Saturday, June 28, 2008

அமிர் மற்றும் பின் கதைச் சுருக்கம் பற்றிய குறிப்புகள்

அமிர்(Amir)


"Only Sex and Sharuk sell in Bollywood"

-Neha dhupia,Actress

இது ஏறக்குறைய உண்மைதான்.பாலிவுட்டில் வணிகரீதியாக பெரும் வெற்றி பெரும் படங்களையும் அதன் தரத்தினையும் பார்த்தாலே இது விளங்கும்.என்றாலும் மணிரத்னம்,கமல் என பலரும் பாலிவுட் நோக்கியே படையெடுப்பதற்குக் காரணம் உச்சபட்ச விசிபிலிட்டியும் அதன் வாயிலாகக் கிடைக்கும் அங்கீகாரமும் தான்.வித்தியாசமான முயற்சிகள் கல்லாப் பெட்டியை நிரப்பாவிட்டாலும் மக்களின் கவனத்தைக் கவரத் தவறுவதில்லை.அம்மாதிரியான ஒரு முயற்சி தான் அண்மையில் நான் பார்த்த "அமிர்" என்ற திரைப்படம்.90 நிமிடங்களே ஓடும் இந்த ஆங்கில பாணிப்படம் 'த்ரில்லர்' என்று வகைப்படுத்தப் பட்டாலும் அதற்கு சமூகப் பிரச்சனை ஒன்றை அலசும் வேறு ஒரு முகமும் உண்டு.லண்டனிலிருந்து திரும்பும் அமிர் அலி என்ற இளைஞனின் ஒருநாளைய வாழ்க்கைதான் படம்.விமான நிலையத்தில் "அமிர்" என்ற பெயர் காரணமாக பலமுறை பரிசோதிக்கப் படுகிறான்(என் பெயர் அமர் என்று இருந்தால் இவ்வளவு நேரம் பரிசோதிப்பீர்களா?).தன்னை வரவேற்க தனது குடும்பத்தார் யாரும் வராதது கண்டு குழம்பும் அமிருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.மோட்டார் சைக்கிளில் வரும் இருவர் அமிர் கையில் செல் போனை திணித்து விட்டு மறைந்து போகிறார்கள்.செல் போன் மணியடிக்கிறது.அமிர் அதனை எடுத்துப் பேச ,அடுத்து அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் அந்த மர்மக் குரல் தீர்மானிக்கிறது.இறுதியில் அது அவனை எப்படி விபரீதத்திற்கு இட்டுச் செல்கிறது என்பது மீதிக்கதை."ஃபோன் பூத்" படத்தை கொஞ்சம் நினைவு படுத்தினாலும் இஸ்லாம் பயங்கரவாதம் பற்றிய பிரச்சனையும் கையாள்வதால் வேறுபடுகிறது.நான் அண்மையில் திரைப்படவிழாவில் பார்த்த "குதா கேலியெ" இப்பிரச்சனையை நேரடியாக அணுகுகிறது(3.30Hrs).அமிர் அதைவிட புத்திசாலித்தனமாக பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்துகிறது.மும்பையின் சேரிகள் மிகைப்படுக்தப் படாமல் காமிராவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பெரும்பாலும் CLose up காட்சிகள் நிறைந்த இப்படத்தில்,அறிமுக நாயகன் ராஜீவ் கண்டேவால் தனது இயல்பான முக பாவங்களால் கவர்கிறார்.தாராவியின் பொதுகழிப்பறையைக் காட்டும் போது பார்க்கும் நமக்கு இங்கு குமட்டிக்கொண்டு வருகிறது(காமிரா முதல் தரம்).இவ்வ்ளவு இருந்தும் படத்தின் நடுப்பகுதியில் திரும்பத் திரும்ப வரும் ஒரே மாதிரியான காட்சிகளினால் சலிப்பு ஏற்படுகிறது.இந்தத் தொய்வைப் போக்கி வேகத்தைக் கூட்டியிருந்தால் அறிமுக இயக்குநர் ராஜ்குமார் குப்தாவின் இந்தப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றிபெற்றிருக்கும்.



