Sunday, March 21, 2010
Love Sex Aur Dhokha(no spoilers)
கொஞ்ச நாட்களுக்கு முன்பு “Paranormal Activity” என்று ஒரு படம் பார்த்தேன். நான் பார்த்த பேய்ப்படங்களில் மிகச்சிறந்தது என அப்படத்தை சொல்லலாம்; சிறந்தது மட்டுமல்ல, அது ஏற்கனவே வெளிவந்திருக்கும் பேய்படங்களின் தரத்தை கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது. ஏனென்றால் பயம் என்பது காதல், காமம், நகைச்சுவை போலவே ஒரு உணர்வு. அதீத ஒப்பனையாலோ, எதிர்பாராத சமயத்தில் எழுப்பப்படும் உரத்த ஒலியினாலோ பயம் வருவதில்லை.அது வெறும் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தும். மாறாக, இந்தப் படம் ஊசியிலுள்ள மருந்தை உடம்பில் ஏற்றுவதைப்போல பார்வையாளனுக்குள் மெதுவாக பயத்தை ஏற்றுவதாக இருந்தது. இதற்கு அடிப்படையாக அமைவது video footage உத்தி. அதாவது படம் முழுமையையுமே ஒரு கதாபாத்திரம் ஹேண்டி கேமில்(Handy cam) எடுத்த காட்சிகளின் கோர்வையாகக் காட்டுவது. இது பார்வையாளனுக்கு முதலில் தான் சினிமா பார்க்கிறோம் என்ற எண்ணத்தைக் குறைக்கும்; சகஜ நிலையை ஏற்படுத்தும். பின் இயக்குனர் சொல்ல நினைக்கும் ஒவ்வொரு விஷயமும் , மங்கூஸ் மட்டையின் மைய்யத்தில் பட்ட பந்துபோல சிக்ஸர்தான். இந்த வீடியோஃபூட்டேஜ் உத்தியைப் பயன்படுத்தி இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்கும் முதல்(முழுநீள)ப்படம் 'Love Sex Aur Dhokha' (விருமாண்டியின் முதல் பத்து நிமிடங்கள் நினைவிருக்கலாம்).
திபாகர் பானர்ஜியின் முதல் இரண்டு படங்களைப்போலவே(Khosla ka Ghosla, Oye Lucky! Lucky Oye!), இதுவும் அசலான படைப்பு. முறையே காதல்,காமம் மற்றும் துரோகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மூன்று சிறுகதைகளை மூன்று பகுதிகளாக எடுத்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் இம்மூன்று அம்சங்களும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்திருப்பது சிறப்பு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் , கேமரா என்ற உபகரணம் எடுத்திருக்கும் விஸ்வரூபமும், அதனால் நாம் ப்ரைவஸி இழந்து அம்மணமாக்கப்பட்டிருப்பதும் உணர்த்தப்படுகிறது. எனினும், இவை அம்பலப்படுத்தும் உண்மைகளும் முக்கியமானவையே. குறிப்பாக நாம் ’நித்யானந்தமாக’ இருக்கும் இந்தசமயத்தில், இப்படத்தை நன்கு தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது.
படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் இவர்களைவிடவும் அதிகம் பாராட்டப்படவேண்டியவர்கள் இப்படத்தின் நடிகர்களே. ஏற்கனவே மக்களுக்கு பரிச்சயமான எந்த நடிகரையும் இந்த படத்தில் நடிக்கவைக்க முடியாது. ஆக, எல்லாரும் முதல்முறை நடிகர்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த எல்லாரும் கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாமல், இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் குறைகளென்று பார்த்தால், ஆங்காங்கே தலை தூக்கும் பாலிவுட்தனமான வசனங்கள், அவசரகதியில் எடுக்கப்பட்டது போன்ற உணர்வைத்தரும் கடைசி கதை இவற்றை சொல்லலாம். மற்றபடி இது மிக புத்திசாலித்தனமான,தைரியமான படம் என்பதை பல இடங்களில் உணர வைக்கிறார் இயக்குனர். முதல் கதையில் எதிர்பாராத ஒரு தருணத்தில் நிகழ்த்தப்படும் வன்முறை இதற்கு ஒரு உதாரணம். மூன்றாம் தர இயக்குனர்களிடம் சிக்கி சீரழிவதற்குமுன் இந்தப்படத்தைத் தமிழில் யாராவது எடுக்கலாம்.
3.5/5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment