Tuesday, May 04, 2010

Tuesday Teasers 3

# Grab your current read.
# Let the book fall open to a random page.
# Share with us few “teaser” sentences from that page.
# You also need to share the title of the book that you’re getting your “teaser” from … that way people can have some great book recommendations if they like the teaser you’ve given!
# Please avoid spoilers!

சென்னையில் ஆகாய யாத்திரை

இந்தியாவெங்கும் பிரஸித்தி பெற்ற ஸ்பென்ஸர் நமது சென்னைபுரிக்கு வந்து,
மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில் ஏறும்போது புகைக்கூட்டின் துணையினாலேறி வரும்போது அதைவிட்டு அதனோடு சேந்தாற்போல் மாட்டியிருந்த பாராசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து அதன் கீழே தொங்கிக்கொண்டு தமக்கு சிறிதாயினும் அபாயமில்லாதபடி ஷேமமாக வந்திறங்கினார். சற்றேறக்குறைய 3200-அடி உயரம் மட்டும் தான் ஏறினார். அவர் இறங்கி வருகையில் இந்திர லோகத்தினின்று தேவ விமானத்தின் வழியாக யாரோ தேவதை பூமியில் வந்திரங்குவது போலிருந்ததைக் கண்டு
அங்கு வந்திருந்த பல்லாயிரம் பிரஜைகளும் அவருக்குப் பல்லாண்டு பாடி ஆனந்தமடைந்தார்கள்.
- ’ஜநாநந்தினி’ சென்னை 1891 மார்ச்
(ஆசிரியர் அன்பில் எஸ்.வெங்கடாசாரியார்)
புஸ்த. 1. இல 3. பக்கம் 53


சடுதியாக ஒரு அறிமுகம்:
ட்ராவலாக்(travelogue) என்று சொல்லப்படும் பயண இலக்கியங்கள் தமிழில் மிகக்குறைவு. அந்தக்குறையைப் போக்குவதற்காக ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று அறியப்படும் திரு ஏ.கே.செட்டியார் தமிழக ஊர்கள், அரிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கி.பி.1800 முதல் 1950 வரை தமிழில் வெளியான அனைத்து செய்திகளையும் கவனமுடன் தொகுத்து ‘தமிழ் நாடு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். அந்நாளில் ஒவ்வொரு ஊரும் எப்படியிருந்தது என்பது குறித்த விவரணைகளும், ரயில், ஆகாய விமானம் குறித்த செய்திகளும் மிக சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளன.
---------------------------------------------------------------------------------------------
நூலின் பெயர்: தமிழ்நாடு
திரட்டி தொகுத்தவர்: ஏ.கே.செட்டியார்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

---------------------------------------------------------------------------------------------


Friday, April 30, 2010

சிதம்பர நினைவுகள் - வாசக அனுபவம்


புத்தகவிமர்சனங்கள் படிக்கும் போது ஒருவித செலக்டிவ் அம்னிஷியா இருப்பது உசிதம். அதாவது புத்தகம் குறித்த மேலோட்டமான விவரங்கள் மட்டும் நினைவில் இருக்கவேண்டும். உதாரணமாக யார் எழுதியது, புத்தகம் குறித்து விமர்சகரின் ஒட்டுமத்த மதிப்பீடு என்ன போன்றவற்றை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் நுணுக்கமான விஷயங்கள், சிலாகிப்புகளை மறந்து விடலாம். ஏனெனில் முதல்முறை புத்தகத்தை படிக்கும்போது வாசகனுக்கு நியாயமாக எழவேண்டிய உணர்வுகளை இவை பாதிக்கும். அந்த வகையில் நான் அண்மையில் கண்டெடுத்த ஒரு முத்து “சிதம்பர நினைவுகள்”. இந்த புத்தகத்தைப் பற்றி நிறைய கேள்விபட்டிருந்தாலும், இது குறித்த எந்த விபரமும் நினைவில் இல்லை. சொல்லப்போனால் இதன் ஆசிரியர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றி கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆனால், இப்போது எனக்குப் பிடித்தமான புத்தகங்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.

மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய “சிதம்பர ஸ்மரண” என்ற கட்டுரைத் தொகுதியினை திருமதி கே.வி.ஷைலஜா, சிதம்பர நினைவுகளாகத் தமிழில் ஆக்கித் தந்திருக்கிறார். தனித்தனி சம்பவங்களாக 21 கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூலை சுயசரிதம் என்று வகைப்படுத்துவதும் சரியாகவே இருக்கும். காரணம், புத்தகத்தை படித்து முடிக்கும்போது பாலச்சந்திரன் பற்றிய முழுமையான சித்திரம் வாசகனுக்கு உருவாகும். கட்டுரைகளின் வழியே பாலச்சந்திரன் என்ற கவிஞனை வளர்த்தெடுப்பது இனிய அனுபவம்.