பின் கதைச் சுருக்கம்


நல்ல எழுத்தாளர் அடிப்படையில் நல்ல வாசகராக இருத்தல் அவசியம்.அப்படி ஒரு எழுத்தாளரின் வாசக அனுபவங்களைப் படிப்பது சுகானுபவம்.குறிப்பாக படிக்கவேண்டும் என்ற எண்ணமும், என்ன படிக்க வேண்டும் என்ற தெளிவின்மையும் உள்ள ஆரம்ப கட்ட வாசகருக்கு இத்தகைய வாசக அனுபவங்கள் நல்ல வழிகாட்டிகள் எனலாம்.அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் மனதிற்கு நெருக்கமான ஒரு புக்தகம்.இதேபோல வாசக அனுபவங்களைச் சொல்லும் "பின் கதைச் சுருக்கம்"என்ற நூலை அண்மையில் படிக்க நேர்ந்தது.பா.ராகவன் இந்த ஒல்லியான புத்தகத்தில், இளம் வயது தொட்டு தான் படித்து வந்த நாவல்களில் தன்னைக் கவர்ந்தவற்றை பற்றி சுவாரசியமாக விவரித்திருக்கிறார்.ஆனால் கதாவிலாசம் போல ஒரு வரிசைப்படி அல்ல.க.விலாசத்தில் எஸ்.ரா தனது அனுபவம் ஒன்றைச் சொல்லி அதன் முடிவில் அதனையொத்த ஒரு கதையினை விவரித்து பின் அதன் வாயிலாக அந்த ஆசிரியரை அறிமுகப்படுத்துவார்.எல்லா அத்தியாயங்களும் இதே வரிசையில் தான் அமைந்திருக்கும். பி.க.சுருக்கத்தில் ஒரு அத்தியாயத்தில் ஒரு ஆசிரியரை பற்றி விரிவாக எழுதுகிறார்,அடுத்ததில் ஒரு புத்தகம் எழுதப்பட்டதன் பின்னணி,பிறகு ஒரு எழுத்தாளருடனான தனது அனுபவங்கள்,தான் கதை எழுதிய கதை என சுய விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசையற்ற குறிப்புகளாக விரிகின்றது.


புத்தகத்திலிருந்து...


*அலை உறங்கும் கடலான ராமேஸ்வரம் பற்றியும்,அளவிலா அதன் அதிசயங்கள் பற்றியும்,அதிசயங்களை விற்றுப்பிழைக்கும் அம்மக்களின் வாழ்நிலை பற்றியும் சொல்கிறார்.தனது"அலை உறங்கும் கடல்" நாவலுக்கான சரடு இக்கட்டான ஒரு தருணத்தில் கிட்டியதை விவரித்து 'வாழ்வின் ஏதோ ஒரு கணம் சட்டென்று சமநிலைதவறி வெடித்துச் சிதறும்போதுதான் சிறிய கலைப்படைப்புகளிலிருந்து பேரிலக்கியங்கள் வரை சுருக்கொள்கின்றன' என்கிறார்.

*அசோகமித்ரனின் 18வது அட்சக் கோடு,தண்ணீர் பொன்ற நாவல்களைக் கேள்விப்பட்ட அளவிற்கு 'ஒற்றன்' அவ்வளவு பரிச்சயமில்லை.ஆனால் பா.ரா தமிழ் எழுத்துத் துறையில் இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று இந்நாவல் என்கிறார்.1973-ல் அயோவா நகர பல்கலைக்கழகம் பல்வேறு நாடுகளிலிருந்தும் அழைக்கப்பட்ட எழுத்தாளர்களைக்கொண்டு எழுத்துப்பட்டறை ஒன்றை 7 மாதகாலத்திற்கு நடத்தியது.அதில் பங்கேற்ற அசோகமித்ரன்,தனக்கேற்பட்ட அனுபவங்களை சுவையாக விளக்கும் நாவல் தான் ஒற்றன்.

*நோபல் இலக்கியவாதி எர்னஸ்ட் ஹெமிங்வே பற்றிய ஒரு கட்டுரை.மணவாழ்வில் அவருக்கு ஏற்பட்ட படுதோல்வியும்,சக எழுத்தாளரான பக்னரின் வெற்றியின் மீது ஏற்பட்ட பொறாமையும் இலக்கியவெற்றிக்கு அவரை உந்தித்தள்ளிய மறைமுக காரணிகள் என்கிறார்.ஹெமிங் வேயின் "Old man and the sea" இப்போது வாசிக்கத் துவங்கியிருப்பதால்,இக்கட்டுரை படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

*இந்திரா பார்த்தசாரதியின் "ஏசுவின் தோழர்கள்"(Comrades of Jesus) தமிழில் எழுத்தப்பட்ட ஆங்கில நாவல் என்கிறார்.அரசியல் நெருக்கடி மிகுந்த காலத்தில் இ.பா போலந்தில் ஐந்தாண்டுகள் தங்கியிருக்க நேர்ந்தது.அப்போது அதன் அரசியல் நிலவரங்களைக் கூர்ந்து நோக்கி எழுதப்பட்ட நாவல் ஏசுவின் தோழரகள்.சமகால அரசியல் நிலவரங்களை இ.பா அளவுக்கு தமிழ் படைப்பிலக்கியத்தில் வெற்றிகரமாகக் கையாண்டவர்கள் குறைவு என்கிறார்.இ.பவின் எளிமை பற்றியும்,அதீத நகைச்சுவையுணர்வு பற்றியும் சிலாகிக்கிறார்.நான் இ.பா படித்ததில்லை.படிக்க வேண்டும்.
*நாகூர் ரூமியின் பெயரை முதலில் கேள்விப்பட்டபோது எதோ ஆண்மைகுறைவு லேகியம் விற்கும் லாட்ஜ் வைத்தியர் போன்ற பிம்பம்தான் தோன்றியதாகவும் பார்க்க அவர் ஜீன்ஸ் போட்ட அகத்தியர் போலிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.ரூமியின் "குட்டியப்பா" நாவலில் தமிழில் இதுகாரும் எழுதப்படாத உயர்தர நகைச்சுவை இருப்பதாகக் கூறுகிறார்.குட்டியப்பா கதாப்பாத்திரம் உண்மையில் ரூமியின் மாமனார்தான் என்பதையும், நிஜத்துக்கும் கதாபாத்திரத்திற்குமான இடைவெளி மிகக்குறைவு என்பதையும் அறிய வியப்பாக இருக்கிறது.கட்டுரை படித்தவுடன் வாங்கிப் படிக்கவேண்டு என்று தோன்றிய புத்தகங்களில் குட்டியப்பா முக்கியமானது.

*இவை தவிர பிறமொழி நாவல்களில், மார்க்குவேஸின் லத்தீன் அமெரிக்க நாவலான நூற்றாண்டுகால தனிமை(One Hundred years of Solitude), டால்ஸ்டாயின் தோல்வியுற்ற நாவல் புத்துயிர்(Resurrection), வைக்கம் முகமது பஷீரின் சரஸ்வதிதேவியுடனான காதல் மற்றும் அவரது டைரிக்குறிப்புகள் "அனுராகத்தின் நாட்கள்" என நாவலாக்கப்பட்ட விதம், ஸ்டாலின் காலத்து சித்திரவதைக் கூடங்களை விவரிக்கும் "இவானோ டெனிஸோவிச்சின் வாழ்விலே ஒருநாள்"(One day in the life of Ivan denisovich), பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

*மேலும் எம்.வி.வி தனக்கு காதில் வினோதமான ஒலிகள் கேட்பது பற்றி எழுதிய "காதுகள்" நாவல்( தமிழின் முதல் மாய-யதார்த்தவாத முயற்சி என்கிறார்.), தனது நண்பர் ஆர்.வெங்கடேஷின் "இருவர்" நாவல், உற்சாக மனிதர் வேணுகோபாலின் நுண்வெளிக்கிரணங்கள் பற்றிய கட்டுரைகள் நன்றாக எழுதப்பட்டுள்ளன. பிரபஞ்சன், சமுத்திரம், விஷ்ணுபுரம், சல்மான்ருஷ்டி பற்றிய கட்டுரைகள் அழுத்தமாக இல்லை.


