Thursday, August 07, 2008

நூல் அறிமுகம் : 18வது அட்சக்கோடு


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வடநாட்டில் நிகழ்ந்த கலவரங்களைக் குறிப்பாக இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட வலிகளையும், துயரங்களையும் பலர் வரலாற்றில் பதிவு செய்துள்ளனர். அதேசமயம் தென்னிந்தியாவிலும் பல இடங்களில் கலவரங்கள் மூண்டன. பலர் கொல்லப்பட்டனர், பலர் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர், பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். இந்தியாவுடன் இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம்களின் சமஸ்தானத்தில் இத்தகைய கலவரங்கள் அதிகம் நடந்தேறின. 1946 லிருந்து 1948 வரை ஐதராபாத்தில் நிலவிய அரசியல் சூழலையும், கலவரங்களையும் ஒரு தமிழ் இளைஞனின் பார்வையினூடாக பதிவு செய்யும் நூல் 18வது அட்சக்கோடு. மத நல்லிணக்க விருது பேற்ற இந்நூல் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயற்கப்பட்டு, இதன் கன்னட மொழிபெயற்பாளருக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

இதற்கு முன்பு அசோகமித்ரனின் கட்டுரைகளை வாசித்திருந்தாலும், இதுவே நான் படித்த அவருடைய முதல் நாவல்.வெகு நிதானமான எழுத்து. அனாவசியமான பரபரப்பினை எழுத்தின் மீது ஏற்றாமல் அந்தந்த நிகழ்விற்கேற்ப தீவிரம் கொள்ளச் செய்கிறார். இதில் ”செய்தி” படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அபாயம் இருந்தாலும், நாவல் முழுவதும் இழையோடும் மெல்லிய நகச்சுவையும், சுய எள்ளலும் அதிலிருந்து காப்பாற்றுகின்றன. ஒவ்வொரு நிகழ்வினையும் மிக நுணுக்கமாக விவரிக்கிறார். விவரிப்பில் ஒரு கிண்டல். உதாரணமாக அவர்கள் குடியிருந்த லான்ஸ் பாராக்ஸ் வீட்டினை இவ்வாறாக வர்ணிக்கிறார்.

// எப்போது கட்டியிருப்பார்களோ தேரியாது. பத்தடி உயரமுள்ள அரக்க உருவமுள்ளவர்களுக்காக அவற்றைக் கட்டியிருக்க வேண்டும்...ஒரு கதவுக்கும் ஸ்டூல் அல்லது நாற்காலி உதவி இல்லாமல் மேல் தாழ்ப்பாள் போடமுடியாது. வீட்டு நடுவில் கூரை இருபது இருபத்தைந்து அடிக்கு மேலே உயர்ந்து முன்பக்கம் பின்பக்கமாக சரிந்து வரும்.ஒவ்வொரு சுவரும் இரண்டடி பருமனுக்குக் குறையாது. வீட்டில் ஒட்டடையே அடிக்க முடியாது. அரைகுறை வெளிச்சத்தில் கூரையை அண்ணாந்து பார்த்தால் பயமாகக்கூட இருக்கும். வெள்ளைக்கார பட்டாளக்காரர்களுக்காக, அதுவும் ஈட்டி தாங்குபவர்களுக்காக என்று அகராதியில் பார்த்துத் தெரிந்தது. பட்டாளக்காரர்கள் ஒருவேளை எப்போதும் ஈட்டியைத் தாங்கியவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் ஈட்டி ஏகப்பட்ட நீளம் உடையதாக
இருக்கவேண்டும். ஈட்டி கூரையில் இடிக்கக்கூடாது என்றுதான் அவ்வளவு உயரமாகக் கட்டினார்களோ என்னவோ.//

இந்நாவலின் இந்தி மொழிபெயர்ப்பு வெளிவரும் முன்னர், மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டார் என அறிந்தபோது ஆச்சரியமாக இருந்த்தது. நாலாவது
அத்தியாயத்தில் அதற்குக் காரணம் தெரிந்தது “ஊரிலே எந்த ராஜாக்கார் தேவடியா மகன் சைக்கிளுக்கு லைட் ஏத்திண்டு போகிறான்? போலீஸ்காரன்
அவங்களைப் பிடிக்கறானா?”.

