Wednesday, August 06, 2008

இரண்டு திரைப்படங்கள்

கடந்தவாரம் அருமையான இரண்டு மராத்திப் படங்களைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போதுதான் நாம் பிற(இந்திய)மொழிப்படங்களை எந்த அளவிற்கு தவறவிடுகின்றோம் என்பதை உணர முடிந்தது. இரானியப் படங்களையும், ஜெர்மன் படங்களையும் சிலாகிக்கத் தெரிந்த நாம் பெங்காலிப் படங்களையும், மராத்திப் படங்களையும் கொண்டாடுவதில்லை. அகிரா க்ரொசொவாவையும், ராபர்ட் பென்கினியையும் அடையாளம் காண்டு கொள்ளத் தெரிந்த நமக்கு அடூர் கோபாலகிருஷ்ணனையும், ஷாந்தாரமையும் யாரென்றே தெரியவில்லை.உலகத் தரத்திற்கு இணையாக நம் நாட்டிலும் படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதற்கு இந்த இரு படங்களுமே சாட்சி.

Shwaas(ஸ்வாசம்)


2004 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த திரைப்படத்திற்கான தேசியவிருதினைப் பெற்ற இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தினை அடிப்படைகயாகக் கொண்டது. கிராமத்திலிருந்து தனது ஏழுவயது பேரன் பரசுராமை அழைத்துக் கொண்டு நகரத்திலிருக்கும் மருத்துவமனைக்கு வருகிறார் முதியவர் ஒருவர். தூரப்பார்வையில் சிரமப்படும் அந்த சிறுவனுக்கு பரிசோதனைகள் எடுக்கப் படுகின்றன.பின் அவனுக்கு மிக அரிய வகை "ரெட்டினொப்ளாஸ்டோமா" என்ற ரெட்டினல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அவன் உயிர்வாழ இரண்டு கண்களையும் அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவதுதான் ஒரேவழி என்று மருத்துவர் கூறிவிடுகிறார். இந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாமல் தவிக்கும் முதியவருக்கு மேலும் சங்கடங்கள் காத்திருக்கின்றன. அதாவது ஒருவரது உடலிலிருந்து அவயங்கள்
நீக்ககுவதற்கு முன் அவருக்கு அதுபற்றி தெரியப்படுத்த படவேண்டும் என்பது சட்டம். இந்தக் கொடிய செய்தியை அந்த சிறுவனுக்கு சொல்லமுடியாமல்
தவிக்கிறார்கள். ஒரு சமூகசேவகி,மருத்துவர் இவர்களின் உதவியால் ஒருவாறு அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடுசெய்யப்படுகிறது.அறுவைசிகிச்சைக்கு முதல்நாள் அந்த சிறுவனும்,அந்த முதியவரும் மருத்துவமனையிலிருந்து காணாமல் போகிறார்கள்.அடுத்த நாளிலிருந்து இருளுக்குள் செல்லப்போகும் தன் பேரனுக்கு அன்றைய நாள்முழுவதும் வண்ணங்களைக் காட்டுகிறார்.இறுதியாக விழியிழந்த்தோர் விடுதிக்கு அழைத்துச் சென்று நிதர்சனத்தை அறியப்படுத்துகிறார். அடுத்தநாள் அறுவைசிகிச்சை நடக்கிறது. இறுதிக்காட்சியில் சிறுவனும்,முதியவரும் படகில் தங்கள் ஊருக்கு போகிறார்கள். படகு மெதுவாக கரையை நோக்கி வருகிறது.அந்த சிறுவன் கறுப்புக்கண்ணாடி அணிந்து அமர்ந்திருக்கிறான்.படகு கரையை
அடைந்துவிட்டதை உணர்ந்துகொண்ட சிறுவன் உற்சாகத்தில் குதூகலிக்கிறான். அத்துடன் படம் முடிவடைகிறது.

