Monday, August 04, 2008

தேசியகீதச் சிந்தனைகள்

சமீபத்தில் தூக்கம் தொலைந்த ஒரு இரவில் படம் பார்க்கத் திரையரங்கிற்கு சென்றிருந்த்தேன். அந்த பதினோரு மணிக்காட்சிக்கும் திரையரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.எனக்கருகில் இருந்த இரு காலி இருக்கைகளில் நல்ல பிகர்கள் வந்தமர ஆண்டவனை வேண்டிக்கொண்டிருந்தவேளையில் அழகான இரானிய பெண் வந்து ஒரு இருக்கை தள்ளி அமர்ந்தாள்.பிரார்த்தனை வேலைசெய்வதாய் சந்தோஷப்பட்ட தருணத்தில் என் எண்ணத்தில் மண்.எங்களுக்கு இடையிலிருந்த இருக்கையில்தாடி வைத்த ஒரு இரானிய இளைஞன் வந்தமர்ந்தான்.அந்த பெண்ணின் காதலன் என்று நினைத்துக்கொண்டேன்.படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதத்திற்கு அனைவரும் எழுந்து நிற்குமாறு அறிவிப்பு வந்தது.அனைவரும் எழுந்துநிற்க அந்த இளைஞன் மட்டும் உட்கார்ந்து கொண்டே இருந்தான்.சுற்றி இருப்பவர்கள் அவனை ஒருமாதிரியாகப் பார்க்க,உடன் வந்த பெண்ணும் வற்புறுத்த வேறு வழியின்றி முனகிக்கொண்டே எழுந்து நின்றான்.போதாக்குறைக்கு அன்று வழக்கமான 52 வினாடி தேசியகீதம் பாடப்படவில்லை.லதாமங்கேஷ்கர் பாட்டி மெதுவாக முதல் அடி பாட,அவரதுசகோதரி ஆஷா போஸ்லே இரண்டாவது அடியை எடுத்துக்கொடுக்க,இதற்கிடையில் புல்லாங்குழல் வித்வான் அவரது திறமையைகாண்பிக்க, தேசியகீதத்திற்கு நடுவிலும் இடைவேளை விட்டால் பரவாயில்லை என்று தோன்றியது.இப்போது அந்த இரானிய இளைஞனின் மனோநிலையில் தான் நானும் இருந்தேன்.இந்த அர்த்தராத்திரி வேளையில் திரையரங்கங்களில்தேசியகீதம் பாடப்படுவதன் தாத்பரியம் என்னவென்று விளங்கவில்லை. தேசப்பற்றினை இதன் வாயிலாக இஞ்ஜெக்ட் செய்வதுதான் நோக்கமெனில் அது நிகழவில்லை.தேசியகீதம் பற்றி நான் இப்படி சிந்திப்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.ஏனெனில் பள்ளி நாட்களில் தேசியகீதம், தேசியகொடி, சுதந்திரதினம் போன்ற வஸ்த்துக்களின் மீது அதிக பற்றுடன் இருந்தது நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு வகுப்பிலும் தேசம் பற்றிபேசும்,தேசப்பற்று பற்றி பேசும் ஒரு ஆசிரியர் அமைந்தார். என்னுடன் எட்டாம் வகுப்பு படித்த தோழன், “ஜெயஹே ஜெயஹே சொல்ரப்பொ எனக்குசிலிர்க்கும் டா” என்பான். உண்மையாகவே அவனது கைமயிர்கள் குத்திட்டு நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.நானும் பல முறை முயற்சித்துப்பார்த்தேன். தேசியகீதத்தின்போது திருப்பூர்குமரனையெல்லாம் நினைவில் நிறுத்தியும் ஒன்றும் சிலிர்க்காததால் முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.என்றாலும் அவனைவிட எனக்கு தேசப்பற்று இரண்டு டீஸ்பூன் குறைவு என்பதில் ரொம்ப நாளைக்கு வருத்தமிருந்தது. கிராமங்களில் சுதந்த்திரதினம் திருவிழாவுக்கு இணையாகக் கொண்டாடப்படும்பண்டிகை. தியாகிகளின் சொற்பொழிவுகள்,பேச்சுப்போட்டி,கொடியேற்றம் என சுதந்திரம் தொடர்பான சிந்தனைகளாலேயே அன்றைய நாள் முழுவதும் கழியும். நகரத்திற்கு குடிபெயர்ந்தபிறகு சுதந்திரதினம் ஒரு விடுமுறைதினமாக மட்டுமே பாவிக்கப்படுவது கண்டு வியப்பாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன ஏதோ ஒருகளிசடையைப் பார்க்கும் கூட்டத்தோடு நானும் இணைந்துகொண்டேன்.


