Sunday, March 09, 2008

நானும் ஓர் கனவோ !!

சில புத்தகங்களைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிடும் இது நம் ஜாதிப் புத்தகம் இல்லை என்று.இருந்தாலும் ஒரு ஆவலில் அள்ளிக்கொண்டு வந்துவிடுவோம்.பிறகென்ன அதன் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவும் முடியாமல்,மூடிவைத்துவிடவும் முடியாமல் 'நாய் பெற்ற தெங்கம்பழம்' நிலைதான்."The Eleven Pictures of Time" புத்தகத்தைப் படிக்கும் போது நானும் இவ்வாறுதான் உணர்கிறேன்.C.K.ராஜு என்பவர் எழுதியிருக்கும் இந்தப்புத்தகம் காலத்தைப்(Time) பற்றிய முழுமையான களஞ்சியம் எனலாம்.
துவக்கம் தொட்டு நிலவி வந்த காலம் பற்றிய நம்பிக்கைகள்,தத்துவங்கள்,தர்க்கங்கள்,மறுபிறப்பு மற்றும் கால எந்திரம் தொடர்பான சாத்தியங்கள்,சாத்தியமின்மை,காலம் பற்றிய இயற்பியல் கோட்பாடுகள்,நிரூபணங்கள் அனைத்தும் முழுமையாக விளக்கப்பட்டுள்ளன.
புத்தகத்தை முடிக்கமுடியும் என்று தோன்றவில்லை.படித்தவரையில் கிடைத்த சில சுவாரசியமான விஷயங்கள் :

1.வண்ணத்துப்பூச்சி(யின்) கனவு


சுவாங் சூ கிமு295ல் சீனாவில் வாழ்ந்த தத்துவ ஞானி.இருத்தலைப் பற்றியும்,நிலையாமை குறித்தும் தொடர்ந்து வினாக்களை எழுப்பியவர்.அவர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிடுகிறார்."ஒரு நாள் கனவில் நான் வண்ணத்துபூச்சியாக மாறியிருந்தேன்.வானில் உயரப் பறந்தேன்.மிகப் பரவசமாக இருந்தது.என்னை முழுமையாக வண்ணத்துப்பூச்சியாக உணர்ந்தேன்.அப்போது திடீரென விழித்துக்கொண்டேன்.நான் சுவாங் சூவாக இருப்பதை உணர்ந்தேன்.இப்போது எனக்குக் குழப்பமாக இருக்கிறது.நான், சுவாங் சூ, கனவில் வண்ணத்துப் பூச்சியாக மாறினேனா? இல்லை வண்ணத்துப்பூச்சியின் கனவில் சுவாங் சூவாக மாறியிருக்கிறேனா.வண்ணத்துப்பூச்சியின் கனவுதான் இந்த சுவாங் சூ என்றால் என்னைச் சுற்றி நிகழும் இவையெல்லாம் கனவா? காட்சிப்பிழையா?"

நிற்க,இப்போது பாரதியின் இந்த வரிகளைக் கவனியுங்கள்

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெலாம்
சொற்பனந்தானோ - பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ !

பல ஆயிரம் ஆண்டு கால இடைவெளியில்,பல ஆயிரம் மைல்கள் தூர இடைவெளியில் வாழ்ந்த இரு ஞானிகள் ஒத்த சிந்தனை கொண்டிருந்தது வியப்பைத் தருகிறது.