கொஞ்சம் தப்பினாலும் அழுகாச்சி நாடகமாகிவிடும் அபாயம் இருக்கும் கதை. அழகான திரைக்கதையாலும், இயல்பான காட்சி அமைப்புகளாலும் தேர்ந்த
நடிப்பினாலும் குறிப்பிடத்தக்க படமாகிறது. தனக்கு ஏற்படப்போகும் பயங்கரத்தை உள்வாங்கிக் கொள்ளமுடியாமலும், பார்வை மங்குவதன் கஷ்டங்களை தாங்கிக்கொள்ள முடியாமலும் உணர்ச்சிகளை அச்சிறுவன் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளான்.மருத்துவரும்,முதியவரும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள். பார்வை பறிபோகும் விஷயத்தை அந்த சிறுவனுக்கு புரியவைக்கும் காட்சி, முதியவர் சிறுவனுக்கு ஊர்சுற்றிக்காட்டும் காட்சி போன்றவை சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன.குறிப்பாக கருப்புக்கண்ணாடியுடன் சிறுவன் படகில் அமர்ந்திருக்கும் இறுதிக்காட்சி கண்களைப் பனிக்கசெய்கிறது.அந்த வருடத்தின் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியாவிலிருந்து இப்படம் அனுப்பிவைக்கப்பட்டது. இயக்குனர் சந்தீப் சாவந்திற்கு இது முதல் படம் என்பதை நம்பமுடியவில்லை.

Tingya(டிங்யா)


விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில் அதனை ஒட்டி வெளிவந்திருக்கும் திரைப்படம். இதுவும் ஒரு குழந்தை கதாபாத்திரத்தை (டிங்யா) மய்யமாகக் கொண்ட கதைதான். டிங்யா என்ற சிறுவன் அவர்கள் வீட்டு மாட்டுடன் மிகுந்த்த பாசத்துடன் இருக்கிறான். மாடு திடீரென நோய்வாய்படுகிறது. உழவுமாடு நோய்வாய்ப்பட்டதால் டிங்கியாவின் தந்தைக்கு விவசாயம் பாதிக்கப் படுகிறது.மிகுந்த யோசனைக்குப் பின் மாட்டினை விற்க(இறைச்சி) முடிவு செய்கிறார். அதனைத் தடுக்க டிங்க்யா எடுக்கும் ப்ரயத்தனங்களும், அதன் விளைவுகளும் தான் கதை. ஒரு படம் ஒன்பது மாநில விருதுகளைப் பெறுவதென்பது இதுவே முதல் முறை.

படம் துவங்கிய 10 நிமிடங்களில் அந்த கிராமத்துடன் ஒன்றிப் போகிறோம். படம் எந்த பிரச்சனையையும் நேரிடையாகச் அணுகாமல் மறைமுகமாக சொல்லியிருபது இப்படத்தின் சிறப்பு.தற்கொலை செய்துகொண்ட விவசாயின் மனைவி கதறும் அந்த இரண்டுவினாடிக்காட்சி ஏற்படுத்தும் பதைபதைப்பு இதற்கு ஒரு உதாரணம். கள்ளம் கபடமற்ற அந்த சிறுவனின் அப்பாவித்தனமான கேள்விகளும் அதன் பின்னணியில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள பெரிய சங்கதிகளும்தான் படத்தின் கரு. உதாரணமாக டிங்யா வாசற்படியில் அமர்ந்திருக்க, அவனது தாய் 'வாசற்படியில் உட்காராதே லட்சுமி வீடுக்குள் வரும் நேரம்' என்கிறார். உண்மையிலேயே
லட்சுமி வருகிறாளா என்று ஆச்சரியமாகக் கேட்கிறான் டிங்யா. வறுமையில் வாடும் அந்த விவசாயின் மனைவி பதில் சொல்ல முடியாமல் மலைக்கிறாள். கிராம மக்கள் கால் நடைகளுடன் கொண்டிருக்கும் அன்பு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. மொழி புரியாவிட்டாலும் பின்னணியில் வரும் அந்த நாடோடிப் பாடல் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது. காமிரா மலையின் இளம் வெயிலையும், இரவையும், குளிரையும் கூட படம் பிடிக்கிறது. இப்படி ஒரு மிகையில்லாத அசலான கிராமத்துப்படம் பார்த்து எத்தனை காலமாகிறது.

