Monday, October 02, 2006

யாமறிந்த மொழிகளிலே....

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள்கடியும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னே ரிலாத தமிழ்


மென்பொருள் துறையில் தென்னிந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது தெரிந்ததே.குறிப்பாக தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் எண்ணிக்கை அதிகம்.இதில் தமிழர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும்
தெலுங்குதேசத்தவரின் எண்ணிக்கை சற்றே கூடுதல்
எனலாம்.குறைந்தபட்ஷம் ஒரு சிறு குழுவிற்கு(Team) ஒருவராவது இருப்பர்(இவர்களில் பெர்ம்பாலானவர்களின் வாழ்க்கை லட்சியம் அமெரிக்கா சென்று குடியேறுவதாகத்தான் இருக்கும்.நம்மவர்களுக்கும் இந்த ஆசை உண்டென்றாலும் ,தெலுங்கர்கள் இவ்விஷயத்தில் மிகத்தீவிரமாக இருப்பார்கள்).

உடன் பணிபுரியும் தெலுங்கு மக்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது,பேச்சு மொழியை நோக்கிச்சென்றது.தமிழ் தெலுங்கை விடத்தொன்மையானது என்ற என்வாதத்தை அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை. ரங்கராஜுலு,வெஙட்ராமுலு என்று ஏதேதோ அறிஞர்களின் பெயர்களைச்சொல்லி,அவர்களெல்லாம் தெலுங்குதான் தென்னிந்திய மொழிகளில் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளதாகச் சொன்னார்கள்.பாதிவிவாதத்தில் என் விஷயஞானமின்மை காரணமாக நிராயுதபாணியாக நிறுத்தப்பட்டேன்.அவர்கள் சொல்வது தவறு என எனக்கு தெரிந்திருந்தும்,அதனை நிரூபிக்கத்தேவையான சரித்திரசான்றுகள் என்னிடமில்லை.சரி,இணையத்தில் ஏதாவது கிடைக்குமா என்று கூக்ளியதில் George L. Hart என்பவர் எழுதிய அருமையான ஒரு கட்டுரை கிடைத்தது.கட்டுரை கூட இல்லை,கடிதம்.தமிழை செம்மொழியாக அறிவிக்கப் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அவர் எழுதிய கடிதம் அது.தமிழைப்பற்றி எழுதப்பட்ட சிறந்த கட்டுரைகளில் ஒன்றாகக்கொள்ளலாம் இதனை.ஒரு வார்த்தைகூட ,கூடுதலாகவோ,குறைவாகவோ இல்லாமல் நேர்த்தியான பாரதியின் கவிதை போல இருக்கிறது இக்கடிதம்.இலக்கிய நடையில் சொல்லவேண்டுமென்றால் "நறுக்குத் தெரித்தாற்போல்" இருக்கிறது ,பேச்சு நடையில் சொல்லவேண்டுமென்றால் "நெத்தியடி".

தமிழின் தொன்மையை சான்றுடன் விளக்கும் இக்கடிதம் அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று.கட்டுரையின் இறுதியில் Hart இவ்வாறு குறிப்பிடுகிறார்"தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி கட்டுரை எழுத வேண்டியுள்ளது வினோதமாக உள்ளது.இது எதனைப் போன்றுள்ளது என்றால் இந்தியாவை உலகின் சிறந்த நாடுகளில் ஒன்று என்றோ ,ஹிந்து மதத்தை உலகின் சிறந்த மதங்களில் ஒன்று என்றோ அறிவிக்கக் கோருவதைப்போல உள்ளது " .

அந்தக் கடிதத்தை உங்கள் பார்வைக்குத்தருகிறேன்.அதற்குமுன் Hart பற்றி ஒரு சிறுகுறிப்பு.

Hart கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.சம்ஸ்கிருதம்,லத்தீன்,கிரீக் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளில் மிகுந்த புலைமையுடையவர்.புறநானூறு,கம்பராமாயணம் போன்ற பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்.தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார்.இவரது மனைவியின் பெயர் கெளசல்யா.இவர் இக்கடிதத்தை எழுதிய ஆண்டு 2000.அரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது 2004-ல்.

அக்கடிதத்தைக் காண Tamil as a Classical Language


George L. Hart

Hart உடனான சந்திப்பு தமிழில் சந்திப்பு 1
சந்திப்பு 2

(பின்குறிப்பு:தமிழறிந்த சான்றோர் பலருக்கு இது பழைய செய்தியாக இருக்கும் :)) )