Thursday, November 08, 2007

சுமாரான தீபாவளி வாழ்த்துக்களும்,சூப்பரான பிறந்தநாள் வாழ்த்துக்களும்



நடிப்பு மேதை கமல் ஹாசனுக்கு உளம் கனிந்த(belated)பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------
இந்த முறை தீபாவளிக்கு ஊருக்குப் போக லீவு கிடைக்கவில்லை.போதாக்குறைக்கு, வட நாட்டில் தீபாவளி வெள்ளிக்கிழமையிலிருந்துதானாம்.அதனால் வியாழக்கிழமை(தீபாவளியன்று)அலுவலகம் உண்டு.எரியும் விளக்கில் எண்ணையை ஊற்றுவது போல பல்பீர் சிங்,ரங்பீர் சிங் என பரிச்சயம் இல்லாத மக்களெல்லாம் "Diwali Wishes" அனுப்பி மெயில் பாக்ஸை ரொப்புகிறார்கள்.அதனால் வெறுப்பில் ஒரு தீபாவளி (சிக்)ஜோக்,



குழந்தை: நம்ம மட்டும் ஏன் இந்த தடவை ஆகஸ்ட்லயே தீபாவளி கொண்டாடறோம்?
அம்மா:சும்மா இருடா உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்ல.
------------------------------------------------------------------------------------------------
சிரிப்புவராட்டி என்னைத் திட்டாதீர்கள்.இது சுஜாதா சொன்ன ஜோக் :)
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

Thursday, November 01, 2007

லா.சா.ரா - அஞ்சலி

'ஜனனி' சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து,

தபஸ்

நண்ப,
இது உனக்கும் எனக்கும் இடையில் ஒரு வார்த்தை.உனக்கு இதைச் சொல்ல வேண்டுமென்று வெகு நாட்களாய்க் காத்துக் கொண்டிருந்தேன்.இப்போது வகையாய் மாட்டிக்கொண்டோம்.

'இப்புத்தகத்தில் வரும் பெயரோ பாத்திரங்களோ ஒருவரையும் குறிப்பிடுவன அல்ல' என்ற சம்பிரதாயச் சொல் ஒரு பெரும் புளுகு என்று அறிந்து கொள்.ஏனெனில் ,எவரும் எவரையும் குறிப்பிடாது இருக்க முடியாது.தெய்வமே ஒரு குறிப்பிட்ட பொருள் தான்.அந்த குறிப்பைச் சுற்றி சுற்றி நாம் இயங்கி,அதனால் குறிக்கப்பட்ட பொருள்கள் ஆய்விட்டோம்.
வாழ்க்கையில் இறப்பும் பிறப்பும் இருக்கும் வரை இந்தத் தன்மையை விட்டு நாம் தப்ப முடியாது.நாம் தெரிந்தோ தெரியாமலோ இஷ்ட்டப் பட்டோ இஷ்ட்டப் படாமலோ,அர்ப்பணமானவர்கள்.இந்த அர்பணிக்கப்பட்ட தன்மையை நாம் அங்கீகரித்துக்கொண்டு விட்டோமானால் அவரவரின் உண்மையின் உள் சத்தை ஓரளவு இப்பவே புரிந்து கொள்ள முடியும்.இதனால், நம்மையும் ஆட்டுவித்துக்கொண்டு நம்முடன் தானும் ஆடிக்கொண்டிருக்கும் தெய்வத்திற்கோ,அல்லது அந்த தெய்வத்திற்கும் காரணமாயுள்ள சக்தி எதுவோ அதற்கோ நாம் உதவி புரிந்தவர்கள் ஆவோம்.

கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின் மேல் நம்முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும்,அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிக்கும் சோக சாயையையும் நாம் அதனுள்ளிருந்துகொண்டே பார்க்கமுடியும்.இவ்வநுபவம் ஒருவனுடையது மாத்திரமல்ல.ஒவ்வொருவனுடைய உரிமையே ஆகும்.ஆகையால் இக்கதைகளில் எதோ ஒன்றில் ஏதோ ஒரு பக்கத்திலோ,அல்லது ஒரு வாக்கியத்திலோ,சொற்றொடரிலோ,பதங்களிலோ அல்லது இரு பதங்களுக்கிடையில் தொக்கி, உன்னுள்ளேயே நின்று கொண்டு உன்னைத் தடுக்கும் அணு நேர மெளனத்திலோ உன் உண்மையான தன்மையை நீ அடையாளம் கண்டு கொள்வாய்.இறப்புக்கும் பிறப்புக்கும் இடையில் நம் எல்லாரையும் ஒன்றாய் முடித்துப்போட்டு,நம் உள் சரடாய் ஓடிக்கொண்டிருக்கும் உண்மையின் தன்மை ஒன்றே தான்.ஆகையால் ,இக்கதைகளில் நான் உன்னையும் என்னையும் பற்றி தான் எழுதுகிறேன்.வேறு எப்படியும் எழுத முடியாது.இக்கதைகளைப் படித்ததும் உன்னிடமிருந்து உன் பாராட்டையோ,உன் நன்றியையோ நான் எதிர்பார்க்கவில்லை,உன்னைச் சில இடங்களில் இவைகள் கோபப்படுத்தினால் அக்கோபத்திற்கும் நான் வருத்தப் படப் போவதில்லை.உடன் பிறந்தவர்களிடையில் இவ்விரண்டையும் பாராட்டுவதிலேயே அர்த்தம் இல்லை.ஆனால் இவைகளின் மூலம் உன்னை நீ அடையாளம் கண்டு கொண்டாயெனில் இவைகளின் நோக்கம் நிறைவேறிய மாதிரியே.
இக்கதைகள்,தாம் வெளிப்படுவதற்கு என்னை ஒரு காரணமாக உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம்; ஆனால் இவைகள் வெளிப்பட்ட பிறகுஇவைகளைப் பார்க்கையில் நானும் உன் மாதிரி தான்.எப்படியும் இப்புத்தகத்திற்கு நான் காரணமில்லை.நீ தான் அல்லது உன் மாதிரி நாலு பேர் மாசு, வை,சு ,தாத்து,வேம்பு,செல்லம்,ரங்கன் - இவைகள் உனக்கு வெறும் பெயர்கள்.எனக்கு இவர்கள் இப்பெயரின் அர்த்தங்கள்-உன் மாதிரி.
ஆகையால் இந்த உண்மையை-வெளிப்பூச்சின் அடியில்புதைந்து கிடக்கும் உண்மையின் ஒரே தன்மையைப் பற்றி உன்னிடம் சொல்லத் தான் வந்தேன்.இது எனக்கு எப்பவும் அலுக்காது.
நான் இருக்கும் வரை,இதை நீ புரிந்து கொண்டாலும்,புரிந்து கொள்ளாவிட்டாலும்.செவி சாய்த்தாலும்,சாய்க்காவிட்டாலும் சொல்லிக்கொண்டு தான் இருப்பேன்.இனி இவைகள் உன்னுடையவை.

லா.சா.ராமாமிருதம்