Monday, January 21, 2008
புனே திரைப்பட விழா - ஒரு பார்வை
எல்லாமே நல்ல படங்கள் தானே என்று நினைத்து எதாவது ஒரு படத்தில் போய் உட்கார்ந்து கொள்வது தவறு.இது நான் முதல் நாளே பட்டு தெரிந்து கொண்டது.அதன் பின்னர் கூக்ளி,சினாப்சிஸ் படித்துத்தான் படங்களைத் தேர்ந்தெடுத்தேன். இவ்விழாவில் நான் பார்த்த படங்களில் குறிப்பிடத்தக்கவை
-In the name of gods(குதா கேலியே)
இந்திய விழாவில் திரையிடப்பட்டிருக்கும் முதல் பாகிஸ்தானிய படமிது.பழைமைவாதிகளால் மதத்தின் பெயரால் பாகிஸ்தானிய இளைஞர்கள் எவ்வாறு சீரழிக்கப் படுகிறார்கள் என்பதையும், 9/11 க்குப் பிறகு உலக அரங்கில் பாகிஸ்தானியர்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் பேசும் படம்.தைரியமான முயற்சி.பாகிஸ்தான் அரசின் தடைகளிலிருந்து தப்பி இப்படம் உலக அரங்குக்கு வந்ததே பெரிய ஆச்சரியம்.இசை இஸ்லாமில் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்று ஒரு பிரிவினர் நம்புகிறார்கள்,பாகிஸ்தானில் பெரும்பான்மையினருக்கு அராபிக் படிக்கத்தெரியும் ஆனால் சிலருக்குதான் அர்த்தம் புரிந்து கொள்ளத்தெரியும் போன்றவை எனக்கு புதிய செய்திகள்.வெடிகுண்டு மிரட்டல்களைத்தாண்டி அங்கு இப்படம் வசூலில் சாதனை புரிந்து வருவது அம்மக்களின் மனநிலையையே பிரதிபலிக்கின்றது.
-Cherries (china)
I am Sam படம் பார்த்ததிலிருந்து அதில் ஷான் பென்னின் கதாபாத்திரத்தை அவரைக்காட்டிலும் வேறுயாராலும் சிறப்பாக செய்யமுடியாது என்று திடமாக எண்ணிக்கொன்டிருந்தேன்.ஆனால் இந்த சீன படத்தைப் பார்த்தபோது அந்த எண்ணம் மாறிப்போனது.கிட்டத்தட்ட "I am sam" போன்றதொரு கதையில் மனநலம் குன்றிய கதாபாத்திரத்தில் மையோ பு என்ற நடிகை மிக அருமையாக நடித்திருந்தார்.இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்காதது வருத்தமே.
-Black Book (Netherland)
இரண்டாம் உலகப் போரின் போது நாஸிக்களின் பிடியிலிருந்து தப்பிக்கும் ஒரு யூத பாடகியின் கதை.விறுவிறுப்பான நாவல் படிப்பது போல இருந்தது.அக்மார்க் ஹாலிவுட் மசாலா.எக்கச்சக்க படங்களில் பார்த்ததாலோ என்னவோ யூதர்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பொது வருத்தமே ஏற்படவில்லை.மாறாக போர்முடிந்தவுடன் யூதர்கள் நாஸிக்களைக் கொல்வது மனிதனின் அடிப்படை குணத்தைக் காட்டுகிறது.
கவனம் கவர்ந்த மற்ற படங்கள்
Seventh Heaven(egypt),Tricks(Poland),Bliss(Turkey)
தமிழ் படங்களில் அம்முவாகிய நான்,பருத்திவீரன்,பெரியார் ஆகியவையும் மலையாளப் படங்களில் ஒரே கடல்,நாலு பெண்கள் மற்றும் ராத்திரி மழா ஆகியவையும் திரையிடப்பட்டன.மெயின் ஸ்ட்ரீம் படங்கள் என்று சொல்லி ஓம் ஷாந்தி ஓம்,ஹே பேபி,பாட்னர் போன்ற படங்களைத் திரையிட்டது அபத்தம்.
பெட்ரோ அல்மொடோவரின் சில படங்கள் திரையிடப்பட்டன.ஆஸ்கர் இயக்குனர் ஆயிற்றே விஷயமிருக்கும் என்று நினைத்துப் பார்க்கபோனால்,ஐந்து நிமிடங்களில் "அவனா நீயி" என்று தலைதெறிக்க ஓடிவரவேண்டியதாயிற்று.
இங்க்மர் பெர்க்மென்னின் cries and whispers என்ற படம் திரையிடப்பட்டது.இவரைப் பற்றி வலை பதிவுகளிலும் புத்தகங்களிலும் ஏற்கனவே படித்திருந்ததால் படத்தைப் பார்க்கப்போயிருந்தேன்.அரங்கு நிறைந்த காட்சி.படம் முடிந்ததும் எல்லாரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் கைத்தட்டினார்கள்.நானும் தட்டினேன்'என்னைப் போல எத்தனை ப்ரகஸ்பதிகள் புரியாமலே கைத்தட்டுகிறார்களோ என்று எண்ணிக்கொண்டே'.
Thursday, November 08, 2007
சுமாரான தீபாவளி வாழ்த்துக்களும்,சூப்பரான பிறந்தநாள் வாழ்த்துக்களும்

நடிப்பு மேதை கமல் ஹாசனுக்கு உளம் கனிந்த(belated)பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------
இந்த முறை தீபாவளிக்கு ஊருக்குப் போக லீவு கிடைக்கவில்லை.போதாக்குறைக்கு, வட நாட்டில் தீபாவளி வெள்ளிக்கிழமையிலிருந்துதானாம்.அதனால் வியாழக்கிழமை(தீபாவளியன்று)அலுவலகம் உண்டு.எரியும் விளக்கில் எண்ணையை ஊற்றுவது போல பல்பீர் சிங்,ரங்பீர் சிங் என பரிச்சயம் இல்லாத மக்களெல்லாம் "Diwali Wishes" அனுப்பி மெயில் பாக்ஸை ரொப்புகிறார்கள்.அதனால் வெறுப்பில் ஒரு தீபாவளி (சிக்)ஜோக்,
குழந்தை: நம்ம மட்டும் ஏன் இந்த தடவை ஆகஸ்ட்லயே தீபாவளி கொண்டாடறோம்?
Thursday, November 01, 2007
லா.சா.ரா - அஞ்சலி
தபஸ்
நண்ப,
'இப்புத்தகத்தில் வரும் பெயரோ பாத்திரங்களோ ஒருவரையும் குறிப்பிடுவன அல்ல' என்ற சம்பிரதாயச் சொல் ஒரு பெரும் புளுகு என்று அறிந்து கொள்.ஏனெனில் ,எவரும் எவரையும் குறிப்பிடாது இருக்க முடியாது.தெய்வமே ஒரு குறிப்பிட்ட பொருள் தான்.அந்த குறிப்பைச் சுற்றி சுற்றி நாம் இயங்கி,அதனால் குறிக்கப்பட்ட பொருள்கள் ஆய்விட்டோம்.
லா.சா.ராமாமிருதம்
Friday, October 05, 2007
திரை விமர்சனம்
நான்கு(மார்கெட் போன)கதாநாயகர்கள்.நான்கு பேரும் முட்டாள்கள்.இவர்களுக்கு வேலை வெட்டி இருக்காது.இவர்களை தூக்கி சாப்பிடும் விதமாக அடிமுட்டாளாக ஒரு வில்லன்.இவர்கள் எல்லாரும் பணத்தையோ பெண்ணையோ தேடி அலைய வேண்டும் + ஒரு மூட்டை பழைய ஜோக்குகள்(பீர்பால் நகச்சுவைகள்,தெனாலி ராமன் துணுக்குகள்,சர்தார்ஜி ஜோக்குகள்).
இது தான் பாலிவுட்டில் தற்போது எல்லா நகைச்சுவைப் படங்களும் இன்ஹெரிட் செய்யும் பொதுவான டெம்ப்ளேட்.
Director :Indra Kumar
Actors :Sanjay Dutt,Arshad Warsi,iJaved Jaffrey,
Ritesh Deshmukh, Aashish Chaudhary,Asrani
Music Director:Adnan Sami
சாகும் தருவாயில் பிரேம் சோப்ரா புதையல் பற்றிய ரகசியத்தை நான்கு பேரிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.புதயலைத் தேடி வரும் (போலீஸ்)சஞ்சய்தத்துக்கும் இந்த நால்வருக்கும் நடக்கும் சண்டைகளும்,புதையலை அடைய ஒவ்வொருவரும் தனித்தனியே செய்யும் முயற்சிகளும் தான் கதை.இரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்து துணுக்கு மழை.ஆனால் எல்லாம் நாம் ஏற்கனவே கேட்டு சிரித்த பழைய ஜோக்குகள்.காதலா காதலாவில் இறந்தவர் வீட்டுக்குபோய் ஓவியம் விற்கும் காட்சியைக் கூட காப்பியடித்திருக்கிறார்கள்(காதலா காதலா ஒரிஜினலா??).அங்கங்கே சிரிப்பை வரவழைத்தாலும் மொத்ததில் படம் சுமார்.
மதிப்பெண்கள்: 1/5
டோல்(Dhol)

Director :Priya Darshan
Actors :Sharman Joshi,Tusshar Kapoor,Kunal Khemu,
Tanushree Datta,Rajpal Yadav,Om Puri
Music Director:Pritam chakraborty
நான்கு வெட்டி கதாநாயகர்கள்.எதிர் வீட்டுக்குக் குடிவரும் தனுஷ்ரீயை கவர நால்வரும் வித விதமாக முயற்சி செய்கிறார்கள் .தனுஷ்ரீ தத்தாவோ இறந்துபோன தன் அண்ணனின் சாவில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று தோன்றியது.ராஜ்பால் யாதவ் "பக்கியா கல்டி மாரோ" என்று அலறிய போது மூளையில் பல்ப் எறிந்தது."கோபாலா பிச்சுக்கோ" ஞாபகம் இருக்கிறதா?.படம் பெயர் எம்.ஜி.ஆர் காலனி என்று நினைக்கிறேன்.ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்தது.இதன் மூலம்- "ஹரிஹர் நகர்"(மலையாளம்) .பிரியதர்ஷன் ஆனாலும் அர்த்தபழசுகளைக்கூட விடாமல் ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்.முதல் பாதி அறுவை,இரண்டாவது பாதி தப்பிப்பிழைக்கிறது.
மதிப்பெண்கள்: 1/5
மனோரமா-Six Feet Under
Director :Navdeep Singh
Actors :Abhay Deol,Raima Sen,Gul Panag,Sarika,Vinay Pathak,Kulbhushan Kharbanda
MusicDirector: Jayesh Gandhi,Raiomond Mirza
வாரத்திற்கு ஐந்து ஆறு படங்கள் ரிலீஸாவதில் உள்ள சங்கடம் சில நல்ல முயற்சிகள் கவனம் பெறாமல் போவது தான்.நான் போனவாரம் பார்த்த மனோரமா-six feet under அப்படிப்பட்ட முயற்சி எனலாம்.ரோமன் பொலன்ஸ்கியின் "சைனா டவுன்" படத்தை லேஸாகத் தழுவி எடுக்கப் பட்டிருக்கிறது.ஜெய்பூர் அருகே வறசியான ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது.இரிகேஷன் டிப்பார்ட்மெண்டில் ஜூனியர் இஞ்சினியராக வேலை பார்க்கும் 'அபய் தியோல்' லஞ்ச ஊழல் காரண்மாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டில் இருப்பவர்.எழுத்து தான் இவருக்கு முதல் காதல்.துப்பறியும் கதைகள் எழுதிபெயர் பெறவிரும்பும் இவரின் முதல் கதையே படுதோல்வி.போததற்கு சதா தொணதொணக்கும் மனைவி.இந்நிலையில் ஒருநாள் இரவு இவரது வீட்டிற்கு வரும் சரிகா தன்னை மந்திரியின் மனைவியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.மந்திரிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும்,அவரை வேவு பார்க்கவேண்டும் என்றும் கூறி பெருந்தொகை ஒன்றைக்கொடுத்துச் செல்கிறார்.விளையாட்டாக 'அபை' இதில் இறங்க, அடுத்தடுத்து நிகழும் கொலைகளும்,விழும் முடிச்சுகளும் அவரை பெரும் சிக்கலில் மாட்டிவிடுகின்றன.சாகசங்கள் எதுவும் செய்யத்தெரியாத ஹீரோ இதனை எப்படி எதிர் கொள்கிறார் என்பது மீதிக்கதை.வித்தியாசமான கதையையும்,கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்ததற்காகவே அறிமுக இயக்குநர் 'நவ்தீப் சிங்கை' பாராட்டலாம்.மிக மெதுவாகவும்,இயல்பாகவும் பயணிப்பதே இப்படத்தின் பலம் மற்றும் பலவீனம்.பாலைவனத்தின் வெய்யில் அருமையாக சிறைபடுத்தப்பட்டிருக்கிறது கேமராவில்(அரவிந்த் கண்ணபிரான்).இப்படத்தின் ஹீரோ 'அபை தியோல்' எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர்.வழக்கமான மசாலா படங்களை ஒதுக்கி வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்(சோச் நா தா,ஆஹிஸ்தா ஆஹிஸ்தா,ஏக் சாலிஸ்..),இந்த படத்திலும் படு இயல்பாக நடித்திருக்கிறார்.கொஞ்ச நேரம் வந்தாலும் விநாயக் பதக்(பேஜா ஃரை) கலக்குகிறார்.கடைசி இருபது நிமிடங்களில் நிகழும் திரைக்கதைக் குழப்பங்கள் படத்திற்கு மைனஸ்.மொத்தத்தில் இது ஒரு Refreshing Movie.
Noir என்று சொல்லப்படும் Black Film வகையைச் சேர்ந்தது இந்தப்படம்.தமிழில் இவ்வகைப்படங்கள் உள்ளனவா?தெரிந்தவர்கள் குறிப்பிடலாம்.
