Sunday, March 22, 2009

புத்தகப் பார்வை: The Stranger

"Mother died today. Or maybe yesterday, I don't know. I had a telegram from the home: 'Mother passed away. Funeral tomorrow. Yours sincerely.' That doesn't mean anything. It may have happened yesterday."

ஆல்பெர் காம்யூவுக்கு நோபல் பரிசை பெற்றுத் தந்த "The Stranger" என்ற நாவலின் பிரசித்தி பெற்ற துவக்க வரிகள் இவை. இருத்தலியல் குறித்த மிக முக்கியமான புனைவாக இன்றளவும் இந்நாவல் கொண்டாடப் படுகிறது . இரண்டாம் உலகப்போருக்கு சற்றுமுன் துவங்கும் கதை ,மெர்சால்(Mersault) என்ற அல்ஜீரிய இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அவனது மன ஓட்டங்களின் ஊடாக விவரிக்கிறது. அயின் ராண்டிற்கு(Ayn Rand) அவரது சித்தாந்தங்களின் முழு உருவமாக ஹோவர்ட் ரோக் திகழ்ந்தது போல காம்யூவின் இருத்தலியல் கொள்கைகளின் மொத்தவடிவமாக மெர்சால் விளங்குகிறான். தாய் இறந்துவிட்ட துக்க செய்தியை, யாருக்கோ நடந்ததைப் போல உணர்ச்சியற்று அணுகுவதிலிருந்து துவங்குகிறது கதை. மெர்சால் உடல் சார்ந்த உணர்ச்சிகளுக்கு மட்டுமே இடமளித்து , நிகழ்கால செளகரியங்களை மட்டுமே பேணி வாழ்பவன். அவனைப் பொருத்தவரை உலக நியதி, உறவுகள்,வாழ்வின் அர்த்தம் எல்லாம் மனிதனால் கற்பித்துக் கொள்ளப்படுபவவை. உள்ளபடியே அவற்றுக்குப் பொருளேதும் இல்லை, அறிவியல் சார் உண்மைகள் உட்பட.

தாயின் சவ அடக்கத்திற்கு செல்கிறான் மெர்சால். அங்கு, தாயின் முகத்தைப் பார்ப்பதற்கு கூட அவன் ஆர்வமற்று இருப்பதை கண்டு அங்குள்ளவர்கள் வியப்படைகிறார்கள். அடுத்தநாள் அலுவலகத்திற்கு சென்று வழகம்போல் தன் பணியைத் தொடர்கிறான். அவனது மேலதிகாரி அவனது பணி உயர்வினைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் மெர்சால் அதில் ஏதும் விருப்பமின்றி இருப்பது கண்டு அவருக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. அதற்கு மெர்சால் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
I answered,that one never changed his way of life; one life was as good as another. I’d have preferred not to vex him, but I saw no reason for “changing my life.”

மெர்சாலைக் காதலிக்கும் மேரி, அவனும் தன்னைக் காதலிக்கிறானா, திருமணம் செய்துகொள்ளலாமா எனக் கேட்கிறாள். அதற்கு மெர்சால், காதலிக்கவில்லை ஆனால் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி ஆட்சேபம் ஏதும் இல்லை என்கிறான். மெர்சாலின் இயல்பினைப் புரிந்துகொள்ள முடியாமல் மேரி திணருகிறாள்.

மெர்சால் ஒரு நாள் நண்பர்களுடன் கடற்கரைக்கு செல்கிறான். அங்கு ஒரு அரேபிய கும்பலுடன் ஏற்படும் சண்டையில் அவனது நண்பனுக்குக் காயம் ஏற்படுகிறது. பின் மெர்சால் தனியாக மீண்டும் கடற்கரைக்கு வருகிறான். அங்கே அசந்தர்பமான வேளையில் ஒரு அரேபியனை சுட்டுக் கொன்றுவிடுகிறான். மதுவின் போதையிலும், வெய்யில் ஏற்படுத்திய அசெளகரியத்தாலும் முற்றிலும் தற்செயலாக நிகழ்ந்துவிடுகிறது அந்தக் கொலை. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மெர்சாலை கைதுசெய்து அழைத்துச் செல்வதுடன் முடிகிறது முதல் பகுதி.

இரண்டாவது பகுதி வழக்கு விசாரணையையும், சிறையில் மெர்சாலின் வாழ்க்கையையும் விவரிக்கிறது.மெர்சால் நீதிபதியால் விசாரிக்கப்படுகிறான்.தனது குற்றத்தை முழுமையாக ஒத்துக்கொள்கிறான். ஆனால் தாயின் மரணத்துக்குகூட கண்ணீர் சிந்தாத அவனது வினோதமான இயல்பு கண்டு அனைவரும் ஆச்சரியப் படுகிறார்கள்.அவனது தாய் தங்கியிருத்ந்த காப்பகத்தின் அதிகாரி, சவ அடக்கம் செய்தவர், மேரி, அவனது நண்பர்கள் யாவரும் விசாரிக்கப் படுகிறார்கள். விசாரணை கொலைக்கு சம்பந்தமில்லாத திசையில் மெர்சாலின் போக்கைப் பற்றியதாக இருக்கிறது.அவன் செய்த கொலையைக் காட்டிலும் அவனது மாற்று இயல்புகள் பாதகமானவையாகப் பார்க்கப் படுகின்றன.அபத்தத்தின் உச்சக் கட்டமாக , 'இத்தகைய வினோத போக்குடையவர்கள் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள்' என முடிவுசெய்யப்பட்டு அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