தொலைக்காட்சியில் அப்போது பார்த்த 'அபூர்வராகங்கள்' படத்தின் ஒரு காட்சி மிகப் பிடித்த காட்சியாக மனதில் தங்கிப்போனது.தேசியகீதம் பாடப்படும்போது ஒருநபர் மட்டும் சாவகாசமாக வேர்க்கடலையை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அதைப் பார்த்துகமல் கோபம்கொப்பளித்தது, பாடல் முடிந்தவுடன் அந்த நபரைப் புரட்டி எடுத்துவிடுவார்.அந்தக் காட்சியைப் பார்த்ததிலிருந்த்தது நானும்தேசியகீதத்தை அவமதிக்கும் ஒரு நபரையாவது குத்துவிடவேண்டும் என்று முஷ்ட்டியை மடக்கிக் கவனமாகக் காத்திருந்தேன்.ரொம்ப நாட்களாகியும் அப்படி யாரும் அகப்படாதது எனது நல்லநேரம் என்றுதான் சொல்லவேண்டும். இப்போது அப்படி ஒருநபரைப் பார்த்தால் கோபப்படமாட்டேன் என்பயதைவிட நானேகூட தேசியகீதத்தின்போது கடலைசாப்பிட தயங்கமாட்டேன் என்பதுதான் உண்மை. காரணம் தேசப்பற்று அற்றுப்போய்விட்டது என்பதல்ல,தேசபக்தி பற்றிய எனது கண்ணோட்டம் மாறியிருக்கிறது என்பதே.”உன் அயலானுக்கு நீ செய்யும் நன்மைகள் யாவும் எனக்கே செய்யப்படுகின்றன”என்று பைபிளில் இறைவன் சொல்வதுபோல ஒரு வாசகம் வரும். அதுபோலத்தான் தேசப்பற்றும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும்,நலிந்தவர்களுக்கும் உதவும் ஒவ்வொரு தருணங்களிலும் தேசப்பற்று உடையவர்களாகின்றோம். அதனைவிடுத்து மனம்போல் சுயநலவாழ்வு வாழ்ந்துகொண்டு தேசியகீதத்திற்கும்,தேசியக்கொடிக்கும் மாத்திரம் விறைப்பாக சல்யூட் அடிப்பது என்பது,நட்சத்திர ஹோட்டலில் ஆயிரங்களை செலவழித்து உணவருந்திவிட்டு வாசலில் பிச்சைக்காரனுக்கு 1 ரூபாய் போடுவதன்மூலம் தன்னை கொடைவள்ளலாக கற்பனை செய்துகொள்வதற்கு சமம்.


இதனால் தேசியகீதத்திற்கு மரியாதை செய்யாதீர்கள் என்று நான் சொல்லவரவில்லை. உன்மையான தேசப்பற்று இல்லாதபட்சத்தில்இந்த போலி மரியாதைகளால் எந்த புண்ணியமும் இல்லை என்றுதான் சொல்கிறேன். எனக்குமே இந்த குற்றஉணர்ச்சி இருப்பதால்தான் இதனை உறுதியாகச்சொல்ல முடிகிறது. படிக்கும் காலங்களில் சமூகத்திற்கு இதை செய்ய வேண்டும், அதைச் செய்யவேண்டும் என மனக்கோட்டைகட்டி வேலைக்குவந்து சம்பாதிக்கத் துவங்கியபின் அங்கொன்று இங்கொன்றுமாக செய்து நாளடைவில் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் நானும் மாறிப்போனேன்.வரி ஏய்ப்புசெய்யும்,கருப்புப் பணத்தைப் பதுக்கும் பணமுதலைகளுக்கு நடுவில் ஒழுங்காக வரியைச் செலுத்தும் நாம் எவ்வளவோ மேல் என்றாலும், அது மட்டுமே போதாது என்பதும் தெரிந்தே இருக்கிறது.மனம் திரைப்படத்தில் லயிக்கவில்லை. அலைபோல எண்ணங்கள் வந்துகொண்டே இருந்தன.அடுத்தமுறை தேசியகீதத்திற்கு எழுந்து நிற்கையில் “தவ சுப நாமே ஜாகே” யில் கவனம் செலுத்தாமல் உருப்படியாக ஏதாவது செய்வதைப் பற்றி யோசிக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். படம் விட்டு வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மனதில் சுகிர்தாரிணியின் இந்தக் கவிதை நிழலாடிச் சென்றது.இந்த கவிதைக்கும் எனது இந்தக் கருத்துக்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்ன?இடமற்று நிற்கும்

கர்பிணியின்

பார்வை தவிர்க்க

பேருந்துக்துக்கு

வெளியே பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம் எதை

எதிர்பார்க்கிறாய்

காதலயா?