மதிப்பெண்கள்: 3/5
ஜானி கத்தார்(Johny Gaddar)

Director :Sriram Raghavan
Actors :Neil Mukesh,Zakir Hussain,Dharmendra,Rimi Sen,Vinay Pathak
Music Director:Vishal Dadlani · Shekhar Ravjiani
"மனோரமா" விற்கு எதிர் மாறாக ஒரு த்ரில்லர்.படத்தின் முதல் பத்து பதினைந்து நிமிடங்களிலேயே யார் செய்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் ,இருந்தும் அடுத்து வரும் இரண்டுமணி நேரமும் உங்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்க வைக்கிறார் இயக்குநர்.ஐந்து பிரதான கதாப்பாத்திரங்களைச் சுற்றி கதை சுழல்கிறது என்றாலும் படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான்.ஹாலிவுட் பாணியில் புத்திசாலித்தனமான படம் கொடுத்ததற்காக ஸ்ரீராம் ராகவனுக்கு(தமிழ்?) ஒரு "சபாஷ்".நடிகர்களின் நடிப்பு OK ரகம்.தர்மேந்திரா,விநாயக் பதக் நன்றாக நடித்திருக்கிறார்கள்.ஹீரோ அவ்வப்போது என்ன முகபாவம் கொடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறார்(அது கதைக்கு பொருத்தமாகவும் உள்ளது!).சின்ன சின்ன லாஜிக் வழுக்கல்கள் தவிர பெரிதாகக் குறிப்பிட குறைகளெதுவும் இல்லை.பின்னணி இசை கச்சிதம்.இரண்டு ஹிட் பாடல்கள்,இரண்டுமே திரையில் வராது.
பாக்கிய ராஜின் "விடியும் வரை காத்திரு" பார்த்திருக்கிறிர்களா?அந்த ஜாதிப் படம் இது.
மதிப்பெண்கள்: 3/5
Friday, September 21, 2007
உதிரிக் குறிப்புகள்
*போலி,போலியல்லாத,கருப்பு,சிவப்பு மற்றும் ஜாதீயப் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவிட்டு,கடந்த இரண்டுநாட்களாக அத்தகைய பதிவுகள் எதுவும் சூடான இடுகைகளில் காணக்கிடைக்காத போது கைநடுக்கம் ஏற்பட்டது.
*வாராவாரம் (மெனக்கெட்டு) "ராஸ்தா பேட்" வரை சென்று விகடன் வாங்கிவர எனக்கு மீதமிருந்த ஒரு காரணமும் தீர்ந்து போனது(க.பெ).
*சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்கள் ரொம்பவும் வெறுமையை உணரச்செய்தன.
(1)Metamorphosis(Kafka)
"As Gregor Samsa awoke one morning from uneasy dreams he found himself transformed in his bed into a gigantic insect."
(2)நாளை மற்றுமொரு நாளே(ஜி.நாகராஜன்)
"உங்களுக்கு வாழ்க்கையில லட்சியம் என்னண்ணே?" என்றான் முத்துசாமி.
பின்நவீனத்துவமாக சொல்கிறேன் பேர்விழி என்று சாதாரண விஷயங்களைக் கூட குழப்பியடித்து படிப்பவனை மண்டைகாயவைக்கும் நூல்கள் ஒருபுறமிருக்க, நா.ம.நா போன்ற நாவல்கள் "இருத்தலியல்" போன்ற பெரிய தத்துவங்களைக்கூட அதன் பளு தெரியாமல் வாசகனுக்குள் இறக்கி வைத்துவிடுகின்றன.
தஞ்சை பிரகாஷின் "கள்ளம்" இந்த நாவலுடன் நிறைய ஒப்புமைகளைக் கொண்டிருக்கிறது.கள்ளம் இந்த நாவலுக்குப் பின்னால் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.
* "சக்தே இண்டியா" இரண்டாவதுமுறை பார்த்தபோது,திரைக்கதை நேர்த்தியும்,படம் ரியலிஸ்டிக்காக இருக்கவேண்டும் என்பதில் இயக்குனருக்கிருந்த சிரத்தையும் வியக்கவைத்தன.ஆண்கள் அணியுடன் பெண்கள் அணி மோதும் காட்சி இதற்கு உதாரணம்.பெண்கள் அணி வலுவானது என்று காட்ட வேண்டும் அதேசமயம் ஆண்கள் அணியைத் தோற்கடிப்பது போன்றும் காட்டமுடியாது,அபத்தமாக இருக்கும்.ஒரே ஒரு கோல்(Goal) குறைவாக இருப்பதுபோல ஆட்டத்தை முடிப்பது புத்திசாலித்தனம். 'அப் தக் சப்பன்' பட டிவிடியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
* ஷாருக் கான் "ஓம் ஷாந்தி ஓம்" படத்திற்காக உடம்பை கல்லாக இறுக்கியிருப்பது பிரமிக்க வைக்கிறது.இப்படத்தில் வரும் "Aanhko mein teri " பாடலைக் கேட்டீர்களா?அதில் கேகே வின் குரல் மயிலிறகால் வருடுவது போலுள்ளது.
Sunday, September 09, 2007
நோ கமெண்ட்ஸ்
2)தமிழில் நல்ல மரபுக்கவிதைகள் எல்லாம் எழுதப்பட்டுவிட்டன.
3)லா.சா.ரா-வைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப்பேச லாயக்கற்றவன்.
மேலுள்ள இந்த ஸ்டேட்மெண்ட்களை உதிர்த்த தமிழ் எழுத்தாளப் பிரபலங்கள் யார் யார் என்று கண்டுபிடியுங்கள்.விடை இறுதியில்..
ஆதவனின் "கார்த்திக்" என்ற சிறுகதையிலிருந்து (தொடர்ச்சியற்று)உருவப்பட்ட இரண்டு பத்திகள்
அவன்,தன் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒருத்தியைத் தேடிக்கொண்டிருந்தான்.மனிதகுலம் இழந்துவிட்டிருந்த நிரபராதம் குறித்துச்சோகம்.இயற்கையை நசுக்கித் தேய்த்தவாறு எங்கும் செயற்கை படர்ந்து வருவது குறித்துச் சோகம்.
ஆம்,கார்த்திக் ஓர் உலர்ந்த,ஒற்றைப் பரிமாணப் பகுத்தறிவு வாதியல்ல.அவன் எதிர்த்தது பழமைவாதிகளின் மூட நம்பிக்கைகளை மட்டுமல்ல. புதுமைவாதிகளின் மூடநம்பிக்கைகளும்தான் அவனுக்குப் பிடிக்கவில்லை.அதிலும் இந்தப் பெண்கள்...
நவநாகரீக உடைகள் உடுத்து,ஆங்கிலத்தில் பேசவும் சிகரெட் குடிக்கவும் தெரிந்து விட்டதால் மட்டுமே,தாங்கள் முன்னேற்றமடைந்துவிட்டதாக எண்ணுகிற இவர்களுடைய மேலோட்டமான போக்கு...
இவர்களைப்போல உடுக்காத ஆங்கிலம் பேசாத பெண்களைவிட - தம் தாயாரையும் பாட்டியையும் விட - தங்களை உயர்ந்தாவர்களாக நிரூபித்துக்கொள்ள ஒவொவொரு கட்டத்திலும் முயற்சி செய்கிற பரிதாபம்...
ஒருவேளை தனக்கு எத்தகைய பெண்மைக்குத் தகுதி உள்ளதோ,அத்தகைய பெண்மையையே ஒரு சமூகம் பெறுகிறது, என்பதாக இருக்கலாம்.
சிந்தனைகளிலும் செயல்களிலும் இந்தச் சமூகத்திடமிருந்து வேறுபடுகிறவர்களும்கூட, அதில் வாழ்கின்ற காரணத்தாலேயே,இச்செயல்கள் விளைவிக்கும் தண்டனைகளிலிருந்து தப்ப முடிவதில்லை.
அவளுடைய உறுதியும் திண்மையும் கார்திக்கிற்கு மீண்டும் மீண்டும் வியப்பளித்தன,தெம்பூட்டின.
