
வரலாறு படிப்பவர்களில் இருவகையுண்டு. முதல் வகை, அடிப்படையிலேயே வரலாறு பற்றிய செய்திகளில் ஆர்வம் உடையவர்கள். இவர்களுக்கு வரலாறு சொல்லப்படும் முறை குறித்தும், அதன் சுவாரஸியம் குறித்தும் அக்கறை கிடையாது. அதன் நம்பகத்தன்மையே பிராதமானது.வரலாற்றை சொல்லும்போது, எங்கேனும் காற்புள்ளி, அரைப்புள்ளி அதிகப்படியாக விழுந்தாலும் இவர்களுக்குக் கோபம் வந்துவிடும். இரண்டாம் வகை, என் போன்றவர்கள். பள்ளி நாட்களில் சரித்திர பாட வகுப்பில் குறட்டை விட்டுத் தூங்கியவர்கள். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மீது தீராத வெறுப்புடையவர்கள். ஆனால் , சரித்திரத்தையும் சொல்லும் விதமாகச் சொன்னால் சுவாரஸியமாகவே இருக்கும் என்று நம்புகிறவர்கள். இந்த இரண்டாம் வகையினருக்காகவே பெரும்பான்மையான புத்தகங்கள் இந்நாட்களில் எழுதப்படுகின்றன. இதில் பிரச்சினை, இந்த ஆசிரியர்கள் சுவாரசியம் சேர்க்கவேண்டி வரலாற்றினை சற்று வளைப்பது தான். இது ஆரம்பத்தில் வாசகனை உள்ளிளுக்கப் பயன் பட்டாலும், பின்பு இந்த செயற்கைத்தனம் சோர்வையே ஏற்படுத்தும். குறிப்பாக “ஆசிரியர் டுமீல் விடுகிறாரோ!!” என்று வாசகன் சந்தேகிக்கும் அந்த கணத்தில் புத்தகத்தின் தோல்வி துவங்குகிறது. அண்மையில் நான் வாசித்த ”லண்டன் டயரி” இந்த இரண்டு வகையும் அல்லாத / இரண்டுவகையினரையும் திருப்திப் படுத்தும் படி எழுதப்பட்டிருக்கும் ஒரு நூல். இரா.முருகன் இந்நூலில் கையாண்டிருக்கும் யுக்தி புத்திசாலித்தனமானது.அதாவது வரலாற்றை உள்ளபடி சொல்லி அதனோடு தன் நையாண்டியயும் இணைத்திருக்கிறார். நிகழ்வுகளின் நம்பகத்தன்மை பாதிக்காமலும், வாசகனை இறுதிவரை சோர்வடையாமலும் கொண்டு சென்றிருப்பதே இந்நூலின் வெற்றி.
லண்டன் மாநகரின் வரலாறென்பது இங்கிலாந்தின் மொத்தவரலாற்றுக்கும் , ஒருவகையில் உலக வரலாற்றுக்கும் ஆதாரமானது. ஆசிரியரே சொல்வதுபோல, இதன் வரலாறு நம்முடையதைப் போல நீண்டநெடியதல்ல. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வாக்கில்தான் இதன் துவக்கம் அமைகிறது. இதிலும் களபிரர்கள் காலம் போன்றதொரு இருண்டகாலம் உண்டு(சுமார் 100 வருடங்கள்). அதாவது என்ன நடந்தது, ஏது நடந்தது என்று தெரியாமல் வரலாற்று ஆசிரியர்கள் கைவிரித்துவிட்ட காலம். ஆக , மீதமுள்ள பத்தொன்பது நூற்றாண்டுகளில் நிகழ்வதுதான் லண்டனின் வரலாறு.
புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயமும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதில் லண்டனின் வரலாற்றையும், இரண்டாவதில் இன்றைய லண்டனின் காட்சிகளையும் ஆசிரியர் விவரித்துள்ளார். மேலோட்டமாகச் சொல்வதென்றால் பாலம் கட்டுவது, அடுத்த நாட்டை ஆக்கிரமிப்பது, அரசனை மாற்றுவது,தூக்குதண்டனை நிறைவேற்றுவது, தேவாலயங்கள், அரண்மனைகள் கட்டுவது, அவற்றை இடிப்பது அல்லது தீக்கிரையாக்குவது பின் மீண்டும் நிர்மாணிப்பது, இவையே பொதுவான நிகழ்வுகளாக இருந்திருக்கின்றன. தட்டையாக சொல்லியிருந்தால் சீக்கிரத்திலேயே அலுப்படைய செய்யும் அபாயமுள்ள வரலாறு, இரா.முருகனின் துள்ளலான நடையினால் பிழைக்கிறது. குறிப்பாக பழைய லண்டன், இன்றைய லண்டன் என பிரித்து, மாற்றி மாற்றி சொல்லியிருப்பது வாசகரை தொய்வடையாமல் கொண்டு செல்கிறது. இந்த வேறுபாடும் ஏதோ ஒரு புள்ளியில் மறைவது அருமை. இன்றைய லண்டனின் காட்சிகளை ஒரு கேமரா பார்வை கொண்டு விவரித்திருக்கிறார் முருகன். இதில் இவர் சொல்லும் காட்சிகள் லண்டனுக்கோ, குறைந்தபட்சம் ஏதாவதுஒரு வெளிநாட்டுக்கோ சென்ற எவரும் சந்திக்க நேர்பவைதான். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ’ஈஸ்ட் ஹாம்’ பற்றிய விவரணைகள் மீண்டும் அங்கு சென்றுவந்த அனுபவத்தை தந்தன.
புத்தகம் முழுவதும் லண்டனின் அழகான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் இவையாவும் கருப்பு வெள்ளையில் இருப்பது ஒரு குறை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பான்மையான இடங்களுக்கு நான் சென்றிருந்தாலும், அதன் வரலாற்று முக்கியதுவம் தெரியாமல் வெறும் ‘மேப் மார்க்கிங்’ செய்துவந்திருப்பது இதனைப் படித்தபின் புரிகிறது. மொத்தத்தில் நம்மை இருநூறு ஆண்டுகள் ஆண்டுவிட்டுப் போன வெள்ளையர்களின் வரலாற்றை நக்கலும் நையாண்டியுமாக சுவாரஸியமாக சொல்லிச்செல்கிறது ’லண்டன் டையரி’.
2 comments:
பகிர்தலுக்கு நன்றி பரத்.
Thanks for the comments santhosh!!
Post a Comment