************


தெளிவான சிந்தனைகளால் தான் ஒரு கருத்தை சரியாகச்சொல்லமுடியும் என்று படித்திருக்கிறேன்.ஆனால் எனதுஇந்தப் பதிவு தெளிவற்ற சிந்த்தனைகளினால் விளைந்தது.எனவே தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.கருத்துக்களுக்காகவும் திருத்தங்களுக்காகவும் காத்திருக்கிறேன்.என்னை இந்த வாரத்தின் நட்சத்திரமாக தேர்ந்தெடுத்திருக்கும் தமிழ்மணத்திற்கும்,ஒருவாரகாலத்திற்கு என்னைப் பொருத்துக்கொள்ளப் போகும் வாசகர்களுக்கும் வணக்கங்கள்.

27 comments:

தம்பி said...

வருக வருக

தாமிரா said...

//அவனைவிட எனக்கு தேசப்பற்று இரண்டு டீஸ்பூன் குறைவு என்பதில் ரொம்ப நாளைக்கு வருத்தமிருந்தது//
//வரி ஏய்ப்புசெய்யும்,கருப்புப் பணத்தைப் பதுக்கும் பணமுதலைகளுக்கு நடுவில் ஒழுங்காக வரியைச் செலுத்தும் நாம் எவ்வளவோ மேல் என்றாலும், அது மட்டுமே போதாது என்பதும் தெரிந்தே இருக்கிறது//

உங்கள் எழுத்துக்கும் எண்ணங்களுக்கும் ரசிகனாகிறேன் பரத்.! 'கூடிவாழ்ந்தால் கோடி நன்மை' என்பதைத்தவிர‌ 'தேச‌ப‌க்தி' இருக்க‌வேண்டியத‌ற்கான காரணமாக வேறெதுவும் எனக்கு தோன்றவில்லை. சிந்திக்கவே வைக்க முயலாத உணர்ச்சிவசப்படவைக்கின்ற கட்டமைக்கப்பட்ட 'தேசபக்தி'க் காரணங்கள் வெறும் பேத்தல் என்கிறேன் நான். நீங்கள் கூற வந்தது இதுவல்ல என்பது புரிந்தாலும் இந்த சமயத்தில் தோன்றியதால் கூறினேன்.

(பதிலுக்கு என் பதிவுக்கு வந்தால் மொக்கைப்பதிவுகளைப் பார்த்து 'பேஸ்த்' அடித்துப்போவீர்கள். வராமலிருப்பது நன்று.)

கோவி.கண்ணன் said...

நட்சத்திர வாழ்த்துகள் பரத் !

மங்களூர் சிவா said...

நட்சத்திர வாழ்த்துகள் பரத் !

sudar mani said...

Welcome anna...
nice post...

Gopalan Ramasubbu said...

வாழ்த்துகள் பரத் :)

பரத் said...

நன்றி கதிர்!!

தாமிரா,
//சிந்திக்கவே வைக்க முயலாத உணர்ச்சிவசப்படவைக்கின்ற கட்டமைக்கப்பட்ட 'தேசபக்தி'க் காரணங்கள் வெறும் பேத்தல் என்கிறேன் நான்.//

சரியாகச்சொல்லியிருக்கிறீர்கள் தாமிரா.கருத்துக்களுக்கு நன்றி!

கோவி.கண்ணன்,
நன்றிகள்!!

பரத் said...

மங்களூர் சிவா,
நன்றி சிவா!!

சுடர்மணி,
வாழ்த்துக்களுக்கு நன்றி

கோபாலன்,
நன்றி :)

PPattian : புபட்டியன் said...

வாங்க பரத். நல்லா எழுதறீங்க .. வாழ்த்துக்கள்.

உங்கள் ஊர் தொட்டியத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் கிரிக்கெட் விளையாட ஒரு முறை வந்திருக்கிறேன்.. அதனால் தொட்டியம் எனக்கு இனிய நினைவுகளை கிளறக்கூடிய ஊர்களில் ஒன்று

பரத் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி புபட்டியன்

//உங்கள் ஊர் தொட்டியத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் கிரிக்கெட் விளையாட ஒரு முறை வந்திருக்கிறேன்.. அதனால் தொட்டியம் எனக்கு இனிய நினைவுகளை கிளறக்கூடிய ஊர்களில் ஒன்று//
அட அப்படியா!!