'இவள் எனக்கேற்ற விசேஷமானவள்.நான் தவறு செய்யவில்லை' என்று அவன் நினைத்தான்.இன்பம் நிறைந்த எதிர்காலம் அவன் கண்முன் விரிந்தது.
ஆனால் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிரம்பியது.நம்மைப் பற்றியும் பிறரைப்பற்றியும் புதிய கண்டுபிடிப்புகளை நம் முகத்தில் எறிந்து, சரியை தவறாகவும், தவறைச் சரியாகவும் மாற்றுவது.
********************************
திடுக்கிடும் திருப்பங்களையோ,அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலையோ ஏற்படுத்தாத நின்று நிதானமாகப் பயணிக்கும் மேற்கூரியவகை கதைசொல்லல் உங்களைக் கவர்கிறது என்றால் கை கொடுங்கள் நீங்கள் தான் ஆதவனின் எழுத்துக்கள் தேடும் வாசகர்! ரெடி...ஸ்டெடி..ஸ்டார்ட்........
ஆதவனின் எழுத்துக்கள் குறித்த எனது முந்தைய பதிவு
*******************
Monday, September 03, 2007
ஜானகி அம்மாள்

Dear Sir,I understand from Mr. Richard Askey,
Wisconsin, U.S.A., that you have contributed
for the sculpture in memory of
my late husband Mr. Srinivasa Ramanujan.
I am happy over this event.
I thank you very much for your good
gesture and wish you success in all your
endeavours.
Yours faithfully,
Signed S. Janaki Ammal
Saturday, August 25, 2007
लक... लक... लक (லக... லக.. லக...)

"Bhool Bhulaiya " என்ற பெயரில் முழு நீள நகைச்சுவைப் படமாக வெளிவரவிருக்கிறது மணிசித்திரத்தாள்.அடுத்து போஜ்பூரியில் நக்மாவை வைத்துகூட ரீமேக் செய்யப்படலாம்,யார்கண்டார்கள்!.
Friday, August 10, 2007
ஹி ..ஹி...
"ஹலோ"
"ஹலோ"
"யார் பேசறது?"
"நான் தான்"
"நான் தான்னா யார்?"
"நான் தான் ரேவதி"
"ரேவதி! அப்பா இல்லையா?"
"இல்லை"
"அம்மா"
"இல்லை"
"சரி அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்கிறாயா?"
"யாரு?"
"ராமன்.எழுதிக்கோ ரா - ம - ன் "
"ரா எப்படி எழுதறது?"
"சரிதான்! பாப்பா , வீட்ல வேற ஒருத்தரும் இல்லையா?"
"சேகர் இருக்கான்"
"சரி சேகரைக் கூப்பிடு"
"சேகர் இந்தா" என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்...
- சுஜாதா
Tuesday, August 07, 2007
"Gandhi My Father" - விமர்சனம்

யாரும் தொடத்தயங்கும்,யாரும் அறியாத காந்தியின் மறுபக்கத்தை படமாக்கத் துணிந்ததற்காக இயக்குனரையும்(Feroz Abbas Khan),தயாரிப்பாளரையும்(Anil Kapoor) பாராட்டியே ஆகவேண்டும்.அதுவும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் அனில் கபூருக்கு இது முதல் படம்!
நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் கஸ்தூர்பா வாக வரும் ஷிவாலி சாயா.பெங்காலி நடிகைகளுக்கு நடிப்பு ரத்தத்தில் ஊறியிருக்கும் விஷயம் போல.இவர் இந்த படத்திற்காக சில விருதுகளை எதிர்பார்க்கலாம்.பூமிகாவின் நடிப்பும் நிறைவாக இருக்கிறது.Thursday, July 26, 2007
மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஓஷோ-எனது நிலைப்பாடுகள்

* ஓஷோ என்ற தனி நபருக்கு 93 Rolls-Royce கார்கள் சொந்தமாக இருந்திருக்கின்றன.அதுபோக விலைஉயர்ந்த கற்கள் பதிக்கப் பட்ட ladies watch களின் தொகுப்பும் உண்டு.

* அவரது பல நல்ல கருத்துக்களை விட்டு விட்டு செக்ஸ் பற்றியவற்றை மட்டும் பிடித்துக்கொண்டு "செக்ஸ் சாமியார்" என்று முத்திரை குத்துவது தவறு.அதே சமயம் "Open Sex" பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் ஆகாது இல்லயா?தியானம் மட்டும் செய்ய வருகிறார்கள் என்றால் அங்கு சேருவதற்கு கட்டாய HIV Test ஏனோ?அருகில் அமர்ந்து தியானம் செய்வதால் எய்ட்ஸ் பரவுமா?
துவக்கத்தில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில்(அனுமதிக்கப்பட்ட அளவு) வாலியமும்,நைட்ரஸ் ஆக்ஸைடும் உட்கொள்ளத் துவங்கி பின் அதுவே எல்லை மீறிஅதற்கு அடிமையும் ஆனார்.பின்"Actually oxygen and nitrogen are basic elements of existence. They can be of much use, but for reasons the politicians have been against chemicals of all kinds, all drugs." என்று சொல்லுமளவிற்கு போனது இப்பதிவிற்கு சம்பந்தமில்லாதது என்பதால் விட்டு விடுவோம்.
இன்றைய நவயுக சாமியார்கள் யாவரும் ஓஷோவின் கருத்துக்களை பயன்படுத்துகிறார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.சிலர் ஒத்துக் கொள்கிறார்கள்.சிலர் அப்படிச் செய்வதில்லை.அதிருஷ்ட வசமாக ஓஷோவும் முதல் வகையினரிலேயே சேர்கிறார்.அதாவதுஓஷோ அதிக அளவில் சரதுஸ்திராவின் கருத்துக்களை ப்ரதிபலிக்கிறார்.பல இடங்களில் புத்தரின் கருத்துக்களை மேற்கோள் காட்டுகிறார்.அதனால் அவர்களை இவர் காப்பி அடிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?ஓஷோ சரதுஸ்ராவின் கருத்துக்களை காப்பியடிக்கிறார் என்பது அவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் மற்றவர்கள் அவரைக் காப்பியடிக்கிறார்கள் என்பதும்.

ஓஷோ ஒரு சிறந்த சிந்தனாவாதி.அவரது புத்தகங்கள் போற்றப் படவேண்டியவை,தியான முறைகள் கொண்டாடப் பட வேண்டியவை.மற்றபடி அவர் சர்வ பலவீனங்களும் கொண்ட சாதாரணர்.என்னைக் கேட்டால் ரெண்டு அவுன்ஸ் எக்ஸ்ட்ரா சாதாரணர்.எல்லா சாமியார்களைப் போல அவரது வீழ்ச்சியும் தனிமனிதத் துதியை ஆதரிப்பதில் தான் துவங்கியது.
Wednesday, July 04, 2007
கடவுளின் பள்ளத்தாக்கு
மலையேறுபவர்களின் சொர்கபுரி என்றே அழைக்கலாம் பூனாவை(Pune).கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட மலைமீதமைந்த கோட்டைகள் பூனா,மும்பையைச் சுற்றி அமைந்துள்ளன.இவற்றில் சில சிவாஜியால் நிர்மாணிக்கப் பட்டவை,பல இவரால் கையகப்படுத்தப்பட்டவை.இவரது கொரில்லா யுத்தயுக்தியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இக்கோட்டைகளின் அமைப்பே.ஆண்டுமுழுவதும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து போகிறார்கள் என்றாலும் மழைக்கால துவக்கத்திலும்,இறுதியிலும் கூட்டம் சற்று அதிகம்.காரணம் பரவசமூட்டும் பசுமையும்,மழைக்கால அருவிகளும்தான்.
கீழுள்ள படங்களில் நீங்கள் பார்ப்பது இப்படிபட்ட மலைக்கோட்டை ஒன்றைத்தான்.இதன் பெயர் ஷிவ்னேரி(சிவனேரி).புனேவிலிருந்து சுமார் 90Km தொலைவில் உள்ளது இம்மலை.மற்ற எந்த கோட்டைக்கும் இல்லாத பெருமை இந்தக் கோட்டைக்கு உண்டு.மராட்டிய மாவீரன் சத்ரபதி ஷிவாஜி பிறந்த இடம் இது என்பதாகும்.
ஒருவழியாக முக்கால்வாசிமலையைத் தாண்டிவிட்டோம்(45நிமிடங்கள்).பின் பெரிய பெரிய பாறைகளாக இருந்தன.அதில் படிகள் செதுக்கியிருந்தார்கள்.படிகள் என்றால் ஒரு பாதத்தைக்கூட ஒருசமயத்தில் முழுமையாக வைக்கமுடியாத அளவுக்குக் குறுகியவை.அருகில் 'ழ' போல வளைந்த கம்பிகள்,எனக்கென்ன என்பதுபோல நின்றிருந்தன.இதுதான் சாக்கடு தண்டாவாம் !சாக்கடுதண்டா என்றால் என்ன என்று நண்பனிடம் வினவினேன்.குத்து மதிப்பாக சங்கிலிப் பாதை என்றான்.அடிமேல் அடிவைத்து உச்சியை அடைந்தோம்.பச்சைபசேலென்ற புல்வெளியும்,மெல்லிய தூறலும் எங்களை வரவேற்றன.நண்பன் உற்சாகத்தில்"சொர்க்கம் போல இருக்கிறது" என்று கூவினான்.சங்கிலிப்பாதையிலிருந்து நழுவியிருந்தால் அங்கதான் போயிருப்போம் என்றேன்.
இனி படங்கள்....
ஏழு கோட்டைக் கதவுகளில் ஒன்று
Tuesday, June 26, 2007
சு.ரா வின் கடைசிக் கவிதை

அந்தக் குழந்தையின் காலோசை
நம்மை அழைக்கிறது
குழந்தையின் வடிவம் நம்
பார்வைக்குப் புலப்படவில்லை.
நம் கலவரம் நம் பதற்றம்
நம் பார்வையை மறக்கிறது.
தன் காலோசையால்
நம்மை அணைத்துக் கொள்ள
அந்தக் குழந்தை நம்மைத்
தேடி வருகிறது.
நாம் நம் தத்தளிப்பை மறைக்க
மேலும் உரக்கப் பேசுகிறோம்.
சுந்தர ராமசாமி மரணமடைவதற்கு 19 நாட்களுக்கு முன்பு எழுதிய கவிதை இது.இதுவே அவரது கடைசிப் படைப்பு.துவக்கத்தில் பசுவய்யா என்ற புனைப்பெயரிலும்,பின்னர் தன் இயற்பெயரிலும் அவர் எழுதிய மொத்த கவிதைகளின் தொகுப்பு இந்த "சுந்தர ராமசாமி கவிதைகள்" .மேற்குறிப்பிட்ட இந்த கவிதையையும் சேர்த்து மொத்தம் 108 கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.பத்து பதினைந்து கவிதைகள் தேறினாலே புத்தகங்கள் வெளிவரும் நிலையில்,இது மிகப்பெரிய தொகுப்பாகும்.அடித்துத்,திருத்தி அவர் கவிதைகளுக்கு உருக்கொடுத்த விதம் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப் பட்டுள்ளது.
இத்தொகுப்பிலிருந்து சில கவிதைகள்
நடுவழியில் மறித்த வயோதிகம்
வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது
'விடு என்னை
இப்போதுதான் உணர்ந்துகொண்டேன் காதலின் அருமையை'
என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.
'சற்று முந்தான் நான் வயோதிகம்
இப்போதோ மரணம்' என்று
என்னை இறுகத் தழுவிக்கொண்டது
அது
-கொல்லிப்பாவை 1987
*****
கன்னியாகுமரியில்
இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்
மிகப்பெரிய சூரியன்
ஒரே ரத்தக் கலங்கல்.
எங்கிருந்தோ வந்து
சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது
இந்த ஆட்டுக்குட்டி
அசடு
அப்போதும்
தன்னிலை அறியாதது.
இடம் பெயர்வதா
நின்ற நிலையில் நிற்பதா?
மூளையில் தர்க்கம்
அறுபட்டு விழித்ததும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி.
சூரியனைக் காணோம்.
-சதங்கை 1975
*****
நம்பிக்கை
தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.
-வைகை 1977
மேலும் சில கவிதைகளை வாசிக்க நதியலை
Sunday, June 10, 2007
உருக்குலைந்து வரும் உன்னதக் கலைகள்

"This is the ugly, painful side of globalization. It's a real crisis. If India is booming, you don't see it among weavers or farmers or other rural laborers, which is to say most of the country," said Lenin Raghuvanshi, head of the People's Vigilance Committee for Human Rights, an aid group here. "Helping those left behind is India's greatest challenge."
"If a buyer insults me with a too-low price, I swear I will kill myself," Dash said.
Listening nearby, his wife started crying. "If he takes his life, I will take my life, too," she said, staring at the ground.
Monday, June 04, 2007
கமல்ஹாசன் பற்றி சுஜாதா(பழைய பேப்பர்!)

கமலஹாசனுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவருடைய off-screen personality சுவாரஸியமாக வெளிப்பட்டது.இருபத்து மூன்று வயது. ஒரு மலையாளப் படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார்.பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் ஜிப்பா,ஜரிகை வேஷ்டி.
அவர் அறையில் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை.ஏர்கண்டிஷனிரின் செளகரியத்தைத் தவிர.ஒரே ஒரு படம் இருந்தது.உக்கிரமாக முறைக்கும் ப்ரூஸ்லி. அமெரிக்க சினிமா சரித்திரத்தைப்பற்றியும் Sound in cinema பற்றியும் புத்தகங்கள் தென்பட்டன.படிக்கிறார்.இங்கிலிஷ் பண்பட்டு இருக்கிறது.கணையாளி போன்ற புத்தகங்களையும் புதுக்கவிதைகளையும் ரசிக்கிறார்.தன் தொழிலில் உள்ள சிரிப்பான விஷயங்களை இயல்பாக எடுத்துச்சொல்கிறார்.போலன்ஸ்கி,கோடார்ட் போன்ற ஐரோப்பிய டைரக்டர்களைப் பற்றிஅவருக்கு தெரிந்திருக்கிறது.ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் Frenzy என்ற படத்தில் ஒரு ஷார்ட்டைப் பற்றி உற்சாகமாக அவருடன் பத்து நிமிடங்கள் அலச முடிகிறது."மலையாளப் படங்கள் இப்போது பரவாயில்லை போலிருக்கிறதே" என்றேன்.அவர் "அதெல்லாம் அந்தக்காலம்,இப்போது மலையாளப் படங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன"தன் சட்டையைக் காட்டி "மலையாளப் படம்" என்றார்.