புத்தகத்தின் தலைப்பிலான கட்டுரை(சிதம்பர நினைவுகள்) முதலாவதாக அமைந்துள்ளது. சிதம்பரம் கோவிலில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிகளைச் சந்திக்கிறார். ஒருவருக்கொருவர் ஆதரவாய், அன்யோன்யமாய் அன்பு செலுத்திக்கொள்ளும் அவர்களைக் கண்டு மனம் நெகிழ்ந்து போகிறார். தள்ளாத வயதில் சொந்த பந்தங்களைத் தாமாகவே பிரிந்து வந்து அவர்கள் வாழும் வாழ்க்கை ஒரு மகத்தான தவம் போலுள்ளது. அப்போது அவருக்கு தன் தாயின் நினைவு வருகிறது. அவரது தனிமை பற்றிய எண்ணம் மனதை சஞ்ஜலப் படுத்துகிறது. பாலச்சந்திரனுக்கும் அவருடைய தாயருக்குமான உறவு மிகுந்த சிக்கலானதாக இருப்பது கட்டுரைகளினூடாக காணக் கிடைக்கிறது. தாய்மீது மிகுந்த பாசம் கொண்டவராக ஆனால் அவரை சரியாக பராமரிக்கத் தவறியதற்காக மிகுந்த குற்ற உணர்ச்சி உடையவராக இருக்கிறார். தன் வீட்டுக்கு பிச்சைகேட்டு வரும் முதியவளிடமும், தென்னாப்பிரிக்காவில் தான் சந்திக்கும் மார்த்தா என்ற மூதாட்டியிடமும் மிகுந்த பிரியத்துடன் நடந்துகொள்ளும் பாலச்சந்திரன் அவர்களில் தன் தாயையே காண்கிறார். தன் தாயிடம் தான் கொண்ட பாசத்தைக் காட்டிலும் அதனை வெளிப்படுத்த முடியாதது குறித்த மன உளைச்சலை கட்டுரைகளில் அதிகம் பதிவுசெய்கிறார்.

இது தவிர, பாலச்சந்திரன் அதிகமாகப் பேசும் மற்றொரு விஷயம் ‘பசி’. கல்லூரியில் படிக்கும்போதே நக்ஸல் இயக்கங்களில் சேர்ந்து, அதன் காரணமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அதுமுதல் துவங்கி வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஸ்திர நிலை ஏற்படும்வரை, வறுமையின் ஒவ்வொரு பல்சக்கரத்திலும் அரைபடுகிறது அவரது வாழ்வு. குறிப்பாக பசி அவரை முழுமையாக வென்றெடுக்கிறது. ஒரு திருவோண நாளன்று மிகுந்த பசியுடன் ஒரு வீட்டில் பிச்சை எடுக்கவும் தயங்காதவராக ஆகிறார். அவருக்கு உணவு வழங்கும் அந்த வீட்டில் அவரை கவிஞர் என்பதை நன்கறிந்த ஒரு பெண் இவரைக் கண்டுகொண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனைவிட தர்மசங்கடமான ஒரு நிலை எந்த கவிஞனுக்கும் ஏற்பட முடியாது. அப்போது அவரது மனநிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“கடவுளே! பாதிகூட சாப்பிடலயே, எழுந்து ஓடிவிடலாமா? - வேண்டாம் ஒரு இலை முழுக்க இருக்கும் சோற்றைத் தூக்கியெறியவா?
மதிப்பும் மரியாதையும்விடப் பெரியது பசியும்சோறும் தான்.நான் சலனமின்றி சாப்பிட ஆரம்பித்தேன்.”
மற்றொரு கட்டுரையில், ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்து பின்பு பைத்தியம் பிடித்து தெருவில் அலையும் தன் நண்பனைக் கண்டு அவருக்கு நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்து உணாவகத்துக்கு அழைத்துச்செல்கிறார். அங்கே உணவைக் கண்டதும் பாய்ந்து உண்ணும் தனது நண்பனைக் பற்றி இப்படி சொல்கிறார்.

