Thursday, August 07, 2008

ஃப்ராய்டும், ஃபிரான்சிஸ் சேவியரும் பின்னே ஞானும்

”நனவிலியால் ஏற்றுக்கொள்ளத் தகாதவற்றை அகற்றுவதற்கான வழிவகைதான் அடக்குதல் என்ற காரணத்தால், நனவிலியச்சார்ந்த ஒவ்வொன்றும் ஒரு எதிமறைக் குறிப்பைக் கொண்டுள்ளது என்ற அனுமானத்தின்மீது ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடு எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. நனவிலி பற்றி 1915 இல் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் ஃப்ராய்ட் அடக்கப்பட்டது என்பது நனவிலியான அனைத்தையும் உள்ளடக்குவதில்லை என்று உறுதிபடக் கூறுகிறார்.ஆனால் இது பற்றிய சிறு அறிகுறியும் அவருடைய மூலமுதல் கனவுக்கோட்பாட்டில் இல்லை. நனவிலியாக இருப்பது, சிறப்பியல்பாகவோ முக்கியமாகவோகூட, அடக்குதலின் பின்விளைவு அல்ல என்று நினைக்கப் பல காரணங்கள் உள்ளன; சில கனவுகள் வெளிப்படையாகவே ஆக்கப்பூர்வமானவை அல்லது பிரச்சனைகளுக்குறிய தீர்வுகளைத் தருபவை என்ற உண்மையும் இதில் அடங்கும்”

புரியவில்லை என்பதற்காக இரண்டாம் முறை படித்தபோது லேசாகத் தலை சுற்றியது. “ஃப்ராய்ட் ஒரு சுருக்கமான அறிமுகம்” என்ற மொழிபெயர்ப்பு நூலிலிருந்து எடுக்கப்பட்டது தான் மேலே நீங்கள் காணும் இந்த பத்தி. ரொம்பவே சுருக்கமாகப் போய்விட்டதால் தானோ என்னவோ ஒன்றுமே புரியவில்லை. இந்த நூலுக்கு நான் டார்கெட் வாசகன் அல்ல என்பதை ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும் யாருக்குமே இத்தகைய வரிக்குவரி மொழிபெயர்ப்பினால் குழப்பமே மிஞ்சும். பேசாமல் வலையுலகில் எதாவது போட்டி நடத்தி, இந்த புத்தகத்தைப் பரிசாக அனுப்பிவிடலாமா என்று கூடத் தோன்றியது. நினைக்க நினைக்க ஃபிரான்சிஸ் சேவியர் மீது கோபமாக வந்தது. ஆம், அவர்தான் இந்த புத்தகத்தை நான் வாங்கக் காரணம்.

பத்தாவது வரை அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நான் 11ஆம் வகுப்பிற்குக் கண்டிப்புக்குப் பெயர்போன ஒரு கிறித்துவப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அரசுப்பள்ளியின் சகல சௌகரியங்களையும் அனுபவித்துவந்த எனக்கு இப்பள்ளி திஹார் சிறை போல இருந்தது.அப்போது தான் ஃபிரான்சிஸ் சேவியர்(சுருக்கமாக FS) என்ற தமிழ் ஆசிரியர் எங்கள் பள்ளிக்குவந்து சேர்ந்தார். நல்ல கருப்பாக உயரமாக ஒருவித ஹிட்லர் மீசையுடன் இருப்பார். அடிப்படையில் பாதிரியாரான அவரை நாங்கள் ஒரு நாள் கூட பாதிரியாருக்கு உரிய அங்கியில் பார்த்தது கிடையாது.“இதைத்தான் ஃப்ராய்டு எப்படிச் சொல்றான்னா” என்று தான் ஆரம்பிப்பார். எதைத்தான் என்பதை பின்னால் தான் சொல்வார். “நாலு வயசுக் கொழந்தைக்கு பால் உணர்வு இருக்குங்கறான். ஆண்குழந்தை தாயை நோக்கி ஈர்க்கப்படுவதற்கும், பெண்குழந்தை தந்தையை நோக்கி ஈர்க்கப்படுவதற்கும் எதிர் எதிர் பாலின கவர்ச்சிதான் காரணம்ஙறான்”என்று அடுக்கிக்கொண்டே போவார். நாங்கள் 'பே' என்று பார்த்துக்கொண்டிருப்போம். “அதிர்ச்சியா இருக்குல்ல? நைண்டீன் ஹண்ட்ரட்ல அவன் இத சொன்னப்போ அவன பைத்தாரன்னு சொல்லி கல்லால அடிசாங்க.அவன் புத்தகத்த தீயில போட்டு எரிச்சாங்க. ஆனா இப்போ அவன் எழுதுன புத்தகம் இல்லாத யுனிவர்சிட்டியே கெடையாது”. மெல்ல மெல்ல எங்களுக்கு ஃப்ராய்டு சொன்ன கருத்துக்களையும் அவரது புத்தகங்கள் பற்றியும் அறிமுகப் படுத்தினார்.”மனசோட அடி ஆழத்துல இருக்கற நிறைவேறாத ஆசைகள்தான் கனவா வருதுங்கறான்”.எனக்கு ஃப்ராய்டு சிந்தனைகள் மீது காதலே வந்துவிட்டது.

