Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Tuesday, May 04, 2010

Tuesday Teasers 3

# Grab your current read.
# Let the book fall open to a random page.
# Share with us few “teaser” sentences from that page.
# You also need to share the title of the book that you’re getting your “teaser” from … that way people can have some great book recommendations if they like the teaser you’ve given!
# Please avoid spoilers!

சென்னையில் ஆகாய யாத்திரை

இந்தியாவெங்கும் பிரஸித்தி பெற்ற ஸ்பென்ஸர் நமது சென்னைபுரிக்கு வந்து,
மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில் ஏறும்போது புகைக்கூட்டின் துணையினாலேறி வரும்போது அதைவிட்டு அதனோடு சேந்தாற்போல் மாட்டியிருந்த பாராசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து அதன் கீழே தொங்கிக்கொண்டு தமக்கு சிறிதாயினும் அபாயமில்லாதபடி ஷேமமாக வந்திறங்கினார். சற்றேறக்குறைய 3200-அடி உயரம் மட்டும் தான் ஏறினார். அவர் இறங்கி வருகையில் இந்திர லோகத்தினின்று தேவ விமானத்தின் வழியாக யாரோ தேவதை பூமியில் வந்திரங்குவது போலிருந்ததைக் கண்டு
அங்கு வந்திருந்த பல்லாயிரம் பிரஜைகளும் அவருக்குப் பல்லாண்டு பாடி ஆனந்தமடைந்தார்கள்.
- ’ஜநாநந்தினி’ சென்னை 1891 மார்ச்
(ஆசிரியர் அன்பில் எஸ்.வெங்கடாசாரியார்)
புஸ்த. 1. இல 3. பக்கம் 53


சடுதியாக ஒரு அறிமுகம்:
ட்ராவலாக்(travelogue) என்று சொல்லப்படும் பயண இலக்கியங்கள் தமிழில் மிகக்குறைவு. அந்தக்குறையைப் போக்குவதற்காக ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று அறியப்படும் திரு ஏ.கே.செட்டியார் தமிழக ஊர்கள், அரிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கி.பி.1800 முதல் 1950 வரை தமிழில் வெளியான அனைத்து செய்திகளையும் கவனமுடன் தொகுத்து ‘தமிழ் நாடு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். அந்நாளில் ஒவ்வொரு ஊரும் எப்படியிருந்தது என்பது குறித்த விவரணைகளும், ரயில், ஆகாய விமானம் குறித்த செய்திகளும் மிக சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளன.
---------------------------------------------------------------------------------------------
நூலின் பெயர்: தமிழ்நாடு
திரட்டி தொகுத்தவர்: ஏ.கே.செட்டியார்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

---------------------------------------------------------------------------------------------


Friday, July 03, 2009

யோக வசிஷ்ட்டமும் ரிலேட்டிவிட்டி தத்துவமும்




பில்லி ப்ரிசன் என்று ஒரு ஆசாமி இருக்கிறார். அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் இவர் "A Short History of Nearly Everything" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் பெரும்பாலான அறிவியல் தத்துவங்களுக்கு எளிமையாக விளக்கமளித்துள்ளார். எல்லாருக்கும் புரியும்படியான எளியமொழியும், மெல்லிய நகைசுவையும் கொண்ட இந்த நூல் ஒரு Best Seller. சுஜாதா தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய கட்டுரைகளை முறையாக ஒன்று திரட்டினால் ஒரு மினி "A Short History of Nearly Everything" கிடைக்குமென்பது எனது எண்ணம்.
'உங்களில் யார் அடுத்த சுஜாதா' நடத்தி அடுத்த சுஜாதாவாகவோ, குட்டி சுஜாதாவாகவோ, இல்லை சுஜாதாவின் வாரிசாகவோ வர விரும்புகிறவர்கள் அவர் அறிவியல் தமிழுக்கு செய்த பங்களிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்

சுஜாதாவின் , "ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து" மின்னூலை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.

Wednesday, February 11, 2009

திரும்பிப் பார்க்கிறேன்

ஏழெட்டு வாரங்கள் House full ஆக ஓடியது படம். அதன் பிறகு அந்த நிலையிலிருந்து கொஞ்சம் குறைந்தது.’என்னடா இது ஆரம்பத்திலிருந்த வேகம் தொடராது போலிருக்கே’ என்று நான் கவலைப்படத் தொடங்கிய சமயம் ஒரு சர்ச்சை வெடித்தது!

“படத்தின் பெயரிலேயே ஆபாசம் தொனிக்கிறது; காட்சிகளும் ஆபாசமாய் உள்ளன;சமுதாயத்தைக் கெடுக்ககூடிய இத்தகைய படங்களைஅரசு அனுமதிக்கலாமா?” என்று ஒரு எம்.எல்.ஏ சட்டசபையிலே பிரச்சனை கிளப்ப, வேறு சிலர்,”படம் ஆபாசமில்லை;கவர்ச்சிகரமாக எடுக்கப்பட்டுள்ள காதல் கதை அவ்வளவே; அது எடுக்கப்பட்டுள்ள விதம் பாரட்டுக்குரியது” என்று எதிர்வாதம், விவாதம் சூடு பிடித்து பத்திரிக்கைகளில் பிரமாதப்பட்டது.
விவகாரம் சட்டசபை வரை போய்விட்டதால் நான் உள்ளூர பயந்தேன்.’படத்தைத் தடை செய்து விடுவார்களோ’ என்ற கவலையில்,கோர்ட்டுக்குப் போய் ‘ஸ்டே’ வாங்கும் உத்தேசத்தில், “வக்கீலை இப்போதே சந்தித்துப்பேசலாம்” என்று கூட பார்ட்னர்கள் யொசனை சொன்னார்கள்.


ஆனால் நல்லவேளையாக அப்படி தடை உத்தரவு எதுவும் பிரப்பிக்கப் படவில்லை.சட்ட சபையில் நடந்த விவாதங்கள் அதற்கு வெளியேயும் நடந்த பரபரப்புடன் தொடர,படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது.அது மட்டுமா? ஏற்கனவே பார்த்தவர்கள் கூட ‘படம் ஆபாசமா?’ என்று எடை போட்டுப் பார்க்க மறுபடியும் பார்த்தார்கள்! பிறகு படத்தின் வெற்றிக்குக் கேட்பானேன்! ஆக மொத்தம் ‘கலக்‌ஷன்’ கொஞ்சம் குறைய ஆரம்பித்த சமயம் வெடித்த சர்ச்சை, பெரிய அனுகூலமாக முடிந்தது.

--oOo--


இயக்குநர் ஸ்ரீதர் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் "திரும்பிப் பார்க்கிறேன்" என்ற நூலை அவரது செமி-பயாகிராபி எனலாம். கல்கியில் தொடராக வந்து பின் தொகுக்கப்பட்டதாக முன்னுரை சொல்கிறது. வாரமலரில் வாசிக்கக் கிடைப்பது போன்ற லெளசியான மொழி நடை தான் என்றாலும் சம்பவங்களால் சுவாரசியப்படுகிறது. இளம்வயதில் நாடகங்களில் பணியாற்றத் துவங்கியது, சினிமாவில் கதாசிரியராக நுழைந்து இயக்குனரானது, இந்தி படவுலகில் கால் பதித்தது, சித்ராலயா துவக்கம், வெற்றி தோல்விகள், சிவாஜி, எம்.ஜி.ஆர்-ஐ இயக்கியது என அவரது திரையனுபவங்களை சிறுசிறு பத்திகளாக விரித்து செல்கிறது புத்தகம்.

மேலோட்டமாகப் பார்த்தால் வழக்கமான ட்ரிவியா புத்தகம் போல தோன்றினாலும், ஸ்ரீதர் இதில் சொல்லாமல் சொல்லியிருக்கும் சங்கதிகள் பல. உதாரணாமாக, அந்நாளில் திரையுலகில் நிலவிய அரசியலை அவரின் அனுபவங்களின் ஊடாக ஓரளவிற்கு விளங்கிக் கொள்ள முடிகிறது. தனக்கு ஏற்பட்ட ஈகோ பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்வதில் ஸ்ரீதரின் நேர்மை தெரிகிறது. தனக்குக் கீழிருந்த நடிகர்களிடம் " நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?" என்பது போன்ற மனோபாவத்த்தில் நடந்துகொண்டதும் அதையே எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோர் இவருக்கு செய்ததையும் வரிகளுக்கு இடையே இருந்து அறிந்துகொள்ளலாம். ஒரு படத்துக்காக ராஜசுலோச்சனாவை ஒப்பந்தம் செய்யப் போனபோது, அவர் தான் ஒரு ஒப்பந்த படிவம் வைத்திருப்பதாகவும் இயக்குனர் அதில் கையெழுத்திட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். அதனை அவமதிப்பாக நினைத்து அவருக்கு பதிலாக விஜயகுமாரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தபடம் கல்யாண பரிசு. பின்னாளில் விஜயகுமாரியை வேறு ஒரு படத்திற்கு நடிக்கக் கேட்க, அவரோ தன் கணவர் எஸ்.எஸ்.ஆர் தான் தனக்கு கதை கேட்பார் என சொல்லியிருக்கிறார். உன் கணவருக்கெல்லாம் கதை சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று சொல்லி, அப்போது படங்களில் இராண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த தேவிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தப் படம் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'. எம்.ஜி.ஆரை வைத்து துவங்கிய 'அன்று சிந்திய ரத்தம்' படத்துக்கான பத்திரிக்கை விளம்பரத்தில் "கலர் படம்" என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார். அதே பத்திரிக்கையில் வந்திருந்த அவருடைய 'காதலிக்க நேரமில்லை' படத்துக்கு கலர் படம் என்ற விளம்பரமிருந்தது. இதனால் எம்.ஜி.ஆர் கால்ஷீட் குழப்படிகள் செய்து படத்தை நிறுத்திவிட்டார். 'யாருக்காக அழுதான்' படத்தில் சிவாஜியின் சிகைஅலங்காரம் நன்றாக இல்லை என்று சொல்லப்போக, சிவாஜி அந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார். ஆக 2 + 2= 4.

ஸ்ரீதர் படங்களில் வரும் பாடல்கள் காலத்தைவென்று மக்கள் மனதில் நிலைத்திருக்கக் காரணம் அவரது உழைப்பும் சமரசம் செய்துகொள்ளாத
உறுதியும்தான். ஒரு குறிப்பிட்ட படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் எடுத்துமுடிக்கப்பட்ட பின்னரும், அப்படத்தின் முக்கியமான பாடல் அமையவே இல்லை. ஏதாவது ஒரு பாடலை வைத்துப் படத்தை முடித்துவிடுங்கள் என தயாரிப்பாளர் நச்சரித்தும் ஸ்ரீதர் ஒப்புக்கொள்ளவே இல்லை. எம்.எஸ்.வி நூற்றுக்கணக்கான ட்யூன்கள் போட்டுக் காட்டியும் அவருக்கு எதிலும் திருப்தியே ஏற்படவில்லை. இறுதியாக சிலமாதங்கள் கழித்து தன் மனதிற்குப் பிடித்த பாடல் அமைந்தபின் தான் படத்தை தொடர்ந்து இயக்கி இருக்கிறார். அந்தப் பாடல் "நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை".இப்படத்தின் பெயரைச் சொன்னால் முதலில் மனது இந்தப் பாடலைத்தான் முணுமுணுக்கும். அக்காலத்திலேயே ஆங்கிலப் படங்களைப் பற்றிய பரந்த அறிவும், தொழில் நுட்ப ஞானமும் அவரை மற்ற இயக்குனர்களிலிருந்து தனித்துக் காட்டியதோடு புதுமை இயக்குனர் என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தன.

--oOo--

முதல் பத்தியில் ஸ்ரீதர் சொல்லியிருக்கும் அந்த ஆபாசப்படம் "காதலிக்க நேரமில்லை"(1964). புத்தகத்திலிருந்து மற்றொரு சிறு பகுதி...

பரணி ஸ்டூடியொவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டோடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி."அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு" என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். "அண்ணே வாங்க வாங எங்க இவ்வளவு தூரம்?"என்றேன். தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி "இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?" என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , "என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க" என்றார்.

சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?


Saturday, January 06, 2007

படித்ததில் பிடித்தது(3)

பொதுவாக, எதுவும் எழுதத் தோன்றாதபோது(வராதபோது) மற்றவர்களின் கவிதையையோ,கதையையோ போட்டு ஒப்பேற்றுவது வழக்கம்.என் 75% பதிவுகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.அந்த வரிசையில் சுஜாதா சொன்ன 'நபகோவின்' சிறுகதை ஒன்றையும் கல்யாண்ஜியின் கவிதை ஒன்றையும் இப்பதிவில் தருகிறேன்.

இனி...

