Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Friday, July 03, 2009

யோக வசிஷ்ட்டமும் ரிலேட்டிவிட்டி தத்துவமும்




பில்லி ப்ரிசன் என்று ஒரு ஆசாமி இருக்கிறார். அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் இவர் "A Short History of Nearly Everything" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் பெரும்பாலான அறிவியல் தத்துவங்களுக்கு எளிமையாக விளக்கமளித்துள்ளார். எல்லாருக்கும் புரியும்படியான எளியமொழியும், மெல்லிய நகைசுவையும் கொண்ட இந்த நூல் ஒரு Best Seller. சுஜாதா தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய கட்டுரைகளை முறையாக ஒன்று திரட்டினால் ஒரு மினி "A Short History of Nearly Everything" கிடைக்குமென்பது எனது எண்ணம்.
'உங்களில் யார் அடுத்த சுஜாதா' நடத்தி அடுத்த சுஜாதாவாகவோ, குட்டி சுஜாதாவாகவோ, இல்லை சுஜாதாவின் வாரிசாகவோ வர விரும்புகிறவர்கள் அவர் அறிவியல் தமிழுக்கு செய்த பங்களிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்

சுஜாதாவின் , "ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து" மின்னூலை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.

Thursday, February 28, 2008

தமிழ் எழுத்துலக சக்ரவர்த்தி மறைவு - அஞ்சலி



காலையில் கூகிள் ரீடரைத் திறந்தபோது எனக்குப் பிடித்த பதிவர்கள் அனைவரும் பதிவிட்டிருப்பது கண்டு ஆச்சரியப்பட்டேன்.ஆனால் முதல் பதிவைத்திறந்தவுடனேயே மற்றவர்கள் அனைவரும் என்ன எழுதியிருப்பார்கள் என்று ஊகிக்க முடிந்கது.சில வாரங்களுக்கு முன் தேசிகனின் வலையில் சுஜாதாவின் உடல்நலக்குறைவு பற்றி படித்தபோதே என்னவோ போல் இருந்தது.இன்னும் ஒரு நூற்றாண்டிரும் என்று சொல்லிக்கொண்டேன்.நண்பனிடம் இதைப்பற்றிப் பேசும்போது கூட "டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவுடன இதை பத்தி ஒரு கட்டுரை எழுதுவாரு பாரு" என்று சொன்னேன்.மார்க் ட்வைன் சொன்னது போல "DEATH,THE ONLY IMMORTAL.." அது யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை.இன்று அது தமிழின் மாபெரும் எழுத்தாளனையும் தன்னோடு அள்ளிக்கொண்டத

சிறுவயதில் சுஜாதாவை கணேஷ்,வசந்தாகத் தான் வாசிக்கத்துவங்கினேன்.ஆனால் விரைவிலேயே கதைகளைக் காட்டிலும் அவரது கட்டுரைகள் என்னைக் கவரத்துவங்கின.அப்போது குமுதத்தில் வந்துகொண்டிருந்த "21ஆம் நூற்றாண்டின் விளிம்பில்" என்ற கட்டுரைத்தொடரை அண்ணன் பைண்ட் செய்து வைத்திருப்பான்.அதில் எனக்கு பாதிக்குமேல் அர்த்தம் புரியாது ஆனால் வாசிக்க வசீகரமாக இருக்கும்.கதைகளில் துப்பறியும் கதைகளைவிட "மத்யமர் கதைகள்",நகரம்" போன்ற யதார்த்தமான கதைகள் என்னையும் அதிகமாகக் கவர்ந்தன.சுஜாதாவின் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியரையும்,நூலையும் தேடிப்பிடித்து வாசிக்கத்துவங்கினேன்.இன்று எனக்கு விரல்விட்டு எண்ணுமளவுக்காவது ஆசிரியர்களையும் ,புத்தகங்களையும் தெரிந்திருக்கிறதென்றால் அவை சுஜாவின் கட்டுரைகளினால்தான் சாத்தியப்பட்டது.


விகடன்,குமுதம் போன்ற ஜனரஞ்ஜக இதழ்களுக்கும்,கணையாளி போன்ற சிற்றிதழ்களுக்கும் இடையில் அவர் கொண்டிருந்த பேலன்ஸ் அபாரமானது.எடுத்தவுடனேயே ஒரு பாமர வாசகனை சு.ராவையும் புதுமைப்பித்தனையும் படிக்க வேண்டும் என்று எதிபார்க்கமுடியாது.தனக்கு எழுதக்கிடைத்த பத்தியில் மெதுமெதுவாக நல்ல ஆசிரியர்கள்,நல்ல கவிதைகள் என அறிமுகப்படுத்தி,ஒரு பெரும் வாசகக் கூட்டத்தை சிற்றிதழ் நோக்கி நகர்த்திய பெருமை சுஜாதாவையே சேரும்.ஜி.நாகராஜனையும்,சாமர்செட் மாமையும்,சு.ரா வையும்,மகுடேஸ்வரனையும்,எரிகா ஜஙையும் என் போன்ற பாமரர்களுக்கு அறிமுகப்படுத்தியது அவரது மிகப்பெரிய சாதனை.


அறிவியல் கட்டுரைகளை அவரைவிட தமிழில் சிறப்பாக எழுதியவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று தெரியவிலை.அதேசமயம் அவை அவற்றின் நம்பகத்தன்மைக்காக(1 % முழுக்க தவறு பாக்கி 99% தான் உண்மை என்கிற ரேஞ்சில்)அதிகம் விமர்சிக்கவும் பட்டன.அவ்வாறு அவரை விமர்சித்தவர்களும் சுஜாதா என்ற அதே நுழைவாயில் வழியாகவே அத்துறையில் நெடுந்தொலைவு சென்றவர்களாக இருப்பார்கள்.


இன்று அவரது கட்டுரைகளை எடுத்துப் படித்தபோது ஏனோ அழுகையாக வந்தது.இன்று இவ்வளவு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, சுஜாதவைப் படித்த எல்லாருக்கும் அவரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது என்று தெரிகிறது.மேலும் எழுதியவர்கள் அனைவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.சுஜாதாவை ஒருமுறையாவது நேரில் சந்திக்கவேண்டும் என்ற என் எண்ணம் நிறைவேறாமலே போய்விட்டது.அதனால் என்ன..அவரே ஒரு பத்தியில் சொன்னது போல,


"ஆத்மாநாமை சந்திக்கக் கிடைத்த ஒரே சந்தர்பத்தை தவற விட்டு விட்டோமே என்று வருத்தமில்லை.அதேபோல் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று சுருக்கமாகச் சொன்ன கணியன் பூங்குன்றனார் குடுமி வைத்திருந்தாலோ,கடுக்கண் போட்டிருந்தாலோ எனக்குக் கவலையில்லை.ஆத்மாநாமோ,பூங்குன்றனாரோ...அவர்கள் கவிதைகளுடன் நான் பேச முடிகிறது.Our words knew each other.That was enough(Erica Jong)"

ஆம்.. our words knew each other.thats enough .

Monday, June 04, 2007

கமல்ஹாசன் பற்றி சுஜாதா(பழைய பேப்பர்!)



கமலஹாசனுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவருடைய off-screen personality சுவாரஸியமாக வெளிப்பட்டது.இருபத்து மூன்று வயது. ஒரு மலையாளப் படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார்.பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் ஜிப்பா,ஜரிகை வேஷ்டி.

அவர் அறையில் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை.ஏர்கண்டிஷனிரின் செளகரியத்தைத் தவிர.ஒரே ஒரு படம் இருந்தது.உக்கிரமாக முறைக்கும் ப்ரூஸ்லி. அமெரிக்க சினிமா சரித்திரத்தைப்பற்றியும் Sound in cinema பற்றியும் புத்தகங்கள் தென்பட்டன.படிக்கிறார்.இங்கிலிஷ் பண்பட்டு இருக்கிறது.கணையாளி போன்ற புத்தகங்களையும் புதுக்கவிதைகளையும் ரசிக்கிறார்.தன் தொழிலில் உள்ள சிரிப்பான விஷயங்களை இயல்பாக எடுத்துச்சொல்கிறார்.போலன்ஸ்கி,கோடார்ட் போன்ற ஐரோப்பிய டைரக்டர்களைப் பற்றிஅவருக்கு தெரிந்திருக்கிறது.ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் Frenzy என்ற படத்தில் ஒரு ஷார்ட்டைப் பற்றி உற்சாகமாக அவருடன் பத்து நிமிடங்கள் அலச முடிகிறது."மலையாளப் படங்கள் இப்போது பரவாயில்லை போலிருக்கிறதே" என்றேன்.அவர் "அதெல்லாம் அந்தக்காலம்,இப்போது மலையாளப் படங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன"தன் சட்டையைக் காட்டி "மலையாளப் படம்" என்றார்.

"எனக்கு அழவரவில்லை அழு அழு என்கிறார்கள்.ஒரு சமீபத்திய தமிழ் படத்துக்கு மூன்று பாட்டில் கிளிசரின் ஆயிற்று."

"பாடலைப் படமெடுக்கும் போது கதாநாயகிக்கு கூந்தல் விரிந்திருப்பது ஒரு செள்கரியம்.உதட்டசைவு மறந்துவிட்டால்! சட்டென்று கூந்தலைப் பிரித்து அதில் மறைந்து கொள்ளலாம்."

"டேய் முத்து,மாடசாமி,பிடிடா"என்று கிராமத்தில் குடிசையில் வின்சென்டர் ரைபிள்களை வினியோகிக்கும் கர்ணன் படங்களையும் படுத்துக்கொண்டே படமெடுக்கும் காமிராக்கோணங்களையும்(imagine ஜோதிலட்சுமி)அம்மாக்களையும்,தியாகங்களையும் மிகவும் ரசித்து அவருடன் விமர்சித்துக் கொண்டிருந்ததில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை.படப்பிடிப்பு காத்திருந்தது.ஆப்பிள் ஜூஸ் கொடுத்து அனுப்பிவிட்டார்.

உரக்கப் பேசும் உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக,கற்பனையுடன்,நம்பும்படி நடக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன்.

அக்டோபர் 1976

Sunday, July 02, 2006

6பதிவு

என்னை ஆறு விளையாட்டுக்கு டேகிய(taggia) அனுசுயா வுக்கு dankx(அப்பாடா எப்டியோ ஒரு பதிவு ஒப்பேத்தியாச்சு).எனக்கு பிடித்த ஆறு பிரபலங்களைப்பற்றி இந்தப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

(1)சுப்பிரமணிய பாரதி



தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
என இறுமாப்புடன் கேட்டதோடன்றி காலத்தின் பக்கங்களில் தன் பெயரை அழியாஎழுத்துக்களால் எழுதியும் சென்றவன்."எமக்குத்தொழில் கவிதை" எனசொன்னாலும் தன் வாழ்க்கையையே கவிதை போல வாழ்ந்தவன்.அல்பாயுசுக்கும் மேதைமைக்குமான தொடர்பு இவன் விஷயத்தில் மீண்டும் ஒருமுரை நிரூபணமானது.வாழ்ந்தகாலதில் சரியான முறையில் அங்கீகரிக்காமல் இறந்தபின் விழா எடுத்துக்கொண்டாடும் தமிழர்களை (மேலுலகத்திலிருந்து) இவன் பார்க்க நேர்ந்தால் ஒரு ஏளனப் புன்னகையை வீசக்கூடும்.


(2)எம்.எஸ்.சுப்புலட்சுமி



"குறை ஒன்றும் இல்லை" என்ற இவரது பாடலுக்கு உருகாதவர் எவரும் இருக்க முடியாது.கர்நாடக சங்கீதத்தை பற்றிய அடிப்படை ஞானம் எதுவும் இல்லதவர்களைக்கூட அந்த இசையை கேட்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.கருணையும் சாந்தமும் ததும்பி வழியும் இவரது உருவம் பெண்மையின் அடையாளம்.