“பசி இல்லாமல் போக, பைத்தியத்தினால் கூட முடியவில்லையே என்ற துக்கம் என்னுள் ப்ரவாகமெடுத்தது. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூட பசிக்குப் பிறகுதான் என்ற உண்மை எனக்குத் தெளிவாகப் புரிந்தது.”

வறுமை காரணமாக பிள்ளை பெற்றுக்கொள்ள கூடாது என கர்பவதியான தனது மனைவியை மிரட்டி கருக்கலைப்பு செய்வதை சொல்லும் ’கர்பவதம்’ கட்டுரை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இந்நூலை சுயசரிதம் என வகைப்படுத்த மற்றொரு காரணம் பாலச்சந்திரனின் எழுத்தில் தொனிக்கும் சத்தியம். தனது பலவீனங்களையும், கொள்கை சார்ந்த சறுக்கல்களையும் தயக்கமின்றி வாசகன் முன் எடுத்துவைக்கிறார். எதிலும் தனது செயல்களை நியாயப்படுத்தும் முயற்சி சற்றும் கிடையாது. ஒரு பாலியல் தொழிலாளியைப் போலீஸிடமிருந்து காப்பாற்றி தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கும் கட்டுரையில் அவரது கண்ணியம் வெளிப்படுகிறது. மற்றொரு கட்டுரையில், வீட்டிற்கு வரும் ஊறுகாய் விற்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டு அடிவாங்கி கூனிக் குறுகி தனது பலவீனமான பக்கத்தை வெளிப்படுத்துகிறார். ஆகச்சிறந்த சுயசரிதங்களில் ஒன்றாக காந்தியின் சத்தியசோதனையக் கொண்டாட காந்தியின் நேர்மைதானே காரணம்!
தொகுப்பில் உள்ள 'தீப்பாதி' மற்றும் 'பைத்தியக்காரன்' கட்டுரைகள்
மிகச்சிறந்த சிறுகதைகளாகக் கொள்ளத்தக்கன. சிவாஜி கணேசனைச் சந்தித்த அனுபவத்தை , ஒரு அடிமட்ட ரசிகனுக்கே உரிய குதூகலத்துடன் ‘மகாநடிகன்’ என்ற கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ஷைலஜாவின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. கல்லூரி காலத்தில் தொடர்ந்து சில மொழிபெயர்ப்பு இதழ்களை வாசித்துவந்திருக்கிறேன் என்கிற தகுதியில் என்னால் இதனை உறுதியாகச் சொல்லமுடியும். வழக்கமாக நேரடியான மொழிபெயர்ப்பில் தென்படும் வினோத வார்த்தைப் பிரயோகங்கள் (குறிப்பாக மலையாள மொழிபெயர்ப்பு), வேகத்தை தடைசெய்யும் அதிக்கபடியான வார்த்தைகள் போன்ற உபத்திரவங்கள் இல்லை. மொழிபெயர்ப்பை வாசிக்கிறோம் என்ற எண்ணமே தோன்றா வண்ணம் தெளிந்த நீரோடை போன்ற மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. நூலின் ஆசிரியர் கவிஞர் என்பதால் மங்கிய கவிதை போன்றதொரு நடையில் தான் மொத்தமுமே எழுதப்பட்டிருக்கிறது. இது மொழிபெயர்ப்பாளருக்குக் கூடுதல் சவால். இன்னமும் படிக்கவில்லையென்றால், கண்டிப்பாக வாசிக்கபடவேண்டிய புத்தகங்களின்
பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Saturday, March 27, 2010

அங்காடித் தெரு



சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களின் விலை சொல்லும் சிறுமி, ஹோட்டலில் தண்ணீர் வைக்கும் சிறுவன், சிக்னலில் டிவி கவர் வாங்கசொல்லி நச்சரிக்கும் சிறுவன் இவர்களைப்பார்க்கும் போதெல்லாம் , ஏன் இவர்களுக்கு மட்டும் இப்படியான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று தோன்றும். வாழ சரியான வாய்ப்புகள் வழங்கப்படாத இவர்களின் எதிர்காலம் என்ன என்ற அச்சமும், குற்றவுணர்வும் தோன்றும். அதுபோன்ற சமயங்களில் சட்டென்று கவனத்தைக் கலைத்துக் கொண்டு சொந்தவேலைகளில் மூழ்கிப்போவேன்(வோம்). இவர்களின் வாழ்க்கையை வலியுடன் திரையில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார் வசந்தபாலன். குறைகளென்று தேடிச்சொல்ல நிறைய இருந்தாலும், மிகச்சிறந்த படங்களின் வரிசையில் சந்தேகத்திற்கிடமின்றி இடம் பிடிக்கிறது ’அங்காடித்தெரு’. படம் பற்றிய எண்ணங்கள் மனதை அலைக்கழிப்பதால் “கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்” என்பதை மட்டும் சொல்லி பதிவை முடிக்கிறேன்.