"எனக்கு அழவரவில்லை அழு அழு என்கிறார்கள்.ஒரு சமீபத்திய தமிழ் படத்துக்கு மூன்று பாட்டில் கிளிசரின் ஆயிற்று."
"பாடலைப் படமெடுக்கும் போது கதாநாயகிக்கு கூந்தல் விரிந்திருப்பது ஒரு செள்கரியம்.உதட்டசைவு மறந்துவிட்டால்! சட்டென்று கூந்தலைப் பிரித்து அதில் மறைந்து கொள்ளலாம்."
"டேய் முத்து,மாடசாமி,பிடிடா"என்று கிராமத்தில் குடிசையில் வின்சென்டர் ரைபிள்களை வினியோகிக்கும் கர்ணன் படங்களையும் படுத்துக்கொண்டே படமெடுக்கும் காமிராக்கோணங்களையும்(imagine ஜோதிலட்சுமி)அம்மாக்களையும்,தியாகங்களையும் மிகவும் ரசித்து அவருடன் விமர்சித்துக் கொண்டிருந்ததில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை.படப்பிடிப்பு காத்திருந்தது.ஆப்பிள் ஜூஸ் கொடுத்து அனுப்பிவிட்டார்.
உரக்கப் பேசும் உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக,கற்பனையுடன்,நம்பும்படி நடக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன்.
அக்டோபர் 1976
Sunday, May 13, 2007
திகம்பர சாமியார் திடும் பிரவேசம் (அல்லது) திரிபுரசுந்தரி
வடுவூராரின் கதைகளில்(பிரதான)துப்பறியும் கதாபாத்திரம் இந்த திகம்பர சாமியார்.விதவிதமாக வேடமணிந்து எதிர்பாராத சமயங்களில் entry கொடுப்பதும் பின்னால் நடக்கப்போவதை யூகித்து சாதுர்யமாக செயல்படுவதும் இவரது ஸ்பெஷாலிட்டி.கடந்தவாரம் திருச்சியில் நடந்த புத்தகக் கண்காட்சி ஒன்றில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்கள் அனைத்தும் அல்லயன்ஸ் பதிப்பகத்தாரால் திரும்பக் கொண்டு வரப்பட்டிருப்பது கண்டு பரவசமடைந்தேன்.அதிலிருந்து "வித்தியாசாகரம்" என்ற ஹாஸிய நாவல் ஒன்றை வாங்கி வந்தேன்.நாவலைக்காட்டிலும் புத்தகத்தின் முதற்சில பக்கங்களில் இருந்த துரை சாமி ஐயங்கார் பற்றிய தகவல்கள் படிக்க பிரமிப்பாகவும்,சுவாரஸியமாகவும் இருந்தன.நெட்டில் இவரைப்பற்றித் துழாவியதில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் கிடைக்காதது வருத்தமளித்தது.வடுவூர் துரைசாமி ஐயங்கார் பற்றிய தகவல்களை இப்பதிவின் மூலம் சேமிக்கிறேன்.
******
இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களை தம் துப்பறியும் கதைகளால் பிணைத்தவர்.புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி,பரந்த ஓர் வாசக உலகினைப் படைத்துக்கொண்ட பெருமையர்.Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு,சொந்தமாகவும் படைத்துள்ளார்.இவரது படைப்பில் சிறந்ததாக மேனகா,கும்பகோணம் வக்கீல் குறிப்பிடத்தக்கன;படமாகவும் வந்தவை.
நடுத்தர உயரம்,ஒல்லியான உடல்,கருத்தமேனி,கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு,அங்கவஸ்திரம்,பஞ்சகச்சம்,தலையில் குல்லா,காலில் கட் ஷூ,கையில் தடி,நெற்றியில் எப்போதும் திருமண்வாய்,வாய் நிறைய வெற்றிலை,புகையிலை,தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமையோடிருக்க.மொத்தத்தில் கைநிறைய சம்பாதித்த கவலையில்லாத உல்லாச மனிதர்.இவர் மாடிக்கு ஜே.ஆர்.ரங்கராஜூ,வை.மு.கோ,எஸ்.எஸ்.வாசன் வந்து போவர்.
-தமிழ் இலக்கிய வரலாறு (மது.ச.விமலானந்தம்)
******

முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் கல்கி என்கிற எழுத்தாளர் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்ததுபோல இருபதுகளில் தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் என்று ஜே.ஆர்.ரங்கராஜூ என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும்.
1923,24 முதல் 27 வரையில் தஞ்சையில் கல்யாண சுந்திரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது பச்சை,மஞ்சள்,சிவப்பு அட்டையில் டெமி சைஸில் அவர்கள் நாவல்கள் ஒவ்வொன்றாக அப்பாவுக்குத் தெரியாமல் ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிப்படித்த நினைவிருக்கிறது.படித்துவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போனால் அப்பா சண்டை பிடிப்பாரென்று அப்போது மேல வீதியில் தெற்கு கோடியில் இருந்த ஒரு லைப்ரரிக்கு இனாமாகக் கொடுத்து விடுவேன்.இப்படிப் படித்த நாவல்கள் என்று கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலை மகளும்,வஸந்த கோகிலம்,பூரண சந்திரோதயம்,விலாஸவதி,திகம்பர சாமியார்,மேனகா இவை நினைவுக்கு வருகிறன.ஒரு நாவல் கலைப்பிரஞையுடன்,சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன்,விரஸமான விஷயங்களைக்கூட அதிக விரஸம் தட்டாமல் எழுதுவதில் சிரத்தையுடன் எழுதிய வடுவூரார் உண்மையிலேயே இலக்கியப் பிரக்ஞை உடையவர் என்பதில் சந்தேகத்துகிடமேயில்லை.
ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserablesஎன்கிற நாவலை அற்புதமாகத் தமிழில் எழுதியிருக்கிறார்.
எகிப்தில் தலைமுறை தலைமுறையாக பாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்கிற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும்,அதையெல்லாம் சொல்லி தான் ஒரு நூல் எழுதிகொண்டிருப்பதாகவும் சொன்னார்.இந்த சரித்திர உண்மையில் இருந்த அவரது அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக ஆங்கிலத்தில் Long missing Links என்று ஒரு 900 பக்க நூல் எழுதி அதைத் தன் சொந்த செலவிலேயெ அச்சிட்டு விற்க முயன்றார்.புஸ்தகம் விற்கவில்லை.அச்சுக்கும் பேப்பருக்கும் ஆன கடனை புதுசாக வாங்கிய வீட்டை விற்று அடைத்து விட்டு,பேசாமல் கிராமத்துக்கு போய்விட்டார் என எண்ணுகிறேன்.
தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை;புரிந்து கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
-இலக்கிய சாதனையாளர்கள் - க.நா.சு.
******
'சாம்பசிவையங்கார்,மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்'
என்று அந்த குறிப்பு விளக்குகிறது.
இவரது நாவல்களில் மேனகாவை அடுத்து மிகப்பிரசித்தி பெற்றது கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பரசாமியார் என்பது.பல மர்மங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த இந்த நாவலில் தஞ்சை பிராந்தியத்தில் அன்று நிலவிய சூழ்நிலை வருணிக்கப்பட்டிருக்கிறது.
துரைசாமி ஐயங்காரின் செல்வாக்கைப் பயன் படுத்தி,குடும்ப சூழ்நிலையை வைத்து,ஜனரஞ்சகமான நாவல்களை எழுதிப் பெயரடைந்தவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.
