Sunday, May 13, 2007

திகம்பர சாமியார் திடும் பிரவேசம் (அல்லது) திரிபுரசுந்தரி






நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறேன்,வாண்டுமாமாவின் மந்திரக்கம்பளங்கள் போரடிக்கத் துவங்கிருந்தன.ஹாங்காங்கில் சங்கர்லால்,அமிஞ்சிகரையில் சங்கர்லால் என கையில் கிடைத்த துப்பறியும் கதைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போது என் அண்ணன் 'இதுவும் துப்பறியும் கதைதான்,படி' என்று நைந்து பொடிப்பொடியாகும் நிலையில் இருந்த ஒரு (நூலக)புத்தகத்தைக் கொடுத்தான்.அந்த புத்தகம் தான் தி.தி.பிரவேசம் அல்லது திரிபுரசுந்தரி(இரண்டு தலைப்புகள் :) ).எழுதியவர் வடுவூர் K துரைசாமி ஐயங்கார்.1920களில் எழுதப்பட்ட நாவல்.பழைய கதையாதலால் சுவாரஸியமாயிராது என்ற அபிப்ராயத்தாலும்,வழக்கொழிந்து போன பல எழுத்துக்கள் பயன்படுத்தப் பட்டிருந்ததாலும் சோர்ந்து போய் 10பக்கங்களில் நிறுத்திவிட்டேன்.பிறகு என் அண்ணன் பாதிவரை கதை சொல்லி நிறுத்த ,ஆர்வமாகி முழுக்கதையையும் படித்துமுடித்ததாக ஞாபகம்.

வடுவூராரின் கதைகளில்(பிரதான)துப்பறியும் கதாபாத்திரம் இந்த திகம்பர சாமியார்.விதவிதமாக வேடமணிந்து எதிர்பாராத சமயங்களில் entry கொடுப்பதும் பின்னால் நடக்கப்போவதை யூகித்து சாதுர்யமாக செயல்படுவதும் இவரது ஸ்பெஷாலிட்டி.கடந்தவாரம் திருச்சியில் நடந்த புத்தகக் கண்காட்சி ஒன்றில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்கள் அனைத்தும் அல்லயன்ஸ் பதிப்பகத்தாரால் திரும்பக் கொண்டு வரப்பட்டிருப்பது கண்டு பரவசமடைந்தேன்.அதிலிருந்து "வித்தியாசாகரம்" என்ற ஹாஸிய நாவல் ஒன்றை வாங்கி வந்தேன்.நாவலைக்காட்டிலும் புத்தகத்தின் முதற்சில பக்கங்களில் இருந்த துரை சாமி ஐயங்கார் பற்றிய தகவல்கள் படிக்க பிரமிப்பாகவும்,சுவாரஸியமாகவும் இருந்தன.நெட்டில் இவரைப்பற்றித் துழாவியதில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் கிடைக்காதது வருத்தமளித்தது.வடுவூர் துரைசாமி ஐயங்கார் பற்றிய தகவல்களை இப்பதிவின் மூலம் சேமிக்கிறேன்.

******
இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களை தம் துப்பறியும் கதைகளால் பிணைத்தவர்.புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி,பரந்த ஓர் வாசக உலகினைப் படைத்துக்கொண்ட பெருமையர்.Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு,சொந்தமாகவும் படைத்துள்ளார்.இவரது படைப்பில் சிறந்ததாக மேனகா,கும்பகோணம் வக்கீல் குறிப்பிடத்தக்கன;படமாகவும் வந்தவை.

நடுத்தர உயரம்,ஒல்லியான உடல்,கருத்தமேனி,கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு,அங்கவஸ்திரம்,பஞ்சகச்சம்,தலையில் குல்லா,காலில் கட் ஷூ,கையில் தடி,நெற்றியில் எப்போதும் திருமண்வாய்,வாய் நிறைய வெற்றிலை,புகையிலை,தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமையோடிருக்க.மொத்தத்தில் கைநிறைய சம்பாதித்த கவலையில்லாத உல்லாச மனிதர்.இவர் மாடிக்கு ஜே.ஆர்.ரங்கராஜூ,வை.மு.கோ,எஸ்.எஸ்.வாசன் வந்து போவர்.

-தமிழ் இலக்கிய வரலாறு (மது.ச.விமலானந்தம்)

******



முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் கல்கி என்கிற எழுத்தாளர் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்ததுபோல இருபதுகளில் தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் என்று ஜே.ஆர்.ரங்கராஜூ என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும்.