Sunday, March 21, 2010

Love Sex Aur Dhokha(no spoilers)



கொஞ்ச நாட்களுக்கு முன்பு “Paranormal Activity” என்று ஒரு படம் பார்த்தேன். நான் பார்த்த பேய்ப்படங்களில் மிகச்சிறந்தது என அப்படத்தை சொல்லலாம்; சிறந்தது மட்டுமல்ல, அது ஏற்கனவே வெளிவந்திருக்கும் பேய்படங்களின் தரத்தை கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது. ஏனென்றால் பயம் என்பது காதல், காமம், நகைச்சுவை போலவே ஒரு உணர்வு. அதீத ஒப்பனையாலோ, எதிர்பாராத சமயத்தில் எழுப்பப்படும் உரத்த ஒலியினாலோ பயம் வருவதில்லை.அது வெறும் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தும். மாறாக, இந்தப் படம் ஊசியிலுள்ள மருந்தை உடம்பில் ஏற்றுவதைப்போல பார்வையாளனுக்குள் மெதுவாக பயத்தை ஏற்றுவதாக இருந்தது. இதற்கு அடிப்படையாக அமைவது video footage உத்தி. அதாவது படம் முழுமையையுமே ஒரு கதாபாத்திரம் ஹேண்டி கேமில்(Handy cam) எடுத்த காட்சிகளின் கோர்வையாகக் காட்டுவது. இது பார்வையாளனுக்கு முதலில் தான் சினிமா பார்க்கிறோம் என்ற எண்ணத்தைக் குறைக்கும்; சகஜ நிலையை ஏற்படுத்தும். பின் இயக்குனர் சொல்ல நினைக்கும் ஒவ்வொரு விஷயமும் , மங்கூஸ் மட்டையின் மைய்யத்தில் பட்ட பந்துபோல சிக்ஸர்தான். இந்த வீடியோஃபூட்டேஜ் உத்தியைப் பயன்படுத்தி இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்கும் முதல்(முழுநீள)ப்படம் 'Love Sex Aur Dhokha' (விருமாண்டியின் முதல் பத்து நிமிடங்கள் நினைவிருக்கலாம்).

திபாகர் பானர்ஜியின் முதல் இரண்டு படங்களைப்போலவே(Khosla ka Ghosla, Oye Lucky! Lucky Oye!), இதுவும் அசலான படைப்பு. முறையே காதல்,காமம் மற்றும் துரோகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மூன்று சிறுகதைகளை மூன்று பகுதிகளாக எடுத்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் இம்மூன்று அம்சங்களும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்திருப்பது சிறப்பு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் , கேமரா என்ற உபகரணம் எடுத்திருக்கும் விஸ்வரூபமும், அதனால் நாம் ப்ரைவஸி இழந்து அம்மணமாக்கப்பட்டிருப்பதும் உணர்த்தப்படுகிறது. எனினும், இவை அம்பலப்படுத்தும் உண்மைகளும் முக்கியமானவையே. குறிப்பாக நாம் ’நித்யானந்தமாக’ இருக்கும் இந்தசமயத்தில், இப்படத்தை நன்கு தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது.

படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் இவர்களைவிடவும் அதிகம் பாராட்டப்படவேண்டியவர்கள் இப்படத்தின் நடிகர்களே. ஏற்கனவே மக்களுக்கு பரிச்சயமான எந்த நடிகரையும் இந்த படத்தில் நடிக்கவைக்க முடியாது. ஆக, எல்லாரும் முதல்முறை நடிகர்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த எல்லாரும் கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாமல், இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் குறைகளென்று பார்த்தால், ஆங்காங்கே தலை தூக்கும் பாலிவுட்தனமான வசனங்கள், அவசரகதியில் எடுக்கப்பட்டது போன்ற உணர்வைத்தரும் கடைசி கதை இவற்றை சொல்லலாம். மற்றபடி இது மிக புத்திசாலித்தனமான,தைரியமான படம் என்பதை பல இடங்களில் உணர வைக்கிறார் இயக்குனர். முதல் கதையில் எதிர்பாராத ஒரு தருணத்தில் நிகழ்த்தப்படும் வன்முறை இதற்கு ஒரு உதாரணம். மூன்றாம் தர இயக்குனர்களிடம் சிக்கி சீரழிவதற்குமுன் இந்தப்படத்தைத் தமிழில் யாராவது எடுக்கலாம்.
3.5/5