(3)சுஜாதா

"இவர் வீட்டு Laundry பில்லை ப்ரசுரித்தால் கூட படிக்க ஒரு கூட்டம் இருக்கிறது" ஒரு வலைதளத்தில் விளையாட்டாக இப்படி குறிப்பிட்டிருந்தார்கள்.என்னைக்கேட்டால் இது ஒரு மிகைப் படுத்தப்பட்ட உண்மை அவ்வளவே.நவீன கதை சொல்லலின் தந்தை என இவரை சொல்லலாம்.எழுத்துக்கான உயர்ந்த விருதுகளை பெருமைப்படுத்த நினைத்தால்,அவற்றை இவருக்குக் கொடுக்கலாம்.இவர் தமிழ் எழுத்துலக சூப்பர் ஸ்டார்.

(4)எஸ்.பி.பி

"தேன் வந்து பாயுது காதினிலே"இப்டீன்னா என்னன்னு யாராவது கேட்டால் இவர் குரலைக் கேட்க சொல்லலாம்.பாடல்களை உதட்டிலிருந்து அல்லாமல் இதயத்திலிருந்து பாடுபவர்.ஒண்ணுமே இல்லாத சில சப்பையான பாடல்கள் இவர் பாடியதால் சூப்பர் ஹிட்டாகி இருக்கின்றன.பாடல் களுக்கு நடுவில் இரும,சிரிக்க,பேசக்கூட முடியும் என செய்து காடியவர்(அதை இவர் செய்தால் மட்டுமே நன்றாக இருக்கும்).பாடகர் மட்டுமல்ல இசையமைப்பாளர்,சிறந்த நடிகர்.


(5)கமல் ஹாசன்

இவர் செய்த ஒரே தவறு நம்ம நாட்டில் பிறந்தது தான்.

கேள்வி:அன்பே சிவம்,குருதிப்புனல்,மகாநதி இந்த படமெல்லாம் ஏன் நன்றாக ஓடவில்லை?பதில்:திருப்பாச்சி-200நாள்,சிவகாசி-100நாள்,ஆஅ-75 நாள் .....

பொக்ரான் அணுகுண்டு சோதனையினால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியன்.இவரது நற்பணி மன்றங்கள் மூலமாக இதுவரை 5000லிட்டருக்கும் மேல் ரத்ததானம் செய்யப்பட்டுள்ளது.தன் உடல் உறுப்புக்கள் அனைத்தயும் தானமாக தர ஒப்புக்கொண்ட நடிகர்.ஆயிரக்கணக்கில் இதுவரை புத்தகங்களை நூலகங்களுக்கு தானமாக வழங்கியுள்ளார்.உயிருள்ள கண்கள் என்று சொல்லுவார்களே அது இவருக்குப் பொருந்தும்.

(6)இளையராஜா

இவரது சோகப்பாடல்களைக் கேட்டால் அழுகை வரும்.உற்சாக பாடலைக்கேட்டால் குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்,குத்துப்பாடலைக்கேட்டால் ஆடத் தோன்றும்,தாலாட்டுப்பாடலைக்கேட்டால் தூக்கம் வரும்...ஆம் இவர் ஒரு மந்திரவாதிதான்.இளையராஜாவால் கூட அவரது இசையின் தாக்கத்தை,வீச்சை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.அந்த அளவுக்கு இரண்டு தலைமுறையினரை பாதித்துவிட்ட இசை இவருடையது.

இவர்களை 6 பதிவுக்கு அழைக்கிறேன்

(1)Gopalan Ramasubbu

(6)mscongeniality

Saturday, June 17, 2006

என் கணவர்....






பாரதி, சுஜதா....
இவர்கள் இருவரிடமும் பெரிதாக ஒற்றுமைகள் எதுவும் இல்லை.இருவரும் பிரபலங்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள் என்பதைத்தவிர....இருவரையும் ஒப்பிடவும் முடியாது.ஆனால் இவர்களின் மனைவிகள் இவர்களைப்பற்றி சொன்ன கருத்துக்களில் நிறைய ஒற்றுமை இருக்கிறது.செல்லம்மாள் பாரதிபற்றியும்,திருமதி சுஜாதா சுஜாதா பற்றியும் குறிப்பிட்டவற்றை இங்கு தந்துள்ளேன்.இருவரும் சராசரி வாழ்வுக்க்காக தவித்திருக்கிறார்கள் எனத்தெரிகிறது.பிரபலஙளின் மனைவி என்பது வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு வெண்டுமானால் பன்னீராக இருக்கலாம்...ஆனால் அவர்களுக்கு அது வெந்நீர் தான் போலும்.இதில் செல்லம்மாளின் பாடு ரொம்பவே திண்டாட்டம்.தமது கதைகளில் அல்ட்ரா மாடர்ன் பெண் கதாப்பாத்திரங்களை உலவ விடுபவர் சுஜாதா,அவரின் மனைவி இவ்வளவு கட்டுப்பட்டியானவர் என்பது ஆச்சரியம்.எனக்கும் பாரதிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது,அது கட்டுரையின் இறுதியில்....

பாரதிபற்றி செல்லம்மாள் ..

உலகத்தோடொட்டி வாழ வகையறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேனென்றால் உஙளுக்கு சிரிப்பாகத்தான் இருக்கும்.யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்,ஆனால் கவிஞனின் மனைவியாயிருப்பது கஷ்டம் அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரெமாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.ஏகாந்த்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவருங்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும்,ஆனால் மனைத்தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலுறுக்கமுடியுமா?கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.கடவுளை பக்தி செய்யும் கவிஞன்,காவியம் எழுதும் கவிஞன்,இவர்களை புற உலக தொல்லைகள் சூழ இடமில்லை.எனது கணவரோ கற்பனைக்கவியாக மட்டுமில்லாமல் தேசியக்கவியாகவும் விளங்கியவர்.அதனால் நான் மிகவும் கஷ்ட்டப்பட்டேன்.கவிதை வெள்ளத்தை அணை போட்டு தடுத்தது அடக்குமுறை.குடும்பமே தொல்லைக்குள்ளாகியது.

காலையில் எழுந்ததும் கண்விழித்து,மேநிலைமேல் மேலைசுடர் வானை நோக்கி வீற்றிருப்பார்.ஸ்நானம் ஒவ்வொருநாள் ஒவ்வொரு விதத்தில் அமையும்.சூரியஸ்நானம்தான் அவருக்குப்பிடித்தமானது.வெளியிலே நின்று சூரியனை நிமிர்ந்து பார்ப்பது தான் வெய்யற்க்குளியல்.சூரியகிரகணம் கண்களில் உள்ள மாசுகளை நீக்கும் என்பது அவரது அபிப்பிராயம்.காலை காப்பி தோசை பிரதானமயிருக்கவேண்டும் அவருக்கு.தயிர்,நெய்,புது ஊறுகாய் இவைகளை தோசயின் மேல் பெய்து தின்பார்.அவருக்குப் பிரியமான பொருளை சேகரித்துக்கொடுத்தால்,அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தை புசித்து விடுவார்கள்.எதை வேண்டுமானால் பொருக்கமுடிய்ம் ஆனல் கொடுத்த உணவை தாம் உண்ணாமல் பறவைகளுக்கு பொட்டுவிட்டு நிற்கும் அவரது தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் பொறுக்கவே முடிந்ததில்லை.புதுவயில் தான் புதுமைகள் அதிகம் தோன்றின.புது முயற்சிகள் புது நாகரீகம்,புதுமை பெண் எழுச்சி,புதுக்கவிதை-இவைதோன்றின.இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நாந்தான் ஆராய்ச்சி பொருளாக அமைந்தேன்.பெண்களுக்கு சம அந்தஸ்த்து வழங்க வேண்டுமா? வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே,பெண்விடுதலை அவசியம் என்று முடிவு கண்டு,நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர்.இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று
(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் 'என் கணவர்' என்ற தலைப்பில் செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை)


சுஜாதா பற்றி திருமதி சுஜாதா .....

ஆபீஸ் முடிந்து வந்தால் கிடுகிடுன்னு எழுத உட்கார்ந்து விடுவார். ராத்திரிகளில் கூட அவர் எந்த நேரம் தூங்குவார்னு தெரியாது. ஒரு மணியோ, ரெண்டு மணியோ கூட ஆகும்.
பசங்க என்ன வகுப்பு படிக்கிறாங்க, எப்படி படிக்கிறாங்க, எப்போ பரீட்சை, எதுவுமே அவருக்குத் தெரியாது. நாங்க வெளியூர் போயிருந்தால் வீட்டை பூட்டிட்டு வெளியே போகணும்கிறது கூட அவருக்குத் தெரியாது. கிளம்பி போயிட்டே இருப்பார். சின்ன சின்ன ரெஃப்ரன்ஸ§க்குக் கூட கையில இருக்கிற காசையெல்லாம் போட்டு புத்தகம் வாங்கிட்டு வந்துடுவார். வீட்டுக்குன்னு, குழந்தைகளுக்குன்னு எதிர்கால திட்டம் எதுவும் அவருக்குக் கிடையாது. நல்லவேளை, எங்க வீட்ல பெண் குழந்தை இல்லாததால் இதெல்லாம் பெரிய விஷயமா தெரியலே!...
சில நேரங்கள்ல நினைச்சுப் பார்க்கிறப்போ கஷ்டமா இருக்கும். ஆனா வெளில காட்டிக்க மாட்டேன். அவர்கிட்டே எனக்கு ஏனோ அப்படியரு பயம் இருந்தது. அவர் பெரிய ஜீனியஸ், நான் சாதாரண உணர்வுகளுள்ள மனுஷி என்பதாலேயா? ரொம்பவும் நெருங்கி அல்லது இறங்கி வந்து என் பயத்தை அவர் போக்க முயற்சிக்காததாலா?... எனக்குத் தெரியலே! அவரோட ஐம்பது வயசுக்கு மேலத்தான் அந்த பயம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா போச்சு!
அதுவும் கூட அவருக்கு ஹார்ட் பிராப்ளம் மாதிரி சில உடல் பிரச்னைகள் வந்து, நான் அதிக நேரம் அவருடன் இருந்து பணிவிடை செய்ய ஆரம்பித்த பிறகுதான்.
இவருக்குப் பெண் ரசிகைகள் நிறைய உண்டு. இவர் ‘பீக்’ல இருந்தப்போ எல்லாம் லேடீஸ்கிட்டேயிருந்து மாத்தி மாத்தி போன் கால்ஸ் வந்துட்டே இருக்கும். அதுல சில பெண்கள் சாதாரணமா பேசிட்டு வச்சிடுவாங்க. சிலர், என் குரலைக் கேட்டவுடனே போனை வச்சுடுவாங்க. நான் இல்லாத நேரமா திருட்டுத்தனமா பேசுவாங்க. அப்போல்லாம் மனசுக்கு வருத்தமா இருக்கும். இவர் சாதாரணமா, புகழ் இல்லாத மனிதரா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணும்!

எங்க ரெண்டு பேரோட இயல்புன்னு பார்த்தா நான் ஒரு துருவம்.... அவர் ஒரு துருவம்தான்! உறவினர்களோட பேசறது, வெளியே அவங்க வீட்டுக்குப் போறது, கோவிலுக்குப் போறது இதெல்லாம் எனக்குப் பிடிக்கும். ஆனால் அவருக்கு இதிலெல்லாம் பெரிய ஈடுபாடு கிடையாது. படிக்கணும்.. படிக்கணும்.. அல்லது எழுதணும்... எழுதணும்!... உண்மையைச் சொன்னா எனக்குக் கதைகள் படிக்கிறதில் எப்போதுமே பெரிய ஆர்வம் இல்லே!... அதெல்லாம் கனவுலக சப்ஜெக்ட்னு தோணும்!...
(சிநேகிதி இதழுக்கு திருமதி சுஜாதா தந்த பேட்டியிலிருந்து)

பரத்-பாரதி ஒற்றுமை:எனக்கும் காலை உணவு தோசை,காப்பி தான் ரொம்ப பிடிக்கும்.ஹி..ஹி



Friday, May 19, 2006

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு...

நேற்று தேசிகனின் வலைதளத்தை மேய்ந்து கொண்டிருந்தபோது,சுஜாதாவின் "வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு..." என்ற கட்டுரை கண்ணில் பட்டது.பழைய கட்டுரைதான்....சுஜாதாவின் மிகசிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இதைக்கூறலாம்.கட்டுரை அதிக ஜோடனைகள்,பாசாங்குகள் இல்லாமல் நேர்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது.இத்ற்குக்காரணம்...இது அவரது சொந்த அனுபவம் என்பதால் கூட இருக்கலாம்(அவரின் இரு மகன்களும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்).கட்டுரையின் இறுதியில் அவரே இதையும் குறிப்பிடுகிறார்.Project நிமித்தம் வெளிநாடு சென்று..விசா மாற்றி...கம்பெனி மாறி..அங்கேயே settle ஆகும் மென்பொருள் வல்லுநர்கள் பற்றி சொல்ல விட்டுவிட்டார்.இனி கட்டுரயிலிருந்து ஒரு பகுதி...

இன்றைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் விதிவிலக்கில்லாமல் ஒரு கஸினோ சித்தப்பாவோ அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கனவு தேசத்தின் அருமை பெருமைகளை வருடாந்திர விஜயத்தில் எடுத்துக் கூறி அந்த ஆசை சின்ன வயசிலிருந்து இ¬ளிர்களிடம் விதைக்கப்படுகிறது. அது நிறைவேறுவதற்கான தெளிவான பாதையும் தெரியும். ஜிஆர்ஈ, டோஃபெல் எழுதுவது, இருக்கிற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் தலா எழுபது எண்பது டாலர் அனுப்பி - விண்ணப்ப பாரம் பெற்று நிரப்பி அனுப்புவது, அதில் ஏதாவது ஒரு கல்லூரி இடம் கொடுக்க… விசாவுக்கென்று பாங்க் பாஸ் புக்கில் தற்காலிகமாக கடன் வாங்கி எட்டு லட்சம் பத்து லட்சம் காட்டுவது, படித்து முடித்து அடுத்த ப்ளேனில் திரும்பி வந்துவிடுவேன் என்று விசா ஆபீஸரிடம் புளுகுவது, அதை அவர்களும் சிரித்துக்கொண்டே நம்புவது - இது ஆண்களுக்கு.
பெண்களுக்கு மற்றொரு பாதை உள்ளது. இங்கே, எம்.சி.ஏ, பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவை படித்து இந்துவில் விளம்பரம் கொடுக்கும் அமெரிக்க என்.ஆர்.ஐ. மாப்பிள்ளைகளுக்குப் பதில் போட்டு கல்யாணம் செய்துகொள்வது. அதன் க்ரீன்கார்டு சிக்கல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. இவர்களுக்கு எல்லாம் என் அறிவுரை-தாராளமாக அமெரிக்கா செல்லுங்கள். உங்கள் திறமையும் புத்திசாலித்தனத்தையும் அங்கு சென்று பயன்படுத்திப் படிப்பதில் எந்தவித ஆட்சேபணையும் - யாருக்கும் இருக்கக்கூடாது. வாழ்த்துக்கள். இந்த தாத்தாவிடமிருந்து ஒரு டாட்டா! ஆனால், ஒரு வேண்டுகோள். அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-
1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தௌ¤¢வாக அறிந்து கொள்ளுங்கள்.
2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.
3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)
4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.
இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

முழு கட்டுரையையும் படிக்கவிரும்புபவர்கள் இங்கே க்ளிக்கவும்

நன்றி:தேசிகன்