1923,24 முதல் 27 வரையில் தஞ்சையில் கல்யாண சுந்திரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது பச்சை,மஞ்சள்,சிவப்பு அட்டையில் டெமி சைஸில் அவர்கள் நாவல்கள் ஒவ்வொன்றாக அப்பாவுக்குத் தெரியாமல் ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிப்படித்த நினைவிருக்கிறது.படித்துவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போனால் அப்பா சண்டை பிடிப்பாரென்று அப்போது மேல வீதியில் தெற்கு கோடியில் இருந்த ஒரு லைப்ரரிக்கு இனாமாகக் கொடுத்து விடுவேன்.இப்படிப் படித்த நாவல்கள் என்று கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலை மகளும்,வஸந்த கோகிலம்,பூரண சந்திரோதயம்,விலாஸவதி,திகம்பர சாமியார்,மேனகா இவை நினைவுக்கு வருகிறன.ஒரு நாவல் கலைப்பிரஞையுடன்,சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன்,விரஸமான விஷயங்களைக்கூட அதிக விரஸம் தட்டாமல் எழுதுவதில் சிரத்தையுடன் எழுதிய வடுவூரார் உண்மையிலேயே இலக்கியப் பிரக்ஞை உடையவர் என்பதில் சந்தேகத்துகிடமேயில்லை.

ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserablesஎன்கிற நாவலை அற்புதமாகத் தமிழில் எழுதியிருக்கிறார்.

எகிப்தில் தலைமுறை தலைமுறையாக பாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்கிற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும்,அதையெல்லாம் சொல்லி தான் ஒரு நூல் எழுதிகொண்டிருப்பதாகவும் சொன்னார்.இந்த சரித்திர உண்மையில் இருந்த அவரது அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக ஆங்கிலத்தில் Long missing Links என்று ஒரு 900 பக்க நூல் எழுதி அதைத் தன் சொந்த செலவிலேயெ அச்சிட்டு விற்க முயன்றார்.புஸ்தகம் விற்கவில்லை.அச்சுக்கும் பேப்பருக்கும் ஆன கடனை புதுசாக வாங்கிய வீட்டை விற்று அடைத்து விட்டு,பேசாமல் கிராமத்துக்கு போய்விட்டார் என எண்ணுகிறேன்.
தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை;புரிந்து கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

-இலக்கிய சாதனையாளர்கள் - க.நா.சு.

******



துரைசாமி ஐயங்காரின் மிகப் பிரசித்தமான மேனகா என்ற நாவலின் முதல் பக்கத்திலேயே ஓர் அடிக்குறிப்பு காணப்படுகிறது:

'சாம்பசிவையங்கார்,மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்'
என்று அந்த குறிப்பு விளக்குகிறது.

இவரது நாவல்களில் மேனகாவை அடுத்து மிகப்பிரசித்தி பெற்றது கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பரசாமியார் என்பது.பல மர்மங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த இந்த நாவலில் தஞ்சை பிராந்தியத்தில் அன்று நிலவிய சூழ்நிலை வருணிக்கப்பட்டிருக்கிறது.

துரைசாமி ஐயங்காரின் செல்வாக்கைப் பயன் படுத்தி,குடும்ப சூழ்நிலையை வைத்து,ஜனரஞ்சகமான நாவல்களை எழுதிப் பெயரடைந்தவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.

- தமிழ் நாவலிம் தோற்றமும் வளர்ச்சியும் - சிட்டி,சிவபாத சுந்திரம்.

******
புராணக் கதைகளும்,இதிகாசக் கதைகளும்,ராஜா ராணிக் கதைகளும் படமாக எடுக்கப்பட்ட தமிழ்த்திரையின் தொடக்க காலத்தில்... முதன் முதலாக நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மேனகா.1935ல் மேனகா நாவலை படமாக்கியபோது அதில் டி.கே.பகவதி,டி,கே.ஷண்முகம்,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.கே.சங்கரன்,எஸ்.வி.சகஸ்ரநாமம்,கே.ஆர்.ராமசாமி,சிவதாணு ஆகியோர் நடித்தனர்.இவர்கள் அனைவருக்கும் இதுவே முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி.பாரதியாரின் பாடல் ஒலித்த படம் என்ற வரலாற்றுப் பெருமையும் மேனகா படத்தையே சேரும்.

- பதிப்புத் தொழிலில் உலகம்

*******

வடுவூராரின் நவீனம் 'மைனர் ராஜாமணி' சினிமாவாக வந்து திரையிட்டதும் ஒரு சமூகத்தை இழிவு செய்வதாக வழக்கு தொடர்ந்து நிறுத்த்ப்பட்டது.இந்த அதிர்ச்சி,அவமானம் தாங்காது குருதிக்கொதிப்பால் மாண்டார்

3 comments:

ப்ரசன்னா (குறைகுடம்) said...

துரைசாமி ஐயங்காரைப்பற்றிய அரிய தகவல்கள். திகம்பர சாமியார் படித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன :-)

அனுசுயா said...

//குருதிக்கொதிப்பால் மாண்டார்//

தமிழ் இனிமையாக உள்ளது. நல்ல படைப்பு பரத்.

பரத் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ப்ரசன்னா

நன்றி அனுசுயா.தொடர்ந்து படியுங்கள்