நாபகோவ்(Nabakov) 'லோலிடா' எழுதிப் பெயர் அடைந்தவர்.கொஞ்சம் ஆபாசமான விஷயத்தை மிக அருமையான வசன நடையில் எழுதித் தப்பித்தவர்.இவரது சிறுகதை ஒன்று என் ஞாபகத்திலிருந்து சொல்கிறேன்:-

ஒரு அப்பா,ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான்.ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது!

பெற்றோர்களுக்கு ஒருதினம் ஆஸ்பத்திரியிலிருந்து போன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும் உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்.அதற்குள் என்ன நேர்ந்து விடுமோ என்று கவலைகடலில் இரவெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்போது:-

டெலிபோன் மணி அடிக்கிறது.பதற்றத்துடன் பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

"ஹென்றி இருக்கிறானா?" என்கிறது ஒரு பெண்குரல்.

"ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை,தப்பு நம்பர்" என்று வைத்து விடுகிறார்.

மறுபடி சில நிமிஷம் கழித்து டெலிபோன் மணி அடிக்கிறது.

"ஹென்றி இருக்கிறானா" அதே பெண்.

"மிஸ்,உனக்கு என்ன நம்பர் வேண்டும்?

"5365849"

"என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச்சுழற்றுகிறாய் போலிருக்கிறது"

"ரொம்ப தாங்க்ஸ்" என்று அந்தப் பெண் வைத்துவிடுகிறாள்.

கதையில் இன்னும் ஒருவரிதான் இருக்கிறது.

சிலநிமிஷ்ம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

நபகோவின் புத்திசாலித்தனம்! புரிகிறதா?

- சுஜாதா,1966


************

நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்குபோல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக்கொண்டது முற்றிலும்
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

-கல்யாண்ஜி,அந்நியமற்ற நதி


அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Wednesday, December 13, 2006

படித்ததில் பிடித்தது(2)

காடுகளும் வழித்துணைகளும்

மூன்று பேர்கள்
அமர்ந்திருக்கும் அறையில்
அனேகமாக யாராவது ஒருவர்
தனியே விடப்படுகிறார்

இருவர் ஆணாய்
ஒருவர் பெண்ணாய்
ஒருவர் ஆணாய்
இருவர் பெண்ணாய்
இருந்துவிட்டால்
இந்தக் கொடுமைகளுக்கு
முடிவே இல்லை

அந்த ஒருவர்
மயங்கி விழுகிறார்

தேம்பி அழுகிறார்

பெரிய தத்துவத்தையோ
கவிதையையோ
பேசமுற்படுகிறார்

கதவை திறந்து கொண்டு
வெளியேறுகிறார்

என்னன்னவோ
செய்ய வேண்டியிருக்கிறது
இந்த உலகில்
இன்னொருவரின்
கவனத்தை ஈர்க்க

நானாக இருந்தால்
ஒருவெடிகுண்டை
பற்றவைப்பது பற்றி யோசிப்பேன்

-மனுஷ்யபுத்திரன்

இது போன்ற தருணங்களில் அடிக்கடி சிக்கிக்கொள்வதாலோ என்னவோ இந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.இறுதி வரி அழகாக அதேசமயம் மன அழுத்தத்தின் உச்சத்தை உணர்த்துவதாக இருக்கிறது.மனுஷ்யபுத்திரனின் "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" என்ற கவிதைத் தொகுப்பில் "காடுகளும் வழித்துணைகளும்" என்ற நீள் கவிதையின் கீழ் வருகிறது இப்பகுதி.

Saturday, April 29, 2006

படித்ததில் பிடித்தது(1)

உன் பார்வைகள்
-----------------
காயங்களுடன் கதறலுடன்
ஓடி ஒளியுமொரு பன்றியைத்
துரத்திக் கொத்தும்
பசியற்ற காக்கைகள்
உன் பார்வைகள்
-கலாப்ரியா

ஒற்றை 'பூ'
----------------
தண்டவாளத்தில்
தலைசாய்ந்து கிடக்கும்
ஒற்றைப் பூ
நான்.

நீ
நடந்து வருகிறாயா?
இரயிலில் வருகிறாயா?

-பழனி பாரதி


ஒரு புள்ளியில்
-----------------
இனி பார்க்க
வேண்டும் என்கிற
ஆசைவருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப்
பார்த்துக் கொள்ளலாம்

எங்காவது
ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக்
கொள்ளட்டுமே

-அறிவு மதி