2.காஸ்மிக் மீள்நிகழ்வு(Cosmic Recurrence)
எந்த ஒரு நிகழ்வும் காஸ்மிக் சுழற்சியில் பல பில்லியன் ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழும்.அதாவது இப்போது கட்டம் போட்ட சட்டை போட்டுக்கொண்டு இந்த பதிவை படிக்கும் நீங்கள் Mr.X, பல பில்லியன் ஆண்டுகள் கழித்து ,இதே கட்டம் போட்ட சட்டையுடன் இதே வயதில் Mr.Xஆகவே, எனது காஸ்மிக் மீள்நிகழ்வு பற்றிய இந்தப் பதிவைப் படிப்பீர்கள் என்கிறது இந்தக் கொள்கை.அப்பொது உங்கள் நியாபகங்கள் புதுப்பிக்கப் பட்டிருக்கும்.ஆனால் பிற்பாடு இந்தக்கொள்கை நிறுவப்படாமல் போயிற்று.ஜெயமோகனின் 'ஜகன்மித்யை' என்ற சிறுகதை இதே போன்றதொரு தியரியை அடிப்படையாகக் கொண்டதுதான்.

3.GrandFather Paradox
கால இயந்திரத்தில் பின்னோக்கிச் செல்வது இயலாத காரியம் என்பதை நிறுவ இது பயன்பட்டது.
ஜானியின் தாத்தா(தந்தை வழி) பெரும் பணக்காரர்.ஒருநாள் ஜானியுடன் ஏற்பட்ட சண்டையில் கோபம் கொண்டு அவர் தன் சொத்து முழுவதையும் வேறொருவர் பெயரில் எழுதிவிடுகிறார்.இது நடந்து சில நாட்களில் அவர் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார்.இதனால் ஜானி ஒரு கால எந்திரத்தில் ஏறி சில நாட்கள் பின்னோக்கி பயணித்து அதாவது தாத்தா இறப்பதற்கு முன்னால் சென்று அவரிடம் பேசுகிறான்.சொத்தை தன்பெயரில் எழுதச் சொல்கிறான்.ஆனால் அவர் மறுத்துவிடுகிறார்.இதனால் ஆத்திரமடைந்த ஜானி மேலும் பின்னோக்கி சென்று, தன் தாத்தாவை அவரது இளம் வயதிலேயெ கொன்றுவிட முடிவு செய்கிறான்.அதாவது அவர் ஜானியின் பாட்டியை(அவர் தன் மனைவியை) சந்திக்கும் முன்பே அவரை கொன்றுவிடுகிறான்.இதனால் ஜானியின் அப்பாவே பிறக்கப் போவதில்லை,அதன் விளைவாக ஜானியும் இல்லை.
சரி இப்போது சொல்லுங்கள், ஜானியின் தாத்தாவைக் கொன்றது யார்?
இப்பவே கண்ணக்கட்டுதே!!

5 comments:

Anonymous said...

http://www.sciencenews.org/articles/20050716/fob7.asp
!!!!
Have you seen "Back to the future" movies!

அனுசுயா said...

கண்டிப்பா நான் இல்லீங்க ஜானியோட தாத்தாவ கொன்னது :)

பரத் said...

Anony,
No, I haven't watched,but heard abt those movies.thanks for the link.

அனுசுயா ,
இப்போ தான் உங்க வாத்தியார பார்த்து பேசிட்டுவர்றேன்.
அவரும் இதையே தான் சொல்றாரு " அனு ரொம்ப நல்ல பொண்ணு அப்படியெல்லாம் பண்ணிஇருக்க மாட்டாங்க" ன்னு

என்ன கொடும சார் இது? :))))

கதிர் said...

சத்தியமா கண்ண கட்டுதுங்க பரத்.

காஸ்மிக் மீள்நிகழ்வு இது எத்தனை சதவீதம் உண்மை?

பரத் said...

தம்பி,
:)
இல்லை .அந்தத் தியரி சரியாக நிரூபிக்கப்படவில்லை.அந்தப்புத்தகத்திலும் அதைப்பற்றிய விளக்கம் போதுமானதாக இல்லை.
ஜெயமோகனின் 'ஜகன்மித்யை' என்ற சிறுகதை இதுபோன்ற சுவாரஸியமான கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.வாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்கள்.சித்தார்த்தின் பதிவொன்றில் காணக்கிடைக்கும் இது பற்றிய குறிப்பு
http://angumingum.wordpress.com/2006/02/17/all_abt_eve_spring/