வலை(பதிவு) மேய்வதின் ஆகப்பெரிய பயனாக நான் கருதுவது புத்தகங்கள்/திரைப்படங்கள்/கலைப்படைப்பு இவற்றைப்பற்றி அறிமுகம் கிடைப்பதுதான்.நல்ல அறிமுகங்கள் அவற்றைத் தேடி படிக்க/பார்க்க தேவையான உந்துதலைத் தரும். எல்லா எழுத்தாளர்களும் இதுபோல தங்களைக் கவர்ந்த புத்தகங்களைப் பற்றிய பட்டியலையும் அறிமுகத்தையும் தந்தால் நன்றாகயிருக்கும்.ஏனென்றால் எழுத்தாளர்கள் யாவரும் நல்ல வாசகர்கள் என்பதில் எனக்கு நிரம்பவும் உடன்பாடு உண்டு.

Friday, June 13, 2008

தசாவதாரம் விமர்சனம்(without spoilers)




டிஸ்கி:நான் without spoilers போட்டதுக்கு காரணம் என் பெருந்தன்மை அல்ல.கதையை சொல்வது அவ்வளவு கடினம்.ஒரு பயணம் போல நீளமாக செல்லும் இந்த திரைக்கதையை இரண்டு வரிகளில் சொல்லலாம் அல்லது கமல் போல மூன்று மணிநேரத்தில்(3.10) சொல்லலாம்.ஆனால் சஸ்பென்சை உடைக்கிறேன் என்று யாரும் உங்களை ஏமாற்ற முடியாது.அதனால் தைரியமாக படியுங்கள்.


படம் மிக நன்றாக இருக்கிறது.சற்றே நீளமாக இருந்தாலும் Worth watching.கமல் தனது இரண்டு வருட உழைப்பிற்கு நியாயம் செய்திருப்பதாகவே உணர்கிறேன்.வெவ்வேறு அவதாரங்களில் படம் முழுவதும் கமல் வியாபித்திருக்கிறார்.நான் வெவ்வேறு அவதாரங்கள் எனக்குறிப்பிட்டதில் கமலின் எழுத்தாள,நாத்திக அவதாரங்களும் அடங்கும்.

"கிறித்துவமும்,இஸ்லாமும் இந்தியாவிற்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத 12ஆம் நூற்றாண்டில்,விஷ்ணுவும் சிவனும் தங்கள் பக்தர்கள் வாயிலாக மோதிக்கொண்ட தமிழகத்தில்...." என கமலின் கனமான narrationனுடன் படம் துவங்குகிறது.படம் முழுவதும் கமலின் வசனங்கள் அசத்தல்(எனது வோட்டு கமலின் இந்த எழுத்தாள அவதாரத்துக்குத்தான்).


படத்தின் கிராபிக்ஸ் இந்திய திரைப்படங்களின் தரத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது.அதற்காக MATRIX ரேஞ்சுக்கு இருக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் சாரி...அதற்கும் இன்னும் தொலைவு(சற்று) இருக்கிறது.பட்த்தின் மிகமுக்கிய அம்சமான மேக்-அப் அருமையாக இருக்கிறது.பூவராகன்,பல்ராம் நாயுடு,ஜப்பானிய கமல்(சுத்தமக அடையாளம் தெரியாது) இவற்றின் மேக்-அப் உறுத்தாமல் சிறப்பாக வந்திருக்கின்றன.மோசமாக வந்திருப்பது வில்லன் கமல்.தொலைவுக் காட்சிகளில் அவ்வளவு நன்றாக இல்லாத புஷ் கமல், close up காட்சிகளில் மிரட்டலாக இருக்கிறார்.அமெரிக்க கமல் பேசும் வசனங்கள் யாவும் ஹாலிவுட் பாணியில் எழுதியிருப்பது புத்திசாலித்தனம்.அமெரிக்க கமலும்,ஜப்பானிய கமலும் மோதிக்கொள்ளும் ஒரு காட்சியில்

அமெரிக்கன்: You remember Hiroshima?

