Friday, April 30, 2010
சிதம்பர நினைவுகள் - வாசக அனுபவம்
புத்தகவிமர்சனங்கள் படிக்கும் போது ஒருவித செலக்டிவ் அம்னிஷியா இருப்பது உசிதம். அதாவது புத்தகம் குறித்த மேலோட்டமான விவரங்கள் மட்டும் நினைவில் இருக்கவேண்டும். உதாரணமாக யார் எழுதியது, புத்தகம் குறித்து விமர்சகரின் ஒட்டுமத்த மதிப்பீடு என்ன போன்றவற்றை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் நுணுக்கமான விஷயங்கள், சிலாகிப்புகளை மறந்து விடலாம். ஏனெனில் முதல்முறை புத்தகத்தை படிக்கும்போது வாசகனுக்கு நியாயமாக எழவேண்டிய உணர்வுகளை இவை பாதிக்கும். அந்த வகையில் நான் அண்மையில் கண்டெடுத்த ஒரு முத்து “சிதம்பர நினைவுகள்”. இந்த புத்தகத்தைப் பற்றி நிறைய கேள்விபட்டிருந்தாலும், இது குறித்த எந்த விபரமும் நினைவில் இல்லை. சொல்லப்போனால் இதன் ஆசிரியர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றி கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆனால், இப்போது எனக்குப் பிடித்தமான புத்தகங்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.
மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய “சிதம்பர ஸ்மரண” என்ற கட்டுரைத் தொகுதியினை திருமதி கே.வி.ஷைலஜா, சிதம்பர நினைவுகளாகத் தமிழில் ஆக்கித் தந்திருக்கிறார். தனித்தனி சம்பவங்களாக 21 கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூலை சுயசரிதம் என்று வகைப்படுத்துவதும் சரியாகவே இருக்கும். காரணம், புத்தகத்தை படித்து முடிக்கும்போது பாலச்சந்திரன் பற்றிய முழுமையான சித்திரம் வாசகனுக்கு உருவாகும். கட்டுரைகளின் வழியே பாலச்சந்திரன் என்ற கவிஞனை வளர்த்தெடுப்பது இனிய அனுபவம்.
புத்தகத்தின் தலைப்பிலான கட்டுரை(சிதம்பர நினைவுகள்) முதலாவதாக அமைந்துள்ளது. சிதம்பரம் கோவிலில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிகளைச் சந்திக்கிறார். ஒருவருக்கொருவர் ஆதரவாய், அன்யோன்யமாய் அன்பு செலுத்திக்கொள்ளும் அவர்களைக் கண்டு மனம் நெகிழ்ந்து போகிறார். தள்ளாத வயதில் சொந்த பந்தங்களைத் தாமாகவே பிரிந்து வந்து அவர்கள் வாழும் வாழ்க்கை ஒரு மகத்தான தவம் போலுள்ளது. அப்போது அவருக்கு தன் தாயின் நினைவு வருகிறது. அவரது தனிமை பற்றிய எண்ணம் மனதை சஞ்ஜலப் படுத்துகிறது. பாலச்சந்திரனுக்கும் அவருடைய தாயருக்குமான உறவு மிகுந்த சிக்கலானதாக இருப்பது கட்டுரைகளினூடாக காணக் கிடைக்கிறது. தாய்மீது மிகுந்த பாசம் கொண்டவராக ஆனால் அவரை சரியாக பராமரிக்கத் தவறியதற்காக மிகுந்த குற்ற உணர்ச்சி உடையவராக இருக்கிறார். தன் வீட்டுக்கு பிச்சைகேட்டு வரும் முதியவளிடமும், தென்னாப்பிரிக்காவில் தான் சந்திக்கும் மார்த்தா என்ற மூதாட்டியிடமும் மிகுந்த பிரியத்துடன் நடந்துகொள்ளும் பாலச்சந்திரன் அவர்களில் தன் தாயையே காண்கிறார். தன் தாயிடம் தான் கொண்ட பாசத்தைக் காட்டிலும் அதனை வெளிப்படுத்த முடியாதது குறித்த மன உளைச்சலை கட்டுரைகளில் அதிகம் பதிவுசெய்கிறார்.
இது தவிர, பாலச்சந்திரன் அதிகமாகப் பேசும் மற்றொரு விஷயம் ‘பசி’. கல்லூரியில் படிக்கும்போதே நக்ஸல் இயக்கங்களில் சேர்ந்து, அதன் காரணமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அதுமுதல் துவங்கி வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஸ்திர நிலை ஏற்படும்வரை, வறுமையின் ஒவ்வொரு பல்சக்கரத்திலும் அரைபடுகிறது அவரது வாழ்வு. குறிப்பாக பசி அவரை முழுமையாக வென்றெடுக்கிறது. ஒரு திருவோண நாளன்று மிகுந்த பசியுடன் ஒரு வீட்டில் பிச்சை எடுக்கவும் தயங்காதவராக ஆகிறார். அவருக்கு உணவு வழங்கும் அந்த வீட்டில் அவரை கவிஞர் என்பதை நன்கறிந்த ஒரு பெண் இவரைக் கண்டுகொண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனைவிட தர்மசங்கடமான ஒரு நிலை எந்த கவிஞனுக்கும் ஏற்பட முடியாது. அப்போது அவரது மனநிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“கடவுளே! பாதிகூட சாப்பிடலயே, எழுந்து ஓடிவிடலாமா? - வேண்டாம் ஒரு இலை முழுக்க இருக்கும் சோற்றைத் தூக்கியெறியவா?