மாணவர்கள் தங்கள் ஆசிரியர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையையோ வாக்கியத்தையோ சொல்லி தங்களுக்குள் கேலி செய்துகொள்வது வழக்கம். அந்நாளில் எங்களுக்குள் “இதைத்தான் ஃப்ராய்டு எப்படிச் சொல்றான்னா” என்பது ரொம்பப் பிரபலமாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் ஃப்ராய்டு தான். அவர் ஃப்ராய்டை மட்டுமே எங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை. ஆஸ்கர் வைல்ட், கார்ல் மார்க்ஸ் என பல அறிஞர்களைப் பற்றிச் சொன்னாலும் ஃப்ராய்டு எங்கள் மனதோடு தங்கிவிட்டது.அவருக்கு வைரமுத்துக் கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். வைரமுத்துவின் கவிதைகளை வரிமாறாமல் சொல்லி அவற்றின் கவிநயத்தைப் புகழுவார். தபூ சங்கரை மீறி கவிதை எழுதக் கூடியவர் இன்னும் பிறக்கவில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த காலமது. வைரமுத்துவின் கவிதைகள் பின்னாளில் சலிப்பேற்படுத்தத் துவங்கினாலும் கவிதைகளை ரசிப்பது பற்றிய அவர் அளித்த பாலபாடம் இன்றும் உதவியாயிருக்கிறது.

அப்போது ஃபயர்(Fire) என்றொரு படம் வெளியாகிப் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்த சமயம். ஒரு நாள் வகுப்புக்கு வந்த FS ”என்னய்யா ஃப்யர்னு ஒரு படம் போட்ருக்காய்ங்க, போய் பாத்தேன். இவங்க கூச்சல் போட்ற அளவுக்கு ஒண்ணுமில்லையே. இதெல்லாம் மேலை நாட்ல சகஜம் தான் “ என்றார்.ஒரு பாதிரியார் இந்தப் படங்களைப் பார்ப்பது குறித்து எங்களுக்கு வியப்பாக இருந்தது. அவ்வப்போது தனது பிரதாபங்களையும் எடுத்துவிடுவார். "மதுரைலஒரு நாடகம் போட்டோம் "கல்லறையிலிருந்து காந்தி" அப்டின்னு. காந்திகல்லறைலெருந்து எழுந்து வந்து அரசியல் வாதிகளோட பேசற மாதிரிஒரு கான்செப்ட்.நாடகம் 50 நாளைக்கு தீயா போச்சு. இன்னிக்கும் பாளையங்கோட்டைல இருந்து அந்த ஸ்க்ரிப்ட கேட்டு ஆட்கள் வருது.என் எல்லாப்படைப்புகளையும் பைன்ட் பண்ணி பத்திரமா வச்சிருக்கென்" என்று பெருமையாகச்சொல்வார்.

எங்கள் பள்ளி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் ஒரு மூலையில்இருக்கிறது. மழை பெய்தால் , இந்தப் பகுதியின் மற்றொரு முனையை மேலேதோக்கிப் பிடித்து சரித்து விட்டதைப் போல மழைநீர் முழுவதும் எங்கள்பள்ளிக்குள் நுழைந்துவிடும்.அந்த ஆண்டு மழை சற்று அதிகமாகவேபெய்தது. நான்கு நாட்கள் விடாது பெய்தமழையில் ஒரு வாரம் விடுமுறைகிடைத்தது.அதன் பிறகு சில நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்த FS சோர்வாகக் காணப்பட்டார்.தான் அறையை பூட்டிவிட்டு வெளியூருக்குபோயிருததாகவும், மழை நீர் அறைக்குள் புகுந்து , 15 வருட உழைப்பான கதைகள், கவிதைகள், கட்டுரைகள் யாவும் அழிந்துவிட்டதாக வருத்தப்பட்டார்.அதன் பிறகு அவரிடம் பழைய உற்சாகம் காணப்படவில்லை. ரொம்பஅலட்டிக் கொள்கிறாரோ என்று தோன்றியது. சில வாரங்களில் பள்ளிமேனேஜ்மெண்டுடன் எதோ பிணக்கு ஏற்பட்டு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.சில நாட்களுக்கு முன் ப்ளாக்கர் கணக்கைநோண்டிக்கொண்டிருந்தபோது பதிவுகள் எண்ணிக்கை பூஜ்ஜியம் எனக்காட்டிய போது மனம் பதைபதைக்துவிட்டது. சிறிது நேரக் கண்ணாம்பூச்சிக்குப் பிறகுஅனைத்தும் திரும்பக் கிடைத்தன.அப்போது தான் உணர்ந்தேன் ' 50 மொக்கைபதிவுகள் தொலைந்ததற்கே மனம் பதை பதைக்கிறதே தனது 15 வருடகால உழைப்பு நீரோடு போனபோது எப்படி உணர்ந்திருப்பார்' என்று. இப்போது எங்கே இருப்பார் அவர் ? என்ன செய்து கொண்டு இருப்பார்? தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பள்ளியில் " இதத்தான் ஃப்ராய்டு...." என்று அதகளப் படுத்திக்கொண்டுதான் இருப்பார்.

16 comments:

Jayakumar said...

ஃப்ரான்சிஸ் சேவியர் - சுவாரசியமான ஆசிரியராக இருப்பார் போலிருக்கிறதே.

உங்கள் பதிவும்தான்...

பரத் said...

நன்றி ஜேகே :-)

யாத்ரீகன் said...

>> உணர்ந்தேன் ' 50 மொக்கைபதிவுகள் தொலைந்ததற்கே மனம் பதை பதைக்கிறதே தனது 15 வருடகால உழைப்பு நீரோடு போனபோது எப்படி உணர்ந்திருப்பார்' என்று<<<

:-(

>>> இதத்தான் ஃப்ராய்டு...." என்று அதகளப் படுத்திக்கொண்டுதான் இருப்பார் <<<

:-))))

Lakshmi Sahambari said...

Nalla Flow :-) U r really doing good ..so as ur Teacher :-)

நந்தா said...

//இப்போது எங்கே இருப்பார் அவர் ? என்ன செய்து கொண்டு இருப்பார்? தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பள்ளியில் " இதத்தான் ஃப்ராய்டு...." என்று அதகளப் படுத்திக்கொண்டுதான் இருப்பார்.//

ஒவ்வொருவருக்கு பின்னாலும் இப்படி யாரேனும் சில ஆசிரியர்கள் இருப்பார்கள் இல்லையா பரத்?

பழைய நினைவுகள் எப்போதும் சுகமானவைதான். :)

http://blog.nandhaonline.com

PPattian said...

புனித வளனார்??

சுவையாக எழுதியுள்ளீர்கள்..

//50 மொக்கைபதிவுகள் தொலைந்ததற்கே மனம் பதை பதைக்கிறதே //

இந்த போபியாவினால, நான் என் பதிவுகளை PDF கோப்பு எல்லாம் எடுத்து Backup செய்த காலமும் உள்ளது.. :)

Ayyanar Viswanath said...

தாமதமான வாழ்த்துக்கள் பரத்..

ஃப்ராய்ட் ஐ ஓஷோ கன்னா பின்னான்னு விமர்சித்திருப்பார் ஆனாலும் ஃப்ராய்ட் ஒரு மறுக்கவே முடியாத சிந்தனையாளனே btw என்னோட ஓஷோ இடுகைக்கான நீட்டிப்பா உங்கள் பதிவொன்னு நினைவுக்கு வந்ததால இந்த ஜல்லி :))

கதிர் said...

காலம் எதையாவது நமக்கு உணர்த்திக்கொண்டேதான் இருக்கும். தொலைந்து போனவை, தொலைக்கப்பட்டவை நமக்கான அனுபவம் வரும்போதுதான் அதன் பாதிப்பு தெரியும். மொக்கையோ சக்கையோ....

அழகான நினைவுகள்.

பரத் said...

வாங்க யாத்ரீகன்,
:)

பரத் said...

Lakshmi Sahambari,
Thankx :-)

பரத் said...

//பழைய நினைவுகள் எப்போதும் சுகமானவைதான். :)//

முற்றிலும் உண்மை நந்தா :)

பரத் said...

புபட்டியன்,
//புனித வளனார்??//

அதே அதே. நீங்களும் திருச்சித்தானா!! எந்த பள்ளி?

கருத்துக்களுக்கு நன்றி

பரத் said...

அய்யனார்,
வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யனார் :-)

//ஃப்ராய்ட் ஐ ஓஷோ கன்னா பின்னான்னு விமர்சித்திருப்பார் //

படித்துப் பார்க்க ஆர்வம் ஏற்படுகிறது. கல்லூரி நாட்களில் ஃப்ராய்டின் "Interpretation of dreams" அரைகுறையாக படித்திருக்கிறேன் . ஃப்ராய்டின் பல கோட்பாடுகள் கடும் விவாதத்திற்குரியவை என்றாலும் அவர் புறக்கணிக்க முடியாத ஒரு உளவியல் அறிஞர்.
//ஓஷோ இடுகைக்கான நீட்டிப்பா உங்கள் பதிவொன்னு நினைவுக்கு வந்ததால இந்த ஜல்லி :))//
:))

பரத் said...

//காலம் எதையாவது நமக்கு உணர்த்திக்கொண்டேதான் இருக்கும். தொலைந்து போனவை, தொலைக்கப்பட்டவை நமக்கான அனுபவம் வரும்போதுதான் அதன் பாதிப்பு தெரியும். மொக்கையோ சக்கையோ....//

அழகா சொல்லிருக்கீங்க கதிர். நன்றிகள்!!

முபாரக் said...

நல்ல நடை, உங்கள எப்படி இத்தன நாளா தவறவிட்டேன்னு தெரியல. ட்விட்டருக்கு நன்றி ;-)

வாழ்துகள் நண்பரே! ரீடர்ல போட்டுக்கிட்டேன்

பரத் said...

வாங்க முபாரக்,
வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி