"Mother died today. Or maybe yesterday, I don't know. I had a telegram from the home: 'Mother passed away. Funeral tomorrow. Yours sincerely.' That doesn't mean anything. It may have happened yesterday."தாயின் சவ அடக்கத்திற்கு செல்கிறான் மெர்சால். அங்கு, தாயின் முகத்தைப் பார்ப்பதற்கு கூட அவன் ஆர்வமற்று இருப்பதை கண்டு அங்குள்ளவர்கள் வியப்படைகிறார்கள். அடுத்தநாள் அலுவலகத்திற்கு சென்று வழகம்போல் தன் பணியைத் தொடர்கிறான். அவனது மேலதிகாரி அவனது பணி உயர்வினைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் மெர்சால் அதில் ஏதும் விருப்பமின்றி இருப்பது கண்டு அவருக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. அதற்கு மெர்சால் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
I answered,that one never changed his way of life; one life was as good as another. I’d have preferred not to vex him, but I saw no reason for “changing my life.”
மெர்சாலைக் காதலிக்கும் மேரி, அவனும் தன்னைக் காதலிக்கிறானா, திருமணம் செய்துகொள்ளலாமா எனக் கேட்கிறாள். அதற்கு மெர்சால், காதலிக்கவில்லை ஆனால் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி ஆட்சேபம் ஏதும் இல்லை என்கிறான். மெர்சாலின் இயல்பினைப் புரிந்துகொள்ள முடியாமல் மேரி திணருகிறாள்.
மெர்சால் ஒரு நாள் நண்பர்களுடன் கடற்கரைக்கு செல்கிறான். அங்கு ஒரு அரேபிய கும்பலுடன் ஏற்படும் சண்டையில் அவனது நண்பனுக்குக் காயம் ஏற்படுகிறது. பின் மெர்சால் தனியாக மீண்டும் கடற்கரைக்கு வருகிறான். அங்கே அசந்தர்பமான வேளையில் ஒரு அரேபியனை சுட்டுக் கொன்றுவிடுகிறான். மதுவின் போதையிலும், வெய்யில் ஏற்படுத்திய அசெளகரியத்தாலும் முற்றிலும் தற்செயலாக நிகழ்ந்துவிடுகிறது அந்தக் கொலை. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மெர்சாலை கைதுசெய்து அழைத்துச் செல்வதுடன் முடிகிறது முதல் பகுதி.
இரண்டாவது பகுதி வழக்கு விசாரணையையும், சிறையில் மெர்சாலின் வாழ்க்கையையும் விவரிக்கிறது.மெர்சால் நீதிபதியால் விசாரிக்கப்படுகிறான்.தனது குற்றத்தை முழுமையாக ஒத்துக்கொள்கிறான். ஆனால் தாயின் மரணத்துக்குகூட கண்ணீர் சிந்தாத அவனது வினோதமான இயல்பு கண்டு அனைவரும் ஆச்சரியப் படுகிறார்கள்.அவனது தாய் தங்கியிருத்ந்த காப்பகத்தின் அதிகாரி, சவ அடக்கம் செய்தவர், மேரி, அவனது நண்பர்கள் யாவரும் விசாரிக்கப் படுகிறார்கள். விசாரணை கொலைக்கு சம்பந்தமில்லாத திசையில் மெர்சாலின் போக்கைப் பற்றியதாக இருக்கிறது.அவன் செய்த கொலையைக் காட்டிலும் அவனது மாற்று இயல்புகள் பாதகமானவையாகப் பார்க்கப் படுகின்றன.அபத்தத்தின் உச்சக் கட்டமாக , 'இத்தகைய வினோத போக்குடையவர்கள் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள்' என முடிவுசெய்யப்பட்டு அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.
காம்யூ மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்று சிலர் சொல்வதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. மாற்றுக்கருத்துடையவர்களை சமுதாயம் எப்படி நடத்துகிறது என்பதன் குறியீடாகவே மரணதண்டனையைப் பயன்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முதல் நாள் ஒரு பாதிரியார் அவனை சிறையில் சந்திக்கிறார். அவன் செய்திருக்கும் பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு இறைவனிடம் மன்றாடும் படி சொல்கிறார். மெர்சால் இதனை மறுத்து அவரை அங்கிருந்து விரட்டிவிடுகிறான். தான் செய்த செயலுக்கான முழுப்பொறுப்பையும் தானே ஏற்க விரும்புகிறான். சாவையும் அபத்தம் நிறைந்த இந்தவாழ்வின் ஒரு அங்கமாகவே பார்க்கிறான். வாழ்க்கையின் இந்த பாரபட்சமற்ற தன்மை குறித்து அவனுக்கு ஆசுவாசம் உருவாகிறது.மெர்சால் தன்னை சிறை வாழ்க்கைக்குப் பழக்கப்படுதிக்கொள்வதை விளக்கும் பகுதிகள் காஃப்காவின் உருமாற்றம்(Metamorphosis) நாவலை நியாபகப்படுத்துகின்றன.
இருத்தலியல் கொள்கையின் முக்கிய கூறுகளான இறப்பு, தனிமனித சுயதேர்வு அல்லது சுதந்திரம், உலக வாழ்வின் அபத்தம்,பாரபட்சமற்ற தன்மை யாவும் இந்நாவலில் விளக்கப்பட்டுள்ளன. இருப்பியல்வாதத்தை விளக்கும் மிகச்சிறந்த புத்தகம் இது இல்லை என்றாலும் புனைவின் வழியே அதனை அணுகும் முக்கிய நூலாகக் குறிப்பிடலாம். மேலும் காம்யூவின் அபத்தவியல்(Absurdism) தொடர்பான கருத்துக்ள் அடங்கிய "The Myth of Sisyphus" என்ற தலைப்பிலான கட்டுரைகளுக்கு அவர் கொடுத்த புனைவு வடிவங்கள்தான் "The Stranger" முதலான கதைகள் என்றும் சொல்லப்படுகிறது. ஹெமிங் வேயின் நடையை நினைவூட்டும் கச்சிதமான சிறுசிறு வாக்கியங்களால் எழுதப்பட்டுள்ளது நாவல். நோபல் இலக்கியம் என்றால் சுமார் எழுநூறு பக்கங்களுக்குக் குறையாமல் புரியாத மொழியில் எழுதப்பட்டிருக்கும் என்ற எனது எண்ணத்தை மாற்றியிருக்கிறது இந்நூல்.



எனக்கு இனிப்புப் பண்டங்கள் என்றால் பிடிக்காது(ஒரு சிலவற்றைத் தவிர).அலுவலகத்தில் எங்கள் டீமில் பெங்காலி, மராட்டி, குஜராத்தி என பலமாநிலத்தவரும் உண்டு. ஒவ்வொருமுறை ஊருக்கு போய்விட்டு வரும்போது அவரவர் அந்தந்த மாநிலத்தின் புகழ் பெற்ற இனிப்புவகையினை வாங்கிவரவேண்டும். அந்தமதிரி இனிப்புகள் வரும் நாட்களில் "conference room"ல் அடிதடியே நடக்கும்.நான் இவற்றை பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். அதாவது மேசை, மார்க்கர் பேனா போல இனிப்பும் ஒரு வஸ்த்து அவ்வளவே. இனிப்பு பிரியரான என் பெங்காலி மேனேஜருக்கு என்னைப்பார்ர்து ஒரே ஆச்சரியம், என்னைத் தனியே அழைத்து 'இளம் வயதில் சர்ர்க்கரை நோய்வருவது இப்போதெல்லாம் சகஜம் தான். நன் உனக்கு "Sugar free "இனிப்புகள் வாங்கிவருகிறேன் என்றார்."யோவ் எனக்கு சர்க்கரை நோயெல்லாம் இல்லை" என்று சொன்னால் நம்ப மறுத்தார்கள். இப்படி இருக்கையில் ஒருநாள் "டீம் லஞ்சிற்கு" இங்கிருக்கும் ஒரு பிரபல உணவகத்திற்கு சென்றிருந்தோம். அங்கு மால்புவா என்ற ஒரு இனிப்புவகையை ஆர்டர் செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட நம்மவூர் அப்பம் போன்ற நிறத்தில் அதேசமயம் அவ்வளவு தடிமனாக இல்லாமல் மெல்லிய இழைபோல இருந்தது. ஜீராவில்ருந்து எடுத்து வைத்திருந்தார்கள். அருகே ஒருகின்ணத்தில் ரப்ரி என்று சொல்லப்படும் வெள்ளைநிற திரவமும் இருந்தது.பாசந்தியை மிதக்கவிடும் பால்கலந்த ஜீரா(?) போல இருந்தது. சாப்பிட ஆவலைத் தூண்டியதால் ஒரு விள்ளலை எடுத்து அந்த ரப்ரியில் முக்கி மெதுவாக வாயில் போட்டேன். ஆஹா!! மால்புவா ரப்ரியுடன் சேர்ந்து தொண்டையில் வழுக்கிக் கொண்டு போனபோது ஒரு பரவச நிலையை அடைந்தேன். சொர்க்கம் அருகில் தட்டுப்படுவது போன்ற ஒரு உணர்வு. இப்படி ஒரு சுவையான ஒரு பண்டத்தினை என் வாழ்நாளில் நான் சாப்பிட்டதே இல்லை விசாரித்ததில் இதன் பூர்வீகம் மேற்கு வங்கம் என அறிந்தேன். ரசகுல்லாவும் குலப் ஜாமுனும் இதன் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது. அதன் பிறகு அந்த உணவகத்திற்கு அடிக்கடி செல்லத் துவங்கியுள்ளேன். இங்கு மொத்த சாப்பாட்டையும் சாப்பிட்டால் எனது உள்ளாடை வரை கழற்றிக் கொடுக்க வேண்டும்(Costly) என்பதால் டீஜென்டாக மால்புவா மட்டும் சாப்பிட்டுவிட்டு அகன்றுவிடுவேன். இந்த உணவகத்தில் நடிகர் ஓம் புரி மற்றும் பாடகி ஆஷா போஸ்லே பொன்ற பிரபலங்களைச் சந்திது ஆட்டொகிராஃப் பெற்றது உபரி சந்தொஷம். 