Wednesday, March 17, 2010

Crazy Heart - திரைப் பார்வை



’நடிக்கவில்லை; கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்ற அடித்துத் துவைத்துக் கிழிக்கப்பட்ட வாக்கியத்தின் உண்மையான பொருளை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் “Crazy Heart” படம் பார்க்கலாம்.நீண்ட கால கண்ணாமூச்சிக்குப் பிறகு ஐந்தாவது நாமினேஷனில்
ஜெஃப் ப்ரிட்ஜஸ்க்கு ஆஸ்கர் குழந்தையைப் பெற்றுத் தந்திருக்கிறது இப்படம்.

இந்த படத்தில் ஜெஃப் ப்ரிட்ஜஸுக்கு Bad Blake என்ற (57 வயது) குடிகார பாடகன்(Country Singer) கதாபாத்திரம். ஒரு காலத்தில் புகழுடன் இருந்து, பின்பு நொடித்துப் போய், தெருவோர பார்களில் பாடிக்கொண்டிருப்பவர். இவருடன் இணைந்து முன்பு பாடிக்கொண்டிருந்த டாமி, இப்போது பெரிய நட்சத்திரம். திருமண வாழ்வில் தொடர் தோல்விகள், இசை உலகில் வீழ்ச்சி, தீராத குடிப்பழக்கம் என அழுகிக்கொண்டிருக்கிறது அவரது வாழ்க்கை. இந்நிலையில், பத்திரிக்கைக்காக தன்னை பேட்டி காண வரும் ஜீன் என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். ஜீனும் அவளது ஐந்து வயது மகனும் அவரது வாழ்வில் நம்பிக்கைகான ஒளியைத் தருகிறார்கள். இவர்களை பற்றுக்கொடியாகக் கொண்டு எப்படியாவது மீண்டுவரத் துடிக்கிறார். பெரும்பாலும் ஊகித்துவிடக் கூடிய தட்டையான கதையமைப்பு. எனினும்,இந்தப் படத்தை முக்கியமான படங்களின் வரிசையில் சேர்ப்பது ஜெஃப் ப்ரிட்ஜஸின் நடிப்பும், மென்மையான இசையும் தான்.

ப்ரிட்ஜஸின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்(திரை ஆளுமை!) அலாதியானது. நடை, உடை, கையசைவு, சிறு செருமல், சோர்வு என நுணுக்கமான விவரங்களுக்கும் முக்கியதுவம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தோல்வியுற்ற பாடகனை கண்முன் கொண்டுவருகிறார். விஸ்கியில் தோய்ந்த குரலில்அவர் பாடல்களைப் பாடும் போது ஜெஃப் ப்ரிட்ஜஸ் என்ற நடிகன் முழுமையாக மறைந்து Bad Blake என்ற பாடகன் உருக்கொள்கிறான். இதை விட ஒரு நடிகனுக்கு மகத்தான வெற்றி வேறென்ன இருக்க முடியும்?
இதற்கும் 'சென்ட் ஆஃப் அ வுமன்' படத்தில் அல்பசீனோவுக்கு
கிடைத்தது போல ஆளுமையை விவரிக்கும் பிரத்தியேக காட்சிகள் எதுவும் கிடையாது.கதையின் ஓட்டத்தில் முழுமையாகக் கரைந்து பல இடங்களில் அன்டர் ப்ளே(under play) செய்திருக்கிறார். ஜீனாக வரும் மேகி கில்லெனால், ராபர்ட் டூவெல், காலின் ஃபேரல் ஆகியோர் கன கச்சிதமாக அவரவர் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள். படத்தில் ஆங்காஙே வரும் கவிதுவமான வசனங்கள் புன்னகைக்க வைக்கின்றன.
(Jean: “Where’d all those songs come from?”
Bad Blake:“Life, unfortunately.” )

படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு அம்சம் இசை.பொதுவாக ஆங்கில பாடல்களைக் கேட்க்கும் வழக்கமில்லாத எனக்கே பாடல்களை திரையில் கேட்க இனிமையாக இருந்தன. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டி-போன் பர்னெட் மற்றும் (late) ஸ்டீஃபன் ப்ரூட்டன் அருமையான பாடல்களைத்
தந்திருக்கிறார்கள். குறிப்பாக "Weary kind" பாடல் இந்த முறை சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் வென்றிருக்கிறது.கேட்டுப் பாருங்கள்.