நாவல் கலவரத்தைப் பற்றியது தான் என்றாலும் கடைசி 4 அத்தியாயங்கள் தான் அதனைப்பற்றித் தீவிரமாகப் பேசுகின்றன. மற்றவற்றில் தெலுங்குதேசம் சென்று குடியேறிய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் சந்த்திரசேகரனின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகிறது. சந்திரசேகரனின் கிருஷ்ணசாமி சகோதர்களுடனான விரோதம், தற்கொலை செய்துகொண்டபின்
தன்னை பத்திரப்படுத்திக்கொள்ள இடம் தேடி அலைவது, சட்டைகாரர்களுடனான நட்பு, குடும்பத்துடன் படம் பார்க்கசெல்லும் வைபோகம், ஆழ்வார் தன் தமக்கைகளுக்கு பாட்டு சொல்லித்தருவது என ஒவ்வொன்றையும் சுவாரஸியமாக விவரிக்கிறார். குறிப்பாக சந்திரசேகரனை பிரின்ஸ்பால் மேடையில் பாட அழைக்கும் போது நிகழும் சம்பவங்களை படு நகைச்சுவையாக எழுதியுள்ளார். நாவலைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் இந்தப்பகுதியை முதலில் படித்தால் இது ஏதோ ஹாஸிய நாவல் என்றுதான் எண்ணவேண்டியிருக்கும். இந்த சம்பவஙள் அடங்கிய ஐந்து பக்கங்களை ஒரு நகச்சுவை சிறுகதையாகத் தர முடியும்.

//அன்று நான் அணிந்திருந்த ஷர்ட் மிகவும் சிறியது. இடுப்புவரைதான் இருந்தது. அதன் பக்கவாட்டிலுள்ள இரு பிளவுகள் வழியாக என் இடுப்பும் அதில் ஒரு தொளதொள நிக்கரை நான் சுற்றிசுற்றி இறுக வைத்திருப்பதையும் எல்லாரும் பார்க்கலாம். பார்த்தார்களோ தெரியாது. நான் என் ஷர்ட்டை இழுத்துப் பிடித்த வண்ணம் மேடை நோக்கி ஊர்ந்தேன். நிக்கர் ரொம்பப் பெரியது. அதன் கால்கள் இரண்டும் கோபியர்கள் பாவாடை மாதிரி படபடவென்று அடித்துக்கொண்டன. அந்த பிரமாண்ட நிக்கர் கால்கள் வழியாகக் குளிர்ந்த காற்று வீசியடித்து என் அடிவயற்றுப் பாகத்தை அப்படியே மரத்துப் போக வைத்த மாதிரி இருந்த்தது//

இறுதியில் லம்பாடிகள் நிஜாமியர்களால் கொல்லப்படுவது, காந்தியின் மறைவு, போர் தீவிரமடைந்து எங்கும் வெளியில் செல்லமுடியாமல்
தனிமைப்படுத்தப்படுவது பொன்றவையும் சொல்லப்படுகின்றன.இவை நிகழ்ந்து சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு அசோகமித்ரன் இந்நாவலை
எழுதியிருக்கின்றார். கண்முன் காட்சிகளை விரியச்செய்யும் நுண்ணிய விவரிப்பும், நிகழ்வுகளை நேர்மையுடன் பதிவு செய்திருக்கும் விதமும் இந்நாவலை தமிழின் தலை சிறந்த நாவல்களின் பட்டியலில் இடம்பெறச் செய்கின்றன.

16 comments:

Syam said...

