Saturday, October 11, 2008

சினிமாக் கேள்வி பதில் - தொடர் விளையாட்டு

இரண்டு தமிழர்கள் எங்காவது சந்தித்துக்கொண்டால் பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு பேச்சு உறுதியாய் சினிமாவில்தான் வந்து நிற்கும்.அந்த அளவிற்கு நம் வாழ்வை சினிமா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.இப்போ எதுக்கு இந்த பில்ட்-அப் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாகார்ஜுனனைத் தொடர்ந்து நம்ம பிரகாஷ் சினிமா தொடர்பான கேள்வி பதில் தொடர் விளையாட்டு ஒன்றினைத் துவக்கி இருக்கிறார்.அதற்கு என்னை வேறு அழைத்திருக்கிறார். தேங்காய் மூடி பாகவதருக்கு மைக்கும் மேடையும் கிடைத்தால் விடுவாரோ? இதோ எனது பதில்கள்..

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

தமிழக தாய்மார்களுக்கே உரியே பொதுப்பழக்கமான கைக் குழந்தையை சினிமாவுக்கு எடுத்துப் போகும் பழக்கம் என் தாயாருக்கும் இருந்ததால் எந்த வயதில் சினிமா பார்க்கத்துவங்கினேன் என்பது நினைவிலில்லை.ஆனால் மற்ற குழந்தைகள் போல் திரையரங்கில் அழுது ஆர்பாட்டம் செய்யாமல் சமர்த்தனாக இருந்தேன் என்று சொல்லிக் கேட்டதுண்டு. இதிலிருந்து அந்நாளிலேயே எனக்கும் சினிமாவுக்கும் ஒரு இசைவு இருந்தது என்று சொன்னால் அது புருடா.


அனாதை ஆனந்தன் என்ற படம் பார்த்தது மங்கலாக நினைவிருக்கிறது. நாங்கள் இருந்த அரசு குடியிருப்பில் ஒருவர் புதிதாக தொலைக்காட்சி பெட்டி வாங்கியபோது " உத்தரவின்றி உள்ளேவா" படத்திற்கு உத்தரவின்றி உள்ளே சென்று பார்த்ததும், சிறு சிறு நகைச்சுவைக்கும் விழுந்து விழுந்து சிரித்ததும் நியாபகத்தில் உள்ளது.


(தொடர்ந்து உத்தரவின்றி அவர் வீட்டுக்கு டிவி பார்ர்க்கப் பிரவேசித்ததால் ஒரு நாள் கதவை தாளிட்டு விட்டார்.இதை வீட்டில் வருத்தப்பட்டு சொல்ல, அப்பா கோபப்பட்டு "இனி டிவி பார்க்க யார் வீட்டுக்கும் போகக் கூடாது" என்று சொல்லி தவணைமுறைத் திட்டத்தில் டிவி வாங்கி வைத்துவிட்டார். பிறகென்ன இந்தி படம், மாநில மொழிப்படம் என்று பாரபட்சமின்றி எல்லாப் படங்களையும் பார்த்து மகிழ்ந்தோம்.)

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம். புனே-யில் இருந்தபோது முதல் நாள் முதல் காட்சி பார்க்கபோனேன்.திரையரங்கில் என்னையும் சேர்த்து மொத்தமாக 25 பேர் இருந்தோம்.அமெரிக்காவில் கூட இவ்வளவு காலிசீட்டுகளுடன் முதல் காட்சி பார்த்திருக்க முடியாது.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
இருவர். இன்று காலை டிவிடி-யில் பார்த்தேன்.இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் ரொம்பவும் Fresh-ஆக இருக்கிறது. தமிழின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று "இருவர்" என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.ஆனால் இறுதிக்காட்சிகள் சடுதியில் முடிந்துவிடுவதாய்த் தோன்றுகிறது. சென்ஸார் போர்டின் கைங்கரியமோ? மணிரத்னத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தின் வெட்டப்பட்ட துண்டுகளைத்தான் முதலில் கேட்பேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
இந்தப் படம், அந்தப் படம் என்றில்லை. இறுதியில் கதாநாயகன் இறந்து போகும் எல்லாப் படங்களும் என்னைத் தாக்கின(சிறுவயதில்).அதுவும் சிவாஜிகணேசன் படம் என்றால், அப்பாவிடம் கேட்டு ,"சுபம்" என்ற சர்டிஃபிகேட் வாங்கியபின் தான் படமே பார்ப்பேன்.