ஜப்பானியன்: you remember pearl harbour?

தசா அவதரத்தில் கலக்கலான அவதாரம் தெலுங்கு-தமிழ் பேசும் பல்ராம் நாயுடுதான்.தெலுங்கு காரர்களை ஒட்டு ஓட்டு என்று ஓட்டித் தள்ளியிருக்கிறார்(He speaks many languages,He speaks 5 languages in Telugu).அதேசமயம் "ஏன்யா,நான் தெலுங்கு,நான் தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் கத்துகிட்டு தமிழ் பேசரேன்,தஞ்சாவூர்காரன் நீ என்கிட்ட இங்லீஷ்ல பேசற" என்று பீட்டர் தமிழர்களை ஒரு பிடி பிடிக்கிறார்.தலித்தின மக்களின் பிரதிநிதியாக வரும் பூவராகன் கேரக்க்டரும் அருமை.தெற்கத்திய ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசும் விதமும்,விஷயமும் பராட்டப் படவேண்டியவை.


இரண்டு மூன்று கமல்களாவது அந்தரத்தில் தொங்குகிறார்கள்.குறிப்பாக அந்த நெட்டைக் கமலும் அவதார் சிங்கும் படத்திற்கு வேகத்தடை.படம் நீளம் என்று யாரும் சொன்னால் இவர்கள் தலையில் கைவைக்கலாம்.முகுந்தா தவிர பாடல்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை(ரஹ்மான் இசையமைத்திருக்கலாமென்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவிலை)அதேபோல மல்லிகா ஷெராவத்தின் பாடலும் அநாவசியம்.மடிசார் கட்டிவரும் 12ஆம் நூற்றாண்டு அசினைவிட தாவணியில் வரும் அசின் சற்று மனதில் பதிகிறார்.அவ்வபோது சிரிக்க வைக்கிறார் கொஞ்சம் வெறுப்பேற்றுகிறார்(அசினை விட ஜெயப்பிரதா அழகாகத்தெரிகிறார் என்று சொன்னால் அசின் ரசிகர்களிடமிருந்து எதிர்ப்பு வருமோ?).Branded கமல்-கிரெஸி மோகன் வகை காமெடியும் படம்முழுவதும் அங்கங்கே தூவப்பட்டிருக்கிறது. நாகேஷ் , K.R.விஜயா, ரேக்கா,பாஸ்கர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.


கமல் தன் அப்பா பெயர் ராமசாமி நாயக்கன் என்கிறார்.படம் முழுவதும் நாத்திக கருத்துக்களை ஒளித்து வைத்திருக்கிறார்("மடம் ன்னா உள்ள கிரிமினல்கள் இருக்கக்கூடாதா?"- பல்ராம் நாயுடு).படத்தில் ஜெயலலிதாவும் வருகிறார்,கருணாநிதியும்(போலி) வருகிறார்.யாருடைய ஆட்சி காலத்தில் படம் வெளிவரும் என்ற நிச்சயமின்மை காரணமாக இருந்திருக்கலாம்.


இவ்வளவு கடினமான விஷயத்தை(10 roles concept) திட்டமிட்டு அதனை வரலாற்று நிகழ்வுடன் தொடர்பு படுத்தி எடுத்திருப்பது அபாரம்.கமலை திட்டவும் குற்றம் கண்டுபிடிக்கவும் படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.ஆனால் படம் நன்றாக இல்லை என்று கமலைப் பிடிக்காதவர்களால் கூட சொல்லமுடியாது.


இவ்வளவு பெரிய விமர்சனத்தை படிக்க பொறுமை இல்லாமல் கடைசி வரிக்கு தாவியவர்களுக்கு: படம் அருமையாக இருக்கிறது .தியேட்டருக்குப் போய் பாருங்கள்.கமல் மற்றும் குழுவினருக்கு "சல்யூட்".

Saturday, June 07, 2008

சுப்ரமண்ய ராஜு கதைகள் - வாசக அனுபவம்

எளிமையாக எழுதுவதுதான் உலகிலேயே கடினமான விஷயம்,எழுதிப்பாருங்கள் தெரியும் -Ruskin Bond

நேற்று இச்சிறுகதைத் தொகுப்பினைப் படித்துமுடித்தபோது, இது பற்றிய எனது எண்ணங்களைப்பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.சரியாகச் சொன்னால் ஆறு மாதங்களுக்கு முன்னரே எழுதியிருக்க வேண்டியது.புத்தகம் வாங்கி ஆறுமாதங்களாகிறது.ஏதேனும் ஒரு புது விஷயம் நம்மை ஈர்க்கத் துவங்கும்போது அதனைப் பற்றிய தகவல்கள் பல்வேறு திசைகளிலிருந்த்தும் நம்மை நோக்கி வந்தபடியே இருக்கும். இது எனக்கு பலமுறை நிகழ்ந்திருக்கிறது.சுப்ரமண்ய ராஜுபற்றி கேள்விப் பட்டதிலிருந்து அவரைப் பற்றிய செய்திகள் வலைபதிவுகள் வாயிலாகவும், நண்பர்கள்வாயிலாகவும் வந்து கொண்டே இருந்தன.ஆர்வம் மேலிட இந்தபுத்தகத்தை வாங்கிவந்துவிட்டேன். வரிசையாக கதைகளை வாசிக்கத் துவங்கி சிறிது நேரத்தில் ஆர்வம் குன்றி அங்கொன்று இங்கொன்றுமாக வாசித்து பத்து கதைகளுக்குள்ளாகவே மூடிவைத்துவிட்டேன்.அப்போது பரணுக்குபோன புத்தகத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வெளியிலெடுத்தேன். இந்தமுறை அவ்வளவு ஏமாற்றமில்லை.பெரிய எதிர்பார்ப்பு இன்மையும் காரணமாக இருக்கலாம். உண்மையில் பல கதைகள் என்னை ஆச்சரியபடுத்தின.
x
முப்பத்தியிரண்டு கதைகள் கொண்ட இத்தொகுப்பில் முப்பது சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் அடங்கும்.ஒரு எழுத்தாளனின் முழு ஆக்கங்கள் என நோக்கும் போது அளவில் இது மிகவும் குறைவு.இதற்கு காரணம் அவர் 39 வயது வரைதான் வாழ்ந்தார் என தெரியவரும்போது மனது கனக்கிறது. ஆதவனின் கதைக்களம் டெல்லியை அடிப்படையாகக் கொண்டிருப்பது போல ராஜுவின் கதைக்களம் சென்னையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நடுத்தர மக்களின் அன்றாடபிரச்சனைகளும் தனிமனித ஒழுக்கச் சிக்கல்களும் தான் பெரும்பாலான கதைகளின் கரு.இவரது கதை சொல்லும் பாணியில் இருக்கும் அதீத எளிமைதான் இவரது பலம்.அருகில் ஒருவர் அமர்ந்த்து கதை சொல்லிக்கொண்டிருப்பதைப் போல மனதில் காட்சிகளை விரியச் செய்கிறார். ராஜுவின் வார்த்தை உலகமும் சிறியது என்றே தோன்றுகிறது. படிக்கும் பொழுது எந்த எதிர்பாராத வார்த்தையும் உங்களைஆச்சரியப் படுத்துவதில்லை. சுஜாதா போல வார்த்தைக் கலப்போ,ஆதவன் போல வடமொழிச்சொல் பிரயோகமோ இருக்காது(ஆனால் ஆங்கிலக் கலப்பு உண்டு)தெளிந்த நீரோடை போன்று ஓடிக்கொண்டே இருக்கிறது இவரது வர்ணனைகள். பார்க்கின்ற எதையும் இயல்பாக வர்ணிக்கத் துவங்கிவிடுகிறார். இது பல நேரங்களில் சுவாரசியமாகவும் சில நேரங்களில் சோர்வாகவும் இருக்கிறது.
x
கதையின் நாயகர்கள் பெரும்பாலும் சுவாமி நாதன், ராஜாராமன்என்ற பெயர்களையும் நாயகிகள் லதா, ராஜி என்ற பெயர்களையும்
கொண்டிருக்கிறார்கள். நாயகர்கள் எல்லாரும் ஸ்த்ரீ லோலர்கள்.பார்க்கிற பெண்ணையெல்லாம் புணருகிறார்கள் குறைந்த்தபட்சம் மனைவியையாவது சந்தேகிக்கிறார்கள். சொல்லி வைத்ததுபோல,கதை துவங்கி மூன்றாவது பாராவில்”ஹவ் அபெளட் விஸ்கி?” என்று கேட்கிறார்கள்.பெண்கள் அந்நியாயதுக்கு சோரம் போகிறார்கள்.
x
