Friday, October 05, 2007

திரை விமர்சனம்

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக\தோல்விகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சில ஹிந்திப்படங்களின் குறு விமர்சனங்கள்.


நான்கு(மார்கெட் போன)கதாநாயகர்கள்.நான்கு பேரும் முட்டாள்கள்.இவர்களுக்கு வேலை வெட்டி இருக்காது.இவர்களை தூக்கி சாப்பிடும் விதமாக அடிமுட்டாளாக ஒரு வில்லன்.இவர்கள் எல்லாரும் பணத்தையோ பெண்ணையோ தேடி அலைய வேண்டும் + ஒரு மூட்டை பழைய ஜோக்குகள்(பீர்பால் நகச்சுவைகள்,தெனாலி ராமன் துணுக்குகள்,சர்தார்ஜி ஜோக்குகள்).
இது தான் பாலிவுட்டில் தற்போது எல்லா நகைச்சுவைப் படங்களும் இன்ஹெரிட் செய்யும் பொதுவான டெம்ப்ளேட்.



தமால்(Dhamaal)




Director :Indra Kumar
Actors :Sanjay Dutt,Arshad Warsi,iJaved Jaffrey,
Ritesh Deshmukh, Aashish Chaudhary,Asrani
Music Director:Adnan Sami

சாகும் தருவாயில் பிரேம் சோப்ரா புதையல் பற்றிய ரகசியத்தை நான்கு பேரிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.புதயலைத் தேடி வரும் (போலீஸ்)சஞ்சய்தத்துக்கும் இந்த நால்வருக்கும் நடக்கும் சண்டைகளும்,புதையலை அடைய ஒவ்வொருவரும் தனித்தனியே செய்யும் முயற்சிகளும் தான் கதை.இரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்து துணுக்கு மழை.ஆனால் எல்லாம் நாம் ஏற்கனவே கேட்டு சிரித்த பழைய ஜோக்குகள்.காதலா காதலாவில் இறந்தவர் வீட்டுக்குபோய் ஓவியம் விற்கும் காட்சியைக் கூட காப்பியடித்திருக்கிறார்கள்(காதலா காதலா ஒரிஜினலா??).அங்கங்கே சிரிப்பை வரவழைத்தாலும் மொத்ததில் படம் சுமார்.

மதிப்பெண்கள்: 1/5

டோல்(Dhol)




Director :Priya Darshan
Actors :Sharman Joshi,Tusshar Kapoor,Kunal Khemu,
Tanushree Datta,Rajpal Yadav,Om Puri
Music Director:Pritam chakraborty

நான்கு வெட்டி கதாநாயகர்கள்.எதிர் வீட்டுக்குக் குடிவரும் தனுஷ்ரீயை கவர நால்வரும் வித விதமாக முயற்சி செய்கிறார்கள் .தனுஷ்ரீ தத்தாவோ இறந்துபோன தன் அண்ணனின் சாவில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று தோன்றியது.ராஜ்பால் யாதவ் "பக்கியா கல்டி மாரோ" என்று அலறிய போது மூளையில் பல்ப் எறிந்தது."கோபாலா பிச்சுக்கோ" ஞாபகம் இருக்கிறதா?.படம் பெயர் எம்.ஜி.ஆர் காலனி என்று நினைக்கிறேன்.ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்தது.இதன் மூலம்- "ஹரிஹர் நகர்"(மலையாளம்) .பிரியதர்ஷன் ஆனாலும் அர்த்தபழசுகளைக்கூட விடாமல் ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்.முதல் பாதி அறுவை,இரண்டாவது பாதி தப்பிப்பிழைக்கிறது.

மதிப்பெண்கள்: 1/5


மனோரமா-Six Feet Under



Director :Navdeep Singh
Actors :Abhay Deol,Raima Sen,Gul Panag,Sarika,Vinay Pathak,Kulbhushan Kharbanda