அதன் பின் பார்த்த படங்களில் துலாபாரம்,தேவர்மகன், நந்தா, காதல் ஆகியவை ஓரளவிற்கு பாதித்தன.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நடிகர்களின் அரசியல் பிரவேசம்.அண்மையில் வடிவேலு தேர்தலில் போட்டியிடப்போவதாக பயமுறுத்தியது.அடுத்து வடிவேலுவுக்கும் போண்டாமணிக்கும் சண்டை வந்தால் போண்டாமணியும் அரசியலில் குதிப்பார்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

இந்த கேள்வி ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால choice-ல வுட்றேன்.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சினிமா செய்தி என்றால் மிச்சர்,பூந்தி மடித்த காகிதமாக இருந்தால் கூட விடுவதில்லை. குமுதம்,ஆ.விகடன் என்று தான் சினிமா பற்றிய வாசிப்பு துவங்கியது என்றாலும் தற்போது தியோடர் பாஸ்கரன், எஸ்.ராமகிருஷ்ணன் வரை வந்திருக்கிறது.நல்ல சினிமா பற்றி அறிந்துகொள்ள விரும்புவோர்களுக்கு என் அட்வைஸ்: பதிவுலகம் பக்கம் வாங்க,கொஞ்சம் தேடினால் சிறப்பான கட்டுரைகள் கிடைக்கும்.உதாரண பதிவர்கள்: சன்னாசி,மதி,சித்தார்த்.


7.தமிழ்ச்சினிமா இசை?

சீனா,இத்தாலி,பிரான்ஸ்,ஜப்பான் என பல நாட்டவரும் வேலை பார்க்கும் என் அலுவலகத்தில் இந்தியாவிலிருந்து நான் மட்டுமே.சமீபத்தில் ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பேச்சு இசையை நோக்கி சென்றது.ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்த இசைபற்றி சொல்ல, என் முறை வந்தபோது நான் சொன்னது இதுதான் "நான் சினிமா இசை கேட்பேன். அதிலேயே எல்லா இசையும் வந்துவிடும்".எல்லாரும் என்னை வினோதமாகப் பார்த்தார்கள்.

"இல்ல சார் எனக்கு சினிமா பாக்கற பழக்கம் இல்ல" என்று பிகு பண்ணிக்கொள்பவர்கள் கூட தமிழ் சினிமா இசையிலிருந்து தப்பிக்க முடியாது என்று நினைக்கிறேன்.எனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் இளையராஜா,ரஃஹ்மான்,வித்தியாசாகர்(அதே வரிசையில்).

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
பார்ப்பதுண்டு.இந்திய மொழிகளில் இந்தி,மராத்தி படங்கள் பார்ப்பதுண்டு.உலகமொழிபடங்களை அண்மையில் தான் பார்க்கத்துவங்கியுள்ளேன்.என்னைத் தாக்கிய வேற்றுமொழிப் படங்கள்

dil chata hai,hazaron khwaish aise,Sathya

The lives of others,Ameli,Cinema paradiso,shindler's List

Life is beautiful,beautiful mind,shawshank redemption

மற்றும் பல...

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ததில்லை.பி.வாசு,பேரரசு பொன்றோர்களின் படங்களைப் பார்க்கும் போது சில சமயம், அட நாமே இதைவிட நல்ல படம் எடுக்கலாமே என்று தோன்றியதுண்டு.இது ஒரு கோபத்தின் வெளிப்பாடே தவிர, தீவிரமாக யோசித்ததில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தற்போது தமிழ் சினிமா நிலை கேவலமாக இருக்கிறது.நேற்று சினிமாவிற்குள் நுழைந்தவர்களெல்லாம் விரலை சொடுக்கி பன்ச் டயலாக் பேசுவதைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது."ஹீரோயிஸ" நோய் கடுமையாக தாக்கியுள்ளது தமிழ் சினிமாவை.நல்ல கதையம்சமுள்ள படங்கள் மிக அரிதாகக் காணக்கிடைக்கின்றன.
ஹிந்தி சினிமாவின் தரம் தமிழைவிட எவ்வளவோ பரவாயில்லை.தமிழ் படங்களைக்காட்டிலும் அதிகமாக குப்பைகள் வெளிவருகின்றன என்றாலும், அங்கு சோதனைப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
மாணவர்கள் அனைவரும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள், மக்கள் தங்கள் அலுவல்களில் அதிக சிரத்தையுடன் உழைத்து நாட்டின் பொருளாதாரம் உயரும்.இப்படியெல்லாம் சொன்னால் ஒத்துக்கொள்ளவா போகிறீர்கள்?சினிமாவிற்கு ஈடாக வேறு பொழுதுபோக்கினை கண்டுபிடிக்க முயல்வார்கள். இதில் சினிமாவைக்காட்டிலும் மோசமான பின்விளைவினைத் தரும் வேறெதையும் கண்டுபிடித்துத் தொலைக்கலாம்.
சின்னத்திரைக்கு மவுசு கூடும்.அடுத்த அரசியல் தலைவர் சின்னத்திரையிலிருந்தும் வரக்கூடும்.

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

சந்தோஷ் குரு
மதி
ஸ்ரீதர் நாராயணன்
அய்யனார்
உமா கதிர்


பதிவிட அழைத்த ப்ரகாஷ் அவர்களுக்கு நன்றிகள்!

8 comments:

தம்பி said...

எழுத்தில் ப.தி.கொ போட்டவர்கள் எழுதிய வரிசையில் என்னை அழைத்த உங்களுக்கு என் கண்டனங்கள்.