ராஜுவின் கதைகளில் பெரிய குறையாக நான் கருதுவது கதை முடிவுகளைத்தான்.மிக மிக சம்பிரதாயமான கதை முடிவுகள்.எந்த்த கதை முடிவும் அழுத்தமாகவோ வித்தியாசமாகவோ இல்லை(விதிவிலக்குகள்
உண்டு). சுஜாதாவிடம் சிறுகதை நுணுக்கங்களைப் பயின்றவர் ராஜு என்று படித்திருக்கிறேன்.ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது இவர் பாணி. சுஜாதாவின் சுமாரான சில சிறுகதைகள் கூட அதன் எதிர்பாராத முடிவு காரணமாக மனதில் பதிந்து போகும். ஆனால் ராஜுவின் நல்ல சில சிறுகதைகள் கூட அதன் சோகையான முடிவு காரணமாக மனதில்பதிய
மறுக்கிறது.
x
இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த சிறுகதைகளாக கேள்விகள்,இன்னொரு கனவு,சாமி அலுத்துப் போச்சு,தூண்டில்,கொடி,நாலு பேர், வழியில்
சில முட்டாள்கள் மற்றும் காதலிக்கணும் சார் இவற்றைக் குறிப்பிடலாம். இரண்டு குறுநாவல்களில் 'இன்று நிஜம்' நாவலைக்காட்டிலும் 'இரவுகள் தவறுகள்' பிடித்திருந்த்தது. கொஞசம் இடறினாலும் ராஜேஷ் குமார் நாவல் போலாகிவிடும் அபாயம் இருந்தாலும் ராஜுவின் எழுத்துநடையால் தப்பிக்கிறது.'இன்று நிஜம்' ஒரு அருமையான நாவலுக்கான கதைக்களமும் துவக்கமும் இருந்த்தும் கூட சுவையற்ற இரண்டாவது பாதியால் கவனம் இழக்கிறது.
x
சுப்ரமண்ய ராஜுவின் நண்பரும் எழுத்தாளருமான தேவக்கோட்டை மூர்த்தி, ராஜு பற்றிய நினைவுகளை முன்னுரையில் சுவையாகப் பகிர்கிறார்.ஒரு எழுத்தாளரின் முழு ஆக்கங்களையும் தொகுப்பாகக் கொண்டுவரும் போது இத்தகைய விரிவான கட்டுரை அவசியமாகிறது. அந்த எழுத்தாளரை முதன்முறையாக படிப்பபவருக்கு அவரைப் பற்றிய பிம்பம் கட்டமைய இது உதவுகிறது.அவ்வகையில் மூர்த்தியின் கட்டுரை நன்றாகவே இருக்கிறது(அதற்காக ரயில்வே க்ராஸிங்கை கடக்க உதவியதையெல்லாம் குறிப்பிட்டு புளகாங்கிதம் அடைவது கொஞ்சம் ஓவர்).எழுத்தாளர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதராகவும் ராஜு நம்மைக் கவர்கிறார்.மூர்த்தியின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
x
”கற்பனை கலைக்கு முரண்” என்ற நகுலனின் கொள்கைதான் ராஜுவின் எழுத்தில் மீண்டும் மீண்டும் பரிமளித்தது.நெர்மாறாக அனுபவத்தை எழுதுவது அநேகமாக ரிபோர்ட்டேஜில்தான் முடிகிறது; எனவே கலைக்கு கரு கற்பனைதான் என்பதை விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருக்கிற ஆள் நான்.இந்த விவாதம் எங்களுக்குள் பலவருடங்கள் நடந்துகொண்டிருந்தது.ஒரு சமயம் பொறுமை மீறி,அவன் பாராட்டிய,என் ”புளிக்கும் திராட்சைகள்” நாவலின் கதாநாயகி கற்பனையில்தானே சாத்தியம் என்று கேட்டேன். ”யார் சொன்னது? உனக்கு புடவை கட்டினா அப்படித்தான் இருக்கும்” என்று சிரிக்காமல் சொன்னான் ராஜு.ஆனால் உன்னோட ஆர்க்யூமெண்ட் எனக்குதான் சாதகமா இருக்கு.எனக்கு புடவை கட்டினா என் நாயகி மாதிரி இருக்கும்ங்கறதே கற்பனைதானே ராஜு? என்று நான் பதில் சொல்ல,ராஜு சிரித்தான். ஆனால் என் கதாநாயகி போன்ற புத்திசாலியான பொறுமைசாலியான பரோபகாரியான, அதே சமயம் லேசான குறும்புக்காரியான பார்ப்பதற்கும் ரம்மியமான ஒரு பெண்,ராஜுவுக்கு,புடவை கட்டியிருந்தால் சுலபசாத்தியம் என்பது புரிந்தபோது,கலைக்கு அடிப்படை கற்பனையா அனுபவமா என்ற எங்கள் விவாதம் அன்றோடு முடிந்தது. 'How things ought to be' என்ற அயன் ராண்ட் விதியை கற்பனை என்ற சொல்லால் நான் வரையறுக்க, அனுபவம் எனற சொல்லால் ராஜு விவரித்தான். அதனால்தான் எழுத்தும் வாழ்வும் ஒன்றுதான் என்று இறுதிவரை ராஜுவால் இயங்க முடிந்தது.