இயக்குனர் ஸ்காட் கூப்பர் பல தொலைக்காட்சி தொடர்களை எடுத்திருந்தாலும் இதுவே அவருக்கு முதல் படம்.திரைக்கதை விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும், போரடிக்காமல் செல்கிறது. ஜெஃப் ப்ரிட்ஜஸிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்காக இவரைக் கண்டிப்பாகப் பாராட்டலாம். ஜெஃப் ப்ரிட்ஜஸின் ஆகச்சிறந்க்ட நடிப்பாக 'பிக் லெபோஸ்கி'(Big lebowski) என்ற படத்தில் நடித்ததைக் குறிப்பிடுவார்கள். இந்த படத்திற்குபபின் அது மாறலாம்.

Congratz Dude!!

Tuesday, March 09, 2010

Tuesday Teasers 2

# Grab your current read.
# Let the book fall open to a random page.
# Share with us few “teaser” sentences from that page.
# You also need to share the title of the book that you’re getting your “teaser” from … that way people can have some great book recommendations if they like the teaser you’ve given!
# Please avoid spoilers!

ஒரு பூ
--------
மஞ்சள் வண்ணம்
அடுக்கடுக்காக இதழ்கள்.
ஒற்றைக் கொத்தில் ஏழெட்டாக பூப்பவை.
வஸந்த காலம் வருவதை
முதலில் தெரிந்துகொண்டு முதலில் பூப்பவை.
உற்றுப் பார்த்தால் அல்லது
சற்றே அருகில் சென்று பார்த்தால்
செந்நிறமாக மாறும் குணம் உடையவை.
முகர்ந்தால் எப்படி இருக்கும் என்று
கொத்துப் பூவைப் பறித்தேன்.
முகர்ந்தால் நாற்றம்.
இதைப்போல் அதைப்போல் என்றில்லை.
எனக்குக் குமட்டல். கிறுகிறுப்பு.
மெல்லச் சரிந்தேன்.
அற்பத்தில் அற்பம் ஒரு மஞ்சட் பூங்கொத்தை
மார்பின் மேல் வைத்துக்கொண்டு
கிடக்கிறான் என்று உலகம் சொல்கிறது

---
பக்கம் எண்: 34
புத்தகம்: பென்சில் படங்கள்
ஆசிரியர்: ஞானக்கூத்தன்
பதிப்பகம்: விருட்சம்

Sunday, March 07, 2010

லண்டன் டயரி - புத்தகப் பார்வை


வரலாறு படிப்பவர்களில் இருவகையுண்டு. முதல் வகை, அடிப்படையிலேயே வரலாறு பற்றிய செய்திகளில் ஆர்வம் உடையவர்கள். இவர்களுக்கு வரலாறு சொல்லப்படும் முறை குறித்தும், அதன் சுவாரஸியம் குறித்தும் அக்கறை கிடையாது. அதன் நம்பகத்தன்மையே பிராதமானது.வரலாற்றை சொல்லும்போது, எங்கேனும் காற்புள்ளி, அரைப்புள்ளி அதிகப்படியாக விழுந்தாலும் இவர்களுக்குக் கோபம் வந்துவிடும். இரண்டாம் வகை, என் போன்றவர்கள். பள்ளி நாட்களில் சரித்திர பாட வகுப்பில் குறட்டை விட்டுத் தூங்கியவர்கள். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மீது தீராத வெறுப்புடையவர்கள். ஆனால் , சரித்திரத்தையும் சொல்லும் விதமாகச் சொன்னால் சுவாரஸியமாகவே இருக்கும் என்று நம்புகிறவர்கள். இந்த இரண்டாம் வகையினருக்காகவே பெரும்பான்மையான புத்தகங்கள் இந்நாட்களில் எழுதப்படுகின்றன. இதில் பிரச்சினை, இந்த ஆசிரியர்கள் சுவாரசியம் சேர்க்கவேண்டி வரலாற்றினை சற்று வளைப்பது தான். இது ஆரம்பத்தில் வாசகனை உள்ளிளுக்கப் பயன் பட்டாலும், பின்பு இந்த செயற்கைத்தனம் சோர்வையே ஏற்படுத்தும். குறிப்பாக “ஆசிரியர் டுமீல் விடுகிறாரோ!!” என்று வாசகன் சந்தேகிக்கும் அந்த கணத்தில் புத்தகத்தின் தோல்வி துவங்குகிறது. அண்மையில் நான் வாசித்த ”லண்டன் டயரி” இந்த இரண்டு வகையும் அல்லாத / இரண்டுவகையினரையும் திருப்திப் படுத்தும் படி எழுதப்பட்டிருக்கும் ஒரு நூல். இரா.முருகன் இந்நூலில் கையாண்டிருக்கும் யுக்தி புத்திசாலித்தனமானது.அதாவது வரலாற்றை உள்ளபடி சொல்லி அதனோடு தன் நையாண்டியயும் இணைத்திருக்கிறார். நிகழ்வுகளின் நம்பகத்தன்மை பாதிக்காமலும், வாசகனை இறுதிவரை சோர்வடையாமலும் கொண்டு சென்றிருப்பதே இந்நூலின் வெற்றி.