MusicDirector: Jayesh Gandhi,Raiomond Mirza


வாரத்திற்கு ஐந்து ஆறு படங்கள் ரிலீஸாவதில் உள்ள சங்கடம் சில நல்ல முயற்சிகள் கவனம் பெறாமல் போவது தான்.நான் போனவாரம் பார்த்த மனோரமா-six feet under அப்படிப்பட்ட முயற்சி எனலாம்.ரோமன் பொலன்ஸ்கியின் "சைனா டவுன்" படத்தை லேஸாகத் தழுவி எடுக்கப் பட்டிருக்கிறது.ஜெய்பூர் அருகே வறசியான ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது.இரிகேஷன் டிப்பார்ட்மெண்டில் ஜூனியர் இஞ்சினியராக வேலை பார்க்கும் 'அபய் தியோல்' லஞ்ச ஊழல் காரண்மாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டில் இருப்பவர்.எழுத்து தான் இவருக்கு முதல் காதல்.துப்பறியும் கதைகள் எழுதிபெயர் பெறவிரும்பும் இவரின் முதல் கதையே படுதோல்வி.போததற்கு சதா தொணதொணக்கும் மனைவி.இந்நிலையில் ஒருநாள் இரவு இவரது வீட்டிற்கு வரும் சரிகா தன்னை மந்திரியின் மனைவியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.மந்திரிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும்,அவரை வேவு பார்க்கவேண்டும் என்றும் கூறி பெருந்தொகை ஒன்றைக்கொடுத்துச் செல்கிறார்.விளையாட்டாக 'அபை' இதில் இறங்க, அடுத்தடுத்து நிகழும் கொலைகளும்,விழும் முடிச்சுகளும் அவரை பெரும் சிக்கலில் மாட்டிவிடுகின்றன.சாகசங்கள் எதுவும் செய்யத்தெரியாத ஹீரோ இதனை எப்படி எதிர் கொள்கிறார் என்பது மீதிக்கதை.வித்தியாசமான கதையையும்,கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்ததற்காகவே அறிமுக இயக்குநர் 'நவ்தீப் சிங்கை' பாராட்டலாம்.மிக மெதுவாகவும்,இயல்பாகவும் பயணிப்பதே இப்படத்தின் பலம் மற்றும் பலவீனம்.பாலைவனத்தின் வெய்யில் அருமையாக சிறைபடுத்தப்பட்டிருக்கிறது கேமராவில்(அரவிந்த் கண்ணபிரான்).இப்படத்தின் ஹீரோ 'அபை தியோல்' எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர்.வழக்கமான மசாலா படங்களை ஒதுக்கி வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்(சோச் நா தா,ஆஹிஸ்தா ஆஹிஸ்தா,ஏக் சாலிஸ்..),இந்த படத்திலும் படு இயல்பாக நடித்திருக்கிறார்.கொஞ்ச நேரம் வந்தாலும் விநாயக் பதக்(பேஜா ஃரை) கலக்குகிறார்.கடைசி இருபது நிமிடங்களில் நிகழும் திரைக்கதைக் குழப்பங்கள் படத்திற்கு மைனஸ்.மொத்தத்தில் இது ஒரு Refreshing Movie.

Noir என்று சொல்லப்படும் Black Film வகையைச் சேர்ந்தது இந்தப்படம்.தமிழில் இவ்வகைப்படங்கள் உள்ளனவா?தெரிந்தவர்கள் குறிப்பிடலாம்.

மதிப்பெண்கள்: 3/5


ஜானி கத்தார்(Johny Gaddar)



Director :Sriram Raghavan
Actors :Neil Mukesh,Zakir Hussain,Dharmendra,Rimi Sen,Vinay Pathak
Music Director:Vishal Dadlani · Shekhar Ravjiani

"மனோரமா" விற்கு எதிர் மாறாக ஒரு த்ரில்லர்.படத்தின் முதல் பத்து பதினைந்து நிமிடங்களிலேயே யார் செய்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் ,இருந்தும் அடுத்து வரும் இரண்டுமணி நேரமும் உங்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்க வைக்கிறார் இயக்குநர்.ஐந்து பிரதான கதாப்பாத்திரங்களைச் சுற்றி கதை சுழல்கிறது என்றாலும் படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான்.ஹாலிவுட் பாணியில் புத்திசாலித்தனமான படம் கொடுத்ததற்காக ஸ்ரீராம் ராகவனுக்கு(தமிழ்?) ஒரு "சபாஷ்".நடிகர்களின் நடிப்பு OK ரகம்.தர்மேந்திரா,விநாயக் பதக் நன்றாக நடித்திருக்கிறார்கள்.ஹீரோ அவ்வப்போது என்ன முகபாவம் கொடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறார்(அது கதைக்கு பொருத்தமாகவும் உள்ளது!).சின்ன சின்ன லாஜிக் வழுக்கல்கள் தவிர பெரிதாகக் குறிப்பிட குறைகளெதுவும் இல்லை.பின்னணி இசை கச்சிதம்.இரண்டு ஹிட் பாடல்கள்,இரண்டுமே திரையில் வராது.
பாக்கிய ராஜின் "விடியும் வரை காத்திரு" பார்த்திருக்கிறிர்களா?அந்த ஜாதிப் படம் இது.

மதிப்பெண்கள்: 3/5