எங்க இருந்து தான் தேடி புடிக்கரீங்களோ இந்த மாதிரி நல்ல நூல்கள் உங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரியுது... :-)

பரத் said...

siyam,

பாரபட்சமின்றி எல்லா எழுத்தாளர்களின் “Favourite List” லும் சில புத்தகங்கள் இருக்கும். 18வது அட்சக்கோடு அதில் ஒன்று

நந்தா said...

நல்ல விமர்சனம். ரொம்ப சின்ன வயதில் இதைப் படித்திருக்கிறேன். என்ன காரணத்தினாலோ இது "அப்பாவின் சினேகிதர்" புத்தகம் என்று என்னை நானே குழப்பிக் கொண்டிருந்தேன். :)

மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.

உங்களது தேசியகீதச் சிந்தனைகள் படித்த போதே சிலாகித்து பின்னூட்டம் போட விரும்பினேன். மறந்து விட்டேன். உங்களுடைய கடைசி மூன்று கட்டுரைகளும் அருமை.

http://blog.nandhaonline.com

பரத் said...

//"அப்பாவின் சினேகிதர்" புத்தகம் என்று என்னை நானே குழப்பிக் கொண்டிருந்தேன். :)
//
:))

உங்களின் பாராட்டுக்கள் உற்சாகமூட்டுபவையாக இருக்கின்றன.
நன்றிகள்!!

பினாத்தல் சுரேஷ் said...

I rate this book as one of the VERY BEST novels of all time.. And the list doesnt just contain Tamil.

பரத் said...

பினாத்தல் சுரேஷ்,
உண்மைதான்!!
கருத்துக்களுக்கு நன்றி சுரேஷ்.

manjoorraja said...

ஏற்கனவே இந்த புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படிக்கும் வாய்ப்புதான் இதுவரை கிடைக்கவில்லை. எப்படியும் வாங்கி படித்து விடுகிறேன்.

நன்றி.

பரத் said...

படித்துப் பாருங்கள் மஞ்சூர் ராஜா, அருமையான புத்தகம்!

அருள் குமார் said...

எனக்கும் மிகப்பிடித்த நாவல் இது.

கிழக்கு பதிப்பகத்தின் பிரதியில் கண்ட எழுத்து மற்றும் சொற்பிழைகளை நிச்சயம் குறிப்பிட வேண்டும். இவ்வளவு நல்ல நாவலை இவ்வளவு மோசமாகவா வெளியிடுவது?!

rahini said...

நல்ல ஆக்கமுள்ள புத்தகத்தை இன்று உங்கள் எழுத்து ஆற்றலில் வாசித்து அறிந்தேன்

பெத்தராயுடு said...

நான் பத்தாவது தேர்வு விடுமுறையில் எங்களூர் நூலகத்தில் எடுத்து படித்தேன். விடுதலை காலகட்டத்தை ஒட்டிய ஹைதராபாத்தை நம் கண் முன் நிறுத்தும் நடை. பதினெட்டாவது அட்சக்கோடு தமிழின் சிறந்த புதினங்களில் ஒன்று. நினைவுப்படுத்தியதற்கு நன்றி.

பரத் said...

Rahini,
நன்றிகள் ராகினி !!

பெத்தராயுடு,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

பரத் said...

வாங்க அருள்,
//கிழக்கு பதிப்பகத்தின் பிரதியில் கண்ட எழுத்து மற்றும் சொற்பிழைகளை நிச்சயம் குறிப்பிட வேண்டும்.//
அப்படியா சொறீங்க?
இன்னொருமுறை படித்துவிட்டு சொல்கிறேன்

King... said...

பரத் அடிக்கடி எழுதலாமே உங்கள் பதிவுகளை வாசித்ததிலிருந்து (கடந்த சில நாட்களாகத்தான்) சொல்கிறேன் நல்ல சொல் வளம் இருக்கு உங்க கிட்ட...

King... said...

பகிர்வுக்கு நன்றி...

பரத் said...

King,
கருத்துக்களுக்கு நன்றி King,
கட்டாயம் முயற்சி செய்கிறேன்