Anonymous said...

//இதிலிருந்து அந்நாளிலேயே எனக்கும் சினிமாவுக்கும் ஒரு இசைவு இருந்தது என்று சொன்னால் அது புருடா//

:)))

Sridhar Narayanan said...

போட்டாச்சு! போட்டாச்சு!

இங்கே ஒரு அட்டெண்டண்சும் போட்டாச்சு.

அங்கே தொடர் பதிவும் போட்டாச்சு.

//தமிழக தாய்மார்களுக்கே உரியே பொதுப்பழக்கமான கைக் குழந்தையை சினிமாவுக்கு எடுத்துப் போகும் பழக்கம் //

தற்போது கைக்குழந்தையை சீரியல் பார்க்கிறார்களாம். டிவி பத்தி ஒரு மீம் போடலாமா என்று யோசிக்கிறேன். :-)

//அனாதை ஆனந்தன்//

Oliver Twist-தானே இந்தப் படம்? தூர்தர்ஷனில் ஹிந்தி வெர்ஷன் பார்த்திருக்கிறேன். நம்ம பத்மினி சஞ்சீவ்குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

//தமிழின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று "இருவர்" //

இருக்கலாம். ஆனால்... ஆனால்... சரி விடுங்கள். அரசியல் பேச வேண்டாம் :-)

//அடுத்து வடிவேலுவுக்கும் போண்டாமணிக்கும் சண்டை வந்தால் போண்டாமணியும் அரசியலில் குதிப்பார்.//

போண்டாமணி அரசியலில் இன்னமும் குதிக்கவில்லை என்பது என்ன நிச்சயம்? :-))

//உதாரண பதிவர்கள்: சன்னாசி,மதி,சித்தார்த்.//

அறிமுகத்திற்கு நன்றி. சன்னாசி பின்னூட்டங்கள் சில சமயம் பதிவை விட பெரிதாக, அதிக தகவல்களுடன் இருக்கும்.

//அடுத்த அரசியல் தலைவர் சின்னத்திரையிலிருந்தும் வரக்கூடும்.//

ஓ! இப்பவே ஆனந்த கண்ணனுக்கோ, விஜய் ஆதிராஜிற்கோ ஒரு ரசிகர் மன்றம் வச்சு துண்டு போட்டு வச்சிக்கனும் போல :-))

பரத் said...

தம்பி,
நீங்களும் ப.தி.கொ பதிவர் தானே :)

சித்தார்த்,
வாங்க சித்தார்த் :)

Shridhar,
//இருக்கலாம். ஆனால்... ஆனால்... சரி விடுங்கள். அரசியல் பேச வேண்டாம் :-)//
ஆஹா......நேரம் கிடைக்கும் போது இது பற்ரிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.விவாதிப்போம்.சுவாரசியமான தகவலகள் வெளிவரலாம்:)

//போண்டாமணி அரசியலில் இன்னமும் குதிக்கவில்லை என்பது என்ன நிச்சயம்? :-))
//
ஓ...அப்போ இது பொலிடிகலி இன்கரெக்ட்டா? :)

உமாஷக்தி said...

இருவர் படம் தான் எங்கள் படங்களில் அதிக வெட்டு குத்து வாங்கிய படம். Iruvar is a sensational film, not well received and recognized here. But it will stand in Mr.Ratnam's film history and its the most wanted film in Film festivals worldwide.
Uma, Festival Co ordinator - Madras Talkies

Santhosh Guru said...

ஜோதில கலந்தாச்சு :-) ( http://tinyurl.com/cinememe )

இருவர் எனக்கும் பிடித்த படம் தான். விமர்சகர்கள் என்னதான் கிழித்தாலும் அந்த படம் எனக்கு பிடிக்கத்தான் செய்கிறது. அதேபோல் இன்னோரு படம், ஹேராம்.

ashok said...

Deepavali nalvazhthukal

Anonymous said...

//பி.வாசு,பேரரசு பொன்றோர்களின் படங்களைப் பார்க்கும் போது சில சமயம், அட நாமே இதைவிட நல்ல படம் எடுக்கலாமே என்று தோன்றியதுண்டு//

Vaasu epozhuthume than initialayai pola padam eddupar endru oruvan ezhuthirukiran endru nee eniddam sonnathu ninaivukku varugirathu..

//"இல்ல சார் எனக்கு சினிமா பாக்கற பழக்கம் இல்ல" என்று பிகு பண்ணிக்கொள்பவர்கள் கூட தமிழ் சினிமா இசையிலிருந்து தப்பிக்க முடியாது என்று நினைக்கிறேன்.எனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் இளையராஜா,ரஃஹ்மான்,வித்தியாசாகர்(அதே வரிசையில்).//

Naan Kadavul paatu kettaya ?
Raja chumma Athiravachuirukar.
Director Mishkinin adutha padamana "Nandalala"virku Raja thaan isaiyaam..