TBCD said...

நட்சத்திர வாழ்த்துகள் பரத் !

R A J A said...

ரொம்ப பிராக்டிகலா எழுதி இருக்கீங்க. நல்லா இருக்கு.
//சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும்,நலிந்தவர்களுக்கும் உதவும் ஒவ்வொரு தருணங்களிலும் தேசப்பற்று உடையவர்களாகின்றோம். . //
ரொம்ப சரி. அப்படி உதவுபவர்கள் நிச்சயம் தேசியகீதத்துக்கு எழுந்து நிற்பார்கள் என்பது உறுதி.

R A J A said...

ரொம்ப பிராக்டிகலா எழுதி இருக்கீங்க. நல்லா இருக்கு.
//சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும்,நலிந்தவர்களுக்கும் உதவும் ஒவ்வொரு தருணங்களிலும் தேசப்பற்று உடையவர்களாகின்றோம். . //
ரொம்ப சரி. அப்படி உதவுபவர்கள் நிச்சயம் தேசியகீதத்துக்கு எழுந்து நிற்பார்கள் என்பது உறுதி.

பரத் said...

TBCD,
நன்றிகள் _/\_

ராஜா,
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
//அப்படி உதவுபவர்கள் நிச்சயம் தேசியகீதத்துக்கு எழுந்து நிற்பார்கள் என்பது உறுதி.
//
சரிதான், அதேசமயம் என் பணியிடத்தில் சில நண்பர்கள் டிவியில் தேசிய கீதம் வந்தால் கூட எழுந்து நிற்பார்கள்.ஆனால் அனாதை இல்லங்களுக்கு உதவித்தொகை,சமூகம் சார்ந்த உதவி என வரும் போது ஓடி ஒளிவார்கள்.ஒருவகையில் இந்த பதிவினை எழுத அவர்களும் ஒரு காரணம்.

சகாதேவன் said...

ரொம்ப நாட்களுக்குமுன் சினிமா முடிந்ததும் தேசீயகீதம் இசைப்பார்கள். தொடங்கிய உடனே எல்லோரும் ஒடிக்கொண்டிருந்தார்கள். அதனால் பின்னாளில் நிறுத்தி விட்டார்கள். "ஆக. 15 என்னசெய்வீர்கள் என்று என் பதிவைப் பாருங்களேன்.
சகாதேவன்

Lakshmi Sahambari said...

Good start :)

பரத் said...

சகாதேவன்,
கருத்துகளுக்கு நன்றி.அவசியம் பார்க்கிறேன்.

லக்ஷ்மி,
நண்றிகள்!!

பரத் said...

லக்ஷ்மி,
நன்றிகள் :)

shamy said...

rommba arumaya irukku ungha post....unghalukku en vazthukkal...etho oru august 15 vandu kondirukkiradu....jai hind...
shamy

சுரேகா.. said...

நல்லா எழுதியிருக்கீங்க!

யோசிக்கவும் வச்சிருக்கீங்க!

வாழ்த்துக்கள் ..நட்சத்திரமே

பரத் said...

நன்றி Shamy :)

சுரேகா,
கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி !!

மஞ்சூர் ராசா said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.


தேசியகீதம் இசைக்கும் போது உடம்பு புல்லரித்தது ஒரு காலம் என்றாலும் இன்றளவும் எழுந்து நிற்கவேண்டும் என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

பரத் said...

மஞ்சூர் ராசா,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

தமிழன்... said...

வாழ்த்துக்கள் பரத்...

தமிழன்... said...

வாழ்த்துக்கள் நண்பரே :)இப்பொழுதுதான் உங்கள் பதிவுகளை படிக்கும் சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது...

தமிழன்... said...

\\\
இடமற்று நிற்கும்

கர்பிணியின்

பார்வை தவிர்க்க

பேருந்துக்துக்கு

வெளியே பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம் எதை

எதிர்பார்க்கிறாய்

காதலயா?
///

எனக்கும் வாசித்த நாளில் இருந்து மறக்காமல் இருக்கிற கவிதை, ஆனால் அதை எழுதியவரின் பெயர் மறந்து போயிருந்தது....

பரத் said...

நன்றிகள் தமிழன் _/\_