ஒருநாள் ஜானியுடன் ஏற்பட்ட சண்டையில் கோபம் கொண்டு அவர் தன் சொத்து முழுவதையும் வேறொருவர் பெயரில் எழுதிவிடுகிறார்.இது நடந்து சில நாட்களில் அவர் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார்.இதனால் ஜானி ஒரு கால எந்திரத்தில் ஏறி சில நாட்கள் பின்னோக்கி பயணித்து அதாவது தாத்தா இறப்பதற்கு முன்னால் சென்று அவரிடம் பேசுகிறான்.சொத்தை தன்பெயரில் எழுதச் சொல்கிறான்.ஆனால் அவர் மறுத்துவிடுகிறார்.இதனால் ஆத்திரமடைந்த ஜானி மேலும் பின்னோக்கி சென்று, தன் தாத்தாவை அவரது இளம் வயதிலேயெ கொன்றுவிட முடிவு செய்கிறான்.அதாவது அவர் ஜானியின் பாட்டியை(அவர் தன் மனைவியை) சந்திக்கும் முன்பே அவரை கொன்றுவிடுகிறான்.இதனால் ஜானியின் அப்பாவே பிறக்கப் போவதில்லை,அதன் விளைவாக ஜானியும் இல்லை.
சரி இப்போது சொல்லுங்கள், ஜானியின் தாத்தாவைக் கொன்றது யார்?
இப்பவே கண்ணக்கட்டுதே!!

Saturday, March 01, 2008

அரிய புகைப்படம் #1


படத்தைப் பெரிதாக்க படத்தின் மீது click செய்யவும்

Thursday, February 28, 2008

தமிழ் எழுத்துலக சக்ரவர்த்தி மறைவு - அஞ்சலி



காலையில் கூகிள் ரீடரைத் திறந்தபோது எனக்குப் பிடித்த பதிவர்கள் அனைவரும் பதிவிட்டிருப்பது கண்டு ஆச்சரியப்பட்டேன்.ஆனால் முதல் பதிவைத்திறந்தவுடனேயே மற்றவர்கள் அனைவரும் என்ன எழுதியிருப்பார்கள் என்று ஊகிக்க முடிந்கது.சில வாரங்களுக்கு முன் தேசிகனின் வலையில் சுஜாதாவின் உடல்நலக்குறைவு பற்றி படித்தபோதே என்னவோ போல் இருந்தது.இன்னும் ஒரு நூற்றாண்டிரும் என்று சொல்லிக்கொண்டேன்.நண்பனிடம் இதைப்பற்றிப் பேசும்போது கூட "டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவுடன இதை பத்தி ஒரு கட்டுரை எழுதுவாரு பாரு" என்று சொன்னேன்.மார்க் ட்வைன் சொன்னது போல "DEATH,THE ONLY IMMORTAL.." அது யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை.இன்று அது தமிழின் மாபெரும் எழுத்தாளனையும் தன்னோடு அள்ளிக்கொண்டத

சிறுவயதில் சுஜாதாவை கணேஷ்,வசந்தாகத் தான் வாசிக்கத்துவங்கினேன்.ஆனால் விரைவிலேயே கதைகளைக் காட்டிலும் அவரது கட்டுரைகள் என்னைக் கவரத்துவங்கின.அப்போது குமுதத்தில் வந்துகொண்டிருந்த "21ஆம் நூற்றாண்டின் விளிம்பில்" என்ற கட்டுரைத்தொடரை அண்ணன் பைண்ட் செய்து வைத்திருப்பான்.அதில் எனக்கு பாதிக்குமேல் அர்த்தம் புரியாது ஆனால் வாசிக்க வசீகரமாக இருக்கும்.கதைகளில் துப்பறியும் கதைகளைவிட "மத்யமர் கதைகள்",நகரம்" போன்ற யதார்த்தமான கதைகள் என்னையும் அதிகமாகக் கவர்ந்தன.சுஜாதாவின் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியரையும்,நூலையும் தேடிப்பிடித்து வாசிக்கத்துவங்கினேன்.இன்று எனக்கு விரல்விட்டு எண்ணுமளவுக்காவது ஆசிரியர்களையும் ,புத்தகங்களையும் தெரிந்திருக்கிறதென்றால் அவை சுஜாவின் கட்டுரைகளினால்தான் சாத்தியப்பட்டது.


விகடன்,குமுதம் போன்ற ஜனரஞ்ஜக இதழ்களுக்கும்,கணையாளி போன்ற சிற்றிதழ்களுக்கும் இடையில் அவர் கொண்டிருந்த பேலன்ஸ் அபாரமானது.எடுத்தவுடனேயே ஒரு பாமர வாசகனை சு.ராவையும் புதுமைப்பித்தனையும் படிக்க வேண்டும் என்று எதிபார்க்கமுடியாது.தனக்கு எழுதக்கிடைத்த பத்தியில் மெதுமெதுவாக நல்ல ஆசிரியர்கள்,நல்ல கவிதைகள் என அறிமுகப்படுத்தி,ஒரு பெரும் வாசகக் கூட்டத்தை சிற்றிதழ் நோக்கி நகர்த்திய பெருமை சுஜாதாவையே சேரும்.ஜி.நாகராஜனையும்,சாமர்செட் மாமையும்,சு.ரா வையும்,மகுடேஸ்வரனையும்,எரிகா ஜஙையும் என் போன்ற பாமரர்களுக்கு அறிமுகப்படுத்தியது அவரது மிகப்பெரிய சாதனை.


அறிவியல் கட்டுரைகளை அவரைவிட தமிழில் சிறப்பாக எழுதியவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று தெரியவிலை.அதேசமயம் அவை அவற்றின் நம்பகத்தன்மைக்காக(1 % முழுக்க தவறு பாக்கி 99% தான் உண்மை என்கிற ரேஞ்சில்)அதிகம் விமர்சிக்கவும் பட்டன.அவ்வாறு அவரை விமர்சித்தவர்களும் சுஜாதா என்ற அதே நுழைவாயில் வழியாகவே அத்துறையில் நெடுந்தொலைவு சென்றவர்களாக இருப்பார்கள்.


இன்று அவரது கட்டுரைகளை எடுத்துப் படித்தபோது ஏனோ அழுகையாக வந்தது.இன்று இவ்வளவு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, சுஜாதவைப் படித்த எல்லாருக்கும் அவரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது என்று தெரிகிறது.மேலும் எழுதியவர்கள் அனைவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.சுஜாதாவை ஒருமுறையாவது நேரில் சந்திக்கவேண்டும் என்ற என் எண்ணம் நிறைவேறாமலே போய்விட்டது.அதனால் என்ன..அவரே ஒரு பத்தியில் சொன்னது போல,


"ஆத்மாநாமை சந்திக்கக் கிடைத்த ஒரே சந்தர்பத்தை தவற விட்டு விட்டோமே என்று வருத்தமில்லை.அதேபோல் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று சுருக்கமாகச் சொன்ன கணியன் பூங்குன்றனார் குடுமி வைத்திருந்தாலோ,கடுக்கண் போட்டிருந்தாலோ எனக்குக் கவலையில்லை.ஆத்மாநாமோ,பூங்குன்றனாரோ...அவர்கள் கவிதைகளுடன் நான் பேச முடிகிறது.Our words knew each other.That was enough(Erica Jong)"

ஆம்.. our words knew each other.thats enough .

Monday, January 21, 2008

புனே திரைப்பட விழா - ஒரு பார்வை

ஜனவரி மாதத்து மென்குளிரில் ஆரவாரமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது ஆறாவது சர்வதேச திரைப்படவிழா.43 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 150க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட்டன.சுமார் ஒருவார காலம் நடைபெற்ற இவ்விழாவை அமைச்சர் சுரேஷ் கல்மாதி துவக்கிவைத்தார்.ஷர்மிளா டாகூருக்கும் ஷம்மி கபூருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.ஷமிளா டாகூர் 'ரே' படங்களில் நடித்து சாபல்யம் பெற்றவர்.ஷம்மி கபூர் என்ன சாதித்தார் என்றுதான் விளங்கவில்லை(பான் பராக்!!).

எல்லாமே நல்ல படங்கள் தானே என்று நினைத்து எதாவது ஒரு படத்தில் போய் உட்கார்ந்து கொள்வது தவறு.இது நான் முதல் நாளே பட்டு தெரிந்து கொண்டது.அதன் பின்னர் கூக்ளி,சினாப்சிஸ் படித்துத்தான் படங்களைத் தேர்ந்தெடுத்தேன். இவ்விழாவில் நான் பார்த்த படங்களில் குறிப்பிடத்தக்கவை

-In the name of gods(குதா கேலியே)
இந்திய விழாவில் திரையிடப்பட்டிருக்கும் முதல் பாகிஸ்தானிய படமிது.பழைமைவாதிகளால் மதத்தின் பெயரால் பாகிஸ்தானிய இளைஞர்கள் எவ்வாறு சீரழிக்கப் படுகிறார்கள் என்பதையும், 9/11 க்குப் பிறகு உலக அரங்கில் பாகிஸ்தானியர்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் பேசும் படம்.தைரியமான முயற்சி.பாகிஸ்தான் அரசின் தடைகளிலிருந்து தப்பி இப்படம் உலக அரங்குக்கு வந்ததே பெரிய ஆச்சரியம்.இசை இஸ்லாமில் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்று ஒரு பிரிவினர் நம்புகிறார்கள்,பாகிஸ்தானில் பெரும்பான்மையினருக்கு அராபிக் படிக்கத்தெரியும் ஆனால் சிலருக்குதான் அர்த்தம் புரிந்து கொள்ளத்தெரியும் போன்றவை எனக்கு புதிய செய்திகள்.வெடிகுண்டு மிரட்டல்களைத்தாண்டி அங்கு இப்படம் வசூலில் சாதனை புரிந்து வருவது அம்மக்களின் மனநிலையையே பிரதிபலிக்கின்றது.


-Cherries (china)
I am Sam படம் பார்த்ததிலிருந்து அதில் ஷான் பென்னின் கதாபாத்திரத்தை அவரைக்காட்டிலும் வேறுயாராலும் சிறப்பாக செய்யமுடியாது என்று திடமாக எண்ணிக்கொன்டிருந்தேன்.ஆனால் இந்த சீன படத்தைப் பார்த்தபோது அந்த எண்ணம் மாறிப்போனது.கிட்டத்தட்ட "I am sam" போன்றதொரு கதையில் மனநலம் குன்றிய கதாபாத்திரத்தில் மையோ பு என்ற நடிகை மிக அருமையாக நடித்திருந்தார்.இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்காதது வருத்தமே.


-Black Book (Netherland)
இரண்டாம் உலகப் போரின் போது நாஸிக்களின் பிடியிலிருந்து தப்பிக்கும் ஒரு யூத பாடகியின் கதை.விறுவிறுப்பான நாவல் படிப்பது போல இருந்தது.அக்மார்க் ஹாலிவுட் மசாலா.எக்கச்சக்க படங்களில் பார்த்ததாலோ என்னவோ யூதர்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பொது வருத்தமே ஏற்படவில்லை.மாறாக போர்முடிந்தவுடன் யூதர்கள் நாஸிக்களைக் கொல்வது மனிதனின் அடிப்படை குணத்தைக் காட்டுகிறது.

கவனம் கவர்ந்த மற்ற படங்கள்
Seventh Heaven(egypt),Tricks(Poland),Bliss(Turkey)

தமிழ் படங்களில் அம்முவாகிய நான்,பருத்திவீரன்,பெரியார் ஆகியவையும் மலையாளப் படங்களில் ஒரே கடல்,நாலு பெண்கள் மற்றும் ராத்திரி மழா ஆகியவையும் திரையிடப்பட்டன.மெயின் ஸ்ட்ரீம் படங்கள் என்று சொல்லி ஓம் ஷாந்தி ஓம்,ஹே பேபி,பாட்னர் போன்ற படங்களைத் திரையிட்டது அபத்தம்.

பெட்ரோ அல்மொடோவரின் சில படங்கள் திரையிடப்பட்டன.ஆஸ்கர் இயக்குனர் ஆயிற்றே விஷயமிருக்கும் என்று நினைத்துப் பார்க்கபோனால்,ஐந்து நிமிடங்களில் "அவனா நீயி" என்று தலைதெறிக்க ஓடிவரவேண்டியதாயிற்று.

இங்க்மர் பெர்க்மென்னின் cries and whispers என்ற படம் திரையிடப்பட்டது.இவரைப் பற்றி வலை பதிவுகளிலும் புத்தகங்களிலும் ஏற்கனவே படித்திருந்ததால் படத்தைப் பார்க்கப்போயிருந்தேன்.அரங்கு நிறைந்த காட்சி.படம் முடிந்ததும் எல்லாரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் கைத்தட்டினார்கள்.நானும் தட்டினேன்'என்னைப் போல எத்தனை ப்ரகஸ்பதிகள் புரியாமலே கைத்தட்டுகிறார்களோ என்று எண்ணிக்கொண்டே'.