காம்யூ மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்று சிலர் சொல்வதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. மாற்றுக்கருத்துடையவர்களை சமுதாயம் எப்படி நடத்துகிறது என்பதன் குறியீடாகவே மரணதண்டனையைப் பயன்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முதல் நாள் ஒரு பாதிரியார் அவனை சிறையில் சந்திக்கிறார். அவன் செய்திருக்கும் பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு இறைவனிடம் மன்றாடும் படி சொல்கிறார். மெர்சால் இதனை மறுத்து அவரை அங்கிருந்து விரட்டிவிடுகிறான். தான் செய்த செயலுக்கான முழுப்பொறுப்பையும் தானே ஏற்க விரும்புகிறான். சாவையும் அபத்தம் நிறைந்த இந்தவாழ்வின் ஒரு அங்கமாகவே பார்க்கிறான். வாழ்க்கையின் இந்த பாரபட்சமற்ற தன்மை குறித்து அவனுக்கு ஆசுவாசம் உருவாகிறது.மெர்சால் தன்னை சிறை வாழ்க்கைக்குப் பழக்கப்படுதிக்கொள்வதை விளக்கும் பகுதிகள் காஃப்காவின் உருமாற்றம்(Metamorphosis) நாவலை நியாபகப்படுத்துகின்றன.

இருத்தலியல் கொள்கையின் முக்கிய கூறுகளான இறப்பு, தனிமனித சுயதேர்வு அல்லது சுதந்திரம், உலக வாழ்வின் அபத்தம்,பாரபட்சமற்ற தன்மை யாவும் இந்நாவலில் விளக்கப்பட்டுள்ளன. இருப்பியல்வாதத்தை விளக்கும் மிகச்சிறந்த புத்தகம் இது இல்லை என்றாலும் புனைவின் வழியே அதனை அணுகும் முக்கிய நூலாகக் குறிப்பிடலாம். மேலும் காம்யூவின் அபத்தவியல்(Absurdism) தொடர்பான கருத்துக்ள் அடங்கிய "The Myth of Sisyphus" என்ற தலைப்பிலான கட்டுரைகளுக்கு அவர் கொடுத்த புனைவு வடிவங்கள்தான் "The Stranger" முதலான கதைகள் என்றும் சொல்லப்படுகிறது. ஹெமிங் வேயின் நடையை நினைவூட்டும் கச்சிதமான சிறுசிறு வாக்கியங்களால் எழுதப்பட்டுள்ளது நாவல். நோபல் இலக்கியம் என்றால் சுமார் எழுநூறு பக்கங்களுக்குக் குறையாமல் புரியாத மொழியில் எழுதப்பட்டிருக்கும் என்ற எனது எண்ணத்தை மாற்றியிருக்கிறது இந்நூல்.

8 comments:

த.அகிலன் said...

ம் நான் ஆங்கிலத்தில் இதைப்படிக்கவில்லை.. தமிழில் படித்திருக்கிறேன்.. காவ்யா இதன் நேரடியான மொழிபெயர்ப்பை போட்டிருக்கிறார்கள்.. ஆனால் இதைச் சட்டு ஒரு பிரபல இந்திய எழுத்தாளர்.. தன்பெயரில் கதைஎழுதியிருக்கிறார் உங்களுக்கு தெரியுமா..

பரத் said...

வாங்க அகிலன்,
கருத்துக்களுக்கு நன்றி. நானும் தமிழ் மொழிபெயர்ப்பை தேடிக்கொண்டிருக்கிறேன். ஸ்ரீராம் என்பவர் மொழிபெயர்த்திருப்பதாக அறிகிறேன்.
//ஆனால் இதைச் சட்டு ஒரு பிரபல இந்திய எழுத்தாளர்.. தன்பெயரில் கதைஎழுதியிருக்கிறார் உங்களுக்கு தெரியுமா..//
அட நிஜமாகவா? யார் அவர் என சொல்லமுடியுமா??

ashok said...

Barath, you might like http://sarukesi.blogspot.com/

பரத் said...

Hi Ashok,
Thanks for the link!

Sridhar Narayanan said...

32 கேள்விகள் - தொடரில் பங்குபெற உங்களையும் அழைத்துள்ளேன். உங்கள் சிறப்பான பதில்களோடு உங்கள் நண்பர்களையும் பங்குகொள்ள செய்யவும். நன்றி!

பரத் said...

நன்றி Sridhar!
விரைவில் எழுதுகிறேன்

Ramya said...

Hi,
I liked the post. However i liked your heading better.அழகான ஆழமான தமிழ் சொல். அதுவும்
"ஆட்கள் வேழை செய்கிறார்கள் " - என்ற பெயர்பலகைகளுக்கு மத்தியில்.

தயாஜி said...

வணக்கம் நண்பரே, சமீபத்தில் நண்பர் முன்மொழிந்து வாங்கிய இந்நாவலை இன்றுதான் படிக்கவுள்ளேன்.

The Stranger - இந்நாவலை தமிழில் 'அந்நியன்' என்று வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கிறார். க்ரியா வெளியீடு.

ப்ரெஞ்சு மொழியில் இருந்து தமிழில் இந்நாவலை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

படித்ததும் வாசிப்பு அனுபவத்தை எழுதுவேன்.

வாய்ப்பு இருப்பின் என் வல்லைப்பூவிற்கு வரவும்.....

http://tayagvellairoja.blogspot.com/