படம் வெளியாகி மூன்று வாரங்கள் கழித்து சாவகாசமாக ஒரு நாள் (காலை)11மணிக் காட்சிக்கு போனபோது "House full" போர்டு போட்டுவிட்டிருந்தார்கள்."அட நல்லபடமா இருக்குமோ?" என்று முயற்சித்ததில் இரவு 11 மணிக்காட்சிக்கு டிக்கட் கிடைத்தது.புனேவில் குளிர் தொடங்கிவிட்டபடியால் சுவெட்டர்,பனிக்குல்லாய் சகிதம் போய் அமர்ந்தோம்.படம் மொத்தம் 8 ரீல் என்று போட்டார்கள்.ஆங்கிலப்படம் சின்னபடமாக இருக்குமென்பது தெரியும்,அதற்காக இவ்வளவு சின்னபடமா என்று கண்ணைக்கசகிவிட்டுப் பார்த்ததில் 18 ரீல் என்பது தெளிவாகத்தெரிந்தது!
ஆரம்பக் காட்சிகளில் ஜாக் நிகல்சன் "I don't wanna be a product of my environment, I want my environment to be a product of me"என்று கூறிப் புன்னகைக்கும்போதே தெரிந்துவிடுகிறது நின்று விளையாடப் போகிறார்கள் என்பது.இரவு தூக்கத்தைத் தியாகம் செய்து படம் பார்த்ததை, படம் நியாயப்படுத்தியது.
கதைக்களம்(spoiler warning)
தெற்கு பாஸ்டனில் உலாவரும் மாபியா தலைவன் பிராங்க் காஸ்டெல்லோ(ஜாக் நிக்கல்சன்).அவரது கண்காணிப்பில் வளரும் காலின் சல்லிவன்(மாட் டாமன்),வளர்ந்து போலீஸில் சேருகிறான்.சேர்ந்து காஸ்டெல்லோவின் உளவாளியாக செயல் படுகிறான்.
மோசமான குடும்ப பின்னணியிலிருந்து வளர்ந்து,கடின உழைப்பால் போலீஸில் சேரும் பில்லி காஸ்டிகன்(டி-கேப்ரியோ) காஸ்டெல்லோவின் கூட்டத்திற்கு அனுப்பப்படுகிறான் போலீஸின் ரகசிய உளவாளியாக செயல்பட.
ஒருகட்டத்தில் இரு குழுக்களும் தங்களுக்குள் ஒரு ஒற்றன் இருப்பதை உணர்கிறார்கள்.டிகேப்ரியோ,மாட் டாமன் இருவருக்குமே எதிர் உளவாளியைக் கண்டுபிடிப்பது வாழ்வா சாவா போராட்டம்.இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள்.இப்படியாகச் செல்கிறது கதை.
----------------------------------------------------------------
Frank costello:When I was your age they used to say you could become cops or criminals. What I'm saying to you is this... When your facing a loaded gun, what's the difference?
--------------------------------------------------------------------------------------
ஒரு மசாலபடம் எடுப்பதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தும்,கண்னியமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் Martin Scorsese .இது "Infernal affairs"என்ற ஹாங்காங் படத்தின் தழுவல் தான் என்றாலும்,கட்சிகுக் காட்சி remake பண்ணாமல் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம்.
படத்தின் மிகப்பெரிய பலம் "நடிகர்கள்".நடிகர்கள் தேர்வு சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.ஜாக் நிகல்சன்,டிகேப்ரியோ,மாட் டாமன்,மார்க் வில்பர்க் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் கனகச்சிதமாகப் பொருந்துகிறார்கள்.ஜாக் நிகல்சன் படம் முழுவதும் அனாயாசமாக வில்லத்தனம் கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தன் மன உளைச்சலை வெளிப்படுத்தும் இடங்களிலும்,ஜாக் நிகல்சனுடனான உரையாடல்களின் போதும் டி-கேப்ரியோவின் நடிப்பு Class !
படத்தின் மற்றொரு பலம் 'வசனங்கள்'.Frank costello:When I was your age they used to say you could become cops or criminals. What I'm saying to you is this... When your facing a loaded gun, what's the difference? போன்ற வசனங்கள் கைத்தட்டலைப் பெறுகின்றன.ஆங்கிலப்படம் பார்க்கையில் எல்லாரும் சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்கும் எனக்கே இப்படத்தின் வசனங்கள் புரிந்தன :)
சில குறைகள்:
*தமிழ்படங்கள் நிறைய பார்த்து பழக்கப்பட்டதாலோ என்னவோ படத்தின் முடிவு அவ்வளவு உடன்பாடுடையதாக இல்லை.படத்தின் முடிவில் Director ,லைட் பாய் தவிர மற்றெல்லாரையும் சுட்டு வீழ்த்திவிடுகிறார்கள்.
*படத்தில் நான்கெழுத்துக் கெட்டவார்த்தை வரும் நேரத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், படம் ஒன்றரை மணிநேரமாகச் சுருங்கிவிடும்.
* படத்தின் கதாநாயகி கதாப்பாத்திரம் சற்று முரண்பாடுடையதாக இருக்கிறது."Infernal Affairs" படத்தில் இரண்டு பெண்கள் செய்த தனித்தனி கேரக்டர்களை இதில் ஒரே பெண்செய்வது போலக் காட்டியிருப்பது ,திரையில் சரியாக வரவில்லை.
இந்தமுறை ஆஸ்கர் ரேஸில் நடிப்பு உட்பட சிலபிரிவுகளில் "The Departed" விருதுகளை அள்ளப்போவது உறுதி.