காலத்தைக் கடந்து நிற்கும் 25 சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன், அதில் சுப்ரமண்ய ராஜுவின் கதையும் ஒன்று, என்று சுஜாதா சொன்னதில் வியப்பேதும் இல்லை.தொகுப்பில் சிறப்பானவையாக பத்து கதைகளாவது தேறுகின்றன. ராஜுவின் எழுத்து யாரையும் பின்பற்றாத தனித்த ஒன்று. சிறுகதை சூத்திரங்களில் முக்கியமானதான எளிமை இவரது கதைகளில் இருந்தும் அதே எளிமை காரணமாக இலக்கிய சர்ச்சைகளிலிருந்தும் புறக்கணிக்கப்படவும் கூடும்.பெரிய எழுத்தாளர்கள் சிலரின் ஆரம்பகால கதைகளை படிக்கும் போது அவரா எழுதினார் என்றிருக்கும்.எல்லாருடைய எழுத்துக்களும் கால மாற்றத்திற்குட்பட்டவைதான், பண்படுதலுக்கு உட்பட்டவைதான்.ஆனால் ராஜுவிற்கு அந்த கால அவகாசம் கூட கிடைக்காமல் இளம்வயதிலேயே மாண்டது தமிழ் சிறுகதை உலகிற்கு மிகப்பெரிய இழப்புதான்.