*********
இந்த இரண்டு படங்களையும் பார்த்தபோது போது தொன்றியவை
பாலுமகேந்திரா, மகேந்த்திரனுக்குப் பிறகு இயல்பான படங்கள் எடுப்பதற்கு தமிழில் இன்னும் ஆள்வரவில்லை.

அதிகப் பிரசங்கித்தனமாக பேசுவதுதான் நல்ல நடிப்பு என குழந்தை நட்சத்திரங்களுக்கு சொல்லிக்கொடுத்து வைத்திருக்கும் நம்ம ஊர் இயக்குநர்கள்(மணிரத்னம் முதற்கொண்டு) அனைவரும் பார்க்கவேண்டிய படங்கள் இவை.

14 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்த இரண்டுப் படங்களும் இணையத்தில் கிடைக்கின்றனவா? மலையாள, வங்காள, மராட்டியப் பட torrentகள் எங்கு கிடைக்கும்? நீங்கள் சொல்வது உண்மை தான். உலகப் படம் பார்க்கும் அளவுக்கு இன்னும் இந்தியப்படங்கள் பார்க்கத் தொடங்கவில்லை.

Natty said...

thala... engae patheenga.. netflix or online..? online endral link share pannalamae! :)

Sridhar Narayanan said...

அருமையான பதிவு. பகிர்தலுக்கு நன்றி பரத்.

யாத்ரீகன் said...

Thanks a lot for introducing these movies :-) .... thanks to thamizmanam for star posts... nice way to stumble into interesting blogs.. as yours :-)

Shwaas - http://www.youtube.com/watch?v=cGZTwl10njo

Tingya -
http://www.youtube.com/watch?v=7gLlQ_A_hmE

பரத் said...

ரவிசங்கர்,
யாத்ரீகன் இரண்டு இணைப்புகளை தந்துள்ளார்.ஆனால் படம் அவற்றில் முழுமையாக இல்லை என்று நினைக்கிறேன்.மராட்டியப் பட torrentகள் பற்றி நண்பர்களிடம் விசாரித்து இணைப்புகள் தருகிறேன்.
வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி!

பரத் said...

Natty,
நான் மஹாராஷ்டிராவில் இருப்பதால் மராட்டிய பட DVDகள் எளிதாகக் கிடைக்கின்றன.ஸ்வாசம் படத்தை தமிழ் subtitleலுடன் பார்த்தது இனிய அனுபவம் :)

பரத் said...

ஸ்ரீதர் நாராயணன்,
நன்றிகள் :)

பரத் said...

யாத்ரீகன்,
கருத்துக்களுக்கும் இணைப்புகளுக்கும் மிக்க நன்றி யாத்ரீகன்!!

Jayaprakash Sampath said...

அருமையான பதிவு.

உண்மைதான். உலகப்படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பவர்கள், வங்காள, மராத்திய, ஒரிய, கன்னட க்ளாசிக் படங்களைக் கண்டு கொள்வதில்லை.

Syam said...

பரத், தமிழ்மண நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துகள் ...இப்போ தான் கவனிச்சேன் :-)

பரத் said...

Prakash,

வாங்க ப்ரகாஷ்...நன்றிகள் !!

Syam,

நன்றி :-)

manjoorraja said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

அருமையான இரண்டு மராத்திய படங்களை பற்றி சிறப்பாக எழுதியுள்ளீர்கள். பார்க்க ஆவலை தூண்டுகிறது. இணையத்தில் கிடைக்கிறதா என தெரியவில்லை.

மராத்திய மொழியில் நாடகங்களும் மிக சிறப்பாக இன்றளவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பரத் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மஞ்சூர் ராசா!
//மராத்திய மொழியில் நாடகங்களும் மிக சிறப்பாக இன்றளவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது//
ஆம் உண்மைதான்.

யாத்ரீகன் said...

just now watched Shwaas.. bharath, that was an awesome movie..... arumaiyaana background score, visuals, romba iyalbaana nadipu.. subtitle-udan koodiya online version kidaikala :-( (wanted to hear some dialogues on the important scenes) .. yet i was able to relish the movie..

thanks for letting us know this movie.. naalaiku adutha padam paarkanum.. :-)

pls keep sharing such gems