- தமிழ் நாவலிம் தோற்றமும் வளர்ச்சியும் - சிட்டி,சிவபாத சுந்திரம்.
******
புராணக் கதைகளும்,இதிகாசக் கதைகளும்,ராஜா ராணிக் கதைகளும் படமாக எடுக்கப்பட்ட தமிழ்த்திரையின் தொடக்க காலத்தில்... முதன் முதலாக நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மேனகா.1935ல் மேனகா நாவலை படமாக்கியபோது அதில் டி.கே.பகவதி,டி,கே.ஷண்முகம்,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.கே.சங்கரன்,எஸ்.வி.சகஸ்ரநாமம்,கே.ஆர்.ராமசாமி,சிவதாணு ஆகியோர் நடித்தனர்.இவர்கள் அனைவருக்கும் இதுவே முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி.பாரதியாரின் பாடல் ஒலித்த படம் என்ற வரலாற்றுப் பெருமையும் மேனகா படத்தையே சேரும்.
- பதிப்புத் தொழிலில் உலகம்
*******
வடுவூராரின் நவீனம் 'மைனர் ராஜாமணி' சினிமாவாக வந்து திரையிட்டதும் ஒரு சமூகத்தை இழிவு செய்வதாக வழக்கு தொடர்ந்து நிறுத்த்ப்பட்டது.இந்த அதிர்ச்சி,அவமானம் தாங்காது குருதிக்கொதிப்பால் மாண்டார்
Monday, May 07, 2007
அழகு(சில)குறிப்புகள்
ஆக universal அழகு என்று எதுவுமில்லை.இடம்,பொருள்,ஏவல் என எல்லாம் சரியாக அமையும் பொழுது நம் மனதுக்கு பிடித்துப் போகிற விஷயம் தான் இந்த "அழகு" என்று தோன்றுகிறது.எனக்குப் பிடித்த,நான் அழகு எனக்கருதுகிற சில விஷயங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.
தேர்
எங்கள் கிராமத்துத் திருவிழாவில் ,வடம் பிடித்து இழுக்காமல் ஆட்களால் சுமந்து வரப்படும் பனையுயர தேரும் அப்போது ஊரெங்கும் பரவும் மரிக்கொழுந்து வாசமும்.
மழை
பூனேயில் பெய்கிற ஆளை அடிக்காத ஜூன் மாதத்து மழை.ஊர் முழுவதையும் நனைத்து பச்சையாக்கியபின் ,மெதுவாக மனதுக்குள்ளும் மழை பெய்யத்துவங்கும் அந்த தருணங்கள்.
வீடு
"உலகத்துல இத விட அழகான இடம் இருக்கான்னு தெரியல,தெரிஞ்சுகர ஆசையும் இல்ல" என்று காக்க காக்க ஜோதிகா சொல்வது போல அவரவர்க்கு அவரவர் வீடு அழகு.எனக்கும் எங்கள் வீடு...
அமைதியான பெண்கள்
இது ஆக்ஸிமோரன்(Oxymoron) போல தோன்றினாலும் அபூர்வமாக சில சாந்தமான பெண்களைப் பார்க்க நேர்ந்ததுண்டு :)
புத்தகக்கடை
என்ன வேலையாகப் போய்க் கொண்டிருந்தாலும்,வழியில் புத்தகக் கடையைப் பார்த்தால் உள்ளே புகுந்து விடுவேன்.வஞ்சனையின்றி எல்லா புத்தகங்களையும் மேய்ந்து விட்டு இருப்பதிலேயே ஒல்லியாக ஒரு புத்தகத்தையோ சில சமயங்களில் வெறுங்கையுடனோ வந்து விடுவேன்.புத்தகக் கடைகள் எப்போதும் அழகானவை,கவர்ச்சியானவை.
என்னை விளையாட்டுக்கு சேர்த்துக்கொண்ட ப்ரசன்னாவிற்கு நன்றி.இந்தப் பதிவைப் படிக்கும் அனைவரையும் சங்கிலியைத்தொடருமாறு பணிக்கிறேன்.
Wednesday, April 04, 2007
ஆதவனின் எழுத்துக்கள் -எனது பார்வையில்

- ஆதவன்
இந்த வரிகளைப் பயன்படுத்தியிருப்பாரா?
சுஜாதா எழுத்துக்களுக்காக அலைபாய்கிறது மனது,சு.ராவின் எழுத்தாழம் கண்டு பிரமிக்கிறது.என்றாலும் மனது அன்யோன்யமாக உணர்வது ஆதவனின் எழுத்துக்களில்தான்.இதன் காரண்ங்கள் பற்றி யோசிப்பது சுவாரஸியமாக இருக்கிறது.
முதலாவதாக, ஆதவனின் ஹீரோக்கள் யாவரும் சாமானியர்கள்.கனேஷ்-வசந்த் போன்று சாமார்த்திய சாலிகளோ,சு.ராவின் JJ போன்று கொள்கைப்பிடிப்பாளிகளோ அல்லர்.மாறாக நிர்தர்சனர்கள்.யாரையும் நிதாட்சண்யமாகப் புறக்கணிக்கக்கூட தயங்குபவர்கள்.உடல் ஆகிருதியும்,அதிகார அகிருதியும் கொண்டவர்களால் Dominate செய்யப்படுபவர்கள்.அந்த பிரக்ஞை காரணமாக சதா புலம்பித் தீர்ப்பவர்கள்.கனவுலகில் மிதப்பவர்கள்.தங்களை மற்றவர்களிடமிருந்து தனித்தவர்களாக இன்டலெக்சுவல்களாக உணருபவர்கள்.ராம சேஷனும்,செல்லப்பாவும்(காகித மலர்கள்),சேஷாத்ரியும்(கனவுக்குமிழிகள்)இப்படிப்பட்டவர்கள்தான்.இந்த ஹீரோக்கள்தான் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.
அடுத்து உணர்வுகள் கொண்டு கதை சொல்லும் முறை.ஆதவனின் கதைகள் யாவும் மனித உணர்வுகளை அடுக்கி உருவானவை.இவ்வளவு நெருக்கமாக உணர்வுகளைப் பின் தொடர்ந்து அதற்கு வார்த்தை வடிவம் கொடுத்தவர்(எனக்குத் தெரிந்து)யாரும் இல்லை.இவர் ஒரு மனோதத்துவ நிபுணர் என்ற எண்ணம்,இவரது கதைகளைப் படிக்கும் போது தோன்றுவதுண்டு.
கதைகளில் வரும் சம்பாஷணைகள் இயல்பாக அதேசமயம் சுவாரஸியமாகவும் இருக்கும்.ஆதவனைப் படிப்பதில் இன்னொரு வசதி,புத்தகத்தை எப்போதுவேண்டுமானலும் மூடிவைக்கலாம்.எப்போதுவெண்டுமானாலும் எடுத்துப்படிக்கலாம்.படித்ததை சிறிது நேரம் மனதில் அசைபோடலாம்.மறுவாசிப்பின் போது புரியாத ஒன்று புரிபடும் அல்லது புரிந்த ஒன்று குழப்பத்துவங்கும்.
சில அபாயங்கள்:ஆதவனின் எழுத்துக்களில் ஒரு மெல்லிய சோகம் இழையோடும்.இந்த மென்சோகம் மனதுக்கு இதம் தரும் என்றாலும் சில வேளைகளில் நம்மை உற்சாகம் இழக்கச்செய்யும்.மேலும் வாழ்வின் ஆதார சுருதியாக நாம் நம்பும் காதல்,பாசம்,நட்பு இவற்றின் மீது தர்க்கம் செய்து அதன் வேரை அசைத்து விடுவதும் நிகழும்.உதாரணதிற்கு ஒரு சிறுகதையில்....