மதிப்பும் மரியாதையும்விடப் பெரியது பசியும்சோறும் தான்.நான் சலனமின்றி சாப்பிட ஆரம்பித்தேன்.”
மற்றொரு கட்டுரையில், ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்து பின்பு பைத்தியம் பிடித்து தெருவில் அலையும் தன் நண்பனைக் கண்டு அவருக்கு நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்து உணாவகத்துக்கு அழைத்துச்செல்கிறார். அங்கே உணவைக் கண்டதும் பாய்ந்து உண்ணும் தனது நண்பனைக் பற்றி இப்படி சொல்கிறார்.
“பசி இல்லாமல் போக, பைத்தியத்தினால் கூட முடியவில்லையே என்ற துக்கம் என்னுள் ப்ரவாகமெடுத்தது. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூட பசிக்குப் பிறகுதான் என்ற உண்மை எனக்குத் தெளிவாகப் புரிந்தது.”
வறுமை காரணமாக பிள்ளை பெற்றுக்கொள்ள கூடாது என கர்பவதியான தனது மனைவியை மிரட்டி கருக்கலைப்பு செய்வதை சொல்லும் ’கர்பவதம்’ கட்டுரை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இந்நூலை சுயசரிதம் என வகைப்படுத்த மற்றொரு காரணம் பாலச்சந்திரனின் எழுத்தில் தொனிக்கும் சத்தியம். தனது பலவீனங்களையும், கொள்கை சார்ந்த சறுக்கல்களையும் தயக்கமின்றி வாசகன் முன் எடுத்துவைக்கிறார். எதிலும் தனது செயல்களை நியாயப்படுத்தும் முயற்சி சற்றும் கிடையாது. ஒரு பாலியல் தொழிலாளியைப் போலீஸிடமிருந்து காப்பாற்றி தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கும் கட்டுரையில் அவரது கண்ணியம் வெளிப்படுகிறது. மற்றொரு கட்டுரையில், வீட்டிற்கு வரும் ஊறுகாய் விற்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டு அடிவாங்கி கூனிக் குறுகி தனது பலவீனமான பக்கத்தை வெளிப்படுத்துகிறார். ஆகச்சிறந்த சுயசரிதங்களில் ஒன்றாக காந்தியின் சத்தியசோதனையக் கொண்டாட காந்தியின் நேர்மைதானே காரணம்!
தொகுப்பில் உள்ள 'தீப்பாதி' மற்றும் 'பைத்தியக்காரன்' கட்டுரைகள்
மிகச்சிறந்த சிறுகதைகளாகக் கொள்ளத்தக்கன. சிவாஜி கணேசனைச் சந்தித்த அனுபவத்தை , ஒரு அடிமட்ட ரசிகனுக்கே உரிய குதூகலத்துடன் ‘மகாநடிகன்’ என்ற கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.
இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ஷைலஜாவின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. கல்லூரி காலத்தில் தொடர்ந்து சில மொழிபெயர்ப்பு இதழ்களை வாசித்துவந்திருக்கிறேன் என்கிற தகுதியில் என்னால் இதனை உறுதியாகச் சொல்லமுடியும். வழக்கமாக நேரடியான மொழிபெயர்ப்பில் தென்படும் வினோத வார்த்தைப் பிரயோகங்கள் (குறிப்பாக மலையாள மொழிபெயர்ப்பு), வேகத்தை தடைசெய்யும் அதிக்கபடியான வார்த்தைகள் போன்ற உபத்திரவங்கள் இல்லை. மொழிபெயர்ப்பை வாசிக்கிறோம் என்ற எண்ணமே தோன்றா வண்ணம் தெளிந்த நீரோடை போன்ற மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. நூலின் ஆசிரியர் கவிஞர் என்பதால் மங்கிய கவிதை போன்றதொரு நடையில் தான் மொத்தமுமே எழுதப்பட்டிருக்கிறது. இது மொழிபெயர்ப்பாளருக்குக் கூடுதல் சவால். இன்னமும் படிக்கவில்லையென்றால், கண்டிப்பாக வாசிக்கபடவேண்டிய புத்தகங்களின்
பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அது...
அற்புதமான கணங்களை படம்பிடித்துக்காட்டியிருப்பார்
எனக்கும் மிகவும் பிடித்த புத்தகம் இது பரத். இரண்டு முறை வாசித்திருக்கிறேன். ஷைலஜாவின் அருமையான மொழிபெயர்ப்பு தங்குதடையில்லாத வாசிப்பானுபவத்தை தருவது. பகிர்விற்கு நன்றி பரத்
Post a Comment