லண்டன் மாநகரின் வரலாறென்பது இங்கிலாந்தின் மொத்தவரலாற்றுக்கும் , ஒருவகையில் உலக வரலாற்றுக்கும் ஆதாரமானது. ஆசிரியரே சொல்வதுபோல, இதன் வரலாறு நம்முடையதைப் போல நீண்டநெடியதல்ல. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வாக்கில்தான் இதன் துவக்கம் அமைகிறது. இதிலும் களபிரர்கள் காலம் போன்றதொரு இருண்டகாலம் உண்டு(சுமார் 100 வருடங்கள்). அதாவது என்ன நடந்தது, ஏது நடந்தது என்று தெரியாமல் வரலாற்று ஆசிரியர்கள் கைவிரித்துவிட்ட காலம். ஆக , மீதமுள்ள பத்தொன்பது நூற்றாண்டுகளில் நிகழ்வதுதான் லண்டனின் வரலாறு.

புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயமும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதில் லண்டனின் வரலாற்றையும், இரண்டாவதில் இன்றைய லண்டனின் காட்சிகளையும் ஆசிரியர் விவரித்துள்ளார். மேலோட்டமாகச் சொல்வதென்றால் பாலம் கட்டுவது, அடுத்த நாட்டை ஆக்கிரமிப்பது, அரசனை மாற்றுவது,தூக்குதண்டனை நிறைவேற்றுவது, தேவாலயங்கள், அரண்மனைகள் கட்டுவது, அவற்றை இடிப்பது அல்லது தீக்கிரையாக்குவது பின் மீண்டும் நிர்மாணிப்பது, இவையே பொதுவான நிகழ்வுகளாக இருந்திருக்கின்றன. தட்டையாக சொல்லியிருந்தால் சீக்கிரத்திலேயே அலுப்படைய செய்யும் அபாயமுள்ள வரலாறு, இரா.முருகனின் துள்ளலான நடையினால் பிழைக்கிறது. குறிப்பாக பழைய லண்டன், இன்றைய லண்டன் என பிரித்து, மாற்றி மாற்றி சொல்லியிருப்பது வாசகரை தொய்வடையாமல் கொண்டு செல்கிறது. இந்த வேறுபாடும் ஏதோ ஒரு புள்ளியில் மறைவது அருமை. இன்றைய லண்டனின் காட்சிகளை ஒரு கேமரா பார்வை கொண்டு விவரித்திருக்கிறார் முருகன். இதில் இவர் சொல்லும் காட்சிகள் லண்டனுக்கோ, குறைந்தபட்சம் ஏதாவதுஒரு வெளிநாட்டுக்கோ சென்ற எவரும் சந்திக்க நேர்பவைதான். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ’ஈஸ்ட் ஹாம்’ பற்றிய விவரணைகள் மீண்டும் அங்கு சென்றுவந்த அனுபவத்தை தந்தன.

புத்தகம் முழுவதும் லண்டனின் அழகான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் இவையாவும் கருப்பு வெள்ளையில் இருப்பது ஒரு குறை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பான்மையான இடங்களுக்கு நான் சென்றிருந்தாலும், அதன் வரலாற்று முக்கியதுவம் தெரியாமல் வெறும் ‘மேப் மார்க்கிங்’ செய்துவந்திருப்பது இதனைப் படித்தபின் புரிகிறது. மொத்தத்தில் நம்மை இருநூறு ஆண்டுகள் ஆண்டுவிட்டுப் போன வெள்ளையர்களின் வரலாற்றை நக்கலும் நையாண்டியுமாக சுவாரஸியமாக சொல்லிச்செல்கிறது ’
லண்டன் டையரி’.

Tuesday, January 05, 2010

Tuesday Teasers

# Grab your current read.
# Let the book fall open to a random page.
# Share with us few “teaser” sentences from that page.
# You also need to share the title of the book that you’re getting your “teaser” from … that way people can have some great book recommendations if they like the teaser you’ve given!
# Please avoid spoilers!

"குறிப்பிட்ட வடிவத்தில் அச்சாவதெல்லாம் கவிதை என்ற மாயை தகர்ந்த பிறகு
கவிதை அணுகுவதற்கும் கூடிய மட்டிலும் பகிர்ந்து கொள்வதற்கும் எளிதாகிறது.

கவிதையை நல்ல கவிதை கெட்ட கவிதை என்று பிரிக்க முடியாது, கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக் கொண்டுவிடுகிறது - அதனுடைய ஸ்திரமின்மையால், கண்ணை உறுத்தும் அழுத்தமான வண்ணங்களால், அனுபவ வறட்சியால், கூச்சல் போடுவதால், இன்னும் பிற அழிந்துபோன செயற்கையான வார்த்தைக் கூட்டங்களால். "
(பக்கம் எண்:221, ஆத்மாநாம் படைப்புகள், பதிப்பாசிரியர் பிரம்மராஜன்,காலசுவடு வெளியீடு)
அவ்வப்போது Tuesday Teasers பதிய முயற்சிக்கிறேன், முடிந்தால் செவ்வாய்கிழமைகளிலேயே!!

Sunday, January 03, 2010

புத்தகத் திருவிழா 2010




சிறுவயதில், தீபாவளிக்கு முதல்நாள் பங்கு பிரித்துக் தரப்படும் பட்டாசுகளைப் பார்க்கும் போது உண்டாகுமே, அதே போன்றதொரு உவகை நேற்று புத்தக சாலையிலிருந்து வாங்கிவந்த புத்தகங்களைப் பார்த்தபோது உண்டானது. பெரிதாக பட்டியல் எதுவும் தயாரித்துக்கொண்டு செல்லவில்லை. எனினும் வெவ்வேறு சமயங்களில், படிக்கவேண்டும்(Must Read) என்று மனது குறித்து வைத்திருந்த புத்தகங்களை பார்த்த மாத்திரத்தில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. இந்த வருடத்திற்கான புத்தக கோட்டா கிட்டத்தட்ட பூர்த்தியாகிவிட்டது. விடுபட்ட ஓரிரு புத்தகங்களை வாங்க அடுத்த வாரம் செல்ல வேண்டும். இனி புத்தகப் பட்டியல்..


1) India After Gandhi - Ramachandra Guha

இந்த வருடத்திற்குள் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தாலே என்னளவில் அது சாதனை தான். (900 பக்கங்கள்).


2) ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. சாவியில் அவர் எழுதிய கதைகளைத் தவிர்த்து மற்றவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன்.


3)அரசூர் வம்சம் - இரா.முருகன் (நாவல்)

இதற்கு வந்த விமர்சனக்கட்டுரைகளை படித்ததற்கு பதில் இந்த

புத்தகத்தைப் படிக்கத்துவங்கியிருந்தால், இவ்வளவு நேரம் பாதி புத்தகத்தைத் தாண்டியிருப்பேன். மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் நாவல்.


4) நவீனன் டைரி - நகுலன் (நாவல்)


5) நிழல்கள் - ஹரன் பிரசன்னா (கவிதைத்தொகுப்பு)

6) பேசாத பேச்செல்லாம் - ச.தமிழ்ச்செல்வன் (கட்டுரைகள்)

7) கிருஷ்ணா கிருஷ்ணா – இந்திரா பார்த்தசாரதி (நாவல்)

8) இடாகினி பேய்களும் – கோபி கிருஷ்ணன் (நாவல்)

9) அகி – முகுந்த் நாகராஜன் (கவிதைகள்)

10) நினைவோடை - அசோக மித்ரன் (27 கட்டுரைகள்)

11) காக்டெய்ல் – சுதேசமித்ரன் (நாவல்)

12) லண்டன் டைரி - இரா.முருகன் (பயணக்குறிப்புகள்)

13) பென்சில் படங்கள் – ஞானக்கூத்தன் (கவிதைகள்)

14) நாலு மூலை – ரா.கி.ரங்கராஜன் (கட்டுரைகள்).