சிநேகிதன் என்ற வார்த்தையே பலவீனமான ஒரு கணத்தின் உருவமாக, தன்னைத் தானே ஏமற்றிக் கொள்வதாகத் தோன்றியது.நான் தேடிச்சென்றது,மீண்டும் மீண்டும்,என் சுய முக்கியத்துவத்தைதான் என்று தோன்றியது
- என் புத்திசாலித்தனத்தின் பெரிதிலும் பெரிதான ரீங்காரத்தைத் தேடி
- என் நகைச்சுவைக்கேற்ற உரத்த சிரிப்பையும் கண்ணீருக்கேற்ற வழவழப்பான கைக்குட்டையையும் தேடி
- பெண்களிடம் ஆசைத் தீயை மூட்டி விரகத்தினால் அவர்களைத் துடிதுடிக்கச்செய்யும் ஒரு மகத்தான ஒரு காதலனை என்னில் தேடி
- கயவாளித்தனமொ,குரோதமோ கொச்சையான கெட்டிகாரத்தனமோ துளியும் ஒட்டிக்கொள்ளாத என் 'தாமரை இலை' மனப்பாங்கின்(!)தூய்மையின்,அங்கீகாரத்தைத் தேடி.
எனக்கென்றே அளவெடுத்துத் தைத்த,நேர்த்தியான மிடுக்கான வண்ணக்குல்லாய்கள்.திடீரென்று ஒரு நாள் இவையெல்லாம் வெறும் கோமாளிக்குல்லாய்களாக தோன்றின. ..........
ஆதவன் எழுத்துக்கள் பற்றிய எனது இந்த கருத்துக்கள் பக்குவமற்றதாய் தோன்றலாம்.எனினும் அவரின் கடைமட்ட வாசகன் என்ற முறையில் எனது கருத்துக்கள் இவை.சில காலம் கழித்து மறுவாசிப்புக்குப்பின் என் புரிதல் மாறுபடலாம் அல்லது மாறாமலும் போகலாம்.
Saturday, March 31, 2007
The Namesake - விமர்சனம்
எவ்வளவு யோசித்தும் கதையை ஒரே பாராவில் சொல்வது எப்படி என விளங்கவில்லை.காரணம் அதிரடித் திருப்பங்களின்றி அதீத இயல்புத்தன்மையுடன் பயணிக்கிறது படம்(ஆதவன் கதை போல).எழுபதுகளின் துவக்கத்தில் நியூயார்க் சென்று குடியேறும் பெங்காலி குடும்பத்தைப் பற்றியது கதை.அங்கு பிறக்கும் அவர்களின் குழந்தைகள் சந்திக்கும் Cross-Culture குழப்பங்களையும்,Identity குறித்தான வினாக்களையும் எழுப்பிச்செல்கிறது படம்.
பெங்காலி தம்பதிகளாக இர்பான் கான்(Irfan Khan), தபு(Tabu) நடித்திருக்கிறார்கள் இல்லை வாழ்ந்திருக்கிறார்கள்.அதுவும் இர்பான் கானின் சின்ன சின்ன முகபாவ மாற்றங்கள் கூட அருமை(அட யாருப்பா அங்க,இவர தமிழுக்கு கூட்டீட்டு வாங்க).இவர்களின் மகனாக வரும் கால் பென்னும்(Kal Penn) நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்க வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளை மிகைப்படுத்தி ஜல்லியடிக்கும் வழக்கமான 'இந்திய-ஆங்கில' படம் போலன்றி உள்ளபடி காட்டியதற்கு பாராட்டலாம்.அதே சமயம் அஷோக் கங்கூலி அனாமத்தாக இறந்துபோகும் போது சற்று கிலி ஏற்படுகிறது.குறிப்பாக அவர் இறந்து போவதை விஸ்தாரமாகக் காட்டாமல் ஒரு செய்தியாகக் குறிப்பிடுவது நிகழ்வின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது(சலாம் மீரா!).
வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகின்றன.திருமணமாகி பலவருடங்கள் கழித்து தாஜ்மஹால் வருகிறார்கள் தபுவும் இர்பானும்,
இர்பான்:ரொம்ப நாளா கேக்கணும்னு நெனைசேன்.பொண்ணுபாக்க வந்தப்ப என்ன பிடிசிருக்குன்னு ஏன் சொன்ன?
தபு:என்ன பாக்க வந்தவங்கள்ள நீ தான் Best.ஒரு கை மட்டும் இருந்த கார்டூனிஸ்ட்,ரெண்டு குழந்தைங்களோட வந்த விடோவர் இவங்களுக்கு நீ பரவால்ல.அதுவும் நீ போட்டுகிட்டு வந்த அமெரிக்கன் ஷூ எனக்கு ரொம்ப பிடிசிருந்தது
(இர்பான் ஏமாற்றத்தோட பாக்க)
தபு:ஏன் அமெரிக்க காரங்க மாதிரி "I Love You" சொல்லுவேன்னு பாத்தியா?
3.5/5 . கண்டிப்பாகப் பார்க்கலாம்.குரூர மான சிந்தனைகளுக்கு விரட்டிச் செல்லாத சாதாரணமான அமைதியான விடுமுறை நாளை வேண்டுபவர்கள் பார்க்க நான் பரிந்துரைக்கும் மற்றொரு படம் "The Pursuit of happyness"
Saturday, January 06, 2007
படித்ததில் பிடித்தது(3)
இனி...
நாபகோவ்(Nabakov) 'லோலிடா' எழுதிப் பெயர் அடைந்தவர்.கொஞ்சம் ஆபாசமான விஷயத்தை மிக அருமையான வசன நடையில் எழுதித் தப்பித்தவர்.இவரது சிறுகதை ஒன்று என் ஞாபகத்திலிருந்து சொல்கிறேன்:-
ஒரு அப்பா,ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான்.ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது!
பெற்றோர்களுக்கு ஒருதினம் ஆஸ்பத்திரியிலிருந்து போன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும் உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்.அதற்குள் என்ன நேர்ந்து விடுமோ என்று கவலைகடலில் இரவெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்போது:-
டெலிபோன் மணி அடிக்கிறது.பதற்றத்துடன் பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.
"ஹென்றி இருக்கிறானா?" என்கிறது ஒரு பெண்குரல்.
"ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை,தப்பு நம்பர்" என்று வைத்து விடுகிறார்.
மறுபடி சில நிமிஷம் கழித்து டெலிபோன் மணி அடிக்கிறது.
"ஹென்றி இருக்கிறானா" அதே பெண்.
"மிஸ்,உனக்கு என்ன நம்பர் வேண்டும்?
"5365849"
"என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச்சுழற்றுகிறாய் போலிருக்கிறது"
"ரொம்ப தாங்க்ஸ்" என்று அந்தப் பெண் வைத்துவிடுகிறாள்.
கதையில் இன்னும் ஒருவரிதான் இருக்கிறது.
சிலநிமிஷ்ம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.
நபகோவின் புத்திசாலித்தனம்! புரிகிறதா?
- சுஜாதா,1966
************
நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்குபோல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக்கொண்டது முற்றிலும்
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.
-கல்யாண்ஜி,அந்நியமற்ற நதி
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


